Features அரசியல்

போதைப் பொருளுக்கெதிராக போதுமான நடவடிக்கை எடுத்திருக்கிறோமா ?

Written by Administrator
  • மாஸ் எல். யூஸுப்

நீதியை நடைமுறைப்படுத்துபவர்கள் அண்மைக் காலங்களில் நடத்திய சுற்றி வளைப்புக்களின் போது கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் பற்றிய தகவல்கள் மனதை உறைய வைக்கின்றன. இந்தப் போதைப் பொருட்களினால் முழு மொத்த சமூகத்துக்கும் ஏற்படப் போகும் அழிவுகளைப் பற்றிச் சிந்திப்பவர்கள் எவரும் இந்தச் சுற்றிவளைப்புக்கள் நடந்திருக்கக் கூடாது என்று கனவிலும் கருதமாட்டார்கள்.

எவ்வளவு இளைஞர்கள் இதற்கு அடிமையாகி இருப்பார்கள்? இன்னும் எவ்வளவு போதைப்பொருள் சார்ந்த வன்முறைகள், குற்றங்கள், மரணங்கள் சம்பவிக்கப் போகின்றன? எத்தனை திருமணங்கள் விவாகரத்தில் முடியப் போகின்றன? எத்தனைக் குடும்பங்கள் சீரழியப் போகின்றன? எத்தனை வளரும் சிறுவர்கள் சமூகத்திலிருந்து ஒதுக் கப்படப் போகின்றனர்? எத்தனை சகோதரிகளும் புதல்விகளும் சட்டவிரோத பாலியல் செயற்பாடுகளுக்குத் தள்ளப்படப் போகின்றார்கள்? தீமைகளின் பட்டியல் முடிவின்றித் தொடரத்தான் போகின்றது.

வழங்குபவர்கள், விநியோகிப்பவர்கள், காவிச் செல்பவர்கள் எவருமே இதனால் நாட்டுக்கும் சமூகத்துக்கும் நேரிடும் தாங்க முடியாத இழப்பைப் பற்றித் தெரியாமலா இருப்பார்கள்? சமூகத்தின் இருப்பையே இது ஆட்டங் காணச் செய்கின்ற நிலையில், இந்த நிலையை சமூகம் எப்படி எதிர்கொள்ளப் போகிறது? போதைப் பொருட்களுக்கு எதிராக எடுக்கப்படும் கடும் நடவடிக்கைகளைப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டு மட்டும் இருப்பதா அல்லது உங்களது பிள்ளைகள், துணைகள், சகோதரர்கள் அனைவரையும் இதிலிருந்து காப்பாற்ற முயற்சி எடுப்பதா என்பதை நீங்களே உங்களிடம் கேட்டுப் பாருங்கள்.

போதைக்கும் குற்றங்களுக்குமான ஐக்கிய நாடுகள் அலுவலகம் (UNODC)  வெளியிட்டுள்ள தகவல்களின்படி, உலக கொக்கைன் உற்பத்தி மட்டும் 1410 டொன்களாக 2016 இல் அதன் உச்ச நிலையை அடைந்திருந்தது. சில்லறை விலையின் அடிப்படையில் உலக போதைப் பொருள் வர்த்தகத்தின் பெறு மதி அண்ணளவாக 320 பில்லியன் அமெ ரிக்க டொலர்களாகும். (48 இலட்சம் கோடி இலங்கை ரூபா). (UK Drug Policy Commission & Policy Report – July 2008)

இந்தப் போதைப் பொருட்களில் ஹெரோயின், கொக்கைன், கஞ்சா உள்ளிட்ட பல ரகங்கள் அடங்குகின்றன. அறிக்கையிலுள்ள தகவல்களின்படி போதைப்பொருள் சந்தை மூன்று தரங்களாக வகைப்படுத்தப்படுகிறது.

