Features சர்வதேசம்

மேற்கிற்கும் இஸ்லாத்திற்கும் இடையிலான மோதல்

Written by Administrator
  • கலாநிதி றவூப் ஸெய்ன் (PhD)

நியூசிலாந்தின் பள்ளிவாசல் படுகொலை உலகக் கவனத்தை ஈர்த்துள்ள போதும், எல்லா மதங்களிலும் அடிப்படைவாதமும் தீவிரவாதமும் இயங்கு கின்றது என்பதை அது எடுத்துக் காட்டியுள்ளது. மேலை நாடுகளில் முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாத்திற்கெதிரான இனவாதப் பாசிஸம் கடந்த சில ஆண்டு களாக திட்டமிட்டு வளர்க்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் முஸ்லிம் விரோதப் பிரச்சாரத்தின் நேரடி விளைவே இந்தத் தாக்குதல் என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.

மேலை நாடுகளில் இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் அறிவுபூர்வமற்ற ஒரு பீதி உருவாக்கப்பட்டுள்ளது. 2001 செப்டம்பர் 11 தாக்குதலை அடுத்து இந்தப் பயம் மேற்கத்தேய ஊடகங்களால் கவனமாகப் பரப்பப்பட்டது. வரலாற்று ரீதியில் இஸ்லாத்துடன் காழ்ப்புணர்வு கொண்ட கிறிஸ்தவ அடிப்படைவாத சக்திகளுக்கு தீவிர வலதுசாரி இயக்கங்களால் முன்னெடுக்கப்படும் இஸ்லாம் விரோதப் பிரச்சாரம் சாதகமாக அமைந்து விட்டது.

இன்று பெரும்பான்மையான மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அதிகாரத்தைக் கையேற்று வரும் தீவிர வலதுசாரிக் கட்சிகளும் அதிகாரத்தைக் கையேற்கும் நோக்கில் புதிது புதிதாகக் களத்திற்கு வரும் கட்சிகளும் மதவாதத்தையும் மேலைய இனவாதத்தையும் தமது அரசியல் இருப்புக்கான முதலீடாகக் கருதுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் 52 வீதமானவை தீவிர வலது சாரிக் கட்சிகள் அதிகாரத்திலுள்ள நாடு களாகும். 48 வீதமான நாடுகளிலேயே ஜனநாயக போக்கினைக் கொண்ட கட்சிகள் அதிகாரத்திலுள்ளன. எடுத்துக் காட்டாக நெதர்லாந்தின் சுதந்திரக் கட்சி. ஒரு தீவிர வலதுசாரிக் கட்சியாகும். கிறிஸ்தவ அடிப்படை வாதத்தைப் பின்னணியாகக் கொண்ட இக்கட்சியே தற்போது அதிகாரத்திலுள்ளது.

இஸ்லாம் விரோத கேலிச் சித்திரங்களுக்குப் பெயர்போன டென்மார்க்கின் ஆளும் கட்சியாக உள்ள டென்மார்க் மக்கள் கட்சி கிறிஸ்தவ அடிப்படைவாதக் கட்சி என்று பெயர் பெற்றது. பின்லாந்தின் பின்லேன்ட் கட்சி, பிரான்சில் தலையெடுத்துள்ள தேசியக் கட்சி, ஐக்கிய இராச்சியத்தின் தேசியக் கட்சி என்பனவும் தீவிர வலதுசாரிக் கொள்கை களையும் மத அடிப்படை வாதத்தையும் பின்னணியாகக் கொண்டவை.

ஜேர்மனியில் சான்சலராக இருக்கும் அன்ஜலா மார்கலின் கிறிஸ்தவக் கட்சி இத்தகைய பின்புலத்தைக் கொண்டது. ஒஸ்ரியாவின் பிரதமர் சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கை மேலைய நாடு களில் இஸ்லாம் நடத்தப்படும் விதத்தைத் தெளிவாக்குகின்றது. “எந்த வகை இஸ்லாம் ஒஸ்ரியாவில் பின்பற்றப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கின்ற முழு அதிகாரமும் ஒஸ்ரிய அரசாங்கத் திற்கு உரியது” என நீள்கிறது அந்த அறிக்கை.

