Features ஆசிரியர் கருத்து

மக்களின் நீதிக்கான போராட்டம்

Written by Administrator

Editorial | MP 415

புத்தளம் அறுவாக்காடு பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதற்கான ஏற்பாடுகள் இறுதித் தறுவாயை அடைந்திருக்கின்றன. தமது பிரதேசத்தின் வாழும் சூழலையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்கும் நோக்கில் மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்கள் வியர்த்தமாகி வருகின்றன.

எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் அங்கு மக்களின் நலன் தான் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும். மக்களுக்கு நலவு பயக்காத எந்தத் திட்டமும் வீணானவை. அப்படியிருக்கையில் மக்களின் நலனுக்கு எதிராக அரசாங்கம் செயற்திட்டங்களைக் கொண்டுவருவதில் நிச்சயமாக அரசியல்வாதிகளுக்கன்றி மக்களுக்கு எந்த நன்மையும் விளையப் போவதில்லை.

புத்தளத்தில் குப்பை கொட்டுவது தொடர்பில் அரசாங்கம் எந்த நியாயங்களைச் சொன்னாலும் மக்களின் குரலுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும். புத்தளம் பகுதியில் இருக்கின்ற மூவின மக்களும், பிரதேச சபைகளும் இந்தத் திட்டத்தை எதிர்க்கின்றார்கள் என்றால் அதில் நியாயம் இல்லாமல் இருக்க முடியாது. எனவே அரசாங்கம் இந்தத் திட்டத்தை அமுலபடுத்த முன்னர் இன்னும் பல தடவைகள் யோசிப்பது நல்லது.

சீமெந்துத் தொழிற்சாலை அமைத்த போதும், அனல் மின் நிலையம் நிர்மாணிக்கப்பட்ட போதும் மக்களின் எதிர்ப்பை அரசாங்கம் சட்டை செய்யவில்லை. இன்று இதன் காரணமாக மக்கள் சொல்லொணாத் துயரங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். மீண்டும் அதே பிரதேச மக்களையே இக்கட்டில் தள்ளிவிடாமல் அரசாங்கம் மக்களைப் பாதுகாக்க வேண்டும். உமா ஓயா திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போதும் மக்கள் எதிர்த்து நின்றார்கள். அரசாங்கம் அதனைப் பொருட்படுத்தாமல் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இன்று பல கோடிகள் நஷ்டத்துடன் அரசாங்கம் குறித்த திட்டத்தில் இருந்து பின்வாங்கியிருக்கிறது.

எனவே மக்களின் குரலுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும். எதேச்சாதிகாரப் போக்கில் நடந்து கொள்வது அராஜகத்தை நோக்கிய பயணத்தையே குறித்துக் காட்டுகிறது. முன்னைய ஆட்சியில் தண்ணீர் கேட்டுப் போராடிய ரதுபஸ்வெல மக்களின் போராட்டத்தை நசுக்கியதையெல்லாம் காரணம் காட்டியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. மீண்டும் இந்த அரசாங்கமும் மக்களின் குரல்வளையை நசுக்குவதாக இருந்தால் இந்த நாட்டில் அநீதியைத் தவிர வேறு விமோசனமில்லை என்றே கருத வேண்டியிருக்கிறது.

அனைத்தையும் இலாப நஷ்டக் கணக்கில் பார்ப்பதால் தான் இந்த நிலை ஏற்படுகிறது. அரசியல்வாதிகளுக்கு மக்களின் நலனை விட தமது இலாபங்கள் முக்கியமாகின்ற பொழுது அங்கு மனிதப் பெறுமானங்கள் பெறுமதியற்றதாகி விடுகின்றன. எனவே இந்த விடயத்தில் மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக மக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.

அவர்களது போராட்டம் தேசிய நலனுக்கு எதிரானது அல்ல என்றிருக்கும் பட்சத்தில் அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் மக்களின் பக்கம் தலைசாய்ப்பது தான் ஜனநாயகம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆட்சியாளர்களின் இது போன்ற செய்கைகளினால் மக்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை இழக்க வேண்டிய நிலை வந்தால் மக்கள் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதனை இந்த அரசியல்வாதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மீத்தொட்டுமுல்ல குப்பை மேட்டுச் சரிவு அனர்த்தத்தின் பொழுதிலிருந்தே கழிவுகளை முகாமை செய்வதற்கான தேவை பற்றி பலரும் பேசி வந்திருக்கின்றனர். இதற்கென பலநாடுகளில் இருந்தும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டதோடு, இந்தப் பெயரில் பல வெளிநாட்டுச் சுற்றுலாக்களும் நடந்தேறின. ஆனாலும் நிலையானதொரு திட்டம் இந்த விடயத்தில் இதுவரை முன்வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அனைத்துக்கும் நிலையான திட்டங்கள் பற்றிப் பேசும் அரசு குப்பை விடயத்தில் நிலையான திட்டமொன்றை வகுக்காமல் இருப்பது விசனத்துக்குரியது.

புத்தளம் குப்பை விவகாரம் மக்களின் நலனுடன் நேரடியாகத் தொடர்புபடுகின்ற விடயம் என்ற வகையில் அரசாங்கம் இந்த விடயத்தை நேர்மையாக அணுகுவது தான் நாட்டு மக்களுக்கு அரசாங்கம் மீதும் நாட்டின் மீதும் பற்றினை வளர்ப்பதற்கான வழியாக அமைய முடியும்.

About the author

Administrator

Leave a Comment