Features அரசியல்

ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷ

Written by Administrator
  • அபூ அர்ஸலான்

2020 இல் நடைபெறவுள்ள ஜனாதி பதித் தேர்தலுக்கான வேட்பாளரை நியமிப்பது தொடர்பில் சிறி லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சிறி லங்கா பொதுஜன பெரமுன கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல்கள் தோல்வியுற்றுள்ள நிலையில், சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஏகமனதாகத் தெரிவாகியுள்ளார். பத்தரமுல்லையிலுள்ள ராஜபக்ஷவின் குடும்ப இல்லத்தில் அனைத்து ராஜ பக்ஷாக்களும் ஒன்றுகூடி மிக நீண்ட நேரம் கலந்துரையாடிய பின்னர் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய களமிறக்கப்படுவது குறித்து பல்வேறு சர்ச்சைகளும் விவாதங்களும் நடைபெற்று வந்தன. ஷமல் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மஹிந்தவின் மகனார் நாமல் ராஜபக்ஷ, ஷமல் ராஜபக்ஷவின் மருமகன் ஷசிந்திர ராஜபக்ஷ என ராஜபக்ஷாக்கள் கூடிய இரவுப் போஷனத்தின் போது கோத்தாபயவை வேட்பாளராக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அரசியலமைப்பு மாற்றத்தின்படி மஹிந்த ராஜபக்ஷவினால் மூன்றாவது முறை ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க முடியாது. 35 வயதுக்குக் குறைவான ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க முடியாது என்பத னால் நாமல் ராஜபக்ஷவும் வேட்பாள ராய் நிற்பதற்கு வாய்ப்பில்லை. இருப்பவர்களுள் கோத்தா மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதி வேட்பாளருக்குத் தகுதியானவர்கள்.

ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கப் போவதில்லை என்ற முடிவை பசில் ராஜபக்ஷ தெளிவாக வெளியிட்டு விட்டார். தற்போதுள்ள சூழ்நிலையில் கோத்தாபய ராஜபக்ஷ மாத்திரமே மஹிந்த குடும்பத்தில் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவதற்குத் தகுதியுள்ளவர். ஆயினும், இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டுள்ள கோத்தா அமெரிக்கப் பிரஜாவுரிமையை ரத்துச் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

ஐ.தே.க.வின் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர் வெளிநாட்டுப் பிரஜாவுரிமையை ரத்துச் செய்யாவிட்டால் வேட்பாளராகக் களமிறங்க முடியாது. இது தொடர்பான சட்டமொன்றை தாம் கொண்டு வரப் போவதாகவும் தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு வெளிநாட்டுப் பிரஜாவுரிமையை ரத்துச் செய்தமையை இத்தகைய வேட்பாளர் நிரூபிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் கோத்தா சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பாகவே இது குறித்த செய்திகள் கசிந்து விட்டன. அப்போது பாராளுமன்றத்தில் கேள்வி யெழுப்பிய ஐ.தே.க. உறுப்பினர்கள் சிலர், மஹிந்தவின் குடும்ப அங்கத்தவர்கள் அல்லாத வேறு எவரேனும் பொதுஜன பெரமுனவிற்கு இல்லையா எனக் கேள்வியெழுப்பினர்.

சமீபத்தில் பாராளுமன்ற விவாதங்களில் சர்ச்சைக்குரியவராகக் கருதப்படும் பிரபல சிங்கள நடிகர் ரஞ்சன் ராமநாயக்க, கோத்தாபயவின் வேட்பாளர் பதவி குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார். அதன்படி, கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற மாட்டார் எனவும், 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை அவரால் பெற்றுக் கொள்ள முடியாது எனவும் ரஞ்சன் கூறியுள்ளார்.

இதற்கான பிரதான காரணம், தமிழ் மக்களின் வாக்குகள் எதுவும் கோத்தா வுக்குக் கிடைக்காது. அதே போன்று சிறுபான்மை மக்கள் எவரது வாக்கும் கோத்தாவுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. சிறுபான்மையினரின் வாக்குகளின்றி கோத்தா வெற்றி பெறுவது சாத்தியமில்லை. இந்நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுன கோத்தாவை களமிறக்கியிருப்பது ஐ.தே.க.வுக்குச் சாதகமானது.

