Features சர்வதேசம்

அல்ஜீரியாவின் அரசியல் கொந்தளிப்பு

Written by Administrator
  • றவூப் ஸெய்ன்

சூடானில் உமர் பஷீருக்கு எதிரான மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் பணிப் பகிஷ்கரிப்பு ஆர்ப்பாட்டங்கள் அரச படையினரால் அமைதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வட ஆபிரிக்க முஸ்லிம் நாடுகளுள் ஒன்றான அல்ஜீரியாவில் புதியதோர் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என பெருந்தொகையான அல்ஜீரிய மக்கள் தொடர்ந்தும் பல நாட்களாக ஆளும் அரசாங்கத்திற்கு எதிரான வீதி மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழிற் சங்கங்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடப் போவதாக அச்சுறுத்தியுள்ளதோடு, ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலரும் மக்கள் எழுச்சிக்கு ஆதரவளிப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ளனர். அல்ஜீரியாவில் நடப்பதென்ன? இது நடப்பு அரசியலையும் அரசியல் வரலாற்றையும் இணைத்து பதில் காண வேண்டிய கேள்வியாகும்.

அல்ஜீரியா வடஆபிரிக்க முஸ்லிம் நாடுகளுள் ஒன்றாகும். தேசிய விடுதலை முன்னணி (FLN) நாட்டின் பிரதான ஆளுங் கட்சியாகும். ஜனாதிபதியாக இருந்து வருபவர் இராணுவ ஜெனரல் அப்துல் அஸீஸ் புதப்லிகா. 82 வயதான பூதப்லிகா, நான்கு முறை ஜனாதிபதிப் பதவி வகித்து 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன. உடல் சுகவீனமுற்றுள்ள பூதப்லிகா, அடிக்கொரு முறை சுவீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மருத்துவச் சிகிச்சைகளுக்காகச் சென்று வருகிறார்.

கடந்த ஆறு ஆண்டுகளாக பூதப்லிகா மக்களின் பார்வையில் தென்படவில்லை. இராணுவத்தில் உள்ளோருக்கும் சிவில் சமூகத்தின் ஒரு பகுதியினருக்கும் பூதப்லிகா ஒரு இரட்சகர் போன்று தோன்றினாலும், இன்று அல்ஜீரிய மக்களின் 70 வீதமானோருக்கு அப்துல் அஸீஸ் ஒரு பயனற்ற முண்டம் போன்றும் மம்மி போன்றுமே காட்சியளிக்கிறார்.

நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கான உடல், உள, பலம் அவருக்கில்லை. இனிவரும் காலங்களில் அவர் அருங்காட்சியகத்தில் உட்கார வைக்கப்படும் ஒரு மம்மியாக இருக்கலாம் என தலைநகர் அல்ஜியசிலுள்ள பெயர் குறிப்பிட விரும்பாத பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 22 இல் சுவிஸ் தலைநகர் ஜெனீவாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற மருத்துவமனையொன்றுக்கு தனியான விமானத்தில் சென்ற பூதப்லிகா, இரு வாரங்களின் பின்னர் நாடு திரும்பினார். அவர் நாட்டில் இல்லாதபோது ஆரம்பித்த அரச எதிர்ப்புப் போராட்டங்கள் அவரது வருகைக்குப் பின்னர் முழு வேகம் கொண்டன. மாணவர் எதிர்ப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இராணுவம் முற்கூட்டியே பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிப்பதாக அறிவித்தன. முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்தையும் கடந்து பூதப்லிகாவுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் மாணவர் தொகை வெள்ளம் போல் அதிகரிக்கின்றது. பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களும் கற்பித்தல் நடவடிக் கைகளைப் பகிஷ்கரித்துள்ளனர். 195 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்புப் போராட்டங்களும் நீடித்தால் அல்ஜீரியாவின் அரசியல் தலைவிதியை மாற்றுவதற்கு அதுவே போதுமானதாக இருக்கும் என்கின்றார் அந்நாட்டின் அரசியல் ஆய்வாளர் இஸ்ஸத் பர்ஹான்.

