Features சமூகம்

மண்ணோடு மண்ணாகிப் போகும் மக்களும் அரசியலும்

Written by Administrator
  • அருவியெம்

இலங்கை அரசியல் வரலாற்றில் மாற்று அரசியல் செய்த அல்லது செய்ய எத்தனித்த எத்தனையோ ஆத்மாக்கள் இன்று புதைகுழிகளில் வாழ்கிறார்கள். அவை காலத்துக்குக் காலம், சந்தர்ப்ப சூழ்நிலைகளின் போது கண்டுபிடிக்கப்பட்டு தோண்டி எடுக்கப்படுகின்றன. அவை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்காக சர்வதேச ஆய்வாளர்களின் உதவிகளும் பெறப்படுகின்றன.

மாத்தளை புதைகுழி

1988 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தென் இலங்கை யில் புரட்சியில் ஈடுபட்ட சிங்கள இளை ஞர்களை அடக்குவதற்காக, அப்போதைய அரசாங்கம் கையாண்ட வழிமுறைதான், அவர்களைப் புதைகுழிகளில் அடக்கியது.

இப்புதைகுழியில் மார்க்ஸிய அரசி யலை இலங்கையில் நடைமுறைப்படுத்து வதற்காக புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் பயணித்த சிங்கள இளைஞர்களின் எலும்புக் கூடுகளே இருப்பதாகக் கூறப்படுகின்றது. அவர்கள் அரசியல் மாற்றத்தை புரட்சி மூலமே சாத்திய மாக்கலாம் என்ற சித்தாந்தங்களுக்குள் உள்வாங்கப்பட்டதால் அன்று புரட்சிகளை மேற்கொண்டார்கள்.

அன்றைய அரசாங்கம் அப்புரட்சியாளர்களை அடக்குவதற்காக மிகக் கொடுமையாக அவ்விளைஞர்களைக் கொன்று குவித் தது. அதில் பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள். பெரும்பாலானவர்கள் இதுவரை காணாமலாக்கப்பட்டுள்ளார்கள். பின்னர் இப்புரட்சியாளர்கள், புரட்சியை கைவிட்டுவிட்டு அரசியல் நீரோட்டத்திற்குள் நுழைந்தார்கள். பின்னர் அரசாங்கத்தில் அங்கம் வகித்து அமைச்சர்களாகவும் மாறினார்கள். இப்போது நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக காலத்திற்குக் காலம் அகிம்சை ரீதியாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) என்ற நாமத்தில் போராடுகிறார்கள்.

மன்னார் புதைகுழி

இவ்வாறே 1956 ஆம் ஆண்டு சிங்கள மொழிச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர், ஆங்கிலேயர் காலம் முதல் தமிழர்களின் கைகளில் இருந்த நிருவாக சேவைகள் சிங்களவர்களின் கைகளுக்கு மாறியது.

இதனால் தமிழ் – சிங்கள உறவில் விரிசல்கள் ஏற்பட ஆரம்பித்தது. அன்றிலிருந்து தமிழ் இளைஞர்கள் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக எதிர்த்தார்கள். அதன் தாக்கம் 1983 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் 11 பொலிஸாரை கிளைமோர் குண்டுத் தாக்குதலுக்கு உட் படுத்தி தமிழ் ஆயுதப் படைகள் கொன்ற னர். அவர்களின் உடல்கள் கொழும்புக்கு வந்ததைத் தொடர்ந்து 1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரம் ஆரம்பித்தது. இது பல மனித உயிர்களை வேட்டையாடியது. அத்தோடு பல கோடி பெறுமதியான சொத்துக்களைச் சேதப்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, இனப்பிரச்சினை இன்னுமொரு பரிணாமம் எடுத்தது. அது 1990 ஆம் ஆண்டு இன முரண்பாட்டின் முழு வடிவத்தைப் பெற்றது.

