Features நாடுவது நலம்

தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்

Written by Administrator

இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் | நாடுவது நலம்

இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம் தேவைப்படுகிறது. புதியதோர் அரசியல் சந்ததி உருவாவதன் மூலமே இம்மாற்றம் இடம்பெறும் என நான் நினைக்கிறேன். உலகம் தொழில்நுட்ப ரீதியாக முன்னகர்ந்து கொண்டுள்ளது. நவீன தொழில்நுட்பங்களுடன் முன்னேற்றத்தின் உச்சத்தை தொட்டு வருகிறது. நாம் இன்னும் பழமைவாத கருத்துக்களில் சிறைப்பட்டு அதைச் சூழ வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டு வருகின்றோம்.
எமது பாரம்பரியத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய அதே வேளை கற்றுக்கொள்ள வேண்டிய பாரம்பரியங்களும் எமக்கு முன்னால் உள்ளன. பழைய சம்பிரதாயங்களில் சிறைப்பட்டிருப்பின் மனித வர்க்கம் இன்னும் கற்குகைகளிலேயே இருந்திருக்கும். சிங்கள ஞானியொருவரான குமாரதுங்க முனிதாச கூறிய கருத்தொன்று என் நினைவுக்கு வருகிறது. புதுப் புது விடயங்களை கையாளாத மக்கள் உலகில் உயர்ந்த இடங்களுக்கு செல்ல மாட்டார்கள் என்பதுவே அது. இது எல்லோரினதும் அவதானத்திற்கு உட்பட வேண்டிய கருத்தாகும்.

தற்பொழுது இலங்கை யுத்த காலப்பகுதியை கடந்து வந்துள்ளது. மோதல்களை தீரத்துக்கொண்டு போருக்குப் பிந்திய பகைமறப்புக் காலத்தை நோக்கிப் பயணிக்க வேண்டுமெனில் எமமத்தியில் காணப்படுகின்ற தேசியவாதத்தையும் இனவாதத்தையும் குறுகிய அரசியல் சிந்தனை படைத்த கலாசாரத்தையும் கைவிட வேண்டியுள்ளது. அதிலிருந்து முற்றாக ஒதுங்க வேண்டியுள்ளது.

நாம் இன்று முகம்கொடுக்கும் சவால்கள் அன்று முகம்கொடுத்த சவால்களைப் போன்றதல்ல. இவை புதிய சவால்களாகும். 1956ஆம் ஆண்டிலும் 1977ஆம் ஆண்டிலும் வாழ்ந்த மக்கள் முகம்கொடுத்த சவால்களல்ல இன்று நாம் முகம்கொடுக்கும் சவால்கள். சர்வதேச ரீதியில் நாம் இன்று முகம்கொடுக்கும் சவாலாக இருப்பது, மனித உரிமைகளை பாதுகாக்கின்ற, அதற்கு பதில்கூறக் கடமைப்பட்டுள்ள நாடாக இலங்கை மாறுவது. இரண்டாவது, எந்தவொரு அதிகார வர்க்கத்திற்கும் கட்டுப்படாமல் சுயாதின வெளிநாட்டுக்கொள்கையை கடைபிடிப்பது.

இவற்றுக்குள் தான் எமது அபிமானம் உற்பொதிந்துள்ளது. இதன் மூலமே எமக்கு பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும். இன்று உலகில் எமக்கு தனித்து வாழவோ, இயங்கவோ முடியாது. தனிமைப்பட்டு ஆட்சியை முன்னெடுக்க முடியாது. ஒருவரிடம் இருந்து மற்றொருவர் கற்றுக்கொள்ள நிறைய விடயங்கள் உள்ளன. வரலாற்றிலிருந்து எமக்கு நிறைய பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. 1956ஆம் ஆண்டு காலப்பகுதியை திருப்பிப் பாருங்கள். அன்றிருந்த அரசியல் தலைவர்கள் சீத்தை, பனியங்களை அணிந்தார்கள். எனினும் ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய அந்தக் கலாசார வரையறையையும் விட்டு ஒதுங்குவதற்கு அன்றைய அரசியல் தலைவர்களுக்கு முடியாமல் போனது.

எனவே ஆடைக்கு கீழால் உள்ளாடை அணிந்தார்கள். அவர்கள் உலகை தெரிந்துவைத்திருந்தார்கள். ஆங்கிலத்தை நன்றாக கற்றிருந்தார்கள். ஆங்கிலேயர்களை அறிந்திருந்தார்கள். அவர்களுடைய பிள்ளைகளுக்கும் ஆங்கிலத்தை போதித்தார்கள். அவர்களை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிவைத்தார்கள். ஆனால் 1956ஆம் ஆண்டு சந்ததியினருள் பெரும்பாலானவர்கள் கிணற்றுத்தவலைகளை போல் சிந்திக்க முற்பட்டார்கள். சிங்கள மொழிச்சட்டத்திற்குள் அவர்கள் அகப்பட்டார்கள். இம்மாற்றுக் கவனிப்புக்கு இறையாகியிருப்பதை அவர்கள் அறிந்துகொண்டார்கள். வடக்கு தெற்கு இளைஞர் கலகங்களுக்கு அடிப்படையாக அமைந்த காரணிகளுள் இதுவும் ஒன்றாகும்.

1944 ஆட்சி மாற்றத்தின் போது பண்டாரநாயக்க தேசியவாதக் கொள்கையை முன்னிறுத்தி ஆட்சியை கைப்பற்ற முனைந்தார். ஆனால் 1977 ஆட்சி மாற்றத்தின் போது ஜே.ஆருக்கு வித்தியாசமானதொரு பார்வை இருந்தது. உலகமயமாக்கல் பார்வை அவரிடம் காணப்பட்டது. இலங்கையை முழு உலகிற்கும் திறந்துவிடும் கொள்கையை பின்பற்றினார். அதன் மூலம் புதிய உற்பத்திகள், அபிவிருத்திகள், நுகர்வுப் பொருட்கள் தொடர்பில் அவதானம் அதிகரிக்கலானது. மாக்சிசத்தை புறந்தள்ளி விட்டு இந்தியா, சீனா போன்ற நாடுகளும் இந்தக் கொள்கையை ஆரத்தழுவ ஆரம்பித்தன.

நாட்டின் எதிர்காலம் குறித்து நாம் கண்திறந்து பார்க்க வேண்டும். கிணற்றுத்தவலை அரசியலை விட்டும் நாம் ஒதுங்கிவிட வேண்டும். உலகில் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்த நாடுகள் எவ்வாறு பொருளாதார ரீதியாக தம்மை கட்டியெழுப்பிக்கொண்டன என்பது குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும். வரலாற்றிலிருந்து பாடங்களை கற்று ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு புதியதோர் பாதையில் பயணிக்க வேண்டிய காலம் எழுந்துள்ளது. நாம் மிக முக்கிய கட்டத்தில் இருக்கின்றோம். சரியான தூரத்தை நோக்கி பயணிக்க வேண்டும். அது குறித்து சிந்திக்க வேண்டும்.

About the author

Administrator

1 Comment

  • காலத்திற்குத் தேவையான சிந்தனை!

    குறுகிய இனவாத சிந்தனையிலிருந்து விடுபட வேண்டும்!

    ஊழலற்ற அரசியல்வாதிகளால் மட்டுமே தேச நலன் கருதிய, மக்கள்மயமான சிந்தனை வெளிப்படும்!

    நாடு, மக்கள் என்ற நல்லெண்ணம் கொண்டோர் மட்டுமே அரசியலில் நுழையும் வண்ணம் சட்டங்களும்
    மாற வேண்டும்.

Leave a Comment