ஐ.தே.க.வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அல்லது சஜித் பிரேமதாஸ ஆகியோரில் எவர் களமிறங்கினாலும் அவர் வெற்றி பெறுவது நிச்சயம் என்றும் சிறுபான்மை மக்களின் வாக்குகள் நிச்சயம் அவ்விருவருக்கும் கிடைக்கும் என்றும் ரஞ்சன் தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்களின் வாக்குகள் தீர்க்கமானவை. தீர்மானிக்கும் சக்தியுள்ளவை என்பதை ரஞ்சன் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனவை பதவியில் அமர்த்தியதில் தமிழ் முஸ்லிம்களின் வாக்குகளே நிர்ணயகரமான பங்கு வகித்தன. ஏனெனில், ராஜபக்ஷவிற்கும் சிறிசேனவுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசத்தை நோக்கும்போது நிச்சயம் அது சிறுபான்மையினரின் வாக்குகள் தான் என்பது உறுதியாகும்.

இவ்வுண்மையை சிறிலங்கா பொது ஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாவும் ஏற்றுக் கொண்டுள்ளார். சிறுபான்மை மக்களுக்கும் தனக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் அவர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றார்.

தமிழ், முஸ்லிம் குழுக்களோடு அடிமட்டத்திலான கூட்டங்களையும் கலந்துரையாடல்களையும் நடாத்தி வருகின்றார். போரை வெற்றி கொண்டமைக்காக தன்னை தமிழ் தலைவர்கள் கொடூரமானவராக சித்தரித்து வருவதோடு, தமிழ் மக்களுக்கு எதிரானவராகவும் காட்டுகின்றனர். இதனாலேயே தன்னைப் பற்றிய ஒரு பயம் தமிழ் மக்களிடம் உருவாக்கப்பட்டுள்ளது என்று கோத்தாபய சமீகத்திய நேர்காணலொன்றில் தெரிவித்துள்ளார்.

தான் தமிழ் முஸ்லிம்களின் எதிரியோ இனவாதியோ அல்ல. தன்னைப் பற்றிய குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படையற்றவை. பொதுபலசேனாவுடனோ ஞானசாரவுடனோ தனக்குத் தனிப்பட்ட எந்தத் தொடர்பும் இல்லை. முஸ்லிம்கள் தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கோத்தா பகிரங்கமாகவே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, கடந்த வாரம் தமிழ் மக்கள் ஆதரிப்பார்களா கோத்தாவை என்ற கட்டுரையொன்றில், இறுதிப் போரின் போது தமிழ் மக்களுக்கு நேர்ந்த அத்தனை துயரங்களுக்கும் இனப் படுகொலைகளுக்கும் கோத்தாவே காரணம் என்று தமிழ் மக்களில் கணிசமானோர் கருதுகின்றனர். அதேவேளை, தமிழ் டயஸ்போரா ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக சர்வதேச அளவிலான பிரச்சாரத்தினை முடுக்கி விட்டுள்ளது.

தமிழர்களின் அரசியல் ரீதியான தீர்வுத் திட்டத்திற்கு ராஜபக்ஷ குடும்பம் எந்தவகையிலும் ஆதரவளிக்காது என்றே தமிழர்கள் நம்புகின்றனர். இந்நிலையில் தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாவை ஆதரிப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது.

இதேவாதம் சக சிறுபான்மை இனமான முஸ்லிம்களுக்கும் பொருந்தும். ஆனால் இறுதிக் கட்டத்தில் வெல்லப் போகின்றவன் யார் என ஊகித்துக் கொண்டு வேலி பாயும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் எந்தப் பக்கம் நிற்கப் போகிறது என்பதை இப்போதைக்கு ஊகிக்க முடியாது. அதனால் கோத்தாவின் பக்கமும் முஸ்லிம் வாக்குகள் சாய்வதற்கும் வாய்ப்புள்ளது.

இத்தனைக்கும் மத்தியில் மீண்டும் ஒருமுறை ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க வேண்டும் என்று ஆசைப்பட்ட மைத்திரியின் கனவின் மீது இடி விழுந்துள்ளது. ரணில் விக்ரமசிங்கவின் 70 ஆவது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிக் கொண்டிருக்கும் ஐ.தே.க. இதுவரை தமது வேட்பாளர் குறித்து அறிவிக்கவில்லை.

நெருங்கிய கட்சி வட்டாரங்களின்படி பெரும்பாலும் ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கும் வாய்ப்புள்ளது. எவ்வாறாயினும், கோத்தாவிற்கும் ஐ.தே.க. வேட்பாளருக்கும் இடையில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் முடிவு சிறுபான்மை மக்களின் அரசியல் எதிர்காலத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெறவுள்ளது என்பதனால் சிறுபான்மைச் சமூகங்கள் மிக நிதானமாகவும் தூர தரிசனத்தோடும் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

அரசியலில் மாறாத விதி என்று எதுவும் இல்லை.

About the author

Administrator

Leave a Comment