Features ஆசிரியர் கருத்து

ஐரோப்பிய ஒன்றியம் நாட்டைத் தூக்கிலிட முனைகிறதா?

Written by Administrator

Editorial| MP 413

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு இரண்டு மாதங்களுக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது ஜனாதிபதி தெரிவித்திருந்தார். சொன்னதோடு மட்டும் நில்லாது போதைப் பொருளுக்கெதிரான கடுமையான வேட்டையையும் ஜனாதிபதி முடுக்கிவிட்டிருந்தார். மாக்கந்துரே மதூஷின் பின்னாலுள்ள பிரபலங்களையெல்லாம் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்கு இந்த முயற்சிகள் வழியமைத்திருக்கின்றன.

போதைப் பொருட்களுக்கு எதிரான ஜனாதிபதியின் இந்த முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியது என்பதோடு எந்த எதிர்ப்புக்கும் மத்தியிலும் தொடரப்பட வேண்டும் என்பதே நாட்டு மக்கள் பலரதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. போதைப் பொருட்களினால் நாட்டில் அதிகரித்து வரும் குற்றச்செயல்கள் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு பூதாகரமாகியுள்ளன. வளரும் மாணவர்கள் கூட தற்பொழுது இந்தப் பாதிப்புக்கு அதிகமாக உள்ளாகி வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. போதைப் பொருள் மனிதனின் செயற்பாடுகளை முடக்கி அவனைச் செயலிழக்கச் செய்வதோடு தவறான வழிகளில் ஈடுபடு வதற்கும் அவனைத் தூண்டுகிறது. போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்கள் எந்த விலை கொடுத்தேனும் அதனைப் பெறுவதற்கு முயற்சிப்பதனால் அதனுடைய விலையும் எகிறிக் கொண்டே செல்கிறது. தன்னிடமிருக்கின்ற பணத்தை எல்லாம் இதில் கரைத்து விட்டவர்கள் பலர் மேலதிகப் பணத்துக்காக கொள்ளைகளிலும் சிலபோது கொலைகளிலும் ஈடுபட்டு வருவதனால் நாட்டில் குற்றச் செயல்களும் அதிகரித்து வருகின்றன.

இந்த அநியாயத்திலிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டுமென்றால் போதைப் பொருள் பாவனையாளர்களுக்குத் தண்டனை விதிப்பதற்குப் பதிலாக போதைப் பொருள் விநியோகத்தர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுவதே சாலப் பொருத்தமானதாகும். இவர்களே போதைப்பொருள் பாவனையை நாட்டிலே தூண்டுகிறார்கள். இவர்களுடைய இந்த ஊக்குவிப்புக்களின் காரணமாக பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்திருக்கின்றன. பலர் கொல்லப்பட்டுள்ளனர். பாவனையாளர்கள் பலர் படிப்படியாக மரணித்து வருகின்றனர். இந்த நிலையில் போதைப்பொருள் விநியோகத்தர்களுக்கான தண்டனையை கடுமையாக்குவதன் ஊடாகவே இந்த அவலங்களைத் தடுக்க முடியும். இந்த வகையில் இவர்களுக்கு எதிராக மரண தண்டனை நிறைவேற்றுகின்ற ஜனாதிபதியின் முடிவை ஆரோக்கியமானதாகவே பார்க்க வேண்டும்.

ஆனாலும் எந்த நிலையிலும் மரண தண்டனை நிறைவேற்றப்படக் கூடாது என்ற உறுதியான நிலைப்பாட்டில் ஐரோப்பிய ஒன்றியம் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத் தின் இலங்கைத் தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார். இலங்கை போதைப்பொருள் வர்த்தகத்தின் அச்சாணியாக பிராந்தியத்தில் மாறிவருவதாக அறிக்கைகள் தெரிவிக்கும் நிலையில் இவ்வாறான தண்டனைகளை வழங்காமல் இந்தப் போதைப்பொருள் மாபியாவில் இருந்து மீள முடியாது என்றிருக்க ஐரோப்பிய ஒன்றியம் இது தொடர்பில் வெளியிட்டிருக்கும் கருத்து நடைமுறைக்கு ஒவ்வாததாக உள்ளது. மரண தண்டனை என்பதை மனித உரிமை மீறலாகக் கருதும் ஐரோப்பிய ஒன்றியம், அதே ஒன்றியத்தைச் சேர்ந்த பல நாடுகள் இணைந்து ஈராக்கின் ஜனாதிபதியை போலிக் காரணங்களைக் கூறி தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றியது மறக்க முடியாதது. எனவே நாட்டின் நலனுக்கு எது நல்லது என்பதை அந்தந்த நாடுகளுக்கே விட்டுவிடுவது தான் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நல்லது. அடுத்த பக்கத்தில் தனது நாட்டில் 1976 வரை அமுலில் இருந்த சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கும் வெளிநாடுகளின் தயவை எதிர்பார்த்திருப்பது என்பதும் நாட்டின் சுயாதீனத்துக்குப் பொருத்தமானதல்ல.

About the author

Administrator

Leave a Comment