சர்வதேசக் கடத்தல்

உள்ளூர் சில்லறை விற்பனை

தேசிய மற்றும் பிராந்திய அளவில் நடைபெறும் நடுத்தரச் சந்தை

இந்த மட்டங்களுக்கான பிரிகோடுகள் தெளிவாக இல்லாவிட்டாலும், சந்தையில் இவை ஒத்திசைவற்று, துண்டு துண்டாகப் பிரிந்தே செயற்படுகின்றன. பிரித்தானியாவின் போதைப்பொருள் வர்த்தகம் சிறந்த இலாபத்துடன் இயங்கு கிறது. 2003-4 தரவுகளின்படி இதன் பெறுமதி அண்ணளவாக 5.3 பில்லியன் பவுன்களாகும். இலங்கையின் போதைப் பொருள் வர்த்தகத்தின் அண்ணளவுப் பெறுமானம் பொதுவெளியில் பகிரப்படவில்லை.

சமூகத்தின் ஜாம்பவான்கள்

சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரம் உலகில் எங்கு நடந்தாலும் அது அந்த நாட்டை அரசியல், பொருளாதார, கலாச்சார வீழ்ச்சிக்கு இட்டுச்  செல்லும். இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல. அரசியல்வாதிகளும் பொலிசாரும் நீதித் துறையினரும் இந்தப் போதைப்பொருள் மாபியாக்களின் வலையில் வீழ்ந்து விட்டால் அவர்களால் இந்தக் கும்பலை வெல்ல முடியாது. திட்டமிட்ட குற்றங்கள், கொலைகள், கடத்தல்கள், சித்திரவதைகள், அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் போன்றவற்றின் வடிவமைப்பாளர்களாக அவர்களே மாறி விடுவார்கள்.

இந்த வழிமுறைகளைப் பின்பற்றும் தமது எதிரிகள் விடயத்தில் அவர்கள் மௌனித்துப் போகிறார்கள். அவர்களைக் கைது செய்வதிலும் தண்டிப்பதிலும் சட்டமும் நீதியும் காட்டும் தயக்கம் அவர்களை சமூகத்தின் ஜாம்பவான்களாக்குகிறது. மொத்தத்தில் முழுச் சமூகமுமே இதற்கு நஷ்டஈடு செலுத்த வேண்டி வருகிறது. அரசாங்கமும் அரச அதிகாரிகளும் கையறு நிலைக்குமாறுகிறது. சில நாடுகளில் இந்த நிலைமையே நிலவுகிறது. இலங்கை வெளிப்படையாக இந்த நிலைமைக்கு முதிராவிட்டாலும், கண்டும் காணாமலிருக்கின்ற தற்போதைய நிலை தொடருமானால் வெகுவிரைவில் இலங்கையும் இந்த நிலைக்கு மாறுவது என்பது ஆச்சரியமானதல்ல.

ஐக்கிய ராஜ்ஜியத்தில் நடக்கும் நிலைமைகளை அவதானித்தால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை விளங்கிக் கொள்வது இலகுவாக அமையும். அங்குள்ள இறக்குமதியாளர்களுக்கு அப்பால், உள்ளூர் சில்லறை விநியோகத்தர்களின் சங்கிலித் தொடரை பின்வருமாறு வரிசைப்படுத்த முடியும்.

மொத்த விற்பனையாளர் – ஒரு பிரதேசத்தில் மொத்தமாக வாங்குவதும் விற்பனை செய்வதும்

வாங்குபவர் – ஒரு பிரதேசத்தில் மொத்தமாக வாங்குபவர்

விற்பனையாளர் – ஒரு பிரதேசத்தில் மொத்தமாக விற்பனை செய்பவர்

இடமாற்றி (Transporter) – ஐக்கிய ராஜ்ஜியத்தினுள்ளே உள்ளூர் போக்குவரத்தினை வசதிப்படுத்துவோர்

