Features நேர்காணல்

பயங்கரவாத தடுப்பு சட்டமூலம் சிறுபான்மைக்கு அபாயமானது

Written by Administrator

எர்மிஸா டீகல் – உயர்நீதிமன்ற சட்டத்தரணி

இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் (Counter Terrorism Act – cta)  பற்றிச் சுருக்கமாக தெளிவுபடுத்த முடியுமா?

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் (CTA)இலங்கையில் கடந்த 40 வருடங்களாக அமுலில் இருக்கும் பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்துக்கு (PTA) மாற்றீடாக பிரேரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் இச்சட்டம் இடம்பிடித்தது. 1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் (தற்காலிக ஏற்பாடு) சட்டம் 1979 ஆம் ஆண்டு வன்முறை காலப்பகுதி ஒன்றில் நிறைவேற்றப்பட்டது.

அது பாராளுமன்றத்தில் பெரிதாக விவாதிக்கப்படவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்தச் சட்ட மூல ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணானவை என அறிந்திருந்ததனால் அது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள் அது குடி மக்களுக்கு சாதாரணமாக உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகளை இடைநிறுத்தும் சட்டம் ஒன்று என அறிந்திருந்ததனால் அந்தச் சட்ட மூலம் மூன்று வருடங்களுக்கான தற்காலிக சட்டமாகவே நிறைவேற்றப்பட்டது – அரசாங்கம் வன்முறைகளை கையாள இந்த சட்டம் தேவைப்படுகின்றது எனக் கூறியது. எனினும் அது தொடர்ச்சியாக நீட்டப்பட்டு வந்தது. அத்துடன் இந்த  மோசமான சட்டத்தை நாம் இன்னும் கொண்டிருக்கிறோம். 

கடந்த 40 வருட காலமாக பயங்கரவாத தடுப்புச் சட்டம் சிறுபான்மை இனங்களை விசேடமாக, தமிழ் மக்கள், ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள், இலங்கையின் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் போன்றோரை பயங்கரத்துக்கு உள்ளாக்கி வருகின்றது. இந்த சட்டமூலம் பாலியல் வன்முறை, சித்திரவதை, வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் நீண்ட தடுப்புக் காவல்கள் போன்றவற்றை மேற்கொள்ளும் அனுமதிப் பத்திரமாக செயற்பட்டு வருகின்றது. பல குழுக்கள் தொடர்ச்சியாக இந்த சட்ட மூலத்தை நீக்குமாறு தொடர்ச்சியாக கோரி வந்தன. இறுதியாக அரசாங்கம் இதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் 31/1 ஆம் இலக்க தீர்மானத்தில் பின்வரும் வார்த்தைகள் ஊடாக இணங்கியது:

“பொதுப் பாதுகாப்புக் கட்டளை சட்டத்தை மீளாய்வு செய்தல் அத்துடன் பயங்கரவாத தடுப்புச் சட்டம் நீக்கப்பட்டு அது சமகால சர்வதேச சிறந்த நடவடிக்கைகளுக்கு ஏற்ப பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவாக் கத்தின் மூலம் மாற்றீடு செய்யும் இலங்கை அரசாங்கத்தின் கடப்பாடு வரவேற்கப்படுகின்றது”.

‘சர்வதேச நியமங்களுக்கு’ என்ற பதப் பிரயோகத்துக்குப் பதிலாக ‘சமகால சர்வதேச சிறந்த நட டிக்கைகள்’ என்ற பதப்பிரயோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது இந்த எழுத்தாளரின் கருத்தாகும். ஏனெனில், சிறந்த நடவடிக்கைகள் என்பது சிவில் சுதந்திரத்தைத் தடுத்தலை பிரதிபலிக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவாக்க போக்குகளை குறிக்கும். அதேவேளை சர்வதேச நியமங்கள் எனப்படுவது 9/11 தாக்குதலுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட நியமங்களாகும். அவை சிவில் சுதந்திர தடைகள் பற்றி கவனம் கொண்டிருப்பதுடன் குறித்த தடைகள் அபாய நேரிடர் நிலவும் குறிப்பிட்ட காலப்பகுதியில் மாத்திரம் அமுலில் இருப்பதை உறுதி செய்ய முயற்சிக்கின்றன.

