உள்நாட்டு செய்திகள்

அள்ளி எறியப்படும் வாக்குறுதிகள்; திகன நஷ்டஈடு கூட இன்னும் இல்லை

Written by Administrator

கண்டி திகன பிரதேசங்களில் இனவாதிகள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி ஒருவருடமாகி்ன்ற நிலையில் இந்த வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான நஷ்டஈடுகள் இதுவரை வழங்கப்படாதிருப்பது தொடர்பில் அதிருப்திகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த வருடம் மார்ச் மாதம் கண்டி திகன பிரதேசத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் வர்த்தக நிலையங்களும் வீடுகளுமாக 445 கட்டடங்களும் 24 பள்ளிவாசல்களும் 65 வாகனங்களும் சேதமடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்திருந்தார். இவற்றில் 173 சொத்துக்கள் நஷ்டஈட்டுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இவற்றுக்காக 150 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாகவும் புனர்வாழ்வு அதிகார சபையின் தகவல்களின்படி தெரியவருகிறது.

இதற்கிடையில் நடந்து முடிந்த கண்டித் தாக்குதல்களின் போது சேதமாக்கப்பட்ட முஸ்லிம்களுக்குச் சொந்தமான சொத்துக்களின் பெறுமதி 885 கோடி ரூபாவாக தமது அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளதாக மனிக்ஹின்ன பிரதேச செயலாளர் சமந்தி நாகதென்ன தெரிவித்திருந்தார்.

கண்டி தாக்குதல்களுக்கான நஷ்டஈடுகள் கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என கண்டிக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்த போதும் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிகிறது. நஷ்டஈடு வழங்க வேண்டிய புனர்வாழ்வு அதிகார சபை பிரதமரின் கீழேயே இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் பாராளுமன்றத்தின் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரைச் சந்தித்துப் பேசிய போதும் பல வாக்குறுதிகள் முஸ்லிம்கள் தொடர்பில் வழங்கப்பட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தெரிவித்துள்ளது.

தம்புள்ளைப் பள்ளிவாசல் பிரச்சினை, கொழும்பு தெற்கில் ஆண் பாடசாலை ஒன்றை அமைத்தல், மௌலவி ஆசிரியர் நியமனத்தை துரிதப்படுத்தல், கொலன்னாவை பிரதேசத்தில் தமிழ் மொழி்ப் பாடசாலை ஒன்றை அமைத்தல், யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்களுக்கான வீடமைப்புத் திட்டம், முல்லைத் தீவில் மீள்குடியேறும் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை, கபூரியா அரபுக் கல்லூரிக்கு அருகிலுள்ள கொழும்பு ஸாஹிராவுக்குச் சொந்தமான காணியில் ஆரம்பப் பாடசாலை அமைத்தல் போன்ற விடயங்கள் பிரதமரிடம் முன்வைக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அவரது செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு பணிப்புரை வழங்கியதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தெரிவித்துள்ளது.

About the author

Administrator

Leave a Comment