இது திடீரென்று விளைந்த மக்கள் எதிர்ப்பா?

தற்போது அல்ஜீரியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியின் உண்மையான பின்புலம் என்ன? இது தனியே ஒரு ஜனாதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டமா? அல்லது அவரது அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமா?

ஏப்ரல் 18 இல் ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளது. பெப்ரவரியில் நடந்த ஊடக சந்திப்பொன்றில் தேர்தலில் தாம் மீளவும் களமிறங்கவுள்ளதாக பூதப்லிகா அறிவித்த கையோடு மருத்துவ சிகிச்சை பெறும் நோக்கில் சுவிஸ் சென் றிருந்தார். இந்த அறிவிப்புக்கும் மக்கள் போராட்டத்திற்கும் இடையில் உள்ள தொடர்பு முக்கியமானது.

எண்ணெய் வளமும் இயற்கை எரிவாயுவும் கொண்ட, ஆபிரிக்கக்கண் டத்தி லேயே மிகப் பெரும் நிலப்பரப்பைக் கொண்ட முஸ்லிம் பெரும்பான்மை நாடு அல்ஜீரியா. சுமார் 100 ஆண்டுகள் பிரான்ஸின் கொலனியாக இருந்த நாடு. 20 ஆம் நூற்றாண் டில் அரசியல் சுதந்திரத்திற்காக 10 இலட்சம் மக்களை பலிகொடுத்த ஒரே நாடு அல்ஜீரியா. இந்நாட்டின் இன்னொரு சிறப்பம்சம் 65 வீத மான மக்கள் இளைஞர்களாக இருப்பதுதான்.

அல்ஜீரியாவில் பிரான்ஸின் காலனித்து வத்தை எதிர்த்துப் போராடிய அல்ஜீரிய தேசிய இராணுவத்தில் ஒரு அங்கத்தவராக இருந்த வரே இன்றைய ஜனாதி பதி அல்துல் அஸீஸ் பூதப்லிகா. ஆனால் பாராளுமன்றத்தில் பதவிக் காலத்தை      நீடிப்பதற்கு அவ்வப்போது அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்தார். நான்கு முறை அல்ஜீரியாவின் ஜனாதிபதியாகப் பதவி வகித்த அவர், தற்போது ஐந்தாவது முறையும் தேர்தலில் இறங்கப் போவதாக அறிவித்ததை அடுத்தே மிகப் பெரும் அரசியல் கொந்தளிப்பை நாடு எதிர்கொண் டுள்ளது.

“மாணவர்களே இப்போராட்டத்தின் மையமாக உள்ளதனால் முன்னைய போராட்டங்கள் போன்று இதனை இலகுவில் அடக்க முடியாது. நாம் இன்று காணும் அல்ஜீரியா முற்றிலும் வேறுபட்டது. இப்போராட்டத்தின் தொடர்ச்சி நாட்டின் தலைவிதியை தலைகீழாக மாற்றி விடும் என்று நம்பப் படுகின்றது. இதனால், அதிர்ச்சியடைந் துள்ள ஆட்சியாளர்கள் பல்கலைக்கழகங் களை மூடிவருகின்றனர்” என்கிறார் அல்ஜஸீராவின் அல்ஜீரியச் செய்தியாளர்.

தேசிய விடுதலை முன்னணி எனப் படும் ஆளும் கட்சி உறுப்பினர்களில் சிலர் மக்கள் பக்கம் நிற்பது அதிகார வர்க்கத்திற்கு இன்னும் குலை நடுக் கத்தை உருவாக்கியுள்ளது. ஆட்சி முறையை மாற்றியமைப்பேன், எனது பதவிக் காலத்தைக் குறைப்பேன் என்றெல்லாம் கடந்த காலங்களில் பூதப்லிகா வழங்கிய வாக்குறுதிகளை இதற்கு மேலும் நம்புவதற்கு மக்கள் தயாரில்லை. ஆளுங் கட்சி உறுப்பினர் களில் சிலர் இளைஞர்களின் எதிர்ப்புப் பொராட்டத்தில் நேரடியாகவே பங்கு கொண்டுள்ளனர்.