களஞ்சியப்படுத்துவோர் – வாங்குவதற்கும் விற்பதற்கும் இடையில் பொருளை வைத்திருப்போர்

சில்லறை விற்பனையாளர் – பாவிப்பவர்களுக்கு போதைப் பொருட்களை வழங்குபவர்

கைமாற்றுவோர் (Runner) – சில்லறை விற்பனையாளருக்கு போதைப்பொருட்களை கைமாற்றுவோர்

படிமுறைக் கட்டமைப்பிலிருந்து தொழில் முறை வரை

ஆய்வொன்றின் மூலமாக போதைப் பொருள் வியாபாரத்தின் மற்றுமொரு வெளிப்பாடு கண்டறியப்பட்டுள்ளது. ஹெரோயின் கடத்தலைப் பொருத்தளவில், சில குழுக்களுக்கிடையிலான வரலாற்று ரீதியான தொடர்புகள் படிமுறைக் கட்டமைப்புக்களாக மாறியுள்ளதாக சில ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. பாரம்பரியப் பிரதிநிதிகளுடன் எந்தத் தொடர்புமில்லாத சில தனிநபர்களின் வலையமைப்பு மிகவும் வெளிப்படையாகச் செயற்பட்டு வருகின்றது. (Zhang and China 2003:485)  

போதைப் பொருள் சந்தைக்கான தெளிவான வரைவிலக்கணம் இல்லாவிட்டாலும், ஆய்வுகள் இரண்டு வகையான விநியோகங்களை குறித்துக் காட்டுகின்றன. ஒன்று பிரமிட் முறை, அடுத்தது துண்டம் துண்டமான எந்தப் படிமுறையும் தொழில்முறையும் இல் லாத சுதந்திரச் சந்தைமுறை. இவற்றில் எந்த முறை எந்த நாட்டில் அதிகம் செல்வாக்குச் செலுத்துகிறது என்பது கண்டறிவதற்குக் கஷ்டமானது.

அரசாங்கத்தின் ஆதரவு

போதைப்பொருள் வர்த்தகம் என்பது, போதைப்பொருள் முதலைகளினால் மேலிருந்து இயக்கப்படுகின்ற அதிநவீன வர்த்தக ஒழுங்காகும். எனவே ஏனைய நாடுகளிலிருந்தும் ஆய்வுகளிலிருந்தும் இது தொடர்பில் எமது நாடு நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த வகையில் கடினமான பணியைச் சுமந்திருக்கின்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இவை தொடர்பில் தேவையான வெளிநாட்டு அனுபவங்களையும் நெட்வேர்க் பற்றிய அறிவையும் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் வழி செய்து கொடுக்க வேண்டும். போதைப்பொருள் வர்த்தகம், கண்டுபிடிப்பதைக் கஷ்டமாக்கும் வகையில் அடிக்கடி மாற்றத்துக்கு உட்படுத்தப்படுகிறது. அடிக்கடி மாறும் இந்தச் சத்திர சிகிச்சையை சட்டத்தை அமுல்படுத்துபவர்கள் அறிந்து கொள்ள முடியாவிட்டால் அவர்கள் செல்லாக் காசுகளாகிவிடுவார்கள்.

போதைப்பொருள் பரிமாற்றத்தின் வளர்ச்சியையும் விநியோக வலையமைப்புக்களையும் ஊக்கப்படுத்துகின்ற விடயங்களை சர்வதேச ஆய்வுகள் கண்டுபிடித்திருக்கின்றன.  சந்தைப்படுத்தலுக்கான தடைகள் குறைவாக இருப்பது, சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களின் தடுப்பு குறைவாக இருப்பது, உழைக்க முடியுமான வருமானத்தின் அளவு தெளிவாக இருப்பது போன்ற னவே அவை. அதனால்,  வறுமையினால் பாதிக்கப்பட்ட அப்பாவி ஆணோ பெண்ணோ இந்த ஆட்டத்தின் எஜமானர்களின் வலையில் ஆரம்பத்திலேயே விழுந்து விடுவார்கள்.  இந்த அப்பாவிகள் பின்னர் தமது சொந்த உரிமை கொண்ட எஜமானர்களாக பின்னாளில் மாறிவிடுகிறார்கள்.

