Features அரசியல்

வரவு செலவுத் திட்டம் 2019: பொதுச் சொத்தை விரயமாக்கும் மற்றுமொரு திட்டம்

Written by Administrator
  • குசல் பெரேரா

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் நடப்பு ஆண்டுக்கான பாதீடு (வரவு செலவுத் திட்டம்) நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் கடந்த 05ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. ஐ.தே.க.வை முதன்மையாகக் கொண்ட நல்லாட்சி அரசாங்கத்தின் ஐந்தாவது வரவு-செலவுத் திட்டமாகவும் மங்கள சமரவீரவின் 2ஆவது வரவு செலவுத் திட்டமாகவும் இது அமைந்திருந்தது.

வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மக்களுடைய பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப்படுகிறது என்றே எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால் எமது நாட்டில் முன்வைக் கப்படுகின்ற பட்ஜெட்டில் நாட்டின் பிரச்சினைகளுக்கான தீர்வு வழங்கப்படுவதில்லை. பட்ஜெட்டின் மூலம் உண்மையில் செய்ய வேண்டியது என்னவெனில், அரசாங்கம் நாட்டின் அபிவிருத்திக்காக வேண்டி சிபாரிசு செய்யும் வேலைத் திட்டங்களுக்கு வருடாந்தம் நிதி ஒதுக்கும் முறை தொடர்பிலான விபரங்களை முன்வைத்து அதற்கான நாடாளுமன்ற அனுமதியைப் பெற்றுக் கொள்வதாகும்.

ஆனால் எமது வரவு செலவுத் திட்டங்களில் அப்படியான விடயங்களைக் காண முடியாமல் உள்ளது. அரசாங்கத்திடம் தேசிய அபிவிருத்தித் திட்டமொன்று இல்லாமையே அதற்குரிய காரணமாகும். எனவே அபிவிருத்தித் திட்டமொன்று இல்லாத அரசாங்கத்தின் தேசிய வரவு செலவுத் திட்டத்தின் மூலம் எல்லாவற்றுக்குமான பதிலை எதிர்பார்க்கின்ற, நாட்டின் வரவு செலவுத் திட்டம் என்பது கடன் பெற்றேனும் வருடாந்தம் பொது நிதியை செலவு செய்யும் விதத்தை முன்வைக்கும் ஏடாக மாத்திரமே காணப்படுகிறது.

தேர்தல் நெருங்கும் சந்தர்ப்பத்தில் இன்று இது தேர்தலுக்காக வேண்டி சமர்ப்பிக்கப்படும் வாக்குறுதிப் பொட்டலமாக மாறியிருக்கிறது. இம்முறை மங்கள சமவீரவினால் முன்வைக்கப்பட்டிருக்கும் பட்ஜெட்டும் தேர்தலுக்கான பட்ஜெட்டாகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

திறந்த சந்தைப் பொருளாதாரத்தை இன்னும் விரிவுபடுத்தி திறக்கும் வரை மக்கள் காத்துக் கொண்டுள்ளனர் என நிதியமைச்சர் நினைக்கிறார். இதனால் இவர் மக்களுக்கு வழங்கும் முதலாவது வாக்குறுதியாக அதனை நிறைவேற்றுவேன் எனக் குறிப்பிட்டுள்ளார். இத் திறந்த சந்தைப் பொருளாதாரத்தை மென்மேலும் திறந்துவிடுவதே பிரதமரின் தேவையாகவும் இருக்கின்றது. வரவு-செலவுத் திட்டத்திற்கு வெளியாலேயே இவ்விடயம் கூடுதலாக மேற்கொள்ளப்படுகின்றது.

கட்சியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கையை அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டமாக பொது நிதியில் மேற்கொள்வதே இவர்களின் தேவைப் பாடாக இருக்கிறது. நிதியமைச்சரின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் அனைத்தும் இப்படியான நகர்வுகளையே கோடிட்டுக் காட்டுகின்றன.

இம்முறை வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் சகல பௌத்த விகாரைகளுக்கும் சூரிய மின்சக்தி தொழில்நுட்பத்தை பெற்றுக் கொடுப்பற்காக வேண்டி தலா 03 லட்சம் ரூபா வீதம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர சகல மத வழிபாட்டுத்தளங்களினதும் பராமரிப்புக்காக வேண்டி ரூபா 10 லட்சம் வீதம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள பௌத்த வாக்குகளைப் பெறுவதற்காக வேண்டி தேரர்களை விழிக்கும் திட்டமே இதுவாகும்.

