Features சமூகம்

சிலாவத்துறை மக்கள் போராட்டம்: அகதியாய் 19, அவதியாய் 9 மொத்தத்தில் 28 வருட தவிப்பு

Written by Administrator
  • பி.எம். முஜீபுர் ரஹ்மான்

30 வருடங்களாக புரையோடிப் போயிருந்த யுத்தம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி வெற்றி கொள்ளப்பட்டது. அது அகதி என்ற அவப்பெயரை நீக்கும் நாளாக இருக்கும் என இம்மக்கள் நோக்கினர். அன்றிலிருந்து சுதந்திர காற்றை அனந்தமாய் சுவாசிக்கலாம் என பெருமூச்சு விட்டனர்.

1990 ஒக்டோபர் மாத இறுதியில் விடுதலைப் புலிகளால் ஆயுத முனையில் பல வந்தமாக உடுத்திய உடுப்போடு வெளியேற்றப்பட்ட இம்மக்கள் இதமான சுதந்திரக் காற்றை இழந்து 19 வருடங்களாயின. 2009 ஓகஸ்ட் மாதமளவில் மீண்டும் தமது தாய் பூமியின் சுதந்திரக் காற்றை சுவாசிக்கலாம் என்ற ஆசையோடு இம்மக்கள் ஒன்று சேர்ந்த தாய் பூமியை முத்தமிடப் புறப்பட்டனர்.

ஆனால், தமக்குப் பேரிடி ஒன்று இருப்பதை அறியாத, வெட்டில் பூச்சிகளாக சுமார் 300 கி.மீ தூரமான நீண்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு தாயக பூமியை வந்து சேர்ந்தனர். அப்போதுதான் தெரிந்தது, அவர்களின் காணிகளை கடற்படையினர் ஆக்கிரமித்துள் ளனர். இதனால் அவர்கள் கதிகலங்கி, செய்வதறியாது திகைத்து நின்றார்கள். மண்டியிட்டார்கள், கெஞ்சினார்கள் எதுவும் பலனளிக் காமல் போக ஏமாற்றத்துடன் மனம் உடைந்த நிலையில் மீண்டும் அகதி முகாம்களை நோக்கி 300 கி.மி. தூரம் பயணித்தார்கள். அவர்கள்தான் சிலாவத்துறை கிராம மக்கள்.

இக்கிராமம் முசலிப் பிரதேசத்தின் தலை நகரமாகத் திகழ்கிறது. 1990 ஆம் ஆண்டு பலவந்த வெளியேற்றத்தின்போது சுமார்   250 குடும்பங்கள் வாழ்ந்து வந்துள்ளன. இப்போது, அவர்கள் சுமார் 700 குடும்பங்களாக அதிகரித்துள்ளன. இக்கிராமம் வடமாகாணத் தின் மன்னார் மாவட்டத்திலுள்ள கொண்டச்சிக் குடாவிற்கு அருகாமையில் அமைந்துள்ளது. இது முத்துச் சிலாபம் என பண்டைய காலம் முதல் அழைக்கப்பட்டு வந்த சிலாபத்துறைக் கிராமமாகும். அன்றைய காலம் முதல் இப்பிரதேசம் முத்து குளித்தலுக்கு பெயர் போன பிரதேசமாகும். தற்போது, பிரித்தா னிய அரச மாளிகையில் இப்பிரதேசத்தில் எடுக்கப்பட்ட சில முத்துக்கள் இருப்பதாக  சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பிரதேச முஸ்லிம்கள் முத்துக் குளித்தலுக்கு பெயர் போனவர்கள்.

இலங்கைத் தீவில் மிகவும் சுத்தமான கடற்பகுதியை கொண்டுள்ள இப்பிரதேசம், கடலின் சீற்றம் மிகவும் குறைவாக இருக்கும் பகுதி என்பதால், முழங்கால் அளவு தண்ணீரில் சுமார் அரை கிலோமீட்டர் வரையில் கடலினுள் இறங்கி நடக்க முடியும். மீன்கள்  செல்வதை சாதாரணமாகவே பார்க்க முடியும். நட்சத்திர மீன்கள் கடற்கரைகளில் ஒதுங்கி இருக்கும்.