இத்தகைய கட்சிகள் Islamophobia வை அரசியல் மூலதனமாகக் கொண்டுள்ளன. ஒரு காலத்தில் ஜனநாயகத்தின் முக்கிய பண்பாகக் கருதப்படும் கலாச்சாரப் பன்மைத்துவத்தை (Cultural Pluralism) இத்தகைய மேலைநாட்டு அரசாங்கங்களும் தீவிர வலதுசாரிக் கட்சிகளும் இன்று வெளிப்படையாகவே மறுத்து வருகின்றன. ஐரோப்பாவில் ஐரோப்பிய கலாசாரம் மட்டுமே நீடிக்க முடியும். பிற கலாசாரங்களுக்கு இங்கே இடமில்லை என்பது போலவே அவை இஸ்லாமிய கலாசாரத்தை எதிர்க்கின்றன.

தேர்தல் பிரச்சார மேடைகளில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து பேசியது போன்று ஐரோப்பாவிலும் வலதுசாரிக் கட்சிகள் வர்ணிக்கும் இஸ்லாமோபோபியா அரசியல் உள்நோக்கம் கொண்டது.

இக்கட்சிகள் உலகளாவிய இஸ்லாம் விரோத வலைப்பின்னலின் உள்ளூர் முகவர்களாகவே செயல்படுகின்றன. தேர்தல்களின்போது லண்டனிஸ்தான் என்ற சொல்லை பிரிட்டனின் வலதுசாரிக் கட்சிகள் பயன்படுத்துகின்றன. லண்டனை பாகிஸ்தானியர்கள் ஆக்கிரமித்து விட்டார்கள் என்பதுதான் அதன் அர்த்தம். Eurobia (Euro + Arabia) என்ப தும் பிரச்சார மேடையில் கையாளப்படும் இன்னொரு சொல்லாகும். ஐரோப்பா இன்று அறேபியர் வசமாகிவிட்டது என்பதைக் குறிப்புணர்த்தும் ஒரு உத்தியே இது. 

நேத்தான் லீன் என்பவர் எழுதிய Islamophobia Industry எனும் நூலுக்கு கருத்துரை எழுதிய ஒரு பிரிட்டிஷ் பேராசிரியர் “இஸ்லாமியப் பீதி என்பது அறியாமையினாலும் அச்சத்தினாலும் இயல்பாக வளர்ந்த ஒன்றல்ல. மேற்கில் சிலர் இதனை திட்டமிட்டு வளர்க்கின்றனர். அதனை ஓர் அரசியல் தந்திரோபாய மாகக் கருதுகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இன்று மேற்கத்தேய நாடொன்றில் இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் ஓர் அனாவசியமான பயம் சிவில் சமூகத்தின் மத்தியில் உருவாக்கப்படுகின்றது. அரசியல் கட்சிகள் அதனுடன் இனவாதத்தை இணைத்து மத தீவிர வாதத்தின் பின்னணியில் செயல்படத் தலைப்படுகின்றன. தமது பிரச்சார இயந்திரத்தை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்புவதன் மூலம் வாக்கு வங்கிகள் இலக்கு வைக்கப்படுகின்றன என குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.

சோவியத் யூனியனின் உடைவுக்குப் பின்னர் மேலைய நாடுகளுக்கு -குறிப்பாக அமெரிக்காவுக்குத் தேவையான ஓர் எதிரி கட்டமைக்கப்பட்டது. அது வளர்ந்து வரும் அரசியல் இஸ்லாம் என்று அடையாளப்படுத்தப்பட்டது. 1950 முதல் 1990 வரையான காலப்பகுதியில் அரசியல் இஸ்லாம் குறித்து 50,000 நூல்கள் வெளிவந்துள்ளன. அவை அனைத்தும் முஸ்லிம் அல்லாதவர்களால் எழுதப்பட்டவை.

1990 களில் அறிமுகமான புதிய உலக ஒழுங்கு இஸ்லாமிய எழுச்சியை எதிர்கொள்வதற்கான அமெரிக்க மூலோபாயமாகும். அதேபோன்று ரொனால்ட் ரேகனின் கடைசிக் காலத்தில் அறிமுகமாகி, வளைகுடா யுத்தத்தின் போது அமுலுக்கு வந்த புதிய அமெரிக்க நூற்றாண்டுக்கான திட்டம் (Project for New American Century) இஸ்லாம் மற்றும் முஸ்லிம் விரோத பெரும் பொருளாதாரப் படையெடுப்புக்களில் ஒன்றாகும்.

