Features சமூகம் சாதனையாளர்கள்

தேசிய கிரிக்கட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் சிராஸ்

Written by Administrator

– அனஸ் அப்பாஸ் –

13.02.1995 இல் பிறந்த எம். எஸ். சிராஸ் மலையகத்தின், மடவளையை பிறப்பிடமாகக் கொண்டவர். எம்.எச். ஸஹாப் – ஜே.யு. ஸரீகா தம்பதிகளின் அன்புப் புதல்வரான இவர், தரம்-1 முதல் உயர்தரம் வரை மடவளை மதீனாவில் கற்றுள்ளார். ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த சிராஸுக்கு உடன்பிறப்புக்கள் இருவர், ஸிபானி மற்றும் ஸிஹான்.

கண்டி மடவளை மதீனா தேசிய பாடசாலையில் வலது கை வேகப்பந்து வீச்சாளராக மிளிர்ந்துவந்த சிராஸ், அயர்லாந்து அணிக்கெதிரான உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் மூலம் முதல் தடவையாக இலங்கை அணிக்காக விளையாடும் சந்தர்ப்பத்தை பெற்றார். அண்மையில் இடம்பெற்ற தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கட் மூலம் இவர் இலங்கை தேசிய அணிக்கு உள்வாங்கப்பட்டுள்ளார்.

BRC கிரிக்கட் கழகத்திற்காக விளையாடிவந்த சிராஸ், இந்த பருவ காலத்திற்கான இலங்கை கிரிக்கட் சபையின் மேஜர் எமர்ஜீங் லீக் முதல் தர கிரிக்கட் தொடரில் இதுவரையில் 4 போட்டிகளில் பங்கேற்று 17 விக்கட்டுக்களை கைப்பற்றி உள்ளார்.

கடந்த ஆண்டு நடைப்பெற்ற வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான T20 கிரிக்கட் தொடரில் ஜோன் கீல்ஸ் அணிக்காக 2 போட்டிகளில் மாத்திரம் விளையாடி, அவற்றில் 5 விக்கட்டுகளை தனதாக்கி இருந்தார்.

மேலும், கடந்த ஆண்டு 23 வயதுக்கு கீழ்பட்ட மாகாண அணிக்கு இடையிலான கிரிக்கட் தொடரில் மத்திய மாகாண அணிக்காக விளையாடி 26 விக்கட்டுக்களுடன், தொடரின் அதிக விக்கட்டுக்களை கைப்பற்றிய வீரராகவும் சாதனையை நிலைநாட்டினார்.

“எனது சிறுவயதிலே விளையாட்டு என்ற ரீதியில் முதலில் விளையாடப் பழகியது கிரிக்கட் தான், அதுவும் நண்பர்களுடன் பொழுது போக்கிற்காக விளையாடினேன். பாடசாலையில் கற்கும் காலங்களில் பாடசாலை அணியில் எவ்வாறாயினும் இணையவேண்டும் என்பதற்காக மிகவும் கஷ்டப்பட்டேன். முயற்சிகளின் மூலமும் பயிற்சிகளின் மூலமும் எதிர்பார்த்திருந்த வாய்ப்பு கிட்டியது. எனது பயணத்திற்கான களமும் கிடைத்தது. நான் பங்குபற்றிய ஒவ்வொரு போட்டியும் என்னுள் ஆர்வத்தை தூண்டியது. இன்னும் முயற்சிக்க வேண்டும், என்னால் இன்னும் முடியும் என்ற எண்ணத்தை தோற்றுவித்தது.”

“எத்தனையோ போட்டிகளில் இதற்கு முன் விளையாடி இருக்கின்றேன். ஆனால், தற்போது சர்வதேச அணியொன்றுடன் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கும் அதேவேளை பதற்றத்தையும் தருகின்றது.”

“இலங்கை கிரிக்கட் A அணிக்காக அயர்லாந்துடன் விளையாட எனக்கு வாய்ப்பு கிட்டிய செய்தியை நான் தெரிந்து கொண்ட போது கிடைத்த மகிழ்ச்சியை விட, அதனை பெற்றோரிடம் பகிரும் போது ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.”
என தனது கிரிக்கட் வாழ்க்கையின் சுருக்கக் குறிப்பைத் தருகின்றார் சிராஸ். தற்போது தேசிய அணிக்கு இவர் உள்வாங்கப்பட்டிருக்கும்நிலையில் இவருக்கான பாராட்டுக்கள் சமூக வலைதளங்களிலும், தேசிய மட்டத்திலும் அதிகரித்து வருகின்றது.

“கிரிக்கட் என்பதே சவால்களுடன் கூடிய விளையாட்டு தான். தேசிய அணியில் இடம்பெற வேண்டும் என்றால் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். இலங்கையின் தேசிய கிரிக்கட் அணியில் வாய்ப்பு கிடைத்திருப்பது எனது திறமையைக் காட்ட சிறந்த சந்தர்ப்பமேயாகும்.” என்ற உறுதியுடன் இருக்கின்றார் இவர்.

