Features சர்வதேசம்

வெனிசுவேலா அரசியல் கொந்தளிப்பின் பின்புலம்

Written by Administrator
  • கலாநிதி றவூப் ஸெய்ன்

மாக்சிஸம் அல்லது கம்யூனிஸம் என எதுவுமில்லை. நன்கு திட்டமிடப் பட்ட எமது பொருளாதாரத்தில் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தையும் சமூக நீதியையுமே நாம் வலியுறுத்துகின்றோம். – பிடல் காஸ்ரோ

லத்தீன் அமெரிக்க நாடுகள் மீது ஐக்கிய அமெரிக்காவுக்கு எப்போதும் ஒரு கண் இருந்தே வந்துள்ளது. வொஷிங்ட னின் வெளிநாட்டுக் கொள்கையில் தென் அமெரிக்காவை அடிபணிய வைப்பதே முதன்மைக்குரியது. ரூஸ்வெல்டின் பெருந் தடிக் கொள்கை முதல் டொனால்ட் ட்ரம்பின் பாதுகாப்பு மதில் கொள்கை வரை இந்த நோக்கத்திற்காகவே நடைமுறைக்கு வந்தது. வெனிசுவேலாவில் இன்று ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பையும் இந்த வரலாற்றுக் கண்ணோட்டத்திலேயே புரிந்து கொள்ள வேண்டும்.

வெனிசுவேலாவின் புவி அரசியலும் மாக்ஸிய இடதுசாரி ஆட்சியாளர்களும் வொஷிங்டனுக்கு ஒரு சவாலாக இருந்து வருகின்றனர். தென்அமெரிக்காவிலேயே வெனிசுவேலா ஒரு காலத்தில் மிகவும் வளம் கொளிக்கும் நாடாக இருந்துள்ளது. அதற்குப் பிரதான காரணம் அந்நாட்டின் மொத்தத் தேசிய வருமானத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது அந்நாட்டின் எண்ணெய் வளம். நாளாந்தம் அங்கு உற்பத்தி செய்யப்படும் பல மில்லியன் கச்சா எண்ணெய் மீது கண் வைத்திருக்கும் அமெரிக்காவுக்கு 41 வீதமானவை ஏற்றுமதியாகின்றது. இருந்தும் வொஷிங் டன்-கரகாஸ் உறவுகள் தொடர்ந்தும் ராஜதந்திர உராய்வுகளுக்கு உட்பட்டே வந்துள்ளது.

முன்னாள் ஆட்சியாளர் ஹியூகோ சாவேஸ் இறந்தாரா, படுகொலை செய்யப்பட்டாரா என்ற ஐயம் இந்த அரசியல் பின்புலத்திலிருந்தே எழுகின்றது. சாவேஸின் மரணத்தை அடுத்து நடந்த தேர்தலில் பதவிக்கு வந்தவர் நிகொலஸ் மதுரோ. தீவிர இடதுசாரி. வொஷிங்டன் எதிர்ப்பாளர். சாவேசுக்கு மிக நெருக்கமாக இருந்தவர். அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை இளம் வயதிலிருந்தே கடுமையாகக் கண்டித்து வந்தவர். லத்தீன் அமெரிக்காவின் சுயாதீனத்திலும் சுயநிர்ணயத்திலும் வொஷிங்டன் அனாவசியமாகத் தலையிடுவதை மதுரோ கடுமையாகச் சாடி வந்தார்.

துரதிஷ்டவசமாக மதுரோவின் இரண்டாவது பதவியின் போது நாட்டின் பொருளாதாரம் எதிர்பாராத வகையில் சரிந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் அயல் நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். தமக்குக் கட்டுப்படாத ஆட்சியாளர்கள் மீது பொருளாதாரத் தடைவிதிப்பது வொஷிங்டனின் ராஜதந்திரம். வெனிசுவேலா மீதான பொருளாதாரத் தடையினால் நிலமை இன்னும் இறுக்க மடைந்தது.

