Features நேர்காணல்

குப்பை விவகாரம்: ‘அரசு சூழல் தாக்க மதிப்பீட்டை முறையாகச் செய்யவில்லை’

Written by Administrator
  • சயீட் முஹம்மட் முபாரக் – சூழலியலாளர்

(EIA- Environmental Impact Assesment)

நேர்காணல்: ஹெட்டி ரம்ஸி

குப்பைக்கு எதிரான மக்கள் போராட்டம் தற்போது எந்தக்கட்டத்தில் உள்ளது?

புத்தளம் மாவட்டத்திலுள்ள குப்பைகளை 15ஆம் திகதி முதல் அருவைக்காட்டில் கொட்டுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. சூழல் தாக்க மதிப்பீடுகளுக்கு (EIA- Environmental Impact Assesment) அமைவாக கொழும்பிலுள்ள குப்பைகளை புகையிரதத்தில் கொண்டு வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. அதன் பிறகு கனரக வாகனங்களில் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான ஆயத்தமின்மையால் ஆரம்பகட்டமாக புத்தளம் மாவட்டத்தில் சேரும் கழிவுகளை அங்கு கொண்டு போய் கொட்டுமாறு கூறப்பட்டது. புத்தளம் மாவட்ட கழிவுகளை அருவைக்காட்டில் கொட்டும்படி சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்படவில்லை. இது சட்டவிரோதமான விடயமும் கூட. இதுதவிர புத்தளம் மாவட்டத்திலுள்ள குப்பைகளை கொண்டுவருவதற்கான கனரக வாகனங்கள் 15ஆம் திகதி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. அதற்காக வேண்டி நடத்தப்பட்ட கூட்டங்களில் கூட பெரும்பாலானவர்கள் கலந்துகொள்ளவில்லை. புத்தளம் நகர சபை இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அண்மையில் பிரேரணையொன்றையும் நிறைவேற்றியுள்ளது. அதேபோன்று கற்பிட்டி பிரதேச சபை, புத்தளம் பிரதேச சபை போன்றவற்றிலும் எதிர்ப்புப் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே அமைச்சர் சம்பிக்க பலவந்தமான முறையில் இந்த விடயத்தை மேற்கொள்ளப் பார்க்கிறார் என்பது தெளிவு.

இந்தத் திட்டத்துக்கான சூழல் தாக்க மதிப்பீடு (EIA- Environmental Impact Assesment) முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதனை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?

இவர்கள் மேற்கொண்ட சூழல் தாக்க மதிப்பீட்டிலும் ஏராளமான பிழைகள் உள்ளன. அந்தப் பிழைகள் நிவர்த்திசெய்யப்படாமல், மக்களுக்கு கேள்வி கேற்பதற்கு இடமளிக்காமல் பலவந்தமான முறையில் இவ்விடயம் அரங்கேற்றப்படுகிறது. சூழல் தாக்க மதிப்பீட்டை (EIA- Environmental Impact Assesment) தயாரிக்கும் போது அந்தப் பகுதி மக்களை அழைத்து கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும் என்ற சரத்தொன்று உள்ளது. இதில் மக்களது வாழ்வாதாரம், சூழல் போன்றவற்றுக்கு எவ்வாறான தாக்கம் ஏற்படும்? வளி, நீர், வனஜீவராசிகள் போன்றவற்றுக்கு எவ்வாறான தாக்கங்கள் ஏற்படும்? என்பன பற்றி குறிப்பிடப்பட வேண்டும். ஆனால் இவ்வதிகாரிகள் தயாரித்திருக்கும் சூழல் தாக்க மதிப்பீட்டில் 8 பேர் மாத்திரமே அழைக்கப்பட்டு பிரதேசத்தின் விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருக்கின்றது. இவர்களுள் பௌத்த பிக்கு ஒருவரையும், விவசாயி ஒருவரையும் தவிர மற்ற அனைவரும் அரசாங்க உத்தியோகத்தவர்களாவர். இவ் அரசாங்க உத்தியோகத்தர்கள் இத்திட்டத்தால் ஏற்படக்கூடிய சூழல் பாதிப்புக்களை முறையான குறிப்பிடாமையினால் சூழலுக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை என்கின்ற அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்னர் ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் நுரைச்சோலை அனல் மின்சார நிலையத்தை தாபிப்பதற்கு வடமேல் மாகாண சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளராக இருந்த சமன் சேனாநாயக்க என்பவர் பலவந்தப்படுத்தப்பட்டு அனுமதி பெறப்பட்டது. இது 2006ஆம் ஆண்டில் இடம்பெற்றது. அதற்கெதிராக நாம் வழக்குத் தொடுத்த போது அது அப்போதைய ஆட்சிபீடத்தால் விசாரணைக்கு எடுக்க இடமளிக்கப்படவில்லை. ஐந்து வருட காலமாக இவ்வழக்கு காலம்கடத்தப்பட்ட நிலையில் அனல் மின்சார நிலையத்திற்கான கட்டிடமும் அக்காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு விட்டது. ஒரு திட்டத்திற்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டால் அவ்வழக்கு முடிந்ததன் பிற்பாடே அந்தத் திட்டம் தொடரப்பட வேண்டும். அப்படியிருந்தும் சரத் என் சில்வா பிரதம நீதியரசராக இருந்த சமயத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது தடுக்கப்பட்டு வந்தது. அனல் மின்சார நிலையம் உருவாக்கப்பட்டதன் பின்னர் இவ்வழக்கு மீண்டும் அழைக்கப்பட்டு அந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு விட்டது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்கள். இதற்கு எதிராக கேள்வி எழுப்பிய போது எமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

