Features நாடுவது நலம்

சகவாழ்வு தொடர்பில் எமக்கு மிகப்பெரும் பொறுப்பு இருக்கிறது

Written by Administrator

இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் | நாடுவது நலம்

அல்லாஹ் இஸ்லாம் தொடர்பான தூதை முஸ்லிம்களுக்கு மாத்திரம் வழங்கவில்லை. அது எல்லோருக்குமான செய்தியாகவே கிடைக்கப்பெற்றுள்ளது. இதனால் எமக்கு ஒழிந்து கொண்டு வாழ வேண்டிய அவசியமில்லை. உமர் (ரழி) அவர்கள் கலீபாவாக இருந்த காலத்தில் முஸ்லிம் அல்லாத ஒருவரிடம் தனது வாழ்க்கைச் சரிதத்தை எழுதுமாறு கோரிய சம்பவத்தை நான் படித்திருக்கிறேன். நாம் ஒருவரிடம் இருந்து ஒருவர் கற்றுகொள்ள வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தையே இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது.

ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்வது தொடர்பில் பேசுகின்ற போது எனக்கு பராக் ஒபாமாவின் வாழ்வில் நடந்த சம்பவமொன்று நினைவுக்கு வருகிறது. தனது இளம் பராயத்தில் கறுப்பின ஊடகவியலாளர் ஒருவர் உனது எதிர்கால இலக்கு என்ன என்று வினவிய போது அமெரிக்காவின் ஜனாதிபதியாக வேண்டும் என்று ஒபாமா அந்த ஊடகவியலாளரிடம் தெரிவித்துள்ளார். அப்போது அந்நிகழ்வு கேலியாக நோக்கப்பட்டது. குறித்த ஊடகவியலாளர் இளைஞனான ஒபாமாவின் கதையைக் கேட்டுச் சிரித்துள்ளார். அன்றைய சூழலில் அமெரிக்க ஜனாதிபதியாவதென்பது மிகவும் கடினமானதொரு காரியமாகவே இருந்தது. ஆனால் அவருடைய கனவு பிற்பட்ட காலத்தில் நனவானது. குறிக்கோளும் அதன் மீதான கடுமையான எதிர்பார்ப்பும் இருக்க வேண்டும் அந்தக் கனவை நனவாக்கிக் கொள்வதற்கு.

இதுபோன்று மார்டின் லூதர் கிங்கின் வாழ்க்கையையும் இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். சிறந்த குறிக் கோளும் அதனை அடைந்து கொள்ள சீரிய எதிர்பார்ப்பும் இருக்கும் பட்சத்தில் அதனை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்பது இவரது வாழ்க்கையின் மூலம் பெறப்படு கின்ற படிப்பினையாக உள்ளது. கறுப்பின மக்களை அடிமையாகக் கருதிய அந்தக் காலத்தில் இவர் சகவாழ்வு குறித்துப் பேசினார். வெள்ளையினமும் கறுப்பினமும் ஒன்றுபட்ட சமூகத்தை கட்டியெழுப்பும் சீரிய நோக்கம் இவருக்குள் காணப்பட்டது. சமமான சூழலை இவர் கட்டியெழுப்பினார். மிகவும் கீழ்த்தரமான முறையில் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட கறுப்பின மக்களுக்கு விடிவைப் பெற்றுக்கொடுத்தார். அம்மக்களுக்கு சுயகௌரவத்துடன் வாழக்கூடிய சமுதாயத்தை உருவாக்கினார்.

இந்நிலையை ஏற்படுத்த இவரிடம் கடுமையான குறிக் கோளும் அதன் மீதான எதிர்பார்ப்பும் காணப்பட்டது. “I have a dream” அவர் வொசிங்டனில் ஆற்றிய உரை எனக்கு நினைவிருக்கிறது. இவரது உரையை செவிமடுக்க வெள்ளையின மக்களும் கறுப்பின மக்களும் ஒன்றுகுழுமியிருந்தார்கள். அடிமைகளின் பிள்ளைகளும் எஜமான்களின் பிள்ளைகளும் ஒரு மேசையில் அமர்ந்து கொண்டு உணவு உட்கொள்ளும் நாள் குறித்து நான் கனவு காண்கிறேன் என அவர் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கனவை நனவாக்கியதில் அவரது குறிக்கோள் மிக முக்கியமானதொன்றாக காணப்பட்டது.