போதைப் பொருளுக்கு எதிராகப் போராடுவதற்கான பட்ஜட்  எவ்வளவு?

இலங்கையின் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பிலான ஆய்வுகளை மேம்படுத்துவதற்கு இலங்கை என்ன ஊக்குவிப்புக்களை வழங்கியிருக்கிறது?  இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக எத்தனை தொழில்வாண்மையாளர்கள், அறிவியலாளர்கள், புத்திஜீவி கள், துறைசார் நிபுணர்கள் உள்வாங்கப் பட்டிருக்கிறார்கள்? தேடுதல் நடவடிக்கை முதல் தண்டனை வழங்கப்படும் வரை அரசாங்கம் செலவழிக்கின்ற நேரம், மனித மணித்தியாலங்கள், வளங்கள் தொடர்பில் ஏதேனும் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளனவா?

மொத்த பறிமுதல்கள், தேடுதலுக்காக செலவழிக்கப்பட்ட ஆட்களினதும் வளங்களினதும் எண்ணிக்கை, புலனாய்வுக்கான ஒன்றுகூடல்களுக்கான நாட்கள் மற்றும் வாரங்கள், தேடுதல், பறிமுதல், கைதுகளுக்காக செலவழிக்கப்பட்ட நேரம் அனைத்தையும் கணக்கிட்டுப் பார்த்தால் சந்தேக நபர்களை விளக்க மறியலில் வைத்தல், நீதிமன்றமும் அதன் அனைத்துச் சட்ட இயந்திரங்களும் ஒதுக்கிய நேரம், சட்டமா அதிபர் திணைக்களத்தின் வளங்களின் பாவனை, பொலிஸ், புனர்வாழ்வு, மருத்துவ திணைக்களங்களின் சேவை என நீளும் பட்டியலை கணக்கிட்டால்…? இவை எல்லாவற்றுக்குமே அவற்றுடன் இணைந்த செலவுகள் இருக்கின்றன.

எனவே அரசாங்கம் கைது செய்யப் பட்டவர்களின் உரிமை, சுதந்திரம் என்பவற்றில் சமரசம் பேசிக் கொண்டிருக்காமல்,  கைதுசெய்யப்பட்டதில் இருந்து தீர்ப்பு வழங்குவது வரையான சட்ட நடைமுறைகளை துரிதப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பவர்களின் நடவடிக்கைகளைப் பற்றி ஆய்வாளர்கள் வெளிப்படுத்தும் தகவல்கள் வருந்தத்தக்கன. போதைப்பொருள் வியூகத்துக்கென 1.5 பில்லியன் பவுண்களை ஒதுக்கியுள்ள ஐக்கிய ராஜ்ஜியத்தில், ஆய்வாளர்கள் பின்வரும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள். 

மே அன்ட் ஹோ (2004:558) அறிக்கையின்படி, “போதைப்பொருள் விநியோகம், அதற்கான கேள்வி, அவற்றின் பிரயோகம் என்பவற்றுக்கிடையிலான உறவு குறைந்தளவில் கருத்தாக்கம் செய்யப்பட்டதாகவும், ஆய்வுகளுக்கு உட்படாததாகவும், குறைவாகவே விளங்கிக் கொள்ளப்பட்டதாகவுமே இந்த நாட்டில் இருக்கிறது.”

இது போதைப் பொருள் விவகாரத்தைக் கையாள்வதற்காக 350 பில்லியன் ரூபாக்களை ஒதுக்கிய பின்னர் அவர்கள் வெளியிடும் தகவல். ஐக்கிய ராஜ்ஜியத்தின் முயற்சிகளுடன் ஒப்பிடும் போது இலங்கையின் நிலை என்ன? தற்போது இலங்கை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை என்றாலும் முக்கியமானதொரு கேள்வி தொக்கு நிற்கின்றது. நாங்கள் உண்மையிலேயே போதுமான நடவடிக்கை எடுத்தோமா?  அல்லது இன்னும் அதிகமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோமா?

About the author

Administrator

Leave a Comment