இதனைச் சமநிலைப்படுத்தும் வகையில் வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு அவர்களது முறைப்பாடுகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வரையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 6000  ரூபா வழங்குவதற்கும் நஷ்டஈடு வழங்குவதற்கான அலுவலகமொன்றையும் அமைத்து, அது தொடர்பில் தெளிவூட்டுவதற்காக வேண்டி 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் இவ்வாறு பொது நிதியை அன்பளிக்கும் ஏராளமான முன்மொழிவுகள் உள்ளன.

நாட்டில் பெரும்பாலான கிராமிய பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கு குடிநீர் மற்றும் சுத்தமான கழிப்பறை வசதிகள் இல்லாத நிலையிலும் கூட  10 லட்சம் மக்களுக்கு கழிப்பறை வசதிகளை செய்துகொடுப்பதற்காக வேண்டி இம்முறை பட்ஜெட்டில் 400 மில்லி யன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர இளைஞர்களைக் கவர்வதற்காக வேண்டி புதி தாகத் திருமணமான தம்பதிகளுக்கு 06 வீத வட்டியில் 25 வருடங்களில் செலுத்தி முடிக்கும் முறையில் வீடமைப்புக் கடன் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் எவர் எப்படித் திட்டமிட்டார்கள்? என்றதியாத ‘சூகித புரவர’ நிகழ்ச்சித் திட்டத்திற்காக வேண்டி 3000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் 2016 ஆம் ஆண்டில் 160 மில்லியன் ரூபா நிதி செலவு செய்யப்பட்டிருப்பதாக நகர அபிவிருத்தி அதி கார சபையின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதற்கான பதிவுகள் எதுவும் இல்லை.

எவ்வித நகரத் திட்டமிடல்களும் இன்றி வகைதொகையாக எல்லா இடங்களிலும் தொடர் மாடிக் கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வில்லாத, கொழும்பு நகரத்தை அலங்கரிப்பதற்கு 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர வடகிழக்கில் கருப்பட்டி மற்றும் கள்ளு போத்தலில் அடைக்கும் திட்டமிடப்படாத தொழிற்றுறையொன்றுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தோடு எங்கு செயற்பட்டு வருகின்றார்கள் என்றறியாத மாணவர் மற்றும் சமுதாய அமைப்புக்களுக்காக வேண்டி நிலைபேறான சூழல் என்னும் பெயரில் 2.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இராணுவத்திற்கு ‘கொமாண்டோ’ கொடுப்பனவாக 5000 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ள  துடன், அவர்களுக்கான வீடமைப்புக் கொடுப்பனவும் 30 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவை தவிர அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் ஜூலை முதல் 2500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சகல விடயங்களும் 40 வருடங்களாக வெற்றியளிக்காத, மிகவும் மோசடியான திறந்த சந்தைப் பொருளாதாரத்துடன் போராடி வந்த நுகர்வோருக்காக வேண்டியே ஒன்று குவிக்கப்பட்டிருக்கிறது. இப்படியான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இவர்களுக்கு இதுவரை மீதமானது என்ன? 1978 இல் 1136 மில்லியன் டொலராகக் காணப்பட்ட வெளிநாட்டுக் கடன் 2018 இன் இரண்டாவது பருவ காலத்தில் 53,487.3 மில்லியன் டொலர்களாக அதிகரித்திருக்கிறது.  இதனோடு சேர்ந்ததாக இக்காலப் பகுதியில் சமூக ஒழுங்கமைப்புகள், ஒழுக்கம், பண்பாடுகள் உள்ளிட்ட சகலதும் சிதைவடைந் துள்ளன. கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகளும் பாரிய நெருக்கடியாக மாறியுள்ளது. சட்ட அமுலாக்கல் மற்றும் நீதித்துறை தொடர்பில் காணப்பட்ட சமூக அங்கீகாரம், நம்பிக்கை அருகிப்போயுள்ளது. அரச சேவையும் அதிக பட்சம் சிதைந்து போயுள்ளது.

வெளிநாட்டு முதலீடுகளில் மாத்திரம் தங்கியிருந்த நிலையில் அவையனைத்தும் புதை குழியில் விழுந்தவுடன் எமக்குத் தேவையான இறக்குமதிச் செலவையேனும் ஈட்டிக்கொள்ள முடியாமல் ஏற்றுமதி உற்பத்தியுடன் நாம் இந்த திறந்த சந்தையில் கொழும்பு நகரத்தை ஹெரோயின் கிடங்காக மாற்றியுள்ளோம்.

