Features அரசியல்

ஊழல் மோசடியை ஒழிப்பது யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டும்

Written by Administrator

இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை நோக்கி்…… 1V

  • விக்டர் ஐவன்

இலங்கையின் மொத்த அரச அமைப்பிலும் புற்றுநோயாகப் புரையோடிப் போயிருக்கின்ற ஊழலும் மோசடியும் தான் நாட்டின் வறுமை, பின்னடைவு, கடன்சுமை அனைத்துக்குமான முக்கிய காரணம் எனலாம். அரச அதிகாரத்தைப் பெற்றவர்கள் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி முறைகேடாகப் பணம் சம்பாதிப்பது 1977 முதல் இலங்கையின் அரச நிர்வாகத்தின் ஓர் அம்சமாக இணைந்து இன்று வரை மாறாத பண்பாக நிலைத்து வருகிறது. உருவாக்கப்படவுள்ள புதிய யாப்பு இந்த நிலையான பண்பை இல்லாதொழிக்கும் வகையில் அமைந்திருக்க வேண்டியது முக்கியமானது.

அரசில் காணப்படும் மோசடிகளின் மூலவேராக, அரச இயந்திரத்தின் அச்சாணியாய் விளங்குகின்ற அரசியல்வாதிகள் எனும் மக்கள் பிரதிநிதிகளே இருக்கின்றார்கள். யாப்பு உருவாக்கத்தின் போது அதனை அரசமைப்புப் பேரவையின் மக்கள் பிரதிநிதிகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தாமல் பொதுமக்களின் பங்களிப்பு அதிகமாகப் பெறப்படும் வகையில் அமைக்கப்பட வேண்டும். ஏனெனில் நவீன யாப்புருவாகத்தின் பிரதான அம்சமாக இது அமைந்திருக்கிறது என்பதோடு, அரசியலமைப்புப் பேரவையின் அங்கத்தவர்களே மோசடியின் பிரதான கர்த்தாக்களாக இருக்கும் நிலையில் அவர்கள் இயற்றும் யாப்பு தமது பண்பாக மாறிப் போயுள்ள ஊழலையும் மோசடியையும் இல்லாதொழிக்கும் வகையில் அமையப்போவதில்லை.

இந்தவகையில் ஊழல் மோசடியினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களுக்குத் தான் அதிலிருந்து மீள வேண்டும் என்ற உண்மையான தேவை இருக்கிறது. ஆனாலும் யாப்பு உருவாக்கத்துக்குத் தேவையான அறிவும் அனுபமும் சாதாரண மக்களுக்கு எப்படி இருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. இந்த அறிவை மக்களுக்கு வழங்குவதும் யாப்பு உருவாக்க வேலைத்திட்டத்தின் ஒருபகுதிதான். இதனைச் செயற்படுத்தினால் மக்கள் யாப்பு உருவாக்கத்துக்குத் தேவையான அறிவையும் வரைமுறைகளையும் பெற்று அவர்கள் அதன் சிறந்த பங்காளிகளாக மாறுவார்கள்.

ஊழல் மோசடிகளைக் களைவதற்காக  யாப்பு உருவாக்கத்தின் போது கவனிக்கப்பட வேண்டிய விடயங்களை கீழே குறிப்பிட்டுள்ளேன்.

யாப்பை மீறுதல்

அ) ஆட்சித் தலைவர்களுக்கும், பிரதமர் ஆட்சித் தலைவர் அல்லாத பட்சத்தில் பிரதமருட்பட்ட அமைச்சரவைக்கும் தமக்கு வழங்கப்படும் பொறுப்புக்கள், கடமைகள் பற்றிய சுருக்கமான விபரங்கள் அடங்கிய விளக்கமொன்று யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டும்.

