Features சாதனையாளர்கள்

சூரிய சக்தியில் இயங்கும் இயந்திரங்களால் சாதனை படைக்கும் குடும்பத் தலைவன் ரஸ்மி

Written by Administrator
  • அனஸ் அப்பாஸ்

பிறந்ததிலிருந்தே தந்தையின்றி வளர்ந்த முஹம்மத் ரஸ்மி (வயது-42), நீர்கொழும்பு – போருதோட்டையைச் சேர்ந்த முஹம்மத் சௌபான் – இஸ்ஸதுன் நிஸாயா தம்பதிகளின் ஏகப் புதல்வர் ஆவார். இவர் கிண்ணியாவில் வைத்து சூரிய சக்தியில் இயங்கும் படகு ஒன்றை கண்டுபிடித்து சமூக வலைதளங்களில் அண்மைய நாட்களாக பாராட்டுக்களை அதிகம் பெற்று வருகின்றார்.

பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் தாய் தான் சிறு வயதுமுதல் இவரை வளர்த்து வந்துள்ளார். தரம்-8 வரை மட்டுமே நீர்/அல்-பலாஹ் மகா வித்தியாலயத்தில் கற்ற இவர், படிப்பை  பாதியில் நிறுத்தியவுடன் ஒரு வாகன பழுதுபார்த்தல் கராஜில் (Vehicle Garage) வேலை பார்த்துள்ளார். படிப்படியாக அதில் முன்னேறியுள்ளார். பின்னர் ஊரில் இருந்து வெளியேறி கொட்டராமுல்லைக்கு குடிபெயர்ந்துள்ளார். பின்னர் மினுவாங்கொடையில் வசித்துள்ளார். பொலன்னறுவை, திவுலான பிரதேசத்தை சேர்ந்த பாத்திமா நசூஹாவுடன் 2000 ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்த இவர், தற்போது கீரியங்கல்லி, அக்கரவெலியில் வசித்து வருகின்றார்.

“எனக்கு நான்கு பிள்ளைகள். மூத்த மகன் ஹிப்ழ் கற்கையை முடித்துவிட்டு தற்போது கிதாப் கற்கையை மேற்கொண்டு வருகின்றார். இரண்டாவது மகள், க.பொ.த (சா/தர) பரீட்சையை எழுதிவிட்டார். மூன்றாவது மகன் தரம்-7 இலும் நான்காமவர் தரம்-1 இலும் கற்று வருகின்றனர். ஒட்டுவேலை (Tinkering), வாகன பழுதுபார்த்தல் (Mechanic) வேலைகளை தற்போதும் தொடர்ந்து வருகின்றேன். கொழும்பில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் என பல இடங்களில் வேலை பார்த்த அனுபவம் எனக்கு உண்டு” என்றார்.

ஒன்றில் ஈர்ப்பு ஏற்பட்டால் அதை இறுதி வரை முயற்சிப்பது தனது பண்பு என்ற வகையில் நண்பர் பர்ஹான் முஸம்மிலுடன் இணைந்து சிறு வயதிலேயே சிறு சிறு கண்டுபிடித்தல்கள், வேலைப்பாடுகளை செய்திருக்கின்றார்.

2013 ஆம் ஆண்டு இவருக்கு ஜப்பானுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மூன்று மாதங்கள் ஜப்பானில் விமான தயாரிப்பு, சூரிய சக்தியிலான கருவிகளை தயாரித்தல் தொடர்புடைய இடங்களில் வேலை பார்த்துள்ளார். இங்கு பணியாற்றிய தேர்ச்சிமிக்க சக நண்பர்களூடாக பல விடயங்களை இவர் கற்றுள்ளார். மீண்டும் 2014 ஆம் ஆண்டும் ஜப்பான் சென்று மூன்று மாதங்கள் வேலை பார்த்துள்ளார். அதேபோன்றே 2015 ஆம் ஆண்டும் சென்று ஒரு வருடம் ஜப்பானில் தங்கி வேலை பார்த்து, 2016 ஆம் ஆண்டு நாடு திரும்பியுள்ளார். இந்த வருடமும் ஜப்பான் செல்லும் வாய்ப்பு வந்திருந்தது. தன்னுடன் தனது தாயும், மனைவி பிள்ளைகள் ஆகியோர் கீரியங்கல்லி பிரதேசத்தில் வசிப்பதாகவும், இங்கேயே வேலை செய்து வருவதால் ஜப்பான் செல்லவில்லை என்றும் கூறுகின்றார். இவ்வாறு பயணிக்கும் தனது எளிய வாழ்க்கைக்கு மத்தியில்தான் ஒரு திடீர் உந்துதலாலும், ஜப்பானில் கற்ற சில உத்திகளை பிரயோகித்துப் பார்க்கும் ஆசையிலும் ஒரு படகு இயந்திரத்தை தயாரித்து, அதில் சூரிய சக்தியை பிரயோகித்து, பரீட்சித்ததில், அது வெற்றியடைந்துள்ளதாக கூறுகின்றார்.