1990 களில் அல்ஜீரியாவில் இடம் பெற்ற சிவில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் அரும் பாடுபட்டவர் பூதப்லிகா. இதுவே அவருக்கு மக்கள் அளித்த ஆதரவின் பின்னணி யாகும். ஆனால் 20 ஆண்டு கால அவரது ஜனாதிபதிப் பதவியில் நான்கு முறையும் மக்கள் ஏமாற்றமே அடைந்தனர். வேலையற்ற இளைஞர்களின் தொகை வேகமாகப் பெருகிய அல்ஜீரியாவில் எண்ணெய் வளமும் இயற்கை எரிவாயுவும் குறிப்பிட்ட அளவு கிடைக்கின்ற போதும் ஊழல் மோசடி மிக்க அரசாங்கத்தினால் நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உட்பட்டது.

ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் என்பவற்றிற்கும் பொதியளவு இடம் வழங்கப்படவில்லை. பூதப்லிகாவின் ஆட்சியில் மக்களுக்கு அலுப்புத் தட்டி விட்டது. அவரது இராணுவப் பரிவாரம் உடல் ரீதியிலும் உள ரீதியிலும் பூதப்லிகா தொடர்ந்தும் ஆட்சிக்கு தகுதியானவரா கவே உள்ளார் என்று அறிக்கை விட்ட போதும் மக்கள் அதனை நம்பத் தயாரில்லை.

2011 இல் பிற வடஆபிரிக்க முஸ்லிம் நாடுகளான தூனிசியா, லிபியா என்பவற் றில் எற்பட்ட அறபு வசந்தம் தவிர்க்க முடியாத ஆட்சி மாற்றத்திற்கு இட்டுச் சென்றது. பூதப்லிகாவின் அல்ஜீரியா விலும் அறபு வசந்தம் கிளர்ந்தபோதும் அது திட்டமிட்ட முறையில் அடக்கப்பட்டு பூதப்லிகாவினால் அதிகாரத்தில்   நீடிக்க முடிந்தது.

மற்றொரு ஆபிரிக்க நாடான மொரிட் டானியா மற்றும் எகிப்தில் இராணுவக் கொடுங்கோலர்கள் கையாண்ட அடக்குமுறை வடிவங்களை பூதப்லிகா அல்ஜீரியாவில் கையாண்டார். அதன் மூலம் ஆட்சியைத் தக்கவைப்பதற்கு வசதியாக இருந்தது. இப்போது நிலைமை முற்றிலும் மாறி விட்டது. எதிர்வரும் தேர்தலில் பூதப்லிகாவினால் களமிறங்க முடியாமா என்ற தீர்மானமொன்றை அந்நாட்டின் அரசியலமைப்புச் சபை வெளியிடவுள்ளது. அத்தீர்மானம் எதுவாக இருந்தாலும் அப்துல் அஸீஸ் பூதப்லிகாவை ஐந்தாவது முறையாகவும் ஜனாதிபதியாக ஏற்றுக் கொள்ளும் நிலையிரல் மக்கள் இல்லை. இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் பெருந்தொகையான அல்ஜீரிய மூளைசாலிகள் பிரான்ஸில் தஞ்சமடைந்துள்ளனர். ஏற்கனவே பிரான்ஸின் குடியேறியுள்ள அல்ஜீரிய இளைஞர்கள் அங்கு தொழில் வேண்டி கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அல்ஜீரியாவின் காலனித்துவ நாடான பிரான்ஸ்  பூதப்லிகாவின் அரசாங்கத்தை தொடர்ந்தும் வழிநடாத்தி வருகின்றது. எல்லாவற்றுக்கும் அப்பால் அல்ஜீரியாவின் அரசியல், பொருளாதார நெருக்கடி களை திறமையாகக் கையாளும் நிலையில் அப்துல் அஸீஸ் இல்லை. அவர் உடல் ரீதியிலும் உள ரீதியிலும் பலவீனப்பட்டு இருக்கின்ற நிலையில் ஒரு வயது முதிர்ந்தவர் தம்மை ஆள்வதை அவர்கள் விரும்பவில்லை. ஆனால், மக்கள் ஆர்ப்பாட்டத்தின் எதிர்ப்புக் கோஷங்களை நோக்கும்போது லிபியாவின் கடாபி மற்றும் தூனிசியாவின் பின் அலி போன்றோருக்கு நேர்ந்தது போல் அப்துல் அஸீஸ் பூதப்லிகாவின் காலமும் முடிந்து விட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது. எதிர்வரும் நாட்கள் இதனை உறுதி செய்யப் போகின்றன.