அனல் மின்சார நிலையத் திட்டம் கொண்டுவரப்பட்ட போது மக்களது பலத்த எதிர்ப்புக்களையும் மீறி அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. தற்போது அருவைக்காட்டில் குப்பை கொட்டும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கத் தயாராகும் நிலையில் மக்களது எதிர்ப்புக்களையும் மீறி அரசாங்கம் இந்தத் திட்டத்தையும் முன்னெடுக்கத் தயாராகின்றது. ஜனநாயக நாட்டில் மக்களது எதிர்ப்புக்களுக்கு அப்பால் அரசாங்கம் ஏன் இந்தத் திட்டங்களை முன்னெடுக்கப் பார்க்கின்றது?

அனல் மின்சாரத் திட்டத்தில் கோடிக் கணக்கான ரூபாய்கள் கைமாறியதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்திருக்கும் செய்தியொன்று அண்மையில் பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது. அதே போன்று பிரதியமைச்சர் அஜித் பெரேரா அனல் மின்சார நிலையத்தை நிறுவிய சீன நாட்டுக் கம்பனியிலிருந்து முன்னைய அரசாங்கத்திற்கு 20 மில்லியன் டொலர் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். உலக வங்கியினால் கருப்புப்பட்டியலில் இடப்பட்ட நிறுவனத்திற்கு அமைச்சர் சம்பிக்கவினால் அருவைக்காட்டில் குப்பை கொட்டும் திட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தில் அவர்களுக்கு ஒரு பங்கு இருப்பதாலேயே தடல் புடலாக இதனை நிறைவேற்றப்பார்க்கின்றார்கள். இத்திட்டம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக வேண்டி அண்மையில் புத்தளம் பிரதேச செயலகத்தில் அமைச்சர் சம்பிக்க தலைமையில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது.

அதன் போது, அவர் ஏலவே தெரிவித்து பத்திரிகையில் பிரசுரமான செய்தியை நான் அவரிடம் காண்பித்து இது உண்மையா எனக்கேட்டேன். அதற்கவர் உண்மை எனக் கூறினார். பிரதியமைச்சர் அஜித் பெரேராவின் கருத்து தொடர்பிலும் வினவினேன். அதுவும் உண்மையெனக் கூறினார். அதன் பிறகு நான், அன்றைய திட்டமும் சீன நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டது. இன்றும் சீன நிறுவனத்தினாலேயே இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது, இப்படியிருக்கும் போது உங்களுக்கும் கொமிஷன் இல்லை என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று கேட்டேன். அதற்கவர் கையை விரித்து தான் நேர்மையாக வேலைசெய்யும் ஒருவர், கொமிஷன்களுக்காக வேலைசெய்பவரல்ல என்றார்.

நீங்கள் ஒரு சூழலியலாளர் எனும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுமாயின் மக்களுக்கு எதிர்கொள்ள வேண்டியேற்படுகின்ற பாதிப்புக்களை குறிப்பிட முடியுமா?