அமெரிக்காவுக்கான எண்ணெய் ஏற்றுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி நாட்டின் பொருளாதாரத்தைப் பாதித்தது. பொருளாதார சரிவுக்கும் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றமைக்கும் மதுரோ அரசாங்கத்தின் ஊழல் மோசடியே காரணம் என்று ஊடகங்கள் பிரச்சாரம் செய்யத் துவங்கின. வொஷிங்டன் இதனைச்           சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது.

வெனிசுவேலா மக்கள் அறியாத ஒரு அந்நியரை திடீரென களத்தில் இறக்கியது. அவர் யாருமல்ல. தற்போது அதிக  சர்ச்சைக்குரியவராகக் கருதப்படும் ஜுவான் குய்டோ. மூன்று வாரங்களுக்கு முன்பாக இப்படி ஒருவர் நாட்டில் இருந்தாரா என்பது முக்கால் வாசி வெளிசுவேலர்களுக்குத் தெரியாது. எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பை அறிவித்த கையோடு, தானே வெனிசுவேலாவின் ஜனாதிபதி என்று குய்டோ சுயபிரகடனம் செய்தார். மைத்ரியின் 51 நாள் அரசியல் குழப்பத்தின்போது திடீரென மஹிந்தவை பிரதமராக பிரகடனம் செய்ததோடு இதனை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

அடுத்த கணம் டொனால்ட் ட்ரம்ப் குய்டோவே ஜனாதிபதி என்றும், அவரை ஏற்றுக் கொள்ளாவிட்டால் மதுரோவுக்கு எதிராக இராணுவத்தைக் களமிறக்க நேரிடும் என்றும் அச்சுறுத்தினார். ஏதோ தென்அமெரிக்க நாடுகள் ஒவ்வொன்றிலும் வொஷிங்டன் விரும்புகின்ற ஒருவரே ஜனாதிபதியாக இருக்க முடியும் என்பதுபோலவே ட்ரம்பின் அரசியல் கூத்து அமைந்திருக்கிறது.

கடந்த வாரம் வொஷிங்டன் வெனிசுவேலா குறித்த நகல் பிரேரணையொன்றை ஐ.நா.வில் சமர்ப்பித்தது. அதற்கெதிராக ரஷ்யா தனது மாற்றுப் பிரேரணையை முன்வைத்ததோடு, விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. வெனிசுவேலாவில் உண்மையில் என்ன நடக்கின்றது?

அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணையில் இரண்டு முக்கிய விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. வெனிசுவேலாவுக்கான மனிதாபிமான உதவிகள் துரிதமாக விநியோகிக்கப்பட வேண்டும். அத்துடன் மிக அவசரமாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரியுள்ள வொஷிங்டன் மக்கள் அமைதியாக நடத்தி வரும் ஆர்ப்பாட்டங்கள் மீது வெனிசுவேலா படையினர் நடத்தி வரும் தாக்குதல்கள் மற்றும் வன்முறைகள் குறித்து வொஷிங்டன் கவலை கொள்வதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெனிசுவேலாவில் ஜனநாயக ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்றம் ஒன்றையே வொஷிங்டன் ஆதரிக்கும் என அதன் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்ப் பிரேரணையை முன்மொழிந்துள்ள ரஷ்யா, வெனிசுவேலாவின் பிராந் திய ஒருமைப்பாடும் அரசியல் சுதந்திர மும் பாதுகாக்கப்பட வேண்டும். அவை குறித்து மொஸ்கோ கூடுதல் அக்கறை கொண்டுள்ளது எனவும், வெளிநாட்டுத் தலையீடுகளுக்கான எந்த வாய்ப்பையும் மொஸ்கோ உருவாக்காது என்றும் மாற்றுப் பிரேரணையில் குறிப்பிட்டுள்ளது.