யார் இந்த அப்துல் அஸீஸ் பூதப்லிகா?

ஜனாதிபதி அப்துல் அஸீஸ் பூதப்லிகா 1937 மார்ச் 02 இல் மொரோக்கோ நகரமான வுஜ்தாவில் பிறந்தார். இந்நகரம் மேற்கு அல்ஜீரியா மற்றும் மொரோக்கோ எல்லைப் புறத் தில் அமைந்துள்ளது. 1956 ஆம் ஆண்டில் தனது 19 ஆவது வயதில் தேசிய விடுதலை இராணுவத்தில் இணைந்தார். இது பிரான்ஸின் காலனித்துவத்திற்கு எதிராக உருவாக்கப் பட்ட தேசிய விடுதலை முன்னணியின் இராணுவப் பிரிவாகும்.

அப்போது மொரோக்கோவை தளமாகக் கொண்டிருந்த தேசிய விடுதலை இராணுவத்தின் தளபதி ஹுவாரி பூமதைனின் நம்பிக்கையை வென்ற பூதப்லிகா இராணுவ உயர் பதவிகளைப் பெற்றார். 1965 இல் இரத்தம் சிந்தாப் புரட்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றியவர் பூமதைன். 1962 இல் அல்ஜீரியா சுதந்திரம் பெற்ற பின்னர் தேசிய விடுதலை இராணுவத்தின் மொரோக்கோ எல்லைப் பிரிவு மேற்கு மாநிலத்தைக் கட்டுப்படுத்தியது.

ஜனாதிபதி அஹ்மத் பின் பெல்லாவின் ஆட்சிக் காலத்தில் தனது 25 ஆவது வயதில் இளைஞர் விளையாட்டு மற்றும் உல்லாசத் துறை அமைச்சராக அப்துல் அஸீஸ் பூதப்லிகா பதவி யேற்றார். 1963 இல் உலகத்தின் மிக இளவயது வெளிவிவகார அமைச்சராக பூதப்லிகா மாறினார். இந்த உலக சாத னையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை. வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றபோது அவருக்கு வயது 32.

சேகுவரா மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோரின் ஆளுமைக் கவர்ச்சிக்கு உட்பட்ட பூதப்லிகா, தன்னை ஒரு பெரும் இடதுசாரியாகவே அறிவித்தார். 1965 பின் பெல்லாவின் ஆட்சியை ஹவாரி பூமதைன் கவிழ்த்தன் பின்னரும் பூதப்லிகா தொடர்ந்தும் வெளிவிவகார அமைச்சராக விளங்கினார்.

1967 இல் நடந்த அறபு இஸ்ரேல் 6 நாள் யுத்தத்தின் போது அமெரிக்காவுடனான ராஜதந்திர உறவுகளை பூதப்லிகா முறித்துக் கொண்டார். அமெரிக்காவை ஒரு ஏகாதிபத்திய நாடு என்று கடுமையாக விமர்சித்தார். மூன்றாவது அகிலத்தை கனவு கண்ட ஓர் அணிசேரா தலைவராகவும் பூதப்லிகா பார்க்கப்படுகிறார்.

சோவியத் யூனியன் மற்றும் ஐக்கிய அமெரிக்காவுக்கு இடையிலான பனிப்போரிலிருந்து அவர் விலகியிருந்தார். 1974 இல் ஐ.நா. பொதுச் சபையின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். அதை அடுத்து முதன் முறையாக உலகத் தலைவர்களுக்கு ஐ.நா.வில் உரையாற்றுமாறு யாஸிர் அறபாத்துக்கு அழைப்பு விடுத்தார்.