இப்புது வருட ஆரம்பத்தில் பொலிஸ்மா அதிபர் பொலிஸ் அதிகாரிகளுக்கு மத்தியில் உரையாற்றும் பொழுது 2018 ஆம் ஆண்டில் பொலி ஸார் 744 கிலோ ஹெரோயினை கைப்பற்றியதாகத் தெரிவித்திருந்தார். அதன் பெறுமதி 1190 மில்லியன் என மதிப்பிடப்பட்டிருந்தது. அதுபோன்று 2017ஆம் ஆண்டில் 314 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. இவ்வருடத்தின் முதல் இரு மாதங் களிலும் 520 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார். இது பெப்ரவரி 23ஆம் திகதி இது  வரை இலங்கையில் கைப்பற்றப்பட்ட அதிகூடிய ஹெரோயின் தொகையான 1475 கிலோவுக்கு மேலதிகமான தொகையாகும். ஆகவே மொத்தமாக 3053 கிலோ ஹெரோயின் போதைப் பொருள் தற்பொழுது எங்கு உள்ளது? இக்கேள்விக்கான பதிலைத் தேடும் பட்சத்தில் நாம் எவ்வளவு கொடிய மோசமான செயற்திறனற்ற சிக்கலான அரச கட்டமைப்புக்குள் உள்ளோம் என்பதைப் புரிந்துகொள்வது கடினமானதாக இருக்காது.

திறந்த சந்தைப் பொருளாதாரத்தின் மூலம் கொழும்பு மற்றும் அதனை அண்டிய வகையில் மிகப்பெரும் நுகர்வுச் சந்தை உருவாக்கப் பட்டுள்ளது. கிராமிய சமூகம் இதிலிருந்து முற்றாகவே கைவிடப்பட்டுள்ளது. இவ்வாறு விசாலமடையும் கொழும்பு நகரத்தின் சேவை வழங்கலுக்காக வேண்டியே அரசு கண்ணும் கருத்துமாக உள்ளது. கிராமிய சமூகம் தொடர் பில் அவ்வாறானதொரு பொறுப்பை அரசாங் கம் வகிப்பதில்லை. ஆதலால், கிராமிய சமூகத் திலிருந்து அரச சேவைக்கு சொற்ப இடமே வழங்கப்பட்டு வருகின்றது. கிராமிய சமுதா யத்திற்கு தங்களது உரிமைகளுக்காக வேண்டி மனுக்கொடுப்பதற்கும் பணத்தை செலவழித்து கொழும்பு வரவேண்டியிருக்கிறது. இவ்வாறு நகரத்தையும் கிராமத்தையும் பிரித்து வைப்பது திறந்த சந்தைப் பொருளாதாரத்தின் கொள்கைசார் அரசியலாகும்.

இவ்வரசாங்கத்தின் கல்விக் கொள்கையை நோக்கும் போது நகரை மையப்படுத்திய அவர் களது அரசியலை புரிந்துகொள்ள முடிகிறது. பாடசாலை மாணவர்களுக்கு ‘டெப்’ களை பெற்றுக்கொடுப்பதற்கான  விலைமனுக்கோர லில் இடம்பெற்றிருக்கும் மிகப்பெரும் ஊழல் குற்றச்சாட்டை ஒருபுறத்தில் வைத்தாலும் நவீன தொழில்நுட்பம் கொழும்புக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கோட்டை ஸ்ரீ ஜயவர்தனபுர ஆண்கள் பாடசாலையில் வகுப்புக்களுக்கு இடையிலான முழுமையான ஒருங்கிணைந்த ‘ஸ்மார்ட்’ வகுப்பறை உள்ளது. இதுவே இலங்கையில் இருக்கும் ஒரேயொரு பாடசாலை  என பொருளாதார சீர்திருத்தம் மற்றும் மக்கள் வளப் பகிர்வு அமைச்சர் ஹர்ஷ டி சில்வா பெருமிதத்தோடு பேசுகிறார். இந்நாட்டிலுள்ள 10,000 பாடசாலைகளில் பெரும்பாலான கிராமப் புற பாடசாலைகள் குடிநீரில்லாமல், மாணவ மாணவியர்களுக்கு முறையான கழிப்பறை வசதிகளில்லாமல், சரியான வகுப்பறைகள் இல்லாமல், ஆசிரியர் வளமில்லாமல் காணப்படுகின்றமை குறித்து அவர் எப்படி பெருமையோடு பேசுவார்? கிராமத்திலுள்ள இவையொன்றும் நகர்புற திறந்த பொருளாதார சந்தைக்குள் தொடர்புறுவதில்லை.