ஆ) முக்கியமான பதவிகளில் உள்ளவர்கள் அனைவரும் பொதுவாகவன்றி தனித்தனியாக தத்தமது பொறுப்புக்களுக்கு ஏற்ற வகையில் யாப்பு விதிகளுக்கு இணங்கச் செயற்படுவதாக சத்தியப்பிரமாணம் செய்யும் முறையொன்று வர வேண்டும். மீறிச் செயற்படுவது தண்டனைக்குரிய குற்றம் என்பதையும் இந்தப் பிரமாணம் ஏற்றுக் கொள்வதாக இருக்க வேண்டும்.

இ) வேண்டுமென்றே யாப்பை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டு அதற்கான தண்டனையும் யாப்பில் குறிப்பிடப்பட வேண்டும். யாப்பு மீறலில் ஆட்சித் தலைவருக்கு சுய அதிகாரம் கிடைக்கப் பெறாத வகையில் யாப்பு அமைய வேண்டும்.

ஈ) யாப்பு மீறலுக்கு எதிராக குறைந்த செலவில் வழக்குத் தொடர்வதற்கான ஏற்பாடுகளை யாப்பினூடாக மக்களுக்குப் பெற்றுத் தர வழி செய்ய வேண்டும்.

பொதுச் சொத்து துஷ்பிரயோகம்

அலைவரிசைகள் உட்பட்ட அனைத்து பொதுச் சொத்துக்களதும் இடைக்கால பிரதான பொறுப்பாளராக நாட்டின் தலைவரே உள்ளார். அரச சொத்துக்களை விற்பதற்கும் குத்தகைக்குக் கொடுப்பதற்கும் அன்பளிப்புச் செய்வதற்கும் நாட்டுத் தலைவருக்கே அதிகாரம் இருக்கிறது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி இலங்கையின் தலைவர்கள் தமது உறவினர்களுக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் இலவசமாகவும், மலிவு விலையிலும் பொதுச் சொத்துக்களை வழங்கி வருகின்றனர். இதனால் மட்டுமே அரசாங்கம் அனுபவிக்கின்ற நஷ்டம் அளப்பரியது. மக்களுக்கு இது தொடர்பில் போதிய அறிவை வழங்குவதற்காகவும், இது போன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் இருக்கும் வகையிலும், ஆட்சித் தலைவர்களால் இது தொடர்பில் இதுவரை புரியப்பட்டிருக்கின்ற பாரிய தவறுகளைக் கண்டறிந்து யாப்பு சபைக்கு அறிவிக்கின்ற முறையொன்று உருவாக்கப்பட வேண்டும்.

அ) பொதுச் சொத்துக்களை விற்பதற்கும், குத்தகைக்குக் கொடுப்பதற்கும், அன்பளிப்புச் செய்வதற்கும் நாட்டுத் தலைவருக்குள்ள எல்லையற்ற அதிகாரத்தை இல்லாதொழிக்க வேண்டும். நாட்டுத் தலைவர் அதனைக் கையாள்வதற்கான வரையறைகள் சொல்லப்பட வேண்டும்.

ஆ) பொதுச் சொத்துக்களை விற்பதற்கும், குத்தகைக்குக் கொடுப்பதற்கும், அன்பளிப்புச் செய்வதற்கும் முன்னர் மக்களுக்கு அறிவிக்க வேண்டியதும் , அரசியலமைப்புப் பேரவையினதும் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டியதும் கட்டாய நிபந்தனைகளாக்கப்பட வேண்டும்.

அரசுடன் கொடுக்கல் வாங்கல் செய்தல்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்குரிய சட்டரீதியான பாரம்பரியத்துக்கப்பால் அரசுடனான வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றி பரிசீலனை செய்யப்பட வேண்டும். இவர்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தை நீதிமன்றத்துக்கு வழங்க வேண்டும்.

அ) மக்களின் வாக்குகளால் தெரிவான பிரதிநிதிகள் அரசுடன் வியாபாரத்தில் ஈடுபடுவது முற்றாகத் தடுக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்பவர்களது உறுப்புரிமையைப் பறிக்கின்ற முன்னைய முறை மீண்டும் யாப்பில் இணைக்கப்பட வேண்டும்.