1956 ஆம் ஆண்டு முதல் தமிழர்களின் தாயகப் போராட்டம் சிங்கள மக்களோடு, சிங்கள மக்களோடு என்பதைவிட மத்திய அரசாங்கத்தோடுதான் இருந்தது. ஆனால், 1989 – 1990 காலங்களில் சிறந்த முறையில் இருந்த தமிழ் – முஸ்லிம் உறவில் தமிழர் போராட்டம் பாரிய விரிசலை எற்படுத்தி யது. இறுதியில் பல ஆயிரம் அப்பாவி முஸ்லிம்களின் உயிர்களை அப்போராட்டம் காவு கொண்டது. அத்தோடு, வட மாகாணத்தில் வாழ்ந்த பல ஆயிரக்கணக்கான மக்களின் தாயக உறவைப் பறித்து, அகதிகளாக ஆயுத முனையில் விரட்டியடித்தது.

இவ்வாறு உச்சத்தை அடைந்த இப் போராட்டம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி இலங்கை அரசாங்கத்தால் முற்று முழுதாக அழிக்கப்பட்டு இல்லாமல் செய்யப்பட்டது. அரசாங்கத்திற்கும் புலிகளுக்குமிடையிலான போராட்டம் நிறைவுபெற்றது.

இந்தப் போராட்ட வரலாற்றில் பல ஆயிரக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. அவர்களின் உடல்கள் வட மாகாணத்தில் பல பாகங்களில் புதைக் கப்பட்டு, புதைகுழிகளில் சிதைக்கப்பட்டு கிடக்கின்றன.

அவற்றில், மன்னாரில் பல புதைகுழி கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதாவது, மன்னார் திருக்கேதீஷ்வரத்தில் பல மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை ஆய்வுகளுக்காக சர்வதேச நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கிறது.

அதனைத் தொடர்ந்து அண்மைக் காலமாக மன்னார் தீவுப் பகுதியின் ஆரம்பத்திலுள்ள இலங்கை அரசாங்கத்திற்குச் சொந்தமான சதோச கட்டிட புனர்நிர்மாண வேலைகளை ஆரம்பிப்பதற்காக தோண்டியபோது அங்கும் பல நூறு மனித உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவைகள் இப்போதும் தோண்டப் படுகின்றது. அவை சர்வதேச நாடுகளுக்கு அனுப்பப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அரசாங்கத்திற்கு எதிராக, அரசாங்கத்தின் சில செயற்பாடுகளை எதிர்த்து ஒரு சில நோக்கங்களுக்காகப் போராடியவர்களை காலத்திற்குக் காலம் வந்த அரசாங்கங்கள் அவர்களை அடக்கியது. அடக்கிய வழிமுறைகளில் சில பிரச்சினைகள் இருக்கின்றன. அதாவது, மாத்தளை புதை குழியில் புதைக்கப்பட்டுள்ளவர்களும் அரசாங்கத்திற்கு எதிராக போராடியவர்கள் தான். அதேபோல் மன்னார் புதைகுழியில் புதைக்கப்பட்டுள்ளவர்களும் அரசாங்கத்திற்கு எதிராக போராடியவர்களா அல்லது  சாதாரண பொது மக்களா என்பது குறித்து இதுவரை அறியக் கிடைக்கவில்லை. (அரசாங்கத்தின் இச்செயல்முறை சரி என்று நான் கூறவில்லை. அரசாங்கத்தின் இச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்)

குருக்கள் மடத்தில் தூங்கும் ஹாஜிகள்

ஆனால், எந்தப் பாவமும் அறியாத. அதாவது, செய்த பாவத்திற்காக இறைவ னிடம் மண்டியிட்டு பாவமீட்சி பெற்று புது வாழ்வு வாழ வந்த முஸ்லிம் ஹஜ் ஜாஜிகள் 1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு, கொல்லப்பட்டு குருக்கள் மடத்தில் புதைத்த செயலை எந்த வகையில் நியாயப்படுத்துவது? இந்த அப்பாவி மக்கள் செய்த பாவம் என்ன? இந்த முஸ்லிம்கள் எந்த அரசாங்கத்திற்கு எதிராக போராடினார்கள்?