எண்ணெய் வளம் மிகுந்த அறபு இஸ்லாமிய நாடுகளை படைப்பலம் கொண்டு ஆக்கிரமிக்கின்ற திட்டமே புதிய அமெரிக்க நூற்றாண்டுக்கான திட்டமாகும். இதற்கென அமெரிக்காவின் பாதீட்டில் 40 வீதமான செலவீனம் ஒதுக்கப்பட்டது. ஈராக், ஆப்கானிஸ் தான், இத்திட்டத்தின் கீழ் ஆக்கிரமிக்கப்பட்டன. குவைத், கட்டார், சவூதி அறேபியா, பஹ்ரைன், ஐக்கிய அறபு அமீரகம் போன்றவற்றில் அந்தத்த அரசுகளின் ஒப்புதலோடு அமெரிக்கப் படை நிறுத்தப்பட்டது.

இராணுவ ஆக்கிரமிப்புத் திட்டங்களை கருத்தியல் ரீதியாக நியாயப்படுத்துவதற்கு நாகரிகங்களின் மோதல் (Clash of Civilization) எனும் ஒரு செயற்கைக் கோட்பாட்டை ஹன்டிங்டன் கண்டுபிடித்தார். மேலைய நாகரிகங்களுக்கும் இஸ்லாத்திற்கும் இடையில் மோதல்கள் உருவாகப் போகின்றன என்று ஹன்டிங்டனின் தீர்க்க தரிசனம் வெளிப்படுத்தியது. இடம்பெறப் போகும் அமெரிக்காவின் படை நிறுத்தல் செயற்பாடுகளுக்கு பக்க பலமாக ஹன்டிங்டனின் கோட்பாடு முன்னிறுத்தப்பட்டது.

ஈராக் ஆக்கிரமிக்கப்பட்டு அதன் எண்ணெய் வளம் ஹெலிபேர்டன் எனப்படும் பிரமாண்டமான அமெரிக்கக் கம்பனியின் கீழ் வந்தது. இவ்வாறு படைப் பலத்தை நிலைநிறுத்தி பொருளாதார வளங்களைச் சூறையாடுவதில் தனக்குள்ள சிரமங்களை உணர்ந்த மேலை நாடுகள் காலப் போக்கில் புதியதொரு மூலோபாயத்தைக் கண்டுபிடித்தனர், அது நாகரிகத்திற்குள்ளேயான மோதல் (Clash within a Civilization) எனப்படுகின்றது.

இதன் மூலம் மூன்று முக்கிய மூலோபாய இலக்குகளை எட்டிவிடலாம் என்று மேற்கத்தேய நாடுகள் கருதுகின்றன. முதலாவது, நேரடியான படைப்பலத்தை நிறுத்தி வைப்பதன் மூலம் ஏற்படும் செலவீனங்களையும் இராணுவ இழப்பையும் குறைத்தல். இரண்டாவது, முஸ்லிம் உலகில் உள்ளார்ந்த ஆயுத மோதல்களை ஊக்குவித்தல்.

மூன்றாவது, இம்மோதல்களின் விளைவாக இஸ்லாம் குறித்த ஓர் உலகளாவிய பீதியை (Phobia) உருவாக்குதல்.

இம்மூன்றிலும் முதல் இரண்டு இலக்குகளையும் மேற்கத்தேய நாடுகள் எந்தளவு எட்டின என்பது ஆய்வுக்குரியது. ஆனால், இறுதி இலக்கை முழுமையாக அடைந்து கொள்வது அவற்றுக்குச் சாத்தியமானது. இந்தோனேசியா முதல் மோரோக்கோ வரை பல்வேறு பெயர்களில் அறபு, இஸ்லாமிய சிவில் சமூகங்களுக்கு மத்தியில் ஆயுதம் தரித்துப் போராடும் பயங்கரவாதங் இயக்கங்களும் வன்முறைக் கும்பல்களும் மேற்கத்திய நாடுகளின் தயாரிப்பே. அவை இஸ்லாமிய முலாமை வெளிப்படையாகப் பூசிக் கொண்டிருக்கின்ற போதும் Islamophobia ஐ உருவாக்குவதற்கென்றே களமிறக்கப்பட்டன.

