Features அரசியல்

காட்டு தா்பாரில் வில்பத்து வனமும் அருவாக்காடும்

Written by Administrator
  • பியாஸ் முஹம்மத்

வில்பத்து பகுதிகளில் காடுகளை அழிப்பதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய விஷேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதன் பணிகளை 02, 03 மாதங்களில் முடிக்க முடியும் என்று கூறும் அவர், இதனூடாக பொய்யான வதந்திகள் மற்றும் குற்றச்   சாட்டுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும் எனவும் பாராளுமன்றத்தில் நடைபெற்ற வெளிவிவகாரம், சுற்றுலா, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சுக்கள் தொடர்பில் நடைபெற்ற விவாதத்தின் போது கூறியுள்ளார்.

விமானப் படையை அனுப்பி காடழிக்கப்பட்டதா என்பதைக் கண்டுபிடிக்க முடியும். யாராவது காடழித்திருந்தால் அதனைத் தடுக்க முடியும். ஆணைக்குழு அமைப்பதினூடாக உண்மை நிலையைக் கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை ஜனாதிபதியினால் மேற்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர் சொல்வதில் உண்மை இருக்கிறது. ஒவ்வொரு தேர்தல் காலங்களின் போதும் தேர்தல் பிரச்சாரத்துக்காக பலரும் பயன்படுத்தும் ஒரு சாதனமாக தொடர்ந்தும் வில்பத்து முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விவகாரம் இருக்க வேண்டுமா? இப்பொழுதெல்லாம் வில்பத்து விவகாரம் மேலெழும் பொழுதே மக்களுக்குத் தேர்தல்தான் ஞாபகம் வருகிறது. இனவாத அரசியல்வாதிகள் தமது வாக்குகளைப் பெறுவதற்கு இனவாதத்தைத் தூண்டுவதற்காக இந்த விவகாரத்தைப் பயன்படுத்துகின்றனர். மறுபுறத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமக்கான ஆதரவுத் தளத்தைத் தக்க வைப்பதற்கான அரசியலாக வில்பத்து விவகாரத்தை தீராத பிரச்சினையாக வைத்திருக்க முயல்வதாகவே தெரிகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜனாதிபதி சிரிசேன வில்பத்து விவகாரத்தில் கருத்து வெளியிட்டிருக்கிறார். தனது பதவிக் காலத்தில் வில்பத்து வனப் பிரதேசத்தில் எந்தக் காடழிப்பு நிகழ்வுகளும் நடைபெறவில்லை என அவர் தெரிவித்திருக்கிறார். ஆனால் முஸ்லிம்கள் பூர்வீகமாக வாழ்ந்த வில்பத்து பிரதேசத்தை அண்டிய பிரதேசங்களை வர்த்தமானி அறிவித்தல் மூலம் காடுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது ஜனாதிபதி மைத்திரியின் கைகளினால் தான் என்பதை யாரும் இன்னும் மறந்து விடவில்லை.

அதற்கும் மேலதிகமாக இந்த மக்களுக்கான மீள்குடியேற்றத்துக்கு எந்த மாற்றீடுகளையும் அவர் வழங்கவில்லை. இவர்கள் மீள்குடியேறுவதில் தடையாக இருப்பது ஜனாதிபதி சிறிசேனவுடைய வர்த்தமானி அறிவித்தல் தான் என்பதினால், புலமைப் பரிசில் மாணவர்களுக்குச் சொல்வது போல வெறும் அறிக்கை விடுவதை விட்டு விட்டு, குறித்த வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்வதற்கு ஜனாதிபதி முன்வந்திருக்க வேண்டும். இது தான் வில்பத்து விவகாரத்தை பேசுபொருளாக்குவதை நிறுத்துவதற்கான பிரதான வழியாகும்.

அடுத்ததாக வில்பத்து விவகாரம் இனவாத சூழலியலாளர்களால் பூதாகரமாக்கப்பட்டு நாட்டில் இனவாத வித்தாக ஊன்றப்படுவதற்கு இது தொடர்பான தெளிவான விளக்கங்கள் உரிய தரப்பிலிருந்து மக்களுக்குச் சென்றடையாததே காரணமாகும். இது தொடர்பில் ஜனாதிபதி விசாரணைக் கமிஷன் நியமிக்கப்பட்டு இந்த விவகா ரத்தை தீர ஆராய்ந்து தெளிவான அறிக் கையை மக்கள் முன்வைப்பது நாட்டின் சகல சமூகங்களினதும் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதியின் பொறுப்பாகும்.

முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட விவகா ரம் எனும் போது ஜனாதிபதி முனிவராக மாறுவது ஒன்றும் புதிய விடயமல்ல. முஸ்லிம்கள் மீது சிங்கள இனவாதிகள் நடத்திய திகன தாக்குதல் தொடர்பில் எந்த விசாரணைக் கமிஷனையும் ஒரு வருடமாகியும் ஜனாதிபதி நியமிக்க வில்லை. இதில் அரசாங்கம் தான் தவறிழைத்திருக்கிறது என்று மக்கள் வைத்திருக்கும் ஆதாரபூர்வமான நம்பிக் கையை மாற்றுவதில் அரசாங்கம் இழுத் தடித்து வருகிறது.

அதேபோல மாவனல்லை சிலை உடைப்பு விவகாரத்திலும் அரசாங்கம் இதுவரை எந்த அறிக்கையும் விட வில்லை. இது இனவாதிகள் பரப்புகின்ற கருத்துக்களுக்கு அரசாங்கம் சாமரம் வீசும் நிலையாகவே தெரிகிறது. அரசாங் கம் இந்த விடயங்களில் உண்மையாக நடக்குமாக இருந்தால் துணிவுடன் முன்வந்து இவை தொடர்பிலான விசார ணைகளை நடத்தி உண்மையை வெளிச் சத்துக்குக் கொண்டு வர வேண்டும். எமது நாட்டின் ஜனாதிபதி ஒரு ஜெசிந்தா ஆர்டனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது கனவாக அமைந்தாலும் கௌதம புத்தர் சொல்லுகின்ற மைத்திரி உணர்வுள்ளவராக இருக்க வேண்டும் என்ற மக்கள் எதிர்பார்ப்பை அவர் வீணாக்கி விடக் கூடாது.

வில்பத்து விவகாரத்தை ஊதிப் பெருப்பிப்பதில் சில சிங்கள ஊடகங்கள் மும்முரமாகத்  தொழிற்படுகின்றன. இந்த ஊடகங்களுக்குப் பின்னால் சில பண முதலைகளும் அரசியல்வாதிகளும் இருப்பதனை நாடே அறியும். எங்கோ இருக்கின்ற போதைப் பொருள் கடத்தல் காரர்களையெல்லாம் பிடித்துத் தூக்கில் போட முயற்சிப்பவர்களுக்கு இந்தப் பிணம் தின்னிக் கழுகுகளைப் பிடித்துத் தண்டனை வழங்குவது முடியாத காரிய மல்ல. அப்படியானால் இவர்களைச்         சுதந்திரமாக விட்டு வைத்திருப்பது இவர்களுக்கு வழங்கும் ஆதரவாக எடுத்துக் கொள்ளலாமா?

வில்பத்துவில் காடழிப்பதாகக் கூப்பாடு போடும் எவருக்குமே சூழல் தொடர்பில் உண்மையான அக்கறை இல்லை என்பது வெட்ட வெளிச்ச மானது. அருவாக்காட்டில் குப்பை கொட்டுவது சூழலைப் பாதிக்கும் என தெளிவான ஆதாரங்களுடன், முறையான அறிக்கைகளுடன் முன்வைக்கும் போது அதற்கெல்லாம் இந்த ஊடகங்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. அதனைத் தமது ஊடகங்களில் பகிரங்கப்படுத்துவ தற்கு முன்வரவுமில்லை. சேரக்குழியில் குப்பை கொட்டுவதற்காக பல ஏக்கர் களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக சூழலியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். இவைகள் எல்லாம் இந்த ஊடகங்களுக் குத் தெரியவில்லை என்பது அவை இனவாத லென்ஸ் மூலமே விவகாரங் களைப் பார்ப்பதன் விளைவாகத்தான் இருக்க முடியுமேயன்றி வேறில்லை.

இவற்றுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைப்பதற்கு ஜனாதிபதியால் முடியும். ஆனால் அவர் இதனைச் செய்வதற்குக் காலம் தாழ்த்தும் காலமெல்லாம் இன வாதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கிய தாகவே அமையும். பயங்கரவாதப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டதில் இருந்து வளர்ந்து வந்த அடர்ந்த காட்டில் அவர்களை எப்படி வசிக்க வைக்க முடியும் என்ற கேள்வியே மேலெழும் போது அவர்களது மீள்குடியேற்றம் தொடர்பில் அரசாங்கம் இதனை விட விரிவாகச் சிந்தித்திருக்க வேண்டும்.

About the author

Administrator

Leave a Comment