2014 ஆம் ஆண்டு குருக்கள் மடத்தில் புதைக்கப்பட்டுள்ள 66 குடும்பம் பிரதிநிதிகள் தங்கள் உறவினர்களின் உடல்களை உரிய முறைப்படி அடக்கம் செய்வதற்காக அதனைப் பெற்றுத்தருமாறு கோரி தாக்கல் செய்த மனுவுக்கு நீதிமன்ற அனுமதி வழங்கியது. ஆனால், இன்னும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை. இதிலுள்ள மர்மம் என்ன?

தற்போதைய, அரசாங்கத்தின் காணாமலாக்கப்பட்டோருக்கான அமைப்பு (Office for Missing Persons – OMP) அனைத்துப் புதைகுழிகளிலும் புதைக்கப் பட்டுள்ளவர்களை தோண்டி எடுத்து தங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான வழிமுறையைச் செய்ய வேண்டும்.

அதேபோல், தற்போது கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி ஹிஸ்புல்லா காணாமலாக்கப்பட்ட ஹாஜிகள் (குருக்கல் மடம்) விடயத்திற்கு என்ன தீர்வினை முன்வைக்கவுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்வினை வழங்குவாரா?

ஆனால், குருக்கல் மடம் விவகாரத்தை ஆளுனர் கலாநிதி ஹிஸ்புல்லா முன்னெடுப்பார் என்று எண்ணி, சில அரசியல்வாதிகள் ஆர்ப்பாட்டங்களைச் செய்து அதனை அடக்குகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அதேபோல், ஆளுனர் ஹிஸ்புல்லா குருக்கல் மடம் விவகாரத்தை நாம் கையிலெடுத்தால் நமக்கிருக்கின்ற வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுவிடும் என்ற  அச்சத்தில் பேசாமல் இருந்து இந்த ஒரு வருட காலத்தை கடத்திடுவோம் என்று இருக்கலாம் என சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

ஆக ஒட்டு மொத்தத்தில் எல்லா அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்து தமது வாக்கு வங்கிகளை தக்கவைத்துக் கொள்வதற்காக வேண்டி ஓரங்க நாடகம் ஆடுகிறார்களோ. அதாவது, இந்த ஹாஜிகளை கொன்று புதைத்துவிட்டார்கள். புதைத்தவர்களை இப்போது தோண்டி எடுப்பது இஸ்லாம் மதப்படி சரியில்லையே.

எனவே, அதனை விட்டுவிடுவோம் என்று ஒரு அரசியல்வாதி கூறலாம். ஆனால், இவர்கள் இஸ்லாம் மதப்படி நல்லடக்கம் செய்யப்படவில்லை என்பதை மறந்து, மாயமாக மறைப்பதற்கு முயற்சிப்பதாகக் கருத முடிகின்றது.

குருக்கல் மடத்தைத் தோண்டினால், விடுதலைப் புலிகளின் செயல்வடிவம் வெளிவந்துவிடும். எனவே, மத்திய அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழர் கூட்டணிக்குமாக இருக்கின்ற நல்லுறவு சிதைந்துவிடும். அதுமாத்திரமல்லாமல், எதிர்வருகின்ற தேர்தல்களில் தமிழர்களின் வாக்குகளை இழந்துவிடுவோம். என்பதால் மத்திய அரசு மௌனம் காக்கின்றதோ என்றும் மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

ஆக ஒட்டு மொத்தத்தில் அப்பாவி மக்கள் நீதி வேண்டி நீதிமன்றங்களுக்கும் வீடுகளுக்குமாக அலைந்து திரிகின்றார்கள். ஆனால், பொம்மலாட்டம் ஆடும் அரசியலோ மக்களின் உயிரோடும், மன தோடும் எள்ளிநகையாடுகிறது.

மக்களே…! நீங்கள் தகுந்த பாடம் கொடுக்காதவரை நமது கதையோ இதுவாகவே இருக்கும். இன்றே வையுங்கள் முற்றுப்புள்ளி. நமது எதிர்கால சந்ததியாவது நல்லமுறையில் வாழட்டும்.

About the author

Administrator

Leave a Comment