இந்த அதிகாரங்கள் தனது சட்ட அமுலாக்க முகவர் அமைப்புகளினால் எவ்வாறு பயன்படுத்தப்படும் (அல்லது துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படும் சாத்தியங்கள்) மற்றும் எவ்வாறு தனது சொந்த குடிமக்கள் மீது தாக்கம் செலுத்தும் என்பதை ஆராயாது சர்வதேச மயமாக்கப்பட் டுள்ள ‘பயங்கரவாத எதிர்ப்பு’ என்ற போக்கினுள் இலங்கை சிக்கிக் கொண்டுள்ளது.

இலங்கை ஏன் இப்படியான சட்டமொன்றை கொண்டு வரவேண்டும்? அதற்குரிய காரணங்கள் என்ன?

இலங்கை இச்சட்டத்தை கொண்டு வர பல் வேறு காரணிகள் இருக்கக் கூடும். அதில் ஒன்று, சர்வதேசக் கடப்பாடு – பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் 30/1 தீர்மானத்தில் சர்வதேச சமூகத்துக்கு இலங்கை வழங்கிய கடப்பாட்டின் ஒரு பகுதியாகக் காணப்படுகின்றது எனக் கூறுகின்றது. அதாவது பயங்கரவாத தடுப்புச் சட்டமூலம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தினால் மாத்திரமே மாற்றப்படலாம்.

இலங்கை பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அமுல்படுத்தாத விடத்து பயங்கரவாத தடுப்புச் சட்டமூலம் அமுலில் இருக்கும்.   எனினும், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் பயங்கரவாதத்தை வரையறுப்பதில் கூட சர்வதேச அளவில் கலந்துரையாடப்பட்ட வழிகாட்டல்களை உள்வாங்கத் தவறியுள்ளது. அதற்குப் பதிலாக தெளிவற்ற மற்றும் பரந்த வரைவிலக்கணம் ஒன்றை வழங்கியுள்ளது.

இந்த வரைவிலக்கணம் அரசாங்கத்துக்கு எதிராக பாவிக்கக் கூடிய எதிர்ப்புக்களின் வகைகள் மற்றும் அதிருப்தி போன்றவற்றை உள்ளடக்கி உள்ளது. மிகவும் குறைவான அத்துமீறும் சட்டங்கள் இயற்றப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் இவ்வாறான சட்டம் ஒன்றின் தேவை பற்றி சரியாக மீளாய்வு செய்யும் முயற்சிகள் எவையும் இலங்கையில் மேற்கொள்ளப்படவில்லை. உதாரணமாக கணினித் தரவுகளை விசாரணை செய்யும் பொலிஸாரின் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான மீளாய்வை இங்கு குறிப்பிடலாம்.

இரண்டாவது, இன்னொரு சிவில் யுத்தத்தை தடுத்தல் / இலங்கையில் காணப்படும் ‘பயங்கரவாதிகள்’ பற்றிய புலனாய்வு அறிக்கைகள் – இந்தச் சட்டம் கிளர்ச்சிக் குழுக்களைக் கண்டு பிடிக்க மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்க அவசியமானது எனக் கூறுகின்றது.

எனினும் பரந்துபட்டுக் காணப்படும் தண்டனைப் பயமற்ற தன்மை, இலங்கையில் சட்ட அமுலாக்கல் தரப்புகளால் மேற்கொள்ளப்படும் முறைமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் சிறுபான்மை நலன்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறை ஜனநாயக பரிசோதனைகள் என்பன பரந்த சிவில் சுதந்திரத்தை அறிமுகம் செய்ய சிறந்த சூழ்நிலைகள் அல்ல. பாகுபாடு மிக்க பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் வேறுபட்ட அரசியல் சித்தாந்தங்கள், மத நம்பிக்கைகள், இன, வகுப்பு மற்றும் சாதி அடிப்படையிலான குறிப்பிட்ட நபர்களின் குழுக்களுக்கு மேலும் பாதிப்பையே ஏற்படுத்தும். இதன் மூலம் மனக்குறைகள் அதிகரித்து அது முரண்பாட்டுக்கு வழிவகுக்கும்.