1978 இல் ஹவாரி பூமதைன் மரணித்ததை அடுத்து பூதப்லிகாவின் செல்வாக்கு குறையத் தொடங்கியது. பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட அவர், 1981 இல் அல்ஜீரியாவிலிருந்து வெளியேறினார். முதலில் சுவிட்சர்லாந்திலும் பின்னர் ஐக்கிய அறபு அமீரகத்திலும் தங்கியிருந்தார்.

1987 இல் நாடு திரும்பிய பூதப்லிகா தேசிய விடுதலை முன்னணியின் மத்திய குழுவில் அங்கத்துவம் பெற்றுக் கொண்டார். 1991 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இஸ்லாமிய விடுதலை முன்னணி வெற்றி பெற்றது. ஆயினும், தேசிய விடுதலை முன்னணியின் இராணுவப் பிரிவு அத்தேர்தல் வெற்றியைப் பகிஷ்கரித்ததோடு, தேர்தல் முடிவை ரத்துச் செய்தது.

அப்பாஸ் மதனி தலைமையிலான இஸ்லாமிய மீட்பு முன்னணி பெற்ற வெற்றி ஜனநாயகபூர்வமானது. ஆயினும், பல்வேறு இராணுவ அதிகாரிகள் அதனை ஏற்க மறுத்தனர். 1994 இல் ஏற்கனவே இருந்து வந்த அரசாங்கத்திற்கு எதிராக இராணுவத்தைச் சேர்ந்த பலர் சிவில் யுத்தமொன்றைத் தொடங்கினர். அப்போது பூதப்லிகாவிடம் ஜனாதிபதிப் பொறுப்பு வழங்கப்பட்டது. தொடக்கத்தில் அதனை மறுத்த பூதப்லிகா பின்னர் அதனை ஏற்றுக்கொண்டார்.

பூதப்லிகாவின் 20 ஆண்டு கால ஆட்சியில் முதல் ஐந்தாண்டுகள் நாடு சிவில் யுத்தத்தை எதிர்நோக்கியிருந்தது. அவற்றை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அவர் பெரும் பாடுபட்டார். வெளிநாடுகளுடனான ராஜதந்திர உறவுகளை வளர்த்துக் கொண்டு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப உழைத்தார்.

2004 முதல் 2014 வரையான காலப் பகுதியில் பெற்றோலின் விலை அதிகரித்ததனால் அல்ஜீரியாவின் கீழ்க்கட்டுமான வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கேற்ற சூழல் உருவாகியது. அல்ஜீரியாவில் பாதைகள், விமான நிலையங்கள், கட்டியெழுப்பப்பட்டன.

எவ்வாறாயினும், இக்கட்டுமானங்களினால் பயனடைந்தது பூதப்லிகாவின் குடும்பமே என்ற விமர்சனம் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் உள்ளது. பூதப்லிகாவின் ஆட்சிக் காலத் தில் மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு எவ்வளவோ வாய்ப்புகள் காணப் பட்டன. ஆனால் அது எதுவும் நடைபெறவில்லை என்கிறார் பத்திரிகையாளர் ஹஸன் ஹூலி.

அனைத்து அதிகாரங்களையும் ஜனாதிபதி தம் வசம் வைத்திருந்தார். அரச நிறுவனங்களைப் பலவீனப்படுத்துவதற்கும் பாராளுமன்றத்தைக் கட்டுப்படுத்துவதற்குமே பூதப்லிகா முயன்றார். பல அமைச்சர்கள் அவரது எடுபிடிகளாக இருந்தனர். தேர்தல்கள் இடம்பெற்றாலும் ஒரு வகை சர்வாதிகார ஆட்சி முறையே நாட்டில் நிலவியது. இதற்கான ஒரே சான்று 20 ஆண்டுகள் அவர் பதவியில் இருந்ததுதான் என்கிறார் ஹுஸைன் ஹூலி.

About the author

Administrator

Leave a Comment