Features ஆசிரியர் கருத்து

மனிதநேய ஊடகவியலாளர் ஜயதிலக சில்வாவின் மறைவு

Written by Administrator

Editorial | MP 414

இன்று உலகில் மிகப் பயங்கரமான நிலையில் இருப்பது பலஸ்தீன் மக்களின் பிரச்சினையாகும். பலஸ்தீன் மக்களை முற்றாக தமது நாட்டிலிருந்து விரட்டி, ஐக்கிய நாடுகள் சபையைப் பயன்படுத்தி அதனைத் துண்டாடி, இஸ்ரேல் எனும் செயற்கை நாடு அங்கு உருவாக்கப்பட்டது. ஏகாதி பத்திய நாடுகள் ஐ.நா.வின் உதவியுடன் அந்த நாட்டுக்கு ஆயுதங்களை வழங்கின. அவர்கள் பலஸ்தீன் மக்களை அவர்களது நாட்டிலிருந்து பலவந்தமாக ஆயுத முனையில் துரத்தினர். இன்று பலஸ்தீனர்கள் அவர்களது நாட்டிலேயே சிறுபான்மையினராக மாறியுள்ளனர்.

மீள்பார்வைக்கு வழங்கிய பேட்டியில் பலஸ்தீன் மக்க ளுக்காக இவ்வாறு குரல் கொடுத்த மனித நேய ஊடகவிய லாளர் ஜயதிலக டி சில்வா மரணிக்கும்போது அவருக்கு வயது 80. இருந்த போதிலும் மனித நேயத்துக்காகக் குரல் கொடுப்பதில் அவர் இளைஞர்களை விட வீரியமாகச் செயற்பட்டார். நீதிக்காகக் குரல் கொடுப்பதில் அவர் என்றுமே பின் நின்றதில்லை.

அநீதி நாட்டில் நடந்தாலும் உலகின் எந்த மூலையில் நடந்தாலும் அது எந்த இனத்தவருக்கு எதிராக நடந்தாலும் நீதிக்காகக் குரல் கொடுப்பதில் அவர் என்றுமே முன்னிலை வகித்தார். உலக நீதிக்கான இலங்கை ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவராக இருந்து அவர், அநீதிக்கெதிராக உழைத்தார். குறிப்பாக பலஸ்தீன மக்களின் போராட்டத்தில் உள்ள மனிதாபிமான நியாயங்களுக்காக வேண்டி இனம், மதம் பாராது அவர் குரல் கொடுத்தார்.

“அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தைக் கட்டியெழுப்புவதற்காக இராணுவப் பலத்தைப் பிரயோகிப்பதற்கு இருமுறை யோசிக்காதவர்தான் டொனால்ட் ட்ரம்ப்.  ஆனால் இது சாத்தியமாகாது என்பதுதான் எனது அபிப்பிராயம். அமெரிக்கா பொருளாதார ரீதியில் வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் நாட்டு மக்களை ஒருநிலைப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டுமென்றால் அதற்காக இனவாதத்தைத் தூண்டி பிற நாடுகளின் மீது போர் தொடுக்க வேண்டிய நிலையில் அமெரிக்கா இருக்கிறது என்று அவர் சொன்ன வார்த்தைகள், எந்தப் பெரிய  வல்லரசாக இருந்தாலும் அது அநியாயத்துக்குத் துணை போகும்போது அதற்கெதிராக குரல்கொடுக்க வேண்டும் என்ற துணிச்சலான பாடத்தைச் சொல்லித் தருகிறது.

தூய்மையான இடதுசாரி அரசியலில் ஆக்கபூர்வமான பங்களிப்புச் செய்தவர் என்ற வகையில் ஏகாதிபத்தியத் துக்கு எதிரான அவரது குரல் எப்பொழுதும் ஓங்கியே இருந்துள்ளது. டெய்லி நியூஸ், சண்டே ஒப்சேர்வர் பத்திரிகைகளின் ஆசிரியராகச் செயற்பட்ட காலங்களில் எல்லாம் நாட்டின் இன ஒற்றுமைக்காக அவர் பல வழிகளிலும் குரல் கொடுத்திருக்கிறார். உண்மையான மார்க்ஸ்வாதி என்பதால் அடிமட்ட மக்களுடனும் அளவளாவி அரவணைக்கும் மாமனிதப் பண்பு அவரிடம் நிறைந்து காணப்பட்டது. பாக்கிர் மாக்கார் நினைவு தின நிகழ்வில் அவர் மூவின மக்களினதும் ஒற்றுமை பற்றிய உரை நாட்டின் இன்றைய தேவையை அவர் எடுத்துக் காட்டு வதாக இருந்தது.

தனது இறுதி நேரம் வரை நீதிக்கான தேடலை அவர் விடவில்லை. அன்றாட நிகழ்வுகளை வாசிப்பதை அவர் தனது மரணத்துக்குச் சில மணி நேரங்கள் முன்னர் வரை நடைமுறைப்படுத்தியிருக்கிறார் என்பது அவரது தாதி சொன்ன வசனங்களில் இருந்து புரிகிறது.

இத்தகைய மனிதநேய செயற்பாட்டாளர்கள் தான் ஊடகவியலாளர்களாக நமக்குத் தேவைப்படுகிறார்கள். அப்படியானதொரு நேரத்தில் ஊடகவியலாளர் ஜயதிலக டி சில்வாவின் இழப்பு ஒரு பேரிழப்பாகும் என்பதில் ஐயமில்லை.

About the author

Administrator

Leave a Comment