மூன்றாவது, இலங்கை சர்வதேச பயங்கர வாதத்தை ஒடுக்குவதில் ஏனைய நாடுகளுக்கு உதவக்கூடியதாக இருக்க வேண்டும் – உதாரணமாக ஒரு சந்தேக நபர் இலங்கையில் தஞ்சமடைந்தால் அல்லது நிதி இலங்கைக்கு மாற்றப்பட்டால் அல்லது இலங்கையில் வைப்பிலிடப்பட்டால், ஆனால்.- இலங்கை தனது மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் மற்றும் மிகவும் தேவையாக உள்ள நீதித்துறையில் நம்பிக்கையை கட்டி எழுப்புவதை தடுக்கும் சட்டங்களை வெறுமனே ஏனைய நாடுகள் கடைப்பிடிப்பதனால் இங்கும் கடைப்பிடிக்க எண்ணுவது தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும். இவ்வாறான சட்டங்களை கடைப்பிடிக்கும் சில நாடுகள் இலங்கையை போல் 40 வருட கால அவசரகால ஆட்சியை அனுபவித்தவை அல்ல என்பதையும் கருத்தில் கொள்க.

அத்துடன் அவை முறைப்படுத்தப்பட்ட சித்திரவதை, தன்னிச்சையான தடுத்து வைப்பு மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்களை ஏற்படுத்தும் சட்ட அமுலாக்கல் முறைமைகளைக் கொண்டவை அல்ல. அத்துடன் அந்த முறைமைகளில் காலந் தாழ்த்தும் விசாரணை மற்றும் வழக்கு விசாரணையுடன் கூடிய நீண்ட கால தடுத்து வைத்தல்கள் காணப்படுவதில்லை. குறிப்பிட்ட செயற்பாடுகள் அல்லது கொடுக்கல் வாங்கல்களில், குற்றவியல் விடயங்களில் பரஸ்பர உதவிகளை வழங்க விசேட சட்டங்கள் உருவாக்கப்பட முடியும்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சிறுபான்மைக்கு எவ்வாறு தீங்கு விளைவிக்க கூடியது? 

அது சட்டம் ஒழுங்கை மீளக் கட்டியெழுப்புதல் மற்றும் நீதி நிருவாகத்தில் நம்பிக்கை ஏற்படுத்துதல் என்பவற்றுக்குத் தீங்கு விளைவிக்கும். அதிகாரத்தில் உள்ளோர் வேறுபட்ட இன, மொழி, மத, அரசியல் சித்தாந்த அடிப்படையில் அமைந்த தம்முடன் இணங்காத குழுக்களை நீதியற்ற முறையில் நடத்த இந்தச் சட்டமூலம் அனுமதிப்பதால் அது சமரச முயற்சிகளுக்கு தீங்கு விளைவிக்கும். தன்னிச்சையான இந்த பாகுபாடு மற்றும் பலிக்கடாக்கள் ஆக்குதல் இலங்கையர்களை பிளவுபடுத்தும். இது கருத்து வேறுபாடு, ஒன்று கூடுதல் மற்றும் ஒன்று சேர்தலுக்கான சுதந்திரம் என்பவற்றுக்குத் தீங்கானது.

யுத்தத்துக்குப் பின்னரான மற்றும் அவசரகால ஆட்சிக்குப் பின்னரான இலங்கையின் அடிப்படை உரிமைகள் சட்டவியலை மேம்படுத்துவதில் இந்த சட்ட மூலம் தீங்கானது. இது பயங்கரவாத தடுப்பு சட்ட மூலத்தினால் மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகங்களை பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத் தின் கீழ் தொடர்ந்து மேற்கொள்ள அனுமதிக்கும்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களுக்கும் குற்றவியல் சட்டங்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் என்ன?

சாதாரண குற்றவியல் சட்டங்கள் மற்றும் அவசரகால சட்டங்கள் இடையே எப்போதும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. குற்றவியல் சட்டத்தில் உரிய படிமுறை மற்றும் போதிய சான்றுகள் காணப்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரமே உரிய நபர் தண்டிக்கப்படுதல் உறுதி செய்யப்படுகின்றது. குற்றவியல் சட்டங்களில் நியாயமான, ஐயத்துக்கு இடமின்றிய நிலைகளில் மாத்திரம் கைதுசெய்யப்படல், தடுப்புக் காவலில் உள்ளோரை நீதிபதிகள் மேற்பார்வை செய்தல், தேடுதல் மற்றும் கைப்பற்றுதல், மற்றும் சான்றுகள் இன்றி சுதந்திரம் மற்றும் அந்தரங்கம் என்பவற்றில் தலையிடாதிருத்தல் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. குற்றவியல் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட குற்றம் துல்லியமானதாக இருத்தல் அவசியமானது – நிச்சயமாக இது  சட்ட ஆட்சியின் முக்கிய கொள்கையாகும்.