பல்வேறு மாற்று வழிகள் இருக்கும் பட்சத்தில் 170 கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் உள்ள புத்தளத்திற்கு ஏன் குப்பையை கொண்டு செல்ல வேண்டும்? குப்பை எடுத்துச்செல்லும் ஒரு நாள் புகையிரத பயணத்திற்கு 40 லட்சம் ரூபா செலவாகிறது. இத்திட்டத்தின் மூலம் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கின்றனர். ஆனால் அதிகபட்சம் 50 பேர்களுக்கு மேலாக அங்கு தொழில்வாய்ப்பிருக்காது. ஆனால் இந்தக் குப்பையை மீள்சுழற்சி செய்யும் பட்சத்தில் 200 பேர்களுக்கு மேல் தொழில் வழங்க முடியும். இந்தத் திட்டத்திற்கு மொத்தமாக 274 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 115 மில்லியன் டொலர் உலக வங்கியினாலும் இன்னும் 115 மில்லியன் டொலர் யுஐஐநு என்னும் சீன வங்கியிலிருந்தும் கடனாக பெறப்பட்டுள்ளது. உலக வங்கியிடம் சில நிபந்தனைகள் உள்ளன. அதாவது குப்பைகளை குறிப்பிட்ட சில இடங்களில் போடக்கூடாது என்பது. அந்த நிபந்தனைகளின் பிரகாரம் அரசாங்கத்தால் புத்தளத்தில் குப்பை கொட்ட முடியாது. இதனால் உலக வங்கி பணம் தர முடியாதென பின்வாங்கியது.
அரசாங்கத்தின் 44 மில்லியன் பணத்தை கொண்டே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் எவ்வித அனுபவமும் இல்லாத சய்னா ஹார்பர் நிறுவனத்திடமே விலைமனுக்கோரல் அடிப்படையில் இத்திட்டத்தின் அடுத்தகட்டப் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதே சமயம் China Harbour நிறுவனத்திற்கு எவ்வித அனுபவங்களும் இல்லாததால் கொரிய நாட்டு நிறுவனம் ஒன்றை ஆலோசணை வழங்குவதற்கென ஒப்பந்தம் செய்துள்ளனர். இவ்விறு நிறுவனங்களையும் மேற்பார்வை செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் எவ்வித அனுபவமும் இல்லாத CCEB – Ceylon COnstruction Environmental Bureau என்னும் இலங்கை நிறுவனமும் அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஒரு பொறியியலாளர் குழுவின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்ய ஆசிரியர் ஒருவரை நியமித்ததற்கு ஒப்பான செயலே இது.

இப்படியான நிலையில் 40 லட்சம் ரூபா (4 மில்லியன்) ஒரு நாள் செலவை ஈடு செய்ய உள்ள10ராட்சி சபைகளிடமிருந்து ஒரு டன் கழிவுக்கு 5000 ரூபா வீதம் அறவிடப்படுகிறது. இதன் மூலம் அரசாங்கத்திற்கு 6 மில்லியன் ரூபா கிடைக்கிறது. இதில் 4 மில்லியன் ரூபா பயணச் செலவு போக மீதமாகும் 2 மில்லியன் ரூபா இலாபமாக கிடைக்கிறது. இப்படி பொதுமக்களின் பணத்தை திட்டமிட்ட முறையில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.
உதாரணமாக உமா ஓயா திட்டத்தை எடுத்துக்கொண்டால் அது முழுமையான அரசியல் திட்டமாகும். இத்திட்டத்தில் பொறியியலாளர்களையோ சூழலியலாளர்களையோ அரசாங்கம் சம்பந்தப்பட வைக்கவில்லை. உமா ஓயா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்காக வேண்டி உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு அமைய 3000 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அரசியல் தீர்மானத்தின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின் காரணமாக மக்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை அரசாங்கம் திறைசேரியிலிருந்து கொடுக்கின்றது. திறைசேரியில் இருப்பது பொதுமக்களாகிய எமது பணம். இது போன்ற திட்டங்களை யார் யாரெல்லாம் வகுக்கின்றார்களோ அவர்களது சொந்த செலவிலிருந்தே நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும். ஆனால் அவர்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துவிட்டு பொதுமக்களின் பணத்தில் நஷ்டஈடு வழங்குகிறார்கள். இது எந்த விதத்தில் நியாயமாகிறது?

அருவைக்காட்டில் குப்பை கொட்டும் திட்டம் தொடர்பில் சூழலியலாளர்கள் எவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளார்கள்?