ஆ) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வையின்றிய வாகன அனுமதிப்பத்திரமும் எரிபொருளும் வழங்குகின்ற எந்த நாட்டிலுமில்லாத சலுகைகள் நீக்கப்பட வேண்டும்.   

இ) பன்முகப்படுத்தப்பட்ட நிதியினூடாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வருடாந்தம் ஒதுக்கப்படும் நிதி, பாராளுமன்ற சம்பிரதாயத்துக்கு முரணாக வரவு செலவுத் திட்டத்தினூடாக சுமத்தப்படும் சுமை என்பதனால் அது முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

ஆளணியும் வாகனமும்

ஜனாதிபதி ஜயவர்தனவின் காலத்தில் ஜனாதிபதி செயலகத்தில் 25 பேருக்கும் குறைவாகவே ஊழியர்கள் இருந்தார்கள். வாகனங்களும் குறைவாகவே இருந்தன. அவருக்கு ஆலோசகர்கள் இருக்கவில்லை. ஆனால் இப்போது ஜனாதிபதி, பிரதமர் செயலகங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இருக்கிறார்கள். இங்கு வாகனங்களும் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. ஜனாதிபதிக்கு நூற்றுக் கணக்கான ஆலோசகர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பலரும் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குபவர்களாக இல்லை. வேலைக்குச் சமுகமளிக்காமலேயே இவர்களில் பலரும் சம்பளம் பெறுகிறார்கள். இவர்களுக்கும் வாகன, எரிபொருள் வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

அ) நிறைவேற்றதிகாரம் தொடருமானால் ஜனாதிபதிக்கும், பாராளுமன்ற ஆட்சி முறையென்றால் பிரதமருக்கும் இருக்க வேண்டிய ஊழியர் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை, மதிப்பீடொன்றின் அடிப்படையில் மட்டுப்படுத்தப்பட வேண்டும்.

ஆ) நாட்டுத் தலைவருக்கும் அமைச்சரவை அங்கத்தவர்களுக்கும் பிரத்தியேக ஊழியர்கள் வழங்கும் முறை நிறுத்தப்பட வேண்டும். இது தமது குடும்பத்தாருக்கு சம்பளமும் ஏனைய சலுகைகளையும் பெற்றுக் கொடுக்கும் முறை என்பதால், இது அனாவசிய சுமையை மக்கள் மீது சுமத்துகின்றது.

இ) ஓய்வு பெறும் அரச தலைவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு அரச செலவில் உத்தியோகபூர்வ வாசஸ்தலமும், ஊழியர்களும் வழங்கப்படும் முறை நிறுத்தப்பட வேண்டும். வறிய ஏழை ஒருவர் நாட்டுத் தலைவராக வரும் பட்சத்தில் மாத்திரம் இதனைப் பரிசீலனை செய்யலாம்.

ஈ) உயர் பதவிகளில் இருக்கின்ற அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பின் தன்மை தொடர்பில், அதற்குச் செலவிடப்படும் பாரிய நிதியைக் கருத்தில் கொண்டு சிறந்த கொள்கையொன்று வகுக்கப்பட வேண்டும்.

உ) உத்தியோகபூர்வ பதவிகளில் உள்ளவர்களுக்கு வேறெந்த நாடுகளிலும் இல்லாத அளவு சொகுசான ஆடம்பர வாகனங்கள் வழங்கப்படுகின்றன. அதி உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் வாகனமொன்றின் பெறுமதி 2 கோடிக்கும் மேலாகும். முன்னணி அரசியல்வாதிகளின் வாகனத்தின் பெறுமதி 10 கோடிக்கும் அதிகமானது. நாட்டுக்குப் பெரும் செலவீனத்தை ஏற்படுத்தும் இந்த மோசமான முறை நிறுத்தப்பட வேண்டும்.