கடந்த செவ்வாய்க்கிழமை நிதியமைச்சர் மங்கள சமரவீர 2019ஆம் ஆண்டிற்காக சமர்ப் பித்த வரவுசெலவு திட்டத்தில் இவ்வகையில் தீர்வு காணப்படாத பிரச்சினைகளுக்கு எத்த கைய தீர்வுத் திட்டங்களை முன்வைத்திருக்கின்றார்? சிதைந்து போகும் தேசத்தை மீளக் கட்டியெழுப்ப, கைவிடப்பட்டுள்ள கிராமிய சமூகத்தின் பெரும்பாலானவர்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளின் தொழில்வாய்ப்பில் கொண்டுள்ள எதிர்பார்ப்புக்களுக்குப் பதிலாக தமது கிராமத்தில் இயல்பு வாழ்க்கைக்கு இடமளிப்பதற்கு, இந்தியா, சீனா, பங்களாதேஷ், மியன்மார் போன்ற நாடுகளிலிருந்து அரை அடிமைத் தொழிலாளிகளை கொண்டுவருவதற்கு எல்லா வகையிலும் வரிச்சலுகை, உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுக்கும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு பதிலாக இந்நாட்டில் இளை ஞர்களுக்கு தமது அடிப்படை உரிமைகளோடு தொழில்புரிவதற்கும் பாரியளவிலான ஊழல் மோசடிகளின்றிய பயணத்தை மேற்கொள்வ தற்கு 2019ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஆரம்ப கட்ட முயற்சியேனும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா? என்றால் இல்லை.

40 வருட காலமாக போஷிக்கப்பட்ட இவ் ஊழல் அரசியலில் இதுவரை ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகள் எதுவுமற்ற மிகவும் தூய்மையான அரசியல்வாதியாக மங்கள சமரவீரவுக்கு உண்மையில் பெருமைப்பட முடியும். என்றாலும், அவர் மீதொட்டமுள்ள குப்பை மேட்டின் உச்சியிலேயே அமர்ந்துகொண்டுள்ளார். இந்தக் குப்பை மேட்டிற்கு குப்பைச் சேர்க்காத அவர், தூய அரசியல்வாதியாவார். ஆனால் அது அன்றாடம் விசாலமடைவதற்கான காரணம் மற்றும் அதற்கான தீர்வு குறித்து பேசுவதற்கு அவரால் முடியாமல் உள்ளது. இதனால் 2019ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டமும் ஊழல் நிரம்பிய குப்பை மேடு தொடர்பில் எதுவும் பேசப்படாத தொன் றாகும். இதன் காரணமாக, இவ்வரவு செலவுத் திட்டத்தின் பெறுமதி என்ன என கேட்க வேண்டியுள்ளது?

இந்நாட்டில் எத்தகைய பிரச்சினைக்கும் தீர்வு சொல்லப்படாத, திறந்த பொருளாதாரம் எல்லாவற்றுக்கும் சரியான மருந்து என்கின்ற அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் விவாதிப்பது அல்லது அதிலுள்ள சிறந்த விடயங்களை தேடுவதில் எவ்வித பிரயோனமும் இல்லை. சகலருக்கும் தமது நாடு என ஏற்றுக்கொள்ளக்கூடிய, சகலருக்கும் வெற்றிகரமான வாழ்க்கையை கழிப்பதற்கு உத்தரவாதமுள்ள, சகலருக்கும் ஒரே அமைப்பில் சுதந்திரமான ஜனநாயக நிலவுகையுள்ள சமூகத்திற்கான அவஷியமான அடிப்படை காரணிகள் குறித்து நாம் முதலில் பேச வேண்டும்.

அவை குறித்துப் பேசாத வரவுசெலவுத் திட்டமானது இறுதியில் மக்கள் பணத்தை விரயமாக்குவது எப்படி என்பது தொடர்பில் பேசப்படும் விவாதப் தலைப்பொன்றாக மாத்திரமே அமைந்துவிடும்.

About the author

Administrator

Leave a Comment