மாலியின் அன்ஸாருத்தீன், சோமாலியாவின் அஷ்ஷபாப், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் தாலிபான், அறபு நாடுகளில் அல் காயிதா மற்றும் ஐசிஸ் போன்ற பயங்கரவாதக் குழுக்கள் Islamophobia ஐ பரப்பும் நோக்கில் மேலைய நாடுகளால் உருவாக்கப்பட்டவை.

Islamophobia எனப்படும் வெறுப்புக் கைத்தொழிலுக்குப் பின்னால் மேலைய அரசுகளுக்கு சில முக்கிய நோக்கங்கள் இருக்கின்றன. இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பயங்கரவாதத்துடன் இணைப்பது அதன் முதல் நோக்கமாகும். அதேவேளை, மேலைய நாடுகளின் அறபு இஸ்லாமிய உலகின் மீதான இராணுவப் பிரசன்னத்தை நியாயப்படுத்துவது அதன் அடுத்த நோக்கமாகும்.

ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்கக் கண்டத்திலும் உலகின் பிற பகுதிகளிலும் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களை அந்நாடுகளின் அரசாங்கங்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்க வைப்பது, பாதுகாப்புக் கெடுபிடிகளை அவர்கள் மீது கட்டவிழ்க்க வைப்பது மூன்றாவது பிரதான நோக்கமாகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக தாங்களே உருவாக்கி வைத்துள்ள இப்பயங்கரவாதக் குழுக்களை ஒரு பூச்சாண்டியாகக் காட்டி அறபு நாடுகளுக்கு பெருந்தொகை ஆயுதங்களை விற்பனை செய்வது அடுத்த இலக்காகும். இந்த Islamophobia அரசியலையே இன்று மேலைய நாடுகள் கையாண்டு வருகின்றன.

வரலாற்று ரீதியில் இஸ்லாம் கிறிஸ் தவத்தின் எதிரியாகவும் முஸ்லிம்கள் கிறிஸ்தவ உலகின் ஆக்கிரமிப்பாளர்களாகவுமே இருந்துள்ளனர் எனும் விம்பத்தை  மேலைய கிறிஸ்தவ இளைஞர்களுக்கு ஊட்டுவதில் ஏற்கனவே நாம் குறிப்பிட்ட தீவிர வலதுசாரிக் கட்சிகள் (Ex-Right) களமிறங்கியுள்ளன.

2004 இல் அமெரிக்காவின் Rand Cooperation நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை நமது கவனத்திற்குரியது. அவ்வறிக்கை, முஸ்லிம்களை தீவிரவாத முஸ்லிம்கள், மிதவாத முஸ்லிம்கள் என்று வகைப்படுத்துகின்றது. மிதவாத முஸ்லிம்களுக்கு அமெரிக்க அரசாங்கம் ஆதரவளிக்கும் எனவும் தீவிரவாத முஸ்லிம்களை அடக்குவதற்கு வொஷிங்டன் நிதியாதரவளிக்கும் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மிதவாத இஸ்லாம் தீவிரவாத இஸ்லாம் என்ற வகைப்பாட்டிலிருந்தே இவ்விரு வகை முஸ்லிம்களும் தோன்றுவதாக அந்த அறிக்கை கூறுகின்றது. ரேன்ட் ரிபோர்ட் உலகப் பார்வைக்குக் கொண்டு வரும் செய்தி மிகவும் ஆபத்தானது.

கிறிஸ்தவ உலகில் ரோமன் கத்தோலிக்கம், புரட்டஸ்தாந்து உள்ளிட்டு பல்வேறு மதப் பிரிவுகள் இருப்பது போன்று இஸ்லாத்திலும் பல்வேறு மதப் பிரிவுகள் உள்ளதாக ஒரு கருத்தை இந்த அறிக்கை கட்டமைக்கின்றது.

அமெரிக்க அரசாங்கம் இவ்வறிக்கையின் பின்னணியில் சில மூலோபாயங்களையும் கையாண்டது. 2006 இல் வேஜினியா மாநிலத்தில் செனட் சபை தேர்தலுக்காக குடியரசுக் கட்சி சார்பில் கமால் நவாஸ் களமிறக்கப்பட்டார். அவர் பயங்கரவாதத்திற்கு எதிரான சுதந் திர முஸ்லிம்கள் எனும் ஓர் அமைப்பின் தலைவர் ஆவார். இவ்வமைப்பை நிறுவுவதற்கு நிதியாதரவளித்த அமெரிக்க அரசாங்கம் கமால் நவாஸ் போன்றவர்களை வைத்து ஒரு மக்கள் அபிப்பிராயத்தை கட்டி வளர்க்க முயன்றது.

