Features Youth நாடுவது நலம்

இளைஞர்களின் விரக்தி

Written by Administrator
  • இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் | நாடுவது நலம்

எமது நாட்டின் சுதந்திரத்திற்கு பின்னரான வரலாற்றில் பாதிக்கும் மேற்பட்ட காலத்தை வன்முறையிலேயே கழித்திருக்கிறோம். இக்காலப்பகுதியில் பல்லாயிரக் கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டதையும் நாம் அறிந்துள்ளோம். இதுதவிர பெரும்பாலான மக்கள் அங்கவீனமுற்ற தையும் அவர்களுடைய உடைமைகள் அழிக்கப்பட்டதை யும் கண்கூடாகப் பார்த்தும் கேட்டும் வந்திருக்கிறோம். 1950ஆம் ஆண்டு தசாப்தத்தில் இனரீதியாக ஏற்பட்ட மோதலினால் நாம் உயிர் மற்றும் உடைமைகளை இழந்தோம். 1960ஆம் ஆண்டு தசாப்தத்தில் கத்தோலிக்க பாட சாலைகள் தொடர்பான பிரச்சினையின் காரணமாக ஒருவர் மீது ஒருவர் கொண்ட சந்தேகங்கள் மற்றும் அதன் வெளிப்பாடுகளால் ஏற்பட்ட வன்முறைகளையும் நாம் அறிவோம்.

அதனைத் தொடர்ந்து 1971ஆம் ஆண்டு காலப்பகுதியில் வகுப்புவாதப் போராட்டம் மற்றும் இளைஞர்களது சிந்தையில் தோன்றிய தீவிரவாத எண்ணங்களின் காரணமாக ஏற்பட்ட அழிவுகளை நாம் கண்டிருக்கிறோம். மீண்டும் 1980 தசாப்தங்களில் தெற்கில் இளைஞர்களது எழுச்சியின் காரணமாக ஏற்பட்ட இழப்புக்களையும் பார்த்திருக்கிறோம். கவலை, விரக்தி, வேதனை போன்ற வற்றுக்கு தீர்வாக இளைஞர்கள் தீவிரவாதச் சிந்தனை யுடன் ஆயுதம் ஏந்தினார்கள். இதே காலப்பகுதியில் வடக்கின் இளைஞர்களும் தங்களது பிரச்சினைகளை முன்னிறுத்தி தீவிரவாதப் போக்கைக் கடைபிடித்தார்கள். இதனால் எமது நாட்டிற்கு ஏற்பட்ட அழிவுகளையும் வரலாற்றில் நாம் கண்டிருக்கிறோம். வரலாற்றில் இடம்பெற்ற இவையெல்லாச் சம்பவங்களும் எமக்கு எண்ணற்ற பாடங்களை கற்றுத் தருகின்றன.

எமக்கு பிரச்சினைகள், கவலைகள், மனவேதனைகள் இருக்கலாம். ஆனால் அதற்கான தீர்வு தீவிரவாதமோ கடும்போக்குவாதக் கொள்கைகளோ அல்ல. இப்படியான எண்ணங்களால் எமது இளம் சந்ததியினர் தீவிரவாதப் போக்கிற்கு இரையாகக் கூடாது. உள்நாட்டில் மாத்திரமல்லாமல் நாம் சர்வதேச ரீதியாகவும் இந்தப் போக்கைக் கண்டு வருகின்றோம். லிபியா, ஈராக் போன்ற நாடுகளிலும் அமெரிக்க கூட்டுச் சதிகள் அரங்கேற்றிய நிகழ்வுகளை நாம் கண்டோம். ஈராக்கிற்கு ஜனநாயகத்தை கொடுக்க வேண்டும் எனக்கூறி அந்த நாட்டை ஆக்கிரமித்து அங்குள்ள எண்ணெய் வளங்களை சூறையாடி, மக்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டன. அது அந்த நாட்டிற்கு மாத்திரமல்ல, முழு ஐரோப்பாவிற்குமே பாதிப்பாக அமைந்த நிகழ்வாகக் காணப்பட்டது.

லிபியாவிலும் அப்படித்தான் நுழைந்தார்கள். ஜனநாயகத்தை ஸ்தாபிப்பதாகக் கூறி அந்த நாட்டிற்குள் பிரவேசித்து டொன் கணக்கிலான எண்ணெய் வளங்களை சூறையாடியது அமெரிக்கா. இதனால் விரக்தியும் மனவேதனையும் அடைந்த அந்நாட்டு இளைஞர்கள் வெவ்வேறு தீவிரவாத சக்திகளுடன் கூட்டுச் சேரும் போக்கினை காண முடிகின்றது. அதன் தாக்கத்தை இன்னும் ஐரோப்பா அனுபவித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனவே எவ்வளவுதான் பிரச்சினைகள் காணப்பட்டாலும் அதற்குரிய முறைக்குள்ளால் நின்று அவற்றுக்கான தீர்வுகளைப் பெற வேண்டும். அதற்கப்பால் சென்று தீவிரவாதத்திற்கு இரையாகக் கூடாது. வரலாற்றில் இத்தகைய நடைமுறைகளால் ஏற்பட்ட இழப்புக்களை நாம் பாட மாகக் கொள்ள வேண்டும். அத்தகைய வரலாற்றை மீள உருவாக்க முனையக் கூடாது.

ஆண்கள் தாடி வைத்து தொப்பி அணிந்தும் பெண்கள் ஹிஜாப் அணிந்து கொண்டும் நேர்முகப் பரீட்சைகளுக்கு செல்லும் போது வெவ்வேறு பாரபட்சங்கள் ஏற்படலாம். இத்தகைய நிலைமைகளின் போது ஏற்படுகின்ற மன உளைச்சல்களை தீவிரவாதத்திற்கு திசைதிருப்பாமல் ஜனநாயக முறைக்குள் இருந்து கொண்டு அவற்றுக்கு தீர்வுகாண முற்பட வேண்டும். எமது பிரச்சினைகளுக்கும், வேறுபாடுகள் மற்றும் பாரபட்சங்களுக்குமான தீர்வுகளை சட்டத்தின் முன்னால் பெற வேண்டும். இதுவே அறிவுபூர்வமான முன்னெடுப்பாகும்.

எமது சமூகத்தின் தலைவர்கள் மற்றும் பொறுப்பு வாய்ந்தவர்கள் இளம் சந்ததியினர் மத்தியில் உருப்பெறுகின்ற கவலைகள், விரக்தி நிலைகள் குறித்து ஆழமாகக் கண்டறிந்து அவை தொடர்பில் ஆழமான கலந்துரையாடல்களை முன்னெடுக்க வேண்டும். இதற்கான காலம் எமக்கு எழுந்துள்ளது. சமூகத் தலைமைகள் குறிப்பிட்ட சில விடயங்களில் மாத்திரம் கவனம் செலுத்தும் போக்கினை கைவிட்டு விட்டு பரந்த அடிப்படையில் சமூகப் பிரச்சினைகளை அணுக வேண்டும். இதுவே காலத்தின் அவசியமும் தேவையும் கூட.

About the author

Administrator

Leave a Comment