உள அமைதியை ஏற்படுத்தும் சிறந்த மகிமையைக் கொண்ட இப்பிரதேசத்தின் மகிமையை உணர்ந்த காரணத்தால்தான் இலங்கைக்கான முதலாவது பிரித்தானிய ஆளுனர் சேர் பிரடரிக் நோத் தனது துணைவிக்கான மாளிகையை இப்பிரதேசத்தில் அமைத்தார். முழு இலங்கையும் தன் கையில் இருந்தபோது தான் விரும்பியிருந்தால் நாட்டின் எப்பாகத்திலும் அம்மாளிகையை அமைத்திருக்கலாம். அவ்வாறு இல்லாமல் அவர் ஏன் இப்பகுதியைத் தெரிவு செய்தார்? இப்பகுதியை புவியின் சொர்க்கம் என கூறியதாக சில கருத்துக்கள் இருக்கின்றன. (இது ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய பகுதி)

மீளத் திரும்பும் உரிமை

இவ்வாறான அழகிய, தாயக பூமி கடந்த 19 வருடங்களாக 1990 ஒக்டோபரில் இருந்து புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இப் போது, 9 ஆண்டுகளாக இலங்கை கடற்படை யின் பயன்பாட்டில் உள்ளது. மொத்தத்தில் இம்மக்கள் 28 வருடங்களாக தங்களது பூமியை இழந்து தவிக்கின்றனர். தொடர்ந்தும் அகதி முகாம்களில் வாழ்கின்றனர். எனவே, தற்போது இலங்கை கடற்படையின் கட்டுப் பாட்டில் உள்ள சுமார் 218 பேருக்குச் சொந்தமான சுமார் 40 ஏக்கர் பூமியை மீட்டு தங்களது பயன்பாட்டுக்குத் தந்துதவுமாறு இம்மக்கள் பல காலமாக கோரி வருகின்றனர்.

கடந்த அரசாங்க காலத்தில், அப்போதைய பொருளாதார அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷ அவர்கள் சிலாவத்துறை கடற்படை முகாமுக்கு வந்தபோது, அவரிடம் தங்களது தாயக பூமியை மீட்டுத் தாருங்கள் என கோரியதற்காக பலர் சிறையிலடைக்கப்பட்ட னர். இதுதான் அன்றைய அரசாங்கத்தின் ஜனநாயகம். உரிமையைக் கேட்டால் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

அதனைத் தொடர்ந்து, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இம்மக்கள் தபால் அட்டை மூலம் தங்களது கோரிக்கையை முன்வைத்தார்கள். ஆனால், உங்களது தபால் அட்டை கிடைக்கப் பெற்றது. அதற்கான தீர்வினை தெரிவிப்போம் என்று ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து பதில் தான் கிடைத்தது. தீர்வுகள் எதுவும் இன்னும் கிடைக்கவில்லை.

மீண்டும் இவர்களது பூமியை மீட்பதற் கான போராட்டத்தை 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி புதன்கிழமை பகல் 2.00 மணியளவில் பிராந்தியத்திலுள்ள திருச்சபையின் பாதிரியார் முதல் மீனவர்கள், உள்ளூர் மக்கள், பிராந்திய ஊடகவியலாளர் கள் என அனைத்து சமூகத்தை சேர்ந்தவர் களும் ஒன்றிணைந்து மீளத் திரும்பும் உரிமையை உறுதிப் படுத்தித் தருமாறு கோரி நிற்கின்றனர்.

தற்போதைய அரசாங்கத்தின் நிலைமாறு கால நீதியின் அடிப்படையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கும் தங்களது தாயக பூமிக்கு மீளத் திரும்புவதற்கான உரிமை உண்டு. ஆனால், அரசாங்கம் வடக்கில் எத்தனையோ தமிழ் மக்களின் காணிகளை விடுவித்துள்ளது. ஏன் இக்காணியை விடுவிக்க முடியாது. இதற்கான பதிலை அரசாங்கம் உட்பட அரசியல் பிரதிநிதிகள் எப்போது முன்வைப்பார்கள்?

தேர்தல் கால பேசு பொருள்

2009 ஆம் ஆண்டின் பின்னர் நடைபெற்ற அனைத்துத் தேர்தல் மேடைகளிலும் இக்காணி விடுவிப்பு முக்கிய பேசு பொருளாக இருந்தது.