இஸ்லாத்தில் பயங்கரவாதம் உள்ளது. ஆனால், அதற்கு எதிரான முஸ்லிம்களும் இருக்கின்றனர் என்பதுதான் வொஷிங்டன் உருவாக்க நினைத்த அபிப்பிராயம். இதேபோன்று Centre for Islamic Pluralism, Progressive Muslim Union of North America போன்றனவும் மேலைய அரசாங்கங்களின் உருவாக்கங்களாகும். இவற்றின் மூலம் இஸ்லாத்தை மாத்திரம் மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்துடன் தொடர்புறுத்தி ஓர் உலகளாவிய பயத்தை உருவாக்குவதற்கு வலது சாரி அரசியல் கட்சிகள் முயற்சிக்கின்றன.

ஜோர்ஜ் புஷ் தொடங்கிய பயங்கரவாதத்திற்கு எதிரான பூகோளப் போர் இவ்வகைப்பட்டது. இன்னொரு புறம் அரசியல் இயக்கங்கள் மேலைத்தேய கிறிஸ்தவ இளைஞர்கள் மத்தியில் மீளவும் இஸ்லாம் குறித்த வரலாற்றுக் காழ்ப்புணர்வை கிளறி விடுகின்றன.

இந்தியத் துணைக்கண்டம் மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் போல்கன் பிராந்தியம் என்பவற்றில் பிற சமூகங்களை இஸ்லாம் எவ்வாறு தன்மயமாக்கிக் கொண்டது என்பது குறித்த பக்கச்   சார்பான ஒரு வாதம் வரலாற்றாசிரியர்கள் மத்தியில் நிலவுகின்றது. வற்புறுத்தலின் மூலமே கிழக்கு ஐரோப்பிய நாடுகளான சேர்பியா, மொன்டநீக்ரோ, ஸ்லோவேனியா, அல்பேனியா, ஜியோ ஜியா, உக்ரைன், ஆர்மேனியா போன்ற  நாடுகளில் இஸ்லாம் தன்னை தகவமைத்துக் கொண்டது. விளைவாக, பல்லாயிரக் கணக்கான கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களால் கொலையுண்டனர் என வரலாற்றைப் பிழையாகக் கற்பிதம் செய்து வைத்துள்ளனர்.

இந்த முஸ்லிம் விரோத மனப்பாங்கு இன்றைய கிறிஸ்தவ இளைஞர்கள் மத்தியில் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றது. நியூசிலாந்நதின் பள்ளிவாயலுக்குள் ஊடுருவி 50 முஸ்லிம்களைச் சுட்டுத் தள்ளிய அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ்தவ இளைஞனின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் இதனையே உணர்த்துகின்றன.

இஸ்லாம் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் கடந்த இரு தசாப்தங்களாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் இஸ்லாமிய தீவிரதவாதமும் ஒன்றாகும். இஸ்லாம் வன்முறை மூலமும் வாள்களின் மூலமும் பரவியது என்பதும் இஸ்லாம் ஆட்கொண்ட புதிய பிராந்தியங்களில் வாழ்ந்த சமூகங்களை அது பலவந்தமாக மதம் மாற்றியது என்றும் முஸ்லிம் விரோத வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர்.

இஸ்லாத்திற்கும் மேலைய உலகத்திற்கும் இடையிலான மோதலுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. அது சகிப்பிற்கும் சகிப்பின்மைக்கும் இடையிலான மோதலாகும்.  அந்த மோதலின் வரலாறு மீளவும் திரும்பியுள்ளது. அது நீடிக்காமல் பார்த்துக் கொள்வதே இன்றைய உலக சிவில் சமூகத்தின் பொறுப்பாகும். இதுவே நியூசிலாந்து சம்பவத்தின் மூலம் நாம் எல்லோரும் படிக்க வேண்டிய முதலாவது பாடமாகும்.

About the author

Administrator

Leave a Comment