வொஷிங்டன் அநாவசியமாக வெனிசுவேலாவின் சுதந்திரத்திலும் உள் விவகாரங்களிலும் தலையீடு செய்வதாக மொஸ்கோவும் சீனாவும் தெரிவித்து வரும் கருத்தையே நிகொலஸ் மதுரோவும் மீள மீள முன்வைத்துள்ளார். வெனிசுவேலாவில் ஒரு மனிதாபிமான நெருக்கடி நிலவுவதாகவும் இராணுவம் மக்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்படுவதாகவும் வொஷிங்டன் தெரிவிக்கும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. எமது வெளிநாட்டுச் சொத்துக்களை சூறையாடிவரும் வொஷிங்டன், அதற்குத் தலையாட்டும் ஒரு பொம்மை அரசாங்கத்தை இந்த மண்ணில் நிலை நாட்டுவதற்கு முயற்சிக்கின்றது. இதை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என மதுரோ மிகக் காட்டமாக வொஷிங்டனைச் சாடியுள்ளார்.

அமெரிக்கத் தீர்மானத்தை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன் படுத்தி தடுத்து நிறுத்தியுள்ளது. ஆனால், வெனிசுவேலாவின் இராணுவத்தை தம் வசம் இழுத்து வரும் வொஷிங்டன் தமது கட்டளைக்குக் கட்டுப்படாத மதுரோவுக்கு எதிராக ஒரு புரட்சியைத் திட்ட மிட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.

இராணுவத்தின் பெரும்பான்மையான அதிகாரிகள் இதுவரை மதுரோவின் பக்கமே நின்றனர். மதுரோ ஜனநாயக ரீதியாக மக்களின் வாக்குகள் மூலம் தெரிவான ஜனாதிபதி. இராணுவத்தை அவ ருக்கு எதிராகப் பிரயோகிப்பது பச்சையான சதித் திட்டம். ட்ரம்ப் இந்த அணுகு முறையைக்கைவிட வேண்டும் என்று மொஸ்கோ வொஷிங்டனை விமர்சித்து வருகின்றது.

நாட்டில் அமெரிக்கா கூறுவது போன்று மனிதாபிமான நெருக்கடிகள் எதுவும் இல்லை. அது வொஷிங்டனின் போலிப் பிரச்சாரம். நாட்டை விட்டு மக்கள் வெளியேறுவதற்கு அரசாங்கம் காரணமல்ல என மதுரோ ட்ரம்பிற்குப் பதிலளித்துள்ளார்.

சுயபிரகடனம் செய்துள்ள குய்டோ மதுரோவைப் பதவி விலக்குவதற்கு இராணுவம் தலையீடு செய்ய அமெரிக் காவைத் தூண்டுவது உள்ளிட்டு, தேவையான எந்த நடவடிக்கையும் எடுக்கத் தயார் என அச்சுறுத்தியுள்ளார்.

மதுரோவின் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு ட்ரம்ப் களத்தில் குதித்திருப்ப தற்குப் பிரதான காரணம் வொஷிங்டனின் அரசியல் முடிவுகளுக்குத் தலையாட்டும் நிலையில் அவர் இல்லை என்பதுதான். இதற்கு முன்னர் ஹியூகோ சாவேஸையும் வளைத்துப் போடுவதற்கு வொஷிங்டன் பெரு முயற்சி செய்தது.

லத்தீன் அமெரிக்காவின் வேறு சில நாடுகள் போன்று அமெரிக்காவின் அரசியல் விளையாட்டு வெனிசுவேலாவில் பலிக்கவில்லை. இப்போது மதுரோவை வீழ்த்தும் அனைத்துத் தந்திரங்களிலும் இறங்கியுள்ள வொஷிங்டன், ஜனநாயக விழுமியங்களைக் குழிதோண்டிப் புதைக்கின்றது. குய்டோ அல்ல மதுரோவே மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி. ஆனால், தாம் விரும்புகின்ற ஒருவரே தென்அமெரிக்காவில் ஜனாதிபதி யாக இருக்கலாம் என்ற ரூஸ்வெல்ட்டின் பெருந்தடிக் கொள்கையை கையில் எடுத்திருக்கிறார் ட்ரம்ப். அதற்கு இன்று பெரும் விலை கொடுப்பவர்களாக வெனிசுவேலர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

பெரும்பாலும் குய்டோவை பதவியில் அமர்த்தும் வொஷிங்டனின் திட்டம் வெற்றி பெறாது என்றே அரசியல் அவதானிகள் நம்புகின்றனர்.

About the author

Administrator

Leave a Comment