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது சிலாவத்துறை சந்தியில் நடைபெற்ற அனைத்து தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் இக்காணி விடுவிப்பு மற்றும் புத்தளம் மன்னார் வீதி தொடர்பாகவே பேசப்பட்டது. அத்தேர்தலில் பலர் வெற்றி பெற்றார்கள். பாராளுமன்றமும் சென்றார்கள். வடமாகாண அபிவிருத்திக் குழுத் தலைவர் களாகவும் இருந்தார்கள். ஆனால் மக்களுக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் இக்காணி விடுவிப்பு முக்கிய பேசுபொருளாக இருந்தது. அதனை நம்பி இம்மக்கள் வாக்களித்தார்கள். இறுதியில் அன்றைய ஆட்சிக் காலத்தில்தான் இக் காணி மீட்புக்காக போராடிய சிலர் சிறையிலடைக்கப்பட்டார்கள்.

அதன் பின்னர், 2011 ஆம் ஆண்டு நடை பெற்ற முதலாவது முசலிப் பிரதேச உள்ளூ ராட்சித் தேர்தலின்போது இக்காணி விடுவிப்பு முக்கிய பேசுபொருளாக இருந்தது. இப்பிரதேசத்தவர்களே முக்கிய ஆட்சியாளர் களாக இருந்தார்கள். அப்போது, முசலிப் பிரதேச சபையை ஆட்சி செய்த கட்சி சார்பாக பாராளுமன்றத்திலும் செல்வாக்குள்ள அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். ஆனால், அக்காலத்திற்குள் அப்பிரச்சினையை தீர்ப்பதற்கான பல சந்தர்ப்பங்கள் இருந்தும் என்ன காரணத்திற்காகவோ தெரியவில்லை தீர்க்கப்படவில்லை. அப்போதைய முசலிப் பிரதேச சபையில் இக் காணி தொடர்பாக எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்றியதாகவும் தெரியவில்லை.

அதனைத் தொடர்ந்து, 2013 ஆம் ஆண்டு வடமாகாண சபைக்கான முதலாவது தேர்தல் பெரும் ஆரவாரத்தோடு, மக்களுக்கு வாக்குறுதி மழைகள் கொட்டிய தேர்தலாக இருந்தது. இப்பிரதேசம் சார்பாக பலர் மாகாண சபையில் இருந்தார்கள். ஆனால், ஒரு நாளாவது வடமாகாண ஆளுனரையோ, முதலமைச்சரையோ இப்பிரதேசத்திற்கு அழைத்து வர முடியவில்லை. அதற்கான தீர்வுகள் குறித்து பேசியதாகக் கூட அறியவில்லை.

ஆனால், அன்று முள்ளிக்குளத்து மக்களும் மறிச்சுக்கட்டி மக்களும் மண் மீட்புப் போராட்டத்திற்காக போராடிக் கொண்டிருந்தனர். துரதிஷ்டம் அப்போதைய வட மாகாண ஆளுனர் மறிச்சுக்கட்டியைத் தாண்டி முள்ளிக்குளத்திற்குச் சென்றார். ஆனால், மறிச்சுக்கட்டி மக்களை எட்டியும் பார்க்கவில்லை. இதுதான் நமது அரசியல் பலம்.

அதேபோல், அப்போதைய முதலமைச்சர் நானாட்டானில் முஸ்லிம்களுக்கும் – தமிழ் மக்களுக்குமிடையில் சிறிய காணிப் பிரச்சினை ஏற்பட்டது. அதனைத் தீர்த்து வைப்ப தற்காக அங்கு வந்தார். ஆனால், அதேகாலப் பிரிவில்தான் மறிச்சுக்கட்டி மக்கள் தங்களது தாயக பூமியில் குடியிருப்பதற்காக போராடிக் கொண்டிருந்தார்கள். தென்னிலங்கையில் மறிச்சுக்கட்டி எரிந்து கொண்டிருந்தது. ஆனால், முசலிப் பிரதேசம் வடமாகாணத்தின் ஒரு பகுதி, இவர்களதும் முதலமைச்சர் என்ற எண்ணம் கூட இல்லாமல் இருந்தார். அப்போது இந்த வடமாகாண சபை உறுப்பினர்கள் எங்கே போயிருந்தார்களோ தெரியவில்லை.