 நெல்சன் மண்டேலாவும் இங்கு நினைவுகூரத் தக்கவர். மண்டேலாவை வெள்ளையர்கள் அன்று சிறைவைத்தார் கள். மிகவும் மோசமான முறையில் நடத்தினார்கள். ஆனால் மண்டேலாவுக்கு பதவி கிடைத்த போது அவர்களை பழி வாங்க அவர் நினைக்கவில்லை. அம்மக்களுடன் ஒன்றுபட்டு பயணிக்க வேண்டிய குறிக்கோள் அவரிடம் காணப்பட்டது. பகையை மறந்து எல்லோருக்கும் ஐக்கியமான முறையில் பயணிப்பதற்கான சூழலை உருவாக்கினார். அதிகாரம் கையில் கிடைத்த போதும் வெற்றி தமக்கு கிடைத்தபோதும் மன்னிக்கும் மனப்பாங்கு அவரிடம் குடிகொண்டிருந்தது. 

சகவாழ்வு குறித்துப் பேசும் போது இஸ்லாமிய வரலாற்றிலிருந்தும் எண்ணற்ற உதாரணங்களை எடுத்துக் காட்ட முடியும். அன்று ஐரோப்பிய மக்கள் இருள்மயமான யுகத்தில் வாழும் போது அந்த யுகத்தை ஒளிமயமானதாக மாற்றுவதற்கு முஸ்லிம்கள் தம்மை அர்ப்பணித்தார்கள். ஐரோப்பாவை மறுமலர்ச்சி யுகத்திற்குள் பிரவே சிக்கச் செய்வதற்கான அடித்தளத்தை முஸ்லிம்களே இட்டுள்ளனர். அல்அந்தலூஸ் சாம்ராஜ்யம், ஸ்பெயின், கொரடோவா போன்ற சாம்ராஜ்யங்களை உருவாக்கியவர்கள் முஸ்லிம்கள். முஸ்லிம்களிடமிருந்து வெள்ளையர்கள் பல்வேறு விடயங்களைக் கற்று புதிய கண்டுபிடிப்புக்களை செய்துள்ளார்கள். ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பதற்கு முன்னின்றவர்களுள் சிலர் அதற்கான அறிவை முஸ்லிம் ஸ்பெயினிலிருந்தே பெற்றுக்கொண்டுள்ளனர்.

அத்தோடு ஐரோப்பாவில் யூதர்கள் கொடுமைகளுக்கு உட்பட்ட போது அப்போதைய இஸ்லாமிய நாடுகள் அவர்களுக்கு பாதுகாப்பை வழங்கியமை தொடர்பாகவும் வரலாறு எமக்கு கற்றுத்தருகின்றது. இங்கிலாந்து அரச குடும்பத்தின் பெண் பிள்ளைகள் கல்வி கற்பதற்காக இஸ்லாமிய ஆட்சியின் கீழிலிருந்த பல்கலைக் கழகங்களுக்கு சென்றுள்ளார்கள். பாதுகாப்பு தொடர்பில் உத்தரவாதமிக்கவர்களாக காணப்பட்டார்கள். அறிவை விரும்பிப்படிப்படிவர்களாக எமது முன்னைய முஸ்லிம்கள் காணப்பட்டார்கள். இவ்வரலாற்றுக்கு உரிமைகோரும் முஸ்லிம்களாகிய எமக்கு சகவாழ்வு தொடர்பில் மிகப்பெரும் பொறுப்பு இருக்கிறது. இது தொடர்பில் நல்லதொரு பின்னணி இருக்கிறது. இவை குறித்து கவனமாகத் தேடிப்பார்க்க வேண்டும். வரலாற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

About the author

Administrator

Leave a Comment