ஆன்மீகத்துடன் ஏனைய அறிவுகளையும் சேர்த்து வழங்குவது ஸலாமாவின் சிறப்பம்சம் – ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்

0
33

எங்களது குழந்தைகளுக்கு வெறுமனே சமயத்தை மாத்திரம் படித்துக் கொடுக்காமல் சமய அறிவுடன் ஏனைய அறிவுகளையும் சேர்த்து வழங்குவது தான் இன்றுள்ள முக்கியமான பணி. அவ்வாறானதொரு பணியை ஸலாமா நிறுவனம் இந்தப் பிராந்தியத்திலே முன்னெடுப்பது தொடர்பில் நாங்கள் சந்தோஷமடைகின்றோம் என கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடி ஹிஸ்புல்லா அரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை (15-02-2019) நடைபெற்ற தேசிய ஸலாமா தினத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், எங்களுடைய வேலைப்பளு, வியாபாரம், தொழில் எனப் பல்வேறுபட்ட காரணங்களினால் எங்களுடைய பிள்ளைகள் மீதான எங்களுடைய பொறுப்பிலிருந்து நாங்கள் தவறிவிடுகின்றோம். இது தான் எமது இளைஞர் சமுதாயம் தடம் மாறிச் செல்வதற்குக் காரணமாகிறது. அவ்வாறானதொரு வேளையில் இப்படியான நல்லதொரு தலைப்பில் தேசிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வினையிட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். குறிப்பாக கல்வி வளர்ச்சியில் ஆர்வத்தை ஏற்படுத்தி, விழிப்புணர்வையூட்டி, அதனோடு மார்க்கத்தையும் இணைத்து சமூக சிந்தனையோடு கல்வியைத் தொடர்புபடுத்துகின்ற இந்தச் செயற்பாடு இன்றைய சமூகத்துக்கு மிகப் பொருத்தமான செயற்பாடாகும். ஸலாமாவின் இந்தச் செயற்பாடுகளுக்குத் தேவையான ஒத்துழைப்பினை வழங்க நான் எப்பொழுதும் தயாராக இருக்கிறேன் எனத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான எம். உதய குமார் உரையாற்றுகையில், ஒரு அமைப்பு தன்னுடைய சமூகம் சார்ந்ததாக, பிரதேசம் சார்ந்ததாக, நாடு சார்ந்ததாக, முழு மனித சமுதாயத்தினதும் விழுமியங்களைப் பாதுகாக்கின்ற அமைப்பாகச் செயற்படுகின்ற பொழுது, அது மிகச் சிறப்பான அடைவுகளை தனது சமூகத்துக்கும், பிரதேசத்துக்கும், நாட்டுக்கும் வழங்க முடியும். இந்த அடிப்படையில் ஸலாமாவும் ஸீரா அமைப்பும் செய்து வருகின்ற பணியை நான் வெகுவாகப் பாராட்டுகின்றேன். இந்த முறை தேசிய ஸலாமா தினத்தை எங்களது பிரதேசத்தில் நடத்துவதையிட்டு நான் சந்தோஷமடைகின்றேன் என்று குறிப்பிட்டார்.

ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த இந்நிகழ்வில், ஸலாமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத், பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் ரயீஸுல் இஸ்லாம், காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய ஸ்ரீதர், காத்தான்குடி நகரபிதா எஸ்.எச்.எம். அஸ்பர், நிந்தவூர் பிரதேச செயலாளர் அன்ஸார் (நளீமி) உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

காத்தான்குடி ஸீரா அமைப்பின் தலைவர் எம்.எம்.எம். பைஸலின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஸலாமா தின தொனிப்பொருளான “நமது பிள்ளை நமது பொறுப்பு” எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் அனஸ் முஹம்மத் உரை நிகழ்த்தினார்.