ஊழல் மோசடியை இல்லாதொழித்தல்

அ) தவறு செய்யும் ஜனாதிபதியொருவரை பதவியிறக்கம் செய்வதற்கான முறைகளில் ஒன்றாக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருதலுக்கு யாப்பு இடமளித்திருக்கிறது. இது முடிவில்லாத ஒரு பம்பரம் போல சுழன்று வருகிறது. ஜனாதிபதி முறை தொடருமானால் இந்த முறை தொடர்பிலான தீர்க்கமானதொரு நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும்.

ஆ) பாரிய குற்றங்களில் ஈடுபடும் உயர் அதிகாரிகளுக்கு எதிராக அரசியலமைப்புப் பேரவையில் நம்பிக்கையில்லாப் பிரேரணையோ கண்டனத் தீர்மானமோ நிறைவேற்றுவதற்கு யாப்பில்  மக்களுக்கு வழிவகை செய்து கொடுக்கப்பட வேண்டும்.

இ) உயர் பதவிகளை வகிப்பவர்களின் மோசடித் தன்மையை நிறுவக் கூடிய சாட்சிகள் இருக்கும் பட்சத்தில் தனி நபராகவேனும் அவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையோ கண்டனத் தீர்மானமோ நிறைவேற்றுவதற்கு யாப்பில் இடமளிக்கப்பட வேண்டும்.

இவ்வாறான முறைப்பாடுகளை விசாரிக்கும் அதிகாரமும் அதற்கென தனி அலகொன்றை உருவாக்கிக் கொள்ளும் அதிகாரமும் கணக்காய்வாளர் நாயகத்துக்கு வழங்கப்பட முடியும். இந்த அலகு மக்களுடையதைப் போலவே அரசமைப்புப் பேரவையினதும் பரிசீலனைக்கு உட்படுவதாக அமைய வேண்டும். பரிசீலனையின் போது குற்றவாளியாகக் காணப்படும் எவர் மீதும் கண்டனத் தீர்மானமோ, நம்பிக்கையில்லாப் பிரேரணையோ  அரசியலமைப்புப் பேரவையின் முன்னால் வைக்கின்ற அதிகாரம் கணக்காய்வாளர் நாயகத்துக்கு வழங்கப்பட வேண்டும். கணக்காய்வாளரின் விதந்துரைகள் அடங்கிய அறிக்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகத்திடம் வழங்கப்பட்டு அது பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும். இதற்காக அரசியலமைப்புப் பேரவையில் நடக்கும் விவாதத்தின் ஆரம்பத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அவரது குற்றம் தொடர்பில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களையும் முன்வைத்து அதற்கு அவர் பதிலளிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவரை கண்டனத் தீர்மானமோ, நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலமோ பதவிநீக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லாதவிடத்து, கணக்காய்வாளரின் அறிக்கையை குற்றம் சாட்டப்பட்டவர் பணிபுரியும் அரச நிறுவனத்துக்குப் பொறுப்பான அமைச்சரிடம் கையளித்து அவரை பதவிநீக்கம் செய்யும் பொறுப்பை அமைச்சின் பிரதானிக்கு வழங்க முடியும்.

ஈ) 1988 இன் 74 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1975 இன் 01 ஆம் இலக்க சொத்துக்களையும் பொறுப்புக்களையும் பிரகடனப்படுத்தும் சட்டத்தின் கீழ் அரச அதிகாரிகள் தவறான வழியில் உழைத்தவற்றை அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு இருந்தது. 90 களின் நடுப்பகுதியில் இது மக்களுக்குத் தடுக்கப்பட்டிருந்த போது அதனைத் தகர்த்தவர்களில் முதலாமவனாக நானிருந்தேன். அதனால் அதனைப் பற்றிப் பேசுகின்ற உரிமை எனக்கு வெகுவாகவே இருக்கிறது.