அதைத்தொடர்ந்து, வலது குறைந்தோர் பயணிக்கும் வசதியுடன்கூடிய மூன்று சில்லுகளுடனான சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் சைக்கிள் இயந்திரம் ஒன்றையும் தயாரித்துள்ளார். இது தவிரவும் தன்னால் தனியாக வாகனங்களை தயாரிக்கும் ஆற்றல் இருப்பதாகவும் குறிப்பிடுகின்றார். 50 இலட்சம் ரூபாய் பெறுமதிக்கு மேல் சந்தையில் விற்பனையாகும் பாரிய படகுகளுக்கான இயந்திரத்தையும் (Trip Boat Engine) தன்னால் தனியாக தயாரிக்க முடியும் என்றும் இவ் இயந்திரத்தை கடல் அலை விசை மூலம் அல்லது சூரிய சக்திமூலம் இயங்க வைக்க முடியும் எனவும் நம்பிக்கையுடன் கூறுகின்றார். இதற்கு முதலிட தனவந்தர்கள் முன்வர வேண்டும் என்றும் எதிர்பார்ப்புடன் கோரிக்கை விடுக்கின்றார்.

ஊக்கப்படுத்த யாரும் இல்லாததால்தான் இவரது ஆக்கத்திறன் இவ்வளவு வருடங்கள் சரியாக பயன்படுத்தப்படாமல் இருந்திருக்கின்றது. இதுவரை நண்பர் பர்ஹான் முஸம்மில் மட்டுமே தன்னை தோல்தட்டி ஊக்கப்படுத்துவதாகவும், சிலாபத்தை சேர்ந்த ரோய் மற்றும் கஹட்டோவிட்டயைச் சேர்ந்த அர்ஷத் ஆகியோர் ஒரு தொகைப் பணத்தை கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வழங்கியதையும் நன்றியுடன் நினைவுகூர்ந்தார். தான் வாழும் சமூகம் தன்னை ஊக்கப்படுத்தாதாது மட்டுமன்றி, பல வழிகளில் பொருளாதார ரீதியாக இவரை பலவீனப்படுத்தி, தொழில்சார்ந்து பல இலட்சம் ரூபாய்கள் நஷ்டப்பட்ட அனுபவங்களையும் என்னுடன் பகிர்ந்துகொண்டார். தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெறுவதற்கான விண்ணப்பத்தை தற்போது பாரிய எதிர்பார்ப்புக்களுடன் கையில் வைத்துக்கொண்டிருக்கும் சகோதரர் ரஸ்மிக்கு, தனி நபர்கள், சமூகம் சார்ந்த அமைப்புக்கள், அரசு ஆகியன கைகொடுப்பது மிகவும் முக்கியம்.

இதுவரை நான் எழுதிய பத்திகளில் அதிகளவான இளம் வயது கண்டுபிடிப்பாளர்களையே சாதனையின் உயிர்நாடிகளாக பார்த்தோம். ஒரு குடும்பத் தலைவராலும், மூத்தவர்களாலும் நினைத்தால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை, சாதனைக்கு வயது ஒரு தடை அல்ல என்பதையும் இவர் நிரூபித்திருக்கின்றார். மேலும், வாகனங்களை பற்களால் இழுத்துச் செல்லும் வித்தையையும் இவர் இலங்கையிலும், ஜப்பானிலும் மேற்கொண்டு பாராட்டுக்களை வென்றுள்ளமை விஷேட அம்சமாகும்.

“இந்த கண்டுபிடிப்பை முகநூலில் பதிந்த தாராவில்லைச் சேர்ந்த சகோதரர் அனஸ் இற்கும், எனது விஞ்ஞான செயற்றிட்டம் ஒன்றின் மூலம் அறிமுகமாகி கண்டுபிடிப்பு விடயங்களில் உதவிவரும், வீட்டிற்கு அருகில் வசிக்கும் அர்ஷத் ஆசிரியருக்கும், நண்பர் பர்ஹான் முஸம்மிலுக்கும், நண்பர் அர்ஷத் மற்றும் சிலாபம் ரோயிற்கும், பல வழிகளிலும் உதவிய பிரதேச நபர்களுக்கும், உதவிகளையும் பாராட்டுக்களையும் அள்ளி வழங்குவோர்க்கும் நன்றி” தெரிவிக்கின்றார் ரஸ்மி.

இனிவரும் தனது நகர்வுகளை மேற்கொள்ள கண்டுபிடிப்பாளர் அணியொன்றை உருவாக்க இவர் எண்ணியுள்ளார். இதன்படி, அவ்வாறு ஆர்வமுள்ள மாணவர்களுக்கு வாகன Circuit தயாரித்தல், வாகன ஸ்டேனர் தயாரித்தல் உள்ளிட்ட பல விடயங்கள் அடங்கிய செயலமர்வுகளை (Workshops) நடாத்த தான் உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பிடுகின்றார். Mercy Lanka நிறுவனத்துடன் தனக்கிருந்த தொடர்பு காரணமாக அவர்களை அணுகியபோதும் சாதகமான பதில்கள் கிடைக்காமை தனக்கு கவலை தருவதாகவும் குறிப்பிட்டார். 0716562371 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு இவருக்கான உங்கள் ஊக்குவிப்பை வழங்க வேண்டும் என்பதே எனது அவா!

About the author

Administrator

Leave a Comment