Features சமூகம்

ஊருக்கான ரஹ்மத்தைத் தடுப்பவா்கள்

Written by Administrator

அபூ ஷாமில் | எழுவாய் பயமிலை

ஓப்பன் மஸ்ஜித் திட்டத்தின் ஊடாக பள்ளிவாசல்களைத் தரிசித்து அதன் சிறப்புக்களை விளங்கிக் கொள்ளும் முஸ்லிமல்லாதவர்கள் பலரும் பள்ளிவாசலின் சிறப்பு சம்பந்தமாகக் குறிப்பிடும் போது இங்கு மக்களுக்கிடையில் பாகுபாடு காட்டப்படுவதில்லை என்பதை பெருமிதத்தோடு குறிப்பிடுவார்கள். ஆண்டியும் அரசனும் பேதமில்லாமல் இணைந்திடும் தலமே பள்ளிவாசல் என்று நாகூர் ஹனிபாவும் பாடி வைத்திருக்கிறார். இப்படி ஏற்றத் தாழ்வுகள் அற்ற, பாகுபாடுகள் அற்ற, பேதங்கள் அற்ற இடமாகத்தான் புனித மஸ்ஜிதுகள் அடையாளப்படுத்தப்படுகின்றன.

ஒரு ஊருக்கான ரஹ்மத் முதலில் பள்ளிவாசலுக்குத் தான் இறங்குகிறது. அங்கிருந்து தான் ஊரில் அதைச் சூழ உள்ள இடங்களுக்கு பகிரப்படுகிறது என்று பெரியோர்கள் சொல்லிச் சொல்லித் தான் என்ன நெருக்கடி என்றாலும் பள்ளிவாசலைச் சூழ வீடுகளைக் கட்டிக் கொள்வதற்கும் முஸ்லிம் சமூகம் பழக்கப்பட்டிருக்கிறது. பள்ளிவாசலுக்கு ரஹ்மத் இறங்க வேண்டுமென்றால் அது ரஹ்மான் எதிர்பார்க்கின்ற ஆண்டிக்கும் அரசனுக்கும் பேதம் பார்க்கப்படாத இடமாக இருக்க வேண்டும். அப்படி அல்லாஹுத்தஆலா எதிர்பார்ப்பது போல பள்ளிவாசல் அமையவில்லை என்றால் சொல்லப்படு வது போல அல்லாஹ்வின் ரஹ்மத் அந்த இடத்துக்கு இறங் காது. இதனால் ஒரு ஊரே அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்காத ஊராக நாசமடைகிறது. இதற்குப் பள்ளிவாசல் காரணம் என்பதை விட பள்ளிவாசலை பாகுபாடின்றி நிர்வகிக்கத் தெரியாதவர்கள் தான் காரணமாகிறார்கள். இன்னொரு வகை யில் ஊருக்கான சாபக் கேடாக இவர்கள் செயற்படுகிறார்கள்.

பள்ளிவாசல்கள் ஏழை பணக்காரன், அந்தஸ்துள்ளவன்- குடியானவன், படித்தவன்-பாமரன், மாற்று இயக்கத்தைச்    சேர்ந்தவன், வேற்றுக் கொள்கையுடையவன் என்றெல்லாம் பாகுபாடு காட்டுகின்ற இடமாக மாறுகின்ற பொழுது, இந்தப் பாகுபாடுகளுக்கு உள்ளானவர்கள் பள்ளிவாசலை விட்டும் தூரமாகிறார்கள். ஒரு பக்கத்தில் பள்ளியோடு தொடர்பில்லாத வர்களை பள்ளியோடு தொடர்புபடுத்துவதற்கு முயற்சி செய்து கொண்டு மறுபக்கத்தில் தமது கொள்கையோடு உடன்படாத வர்களை பள்ளியை விட்டும் தூரமாக்க முயற்சிக்கின்றார்கள். இந்த அநியாயம் நடக்கின்ற இடமாக பள்ளி வாசலை மாற்றிவிட்டு, ஊருக்கு ரஹ்மத் இறங்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற முட்டாள்தனம் பள்ளிவாசல்களை விட்டு அகல வேண்டும். 

பள்ளிவாசல்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்ற இப்படியானவர்களின் செயற்பாடுகள் தான் கட்டுக் கோப்பில்லாத நிலைக்கு இலங்கை முஸ்லிம்களை மாற்றியிருக்கிறது. மாற்றுக் கொள்கையுடையோரை பள்ளிவாசலுக்கு வெளியில் துரத்தியடித்தது தான் இன்று நாட்டுக்கே அச்சுறுத்தலான குழுக்களை முஸ்லிம் சமூகத்தில் உருவாக்கி விட்டிருக்கிறது. பள்ளிவாசல்களில் இருந்து ஒதுங்கி இருந்து குழுக்களாகவும் ஜமாஅத்துக்களாகவும் செயல்படுவதற்கு பள்ளிவாசல்களே காரணமாகவும் அமைகிறது. 

இந்த விடயத்தில் பள்ளிவாசல்கள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். தனித்துப் போகும் ஆட்டைத் தான் ஓநாய் பிடிக்கிறது என்பது சமூகத்துக்கும் பொருந்தும். எனவே ஊர்களில் இயங்குகின்ற எந்தக் குழுவினரையும் கூட்டத்திலிருந்து பிரிந்து செயற்படாமல் காப்பது பள்ளிவாசல்களின் பொறுப்பில் உள்ள விடயமாகும். அண்மைக் கால நிகழ்வுகள் இதனையே தெளிவுபடுத்துகின்றன. ஊர்களில் பல ஜமாஅத்துக்கள் இயங்குகின்ற போது, வித்தியாசமான கருத்துக்களை உடைய குழுவினர்கள் செயற்படும் போது அவர்களையும் இணைத்துச் செல்லுகின்ற சாமர்த்தியம் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு இருக்க வேண்டும்.

முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டவர்களே ஒரு பொது நோக்கத்தில் ஒன்று சேர்ந்து செயற்படும் பொழுது, ஒரே நோக்கத்துக்காக இயங்குகின்றவர்கள் ஒருவரை ஒருவர் ஒதுக்கி விட்டுச் செயற்படுவது என்பது இஸ்லாத்தை ஏற்றவர்களுக்குப் பொருத்தமானதல்ல. எதனையும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்ற இலகுவான, சாத்தியமான, சாத்வீகமான நிலை இருக்கும் பொழுது, பள்ளிவாசலை விட்டும் சமூகத்தைத் தூரமாக்குவதற்கு பள்ளிவாசலை நிர்வகிப்பவர்களின் அறிவும், முதிர்ச்சியும் போதாமல் இருப்பதே காரணமாக அமைய முடியும். சமூகத்தை ஒற்றுமைப்படுத்துவது என்பதும், பிரிந்து விடாமல் பாதுகாப்பது என்பதும் கூட அல்லாஹ்வின் கட்டளைகள் தான். அதேபோல ஏற்றத் தாழ்வு, பாகுபாடுகள் முஸ்லிம் சமூகத்துக்குள்ளால் இருக்கக் கூடாது என்பதும் அல்லாஹ்வின் கட்டளைதான். அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக பள்ளிவாசல்கள் செயற்படுமாக இருந்தால் அங்கு அல்லாஹ்வுடைய ரஹ்மத் இறங்குவதனையும் எதிர்பார்க்க முடியாது.

இனி அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்கக் கூடிய இடங்களை ஊர்களில் உருவாக்குகின்ற பணியை எல்லோரும் இணைந்து அவசரமாக முன்னெடுக்க வேண்டியிருக்கிறது.

About the author

Administrator

Leave a Comment