பாடசாலையில் கற்கும் காலங்களில் கிரிக்கட் பயிற்சிகளில் காட்டிய ஆர்வத்தை கற்றலில் செலுத்த முடியவில்லை. ஓர் போராட்டத்துடன் தான் இரண்டையும் எதிர் கொண்டதாக தனக்கு ஏற்பட்ட சவால்கள் குறித்து குறிப்பிட்டத்துடன், சில போட்டிகளில் விளையாடும் போது தலை குனிய வேண்டிய நிலைமைகளும் ஏற்பட்டிருக்கின்றன. அச்சந்தர்ப்பங்களில் பயிற்றுவிப்பாளர்களின் ஊக்குவிப்புக்களே பக்க பலமாக அமைந்ததாகவும் கூறினார்.

வேகப் பந்து வீச்சாளர் என்ற வகையில் உடல் சார்ந்த உபாதைகளுக்கு உள்ளாகிய சந்தர்ப்பங்களில் சற்று மனம் தளர்ந்ததுண்டு. பின்னர் மனதை திடப்படுத்திக் கொண்டு போட்டியிட தற்போதெல்லாம் பழகி விட்டதாகக் குறிப்பிடுகின்றார்.

இக் கிரிக்கட் பயணத்தில் உங்களுக்கு மறக்க முடியாத நாட்கள் எதேனும் இருக்கின்றனவா? என்ற கேள்விக்கு, “ஆம். நான் தேசிய கிரிக்கட் அணியில் போட்டியிடுவகற்காக தெரிவு செய்யப்படுள்ளேன் என்ற செய்தியை அறிந்து கொண்ட அன்றைய நாள், மற்றும் “Mobitel 36th OBSERVER school boy cricketer of the year – 2014” இல் நான் முதலிடம் பெற்ற அந்த வெற்றியை எனது முழு ஊருமே சேர்ந்து கொண்டாடிய தினம் ஆகிய இரு தினங்களிலும் நான் அடைந்த மகிழ்ச்சி எல்லையில்லாதவை. நிச்சயமாக இவ்விரு தினங்களையும் என் வாழ்நாளில் மறக்க முடியாது.” என்று குறிப்பிட்டார்.

“தேசிய அணியில் இடம்பிடிப்பதற்கு இன ரீதியாக ஏதேனும் பாகுபாடு உள்ளது என நினைக்கின்றீரா என்பதே பொதுவாக சகலரும் என்னிடம் கேட்கும்  கேள்வி. நிச்சயமாக இல்லை. இதுவரை நான் பங்குபற்றிய போட்டிகளாகட்டும், பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளார்களாகட்டும், என்னிடம் எவ்வித பாகுபாட்டையும் காட்டியதில்லை. என்னை பொருத்தவரை என்னால் முடியுமான முயற்சிகளை செய்கின்றேன். எனது திறமையை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது.” என மகிழ்ச்சி வாசகங்களை சிராஸ் உதிர்க்கின்றார்.

நிச்சயமாக முதற்கண் இறைவனுக்கும், தனது பெற்றோர், பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர்கள், குடும்ப உறவினர், நண்பர்கள், ஆசிரியர்கள், ஊர் மக்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் நன்றி பகர்கின்றார் இவர். தனது வெற்றிக்கு பக்க பலமாக இருந்தவர்களுக்கு நன்றி செலுத்துவற்கான சிறந்த சந்தர்ப்பமாகவும் இதனை குறிப்பிடுகின்றார்.

நிட்டம்புவை பிரதேசத்தில் பிறந்து தேசிய கிரிக்கட் அணியில் இடம்பிடித்த நுவன் குலசேகரவை தனது முன்மாதிரியாகக் குறிப்பிடுகின்றார் சிராஸ். சிறுவயதில் இருந்தே பந்து வீச்சில் இருந்த ஆர்வமே அவரைப் பின்பற்றி பந்து வீசவும் கற்றுக்கொடுத்ததாகவும், தற்போது அவரை பின்பற்றி பந்து வீசுவது இலகுவாக இருப்பதாகவும் சொல்கின்றார். அவருடன் இணைந்து விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவரது அனுபவங்களையும் என்னுடன் பகிர்ந்து கொண்டார். அறிவுரைகளையும் பெற்று கொண்டேன். வரும் காலத்தில் நுவன் குலசேகர போன்று ஓர் வேகபந்து வீச்சாளர் என சகலராலும் பேசப்பட்டு, தாய் நாட்டுக்காக தொடர்ந்து விளையாட வேண்டும் என்ற இலட்சியத்துடன் தற்போது கொழும்பில் பயிற்சிக் களத்தில் இருக்கின்றார் சிராஸ்.

“இதுவரை பெற்றதை சாதனை என்று கூற விரும்பவில்லை. இதுவே அந்த பயணத்தின் ஆரம்பம்” என்கின்றார் 23 வயதேயான சிராஸ்.

About the author

Administrator

Leave a Comment