குப்பை கொட்டுவதற்கு இவ்விடம் பொறுத்தமில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளார்கள். ஏனெனில் குப்பை கொட்டும் இடத்திலிருந்து 5 கிலோ மீற்றர் தூரத்தில் வில்பத்து தேசிய பூங்கா அமைந்துள்ளது. அங்கு யானைகள் அதிகம உள்ளன. குப்பை வாசத்திற்கு யானைகள் வரக்கூடிய ஆபத்து உள்ளது. குப்பை கொட்டப்படும் இடத்திற்கும் வில்பத்து பூங்காவிற்கும் இடையில் ஐந்து விவசாய கிராமங்கள் உள்ளன. அங்கு முஸ்லிம்களே பெரும்பான்மையாக உள்ளனர். ஒரு தடவை சம்பிக்க ரணவக்க வணாதவில்லுவிற்கு வந்த போது கொழும்பில் முஸ்லிம்கள் அதிகம் உள்ளார்கள். அவர்களே அதிகம் குப்பை போடுகிறார்கள். அந்தக் குப்பைகளை முஸ்லிம்கள் உள்ள இடத்திற்கே கொண்டு வந்து போடுகிறோம் என்று பகிரங்கமாக சொல்லியிருந்தார். மீதொட்டமுள்ளையில் 39 பேர் இறந்து போனார்கள் அதற்காக வேண்டியே அங்குள்ள குப்பைகள் இங்கு கொண்டுவரப்படுகிறது என சொல்கிறார்கள்.

இதேசமயம், அனல் மின்சார நிலையத்தின் கழிவு களப்பில் சேர்வதால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகிறார்கள். IPEN, BRI ஆகிய சூழல் தொடர்பான ஆராய்ச்சி நிறுவனங்கள் புத்தளம் களப்பை சூழவுள்ள மக்களின் உடலில் நிலக்கரி உள்ளதா என ஆராய்ச்சி செய்தன. மனித உடலில் அனுமதிக்கப்பட்ட அளவாக 10 லட்சம் சொட்டில் ஒரு சொட்டு இருக்கலாம். அதாவது 1BP. ஆனால் இம்மக்களின் உடம்பில் 2.73 – 15 வரையில் காணப்பட்டது. இதனால் பிள்ளை பெறக்கூடிய வயதிலுள்ள பெண்களின் கரு பாதிக்கப்படும். சிசுக்களுக்கு மூளை, இதயம் போன்ற பகுதிகளில் பிரச்சினை வரலாம். மந்த புத்தியான பிள்ளைகள் பிறக்கும் வாய்ப்பு இருக்கிறது. சம்பிக்க இதனை அறியாமலில்லை. அவர் தெரிந்துகொண்டே மீன் வளமுள்ள களப்பை சூழ குப்பையை கொட்டப் பார்க்கின்றார். களப்பிலுள்ள மீன்களை சாப்பிடுவதனாலேயே இது உடம்பில் செல்கிறது.

இதுதவிர குப்பை கழிவுகள் கடலில் கலப்பதால் மீன்பிடியில் வாழும் 25,000 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையுள்ளது. புத்தளம் களப்பை பொறுத்தவரையில் 2700 ஏக்கர் உப்பும், 5000 ஏக்கர் இறால் பண்ணையும் உள்ளது. அதுபோன்று ஏறக்குறயை 10,000 குடும்பங்கள் இதனை சூழ தொழில் செய்கின்றன. எனவே இவையனைத்து மக்களினதும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இது தவிர புத்தளம் மன்னார் வரையான பகுதி நிலத்தடி நீருக்கு பெயர் போன இடமாகும். குடிநீருக்கும் விவசாயத்திற்கும் இந்நீர் பயன்படுத்தப்படுகிறது. இந்நீரில் நச்சுத்தன்மை கலக்குமாயின் மன்னார் வரையான நீர்நிலை பாதிக்கக்கூடிய ஆபத்து காணப்படுகிறது.

இது விடயம் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படவில்லையா?

அவர்கள் மேடைகளில் எதிர்ப்பு தெரிவித்தாலும் பதவியை காப்பாற்றிக்கொள்ள மௌனமாக இருக்கிறார்கள். நாம் இன்று (13) முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கிறோம். அவர்களிடம் இவ்விடயத்தை ஆழமாக அறிவுறுத்த வேண்டியுள்ளது.

About the author

Administrator

Leave a Comment