மீண்டும் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் பூதாகரமான இக்காணிப் பிரச்சினை இப்போது தீர்வின்றித் தவிக்கிறது. அதன் மூலம் ஆட்சிபீடம் ஏறிய நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் கூறினார். முள்ளிக்குளம் மற்றும் சிலாபத்துறை கடற்படை முகாம்களை அகற்ற முடியாதாம்.

ஏனெனில், இலங்கைக்கான போதைப் பொருட்கள் இப்பிரதேசங்களின் மூலமாகத் தான் வருகிறதாம். பரிதாபம் அன்று இம்மக்கள் சார்பாக பிரதமர் ரணிலின் கருத்தை எதிர்த்து பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதற்கு ஒரு பிரதிநிதி இல்லாமல் போயுள்ளது. இன்றும் அது ஹன்ஸாட்டில் பதிவாகியுள்ளது.

இந்த பிரதமர்தான் இப்போதைய வட மாகாண அபிவிருத்தி அமைச்சர். இவர் இப்பிரச்சினை குறித்து வடமாகாண மக்கள் என்ற முறையில் என்ன சொல்லப் போகிறார்? பிரதமரே…! இப்போது, கொழும்பில் டொன் கணக்கிலும் கோடிக் கணக்கிலும் பிடிபடும் போதைப்பொருளுக்கு நீங்கள் என்ன தீர்வு சொல்கிறீர்கள்?

மீண்டும் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டு முசலிப் பிரதேச உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இக்காணிப் பிரச்சினை பூதாகரமாகப் பேசப்பட்டது. இதுவரை முசலிப் பிரதேச சபை கூட இப்பிரச்சினை குறித்து   ஒரு பிரேரனையைக் கூட நிறைவேற்றவில்லை. இப்படி, இம்மக்களின் பிரச்சினை எந்தத் தீர்வின்றியும் மக்கள் போராட்டமாக வீதிகளிலேயே கிடக்கின்றது.

காலத்திற்குக் காலம் மறிச்சுக்கட்டிப் பிரச்சினை, புத்தளம் மன்னார் வீதிப் பிரச்சினை, சிலாபத்துறை கடற்படை முகாம் பிரச்சினை என்பன வீதிகளிலும் தேர்தல் மேடைகளிலும் பின்னர் ஊடகங்களிலும் வாழ்கிறது. அப்பாவி மக்களை பார்வையிடுவதற்காக பல அரசியல் பிரமுகர்கள் ஆரவாரத்தோடு வருகிறார்கள், பின்னர் ஊடகங்களில் வாழ்கிறார்கள். அவர்கள் இப்பிரச்சினையை தீர்ப்பதற்காக எடுத்த முயற்சிகள் என்ன? இறுதியில் தலைவர்கள் வெற்றி பெறுகிறார்கள், மக்கள் தோல்விகளுக்கு மேல் தோல்விகளை சந்திக்கிறார்கள். மக்களுக்குக் கிடைத்த தீர்வு என்ன?

தீர்வு இல்லாப் புண்

இப்பிரதேசங்களில் பல வீடுகள், சாலைகள் மற்றும் பள்ளிவாசல்களை மீட்க வேண்டியுள்ளது, சீரமைக்க வேண்டிய தேவையும் உள்ளது. எனவே, என்றோ ஒரு நாள் எங்களுக்கும் எங்களது தாயக பூமி வேண்டும், அங்கு நாங்களும் வாழ வேண்டும்   என்ற நம்பிக்கையிலேயே இப்பிரதேச இளைஞர்கள் வாழ்கிறார்கள்.

‘ஆமாம். நாங்களும் ஒருநாள் ஊர் திரும்புவோம். எங்களின் மூதாதையர்கள் வாழ்ந்த நிலத்திற்கு திரும்புவோம். எங்களின் மண்ணிலேயே நாங்கள் புதைக்கப்பட வேண்டும் என்ற ஏக்கத்திலேயே நாம் வாழ்கிறோம். இதுவே எமது ஒவ்வொருவரினதும் கனவு‘ என்கின்றனர் இப்பிரதேச மக்கள்.

இவ்வாறான ஏக்கத்தோடு பிரச்சினைக்கு தீர்வின்றி காலம் நகர்ந்தோடுகிறது. காலத்திற்குக் காலம் வருகின்ற தேர்தல்களிலும், பத்திரிகைகளிலும் இப்பிரச்சினை வாழ்கிறது.

About the author

Administrator

Leave a Comment