இந்தச் சட்டத்திலுள்ள குறைபாடுகளை நீக்கி அதனை இற்றைப்படுத்துவதன் ஊடாக மட்டுமே அரச அதிகாரிகளின் ஊழல் மோசடி தொடர்பில் பெரியதொரு புரட்சியை ஏற்படுத்த முடியும். இதனால் இந்த ஊழல் பேர்வழிகளிடம் தாம் எப்படியும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவோம் என்ற பெரும் அச்சத்தை ஏற்படுத்த முடியும். இந்த முக்கியமான சட்டம், தகவலறியும் உரிமை ஆணைக்குழுவின் இரண்டு தீர்ப்புகளினால் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருப்பது கவலைக்குரியது. இந்தச் சட்டத்துக்கு உயிரூட்டுவதற்கு ஆவன செய்யப்பட வேண்டும்.

உ) சொத்துப் பிரகடனத்தை வெளியிடுபவர் நிரப்ப வேண்டிய படிவத்தை புதுப்பிக்க வேண்டும். தற்போதைய சட்டத்தின் படி இந்த விடயத்தில் தவறிழைத்த ஒருவருக்கு தண்டனையாக 1000 ரூபா அல்லது ஒரு வருட சிறைத் தண்டனையே குறிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்சமாக ஐந்து இலட்சம் ரூபா விதிக்கப்பட்டு, தவறாக உழைத்தவற்றின் பெறுமதிக்கேற்ப தண்டனை அதிகரிக்கப்பட வேண்டும். சிறைத் தண்டனையின் குறைந்த கால எல்லையாக மூன்று வருடங்கள் விதிக்கப்பட வேண்டும். தண்டப்பணமும் சிறைத்தண்டனையும் இரண்டுமே இந்த விடயத்தில் தவறிழைத்தவர்களுக்கு விதிக்கப்பட வேண்டும். நிரப்பப்படும் படிவம் இலத்திரனியல் வடிவமைக்கப்பட்டு சொத்துக்களை வெளிப்படுத்துவதற்கான இணையத்தளம் ஒன்றினூடாக பொது மக்கள் இலவசமாகப் பார்வையிடுவதற்கு வழி செய்ய வேண்டும்.

சட்டத்தை இவ்வாறு திருத்தியமைப்பதனூடாக மட்டுமே கூட தவறான முறையில் சொத்துக்களைக் குவித்திருக்கின்ற எல்லா அரச அதிகாரிகளையும் சுற்றி வளைக்க முடியும். இதனால் இதனை ஒரு பழக்கமாகக் கொண்டிருக்கின்ற அதிகாரிகளுக்கு இதனுடைய பாரதூரத்தை உணர்த்த முடியும்.      

ஊ) ழல் மோசடி தவிர்ப்புக் குழுவினை, ஹொங்கொங்கின் Independent Commission Against Corruption இனை முன்னுதாரணமாகக் கொண்டு அமைத்துக் கொள்ள முடியும். இதற்கேற்றாற் போல 1994 இன் 19 ஆம் இலக்க ஊழல் மோசடி குற்றச் சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுச் சட்டத்தினை திருத்தியமைக்க வேண்டும். இந்த வகையில் ஆணைக்குழுவின் கட்டமைப்பு, ஆணையாளர்கள் நியமனம் உட்பட்ட அனைத்து விடயங்களும் மாற்றப்பட வேண்டும். ஊழல் மோசடி மலிந்து காணப்பட்ட ஹொங்கொங் இந்த முறை மூலமாக இன்று ஊழல் மோசடியை இல்லாதொழித்த நாடாக மாறியிருக்கிறது. இன்று ஹொங்கொங் அடைந்துள்ள வளர்ச்சிக்கு இந்த ஆணைக்குழு சிறந்த முறையில் செயற்பட்டமை முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. இலங்கையும் இந்த நாட்டிலிருந்து கற்றுக் கொள்ள முடியும். இதற்கான வழிகாட்டலை வழங்குவதற்கும் அந்த நாடு தயாராகவே இருக்கிறது.

About the author

Administrator

Leave a Comment