அவசரகால வேளைகளில் உரிமைகள் மற்றும் சுதந்திரம் என்பன இடைநிறுத்தப்பட்டிருக்கும். ஏனெனில் இந்நிலை பொது மக்களுக்கு அசாதாரண நடவடிக்கைகள் தேவைப்படுகின்ற தீவிர அபாய நேரிடர் நிலை காணப்படுவதை எடுத்துரைக்கும். வழமையாக இந்த அபாய நேரிடர் நிலை வரையறை அற்றதாகக் காணப்படுவதுடன் ஏற்படக் கூடிய, தெளிவற்ற முறையில் வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக அசாதாரண அதிகாரங்கள் பயன்படுத்தப்படும். – இது அடிப்படை சட்ட ஆட்சியின் கொள்கையில் இருந்து விலகுவதை குறிக்கின்றது. வழமையாக அவசரகால சட்டங்கள் மட்டுப்படுத்தப்பட்ட காலப்பகுதிக்கு மாத்திரமே பயன்படுத்தப்படக் கூடியன. பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள் அசாதாரண அல்லது அவசரகால சட்டங்களுக்கு ஒப்பானவையாக காணப்படுவதுடன் அவை நிரந்தரமான சட்டங்களாக அமைகின்றன.

அத்துடன் குறித்த சட்டங்கள் சாதாரண குற்றவியல் சட்டங்களுடன் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இது தீர்மானம் மேற்கொள்வோர் (அரசியல்வாதிகள்) மற்றும் சட்ட அமுலாக்க அதிகாரிகள் எந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற தெரிவை மேற்கொள்கின்ற சூழ்நிலை ஒன்றை உருவாக்குகின்றது. அவர்களால் அனைத்து சிவில் சுதந்திர பாதுகாப்புக்களையும்  கொண்ட குற்றவியல் சட்டத்தை பின்பற்றுவதா அல்லது பாதுகாப்பு எதுவுமற்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை பயன்படுத்துவதா என்ற தெரிவை மேற்கொள்ள முடியும்.

இங்கு காணப்படும் அபாயம் யாதெனில் இவ்வாறான அசாதாரண அல்லது பயங்கரவாத சட்டங்கள் வரலாற்று ரீதியாக அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவு வழங்காத அதிருப்திகளை வெளியிடுகின்ற, மக்கள் நடவடிக்கைகள் அல்லது அல்லது வேலை நிறுத்தங்களை மேற்கொள்கின்ற தனி நபர்கள் அல்லது குழுக்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகின்றன. இலங்கையில் அவ்வாறான சட்டங்கள் சிறுபான்மைகளுக்கு எதிராக பாகுபாடான முறையில் பயன்படுத்தப்படும் உண்மையான அபாயம் காணப்படுகின்றது.

இங்கு குற்றங்கள் ஒரே மாதிரியானவை என்பதை கவனத்தில் கொள்வது பயன்மிக்கது – வழமையாக தனி நபர் ஒருவருக்கு அல்லது சொத்துக்கு தீங்கு விளைவிப்பது குற்றவியல் தவறாகவே கருதப்படுகின்றது. இதே குற்றம் பயங்கரவாத தாக்குதலாக கூறப்படும் சந்தர்ப்பத்தில் அது பயங்கரவாத குற்றமாக அழைக்கப்படும். அது ஒரு அரசியல் பதப்பிரயோகம் ஆகும். முன்னராக தேசிய பாதுகாப்புச் சட்டங்களாக அறியப்பட்ட சட்டங்கள் சமகாலத்தில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களாக அழைக்கப்படுவது வழமையாக மாறியுள்ளது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் செப்டம்பர் 11, 2001 இல் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர் பிரபல்யம் அடைந்தது.

அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் புதிய சட்டங்களை இயற்றின. அநேகமான நாடுகள் ‘பயங்கரவாதத்துக்கு’ எதிராக போரிடும் வகையில் தமது தேசிய பாதுகாப்புச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டன. பயங்கவாதம் என்ற பதம் சூழமைவு மற்றும் அதை பயன்படுத்தும் நபர் என்பவற்றுக்கு ஏற்ப வேறுபட்ட விடயங்களை குறிக்கின்றது. சர்வதேச உடன்பாடுகள், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மற்றும் பாதுகாப்புச் சபை தீர்மானங்களில் ‘பயங்கரவாதம்’ என்ற பதம் பயன்படுத்தப்பட்ட போதும் சர்வதேச சட்டங்களின் கீழ் பயங்கரவாதத்துக்கான வரைவிலக்கணம் வழங்கப்படவில்லை.

வழமையாக சமாதான காலப்பகுதியில் குடிமக்கள் நியாயமாக அவர்களது சுதந்திரத்துக்குப் போதிய அளவு பாதுகாப்புடன் நடத்தப்படுவதை உறுதி செய்ய குற்றவியல் சட்டங்களே பயன்படுத்தப்படுகின்றன. பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள் தொடர்ச்சியாக அபாயம் காணப்படுகின்றது என்ற தோற்றத்தைதே ஏற்படுத்துகின்றன.

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் காணப்படும் பிரச்சினைக்குரிய ஏற்பாடுகள் என்ன என்பதை சற்றுத் தெளிவுபடுத்த முடியுமா?

பிரச்சினைக்குரிய ஏற்பாடுகளே அதிகம் காணப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றை மாத்திரம் குறிப்பிடுகிறேன். முதலாவது, இதன் வரைவிலக்கணக்கத்தில் பிரச்சினை காணப்படுகின்றது. நீதி முறைமை ஒன்றில் காணப்படும் சாதாரண பாதுகாப்புகளை       நீக்கும் சட்டம் ஒன்றானது அது பயன்படுத்தப்படும் சூழ்நிலைகள் மற்றும் தவறுகள் என்பவற்றை துல்லியமாக குறிப்பிட வேண்டும். இது குறித்த சட்டம் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுவதை அல்லது நியாயமற்ற வழிவகைகளில் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும். இதன் காரணமாகவே பயங்கரவாதத்தின் வரைவிலக்கணம் தெளிவானதாகவும் துல்லியமானதாகவும் காணப்பட வேண்டும். வரைவிலக்கணம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் வாசகம் 3 இல் காணப்படுகின்றது.

தற்கால வரைவிலக்கணம், சூழ்நிலைக் காட்சிகளை ‘பயங்கரவாதக் குற்றங்கள்’ எனக் கருதுவதை அனுமதிக்கும். உதாரணமாக, நீர் மாசுபடுதலில் அரசாங்கத்தின் ஈடுபாட்டுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தல் (றதுபஸ்வலவில் நடந்ததை போன்று), தமது சுற்றயலில் கழிவுகளை கொட்டுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தல் (மீதொடுமுல்லையில் நடந்ததை போன்று), அபிவிருத்தித் திட்டங்களின் தாக்கங்களுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி (நகர மயமாக்கல் மக்கள் வெளியேற்றம், பெருந்தோட்ட நிலங்களை பேச்சுவார்த்தைகள் இன்றி மீளப்பயன்படுத்துதல், ஹம்பாந்தோட்டை கைத்தொழில் அபிவிருத்தி வலயம் துறைமுக நகரம் போன்ற திட்டங்கள்) அத்துடன் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை விடுவிக்கக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளல், தொழிற்சங்க வேலைநிறுத்தங்கள், பாரிய குடிமக்கள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சிவில் பணிய மறுத்தல் செயற்பாடுகள் (2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரசியல் சதிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் போன்றன) விமர்சனம் தேசிய நலனுக்கு குந்தகம் விளைவிப்பது எனக் கூறப்படல் (திஸ்ஸநாயகம் போன்றவர்களின் கைதும் சட்ட நடவடிக்கையும். அவர் இன வெறுப்பை தூண்டுவதாகவும் அவரின் வெளியீட்டுக்கு நிதி சேகரித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டார்), ஆஸாத் சாலி (அவரின் BBS அமைப்பின் மீதான குற்றச்சாட்டுகள் இன நல்லுறவை சீர் குலைப்பதாக குற்றம் சுமத்தப்பட்டது).

மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மீதான நடவடிக்கைகள் (பாதிரியார் ப்ரவீன் மற்றும் றுகி பெர்னாண்டோ ஆகியோர் காணாமல் போனோரின் குடும்பங்களை சந்தித்த வேளை கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர்). பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் காணப்படும் வரைவிலக்கணம் ஐக்கிய நாடுகள் வழிகாட்டல்களைக் கூட மீறுவதாக அமைகின்றது. 

இது தவிர இச்சட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ள, கைதுசெய்யும் அதிகாரங் களைப் பற்றிக் குறிப்பிடும் போது, நபர் ஒருவரை குறித்த நபர் பயங்கரவாத குற்றம் ஒன்றை இழைத்துள்ளார் என நியாயமான ஆதாரங்களுடன் எண்ணும் சந்தர்ப்பத்தில் எந்த ஒரு பொலிஸ் அதிகாரி, ஆயுதப் படை உறுப்பினர் அல்லது கரையோர பாதுகாவலருக்கு குறித்த நபரை பிடியாணை இன்றி கைதுசெய்ய முடியும்.

கைது செய்யும் அதிகாரிக்கு தேடுதல் மேற்கொள்ள, விசாரணை செய்ய, இடங்களுக்குள் நுழைய அல்லது குற்றத்துடன் தொடர்புடையது என நம்பப்படும் எந்த ஒரு ஆவணத்தை அல்லது பொருளை கைப்பற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தின் பிரிவு 17 இல் முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும் இச்சட்டத்தில்,  தடுப்புக்காவல் மீதான நீதிபதியின் மேற்பார்வை அகற்றப்பட்டுள்ளது. அதாவது, செல்லுபடியான தடுப்புக்காவல் கட்டளை ஒன்று காணப்படும் இடத்து நீதிபதி அந்தக் கட்டளைக்கு அனுமதி வழங்க வேண்டும். இதன் பொருள் கைதுசெய்தமைக்கு போதிய காரணங்கள் உள்ளனவா அல்லது இல்லையா என நீதிபதி தீர்மானிக்க முடியாது – வாசகம் 27(1) (A) பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்.

இவை போக, ஒரு பிரதி பொலிஸ் மாஅதிபர் நியாயமான காரணங்களுக்காக தடுப்புக்காவல் உத்தரவை வழங்க அதிகாரமளிக்கப்பட்டு உள்ளார். வாசகம் –  31 (b) இன்னும் இச்சட்டத்தில், ஊரடங்கு சட்டத்தை அறிவிக்கும் ஜனாதிபதியின் அதிகாரம் மக்கள் ஒழுங்கை நிலைநிறுத்துவதிலும் பார்க்க பரந்துபட்ட நோக்கங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.

இன்னும், சட்டமா அதிபரின் பரிந்துரைக்கு ஏற்ப குற்றவியல் நடைமுறைகள் இடைநிறுத்தப்பட்ட, பின்போடப்பட்ட அல்லது குற்றச்சாட்டு வாபஸ் பெறப்பட்ட நபர்களுக்கு புனர்வாழ்வு நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஒழுங்குவிதிகளை உருவாக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு – வசனம் 94 பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்.

வாசகம் 26(1) இல்  “பொலிஸ் மாஅதிபர் இந்த சட்ட மூலத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நபரினதும் கைது, தடுப்புக்காவல், விளக்கமறியல், பிணை வழங்கல், விடுவிப்பு, வழக்குத் தொடரல், தண்டனை வழங்குதல் அல்லது விடுதலை செய்யப்படல் தொடர்பான தகவல்களை கொண்ட மத்திய தகவல் தளம் ஒன்றை பேணி வர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான தகவல்கள் அரச நிறுவனங்கள் மற்றும் சர்வதேச முகவர் அமைப்புகளுடன் பகிரப்படும் உண்மையான அபாயம் காணப்படுகின்றது. இதன் மூலம் வெறுமனே தடுத்து வைக்கப்பட்ட அல்லது குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் நற் பெயர், நடமாடும் சுதந்திரம் மற்றும் வேலைவாய்ப்பு, சொத்துக்கள் தொடர்பான சட்ட ரீதியான உரிமைகளை அனுபவித்தல் தொடர்பில் தீமையான முறையில் பாதிக்கப்படும் சாத்தியம் காணப்படுகின்றது.

About the author

Administrator

Leave a Comment