Features சமூகம் சாதனையாளர்கள்

Rubik’s Cube போட்டியில் சர்வதேச அரங்கில் அப்துல் அஸீஸ் சாதனை

Written by Administrator

– அனஸ் அப்பாஸ் –

05.05.2005 இல் குவைத் நாட்டில் பிறந்த செல்வன் அப்துல் அஸீஸ் குவைத் நாட்டில் வசித்துவரும் இலங்கையைச் சேர்ந்த ஸிமாயா ரஹ்மத்துல்லாஹ் – ஹரீஸ் ஸாலிஹ் தம்பதிகளின் இரண்டாவது புதல்வராவார். நாடு கடந்தும் இவர் இலங்கையின் பெயரை சர்வதேச அரங்கில் மிளிரச் செய்திருக்கின்றார். இவரது சாதனை குறித்து இப் பத்தி பேசுகின்றது.

WCA (World Cube Association) எனப்படும் அமைப்பு உலகளாவிய ரீதியில் Cube போட்டிகளை தொடராக நடாத்தி வருகிறது. வருடாவருடம் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் இப்போட்டிகள் நடாத்தப்பட்டு போட்டியாளர்கள் தேசிய, சர்வதேச ரீதியில் தரவரிசைப் படுத்தப்படுகிறார்கள். ‘Cube’ களில் உள்ள பல வடிவங்களுக்கான போட்டிகள் தனித்தனியே நடாத்தப்பட்டு தரவரிசைப் படுத்தப்படுகிறது.

WCA மூலம் குவைத்தில் நடாத்தப்பட்டு வரும் Rubik’s Cube போட்டியில் கடந்த இரண்டு வருடங்களாக அப்துல் அஸீஸ் ஹரீஸ் பங்கேற்றுள்ளார். 2017 ஆம் வருடப் போட்டியினது 3 X 3 பிரிவில் 28 செக்கன்களில் முடித்தார். அதன் பிறகு நிறைய பயிற்சிகள் செய்து 2018 ஆம் ஆண்டு டிஸம்பர் மாதம் நடாத்தப்பட்ட போட்டியின் 2X2, 3X3, 4X4, Pyramid, Skewb ஆகிய பிரிவுகளில் கலந்து கொண்டார். இப்போட்டியின் பல பிரிவுகளிலும் 26 நாடுகளைச் சேர்ந்த 60 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். இவர்களில் அப்துல் அஸீஸ் இரண்டாமிடத்தைப் பெற்றார்.

இதன் Skewb பிரிவில் 6.77 செக்கன்களில் முடித்து தேசிய மட்டத்தில் சாதனை படைத்து தாய் நாட்டுக்கு (இலங்கை) பெருமை சேர்த்துத் தந்துள்ளார். குவைத்துக்கான இலங்கை தூதுவர் கௌரவ காண்டீபன் பாலசுப்ரமணியம் அவர்கள் அப்துல் அஸீஸ் ஹரீஸை குவைத் இலங்கை தூதரகத்திற்கு அழைத்து கௌரவித்து உற்சாகமூட்டி உள்ளார்.

மேலும் குவைத்தில் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட Cube போட்டிகளிலும் இவர் வெற்றியீட்டியுள்ளார்.

தற்போது 13 வயதேயான இவர், 2015 ஆம் ஆண்டு  ‘MaRRS spelling bee’ போட்டியில் குவைத்தில் தேசிய மட்டத்தில் தெரிவாகி துபாயில் நடாத்தப்பட்ட சர்வதேச மட்ட இறுதிச் சுற்றுக்கும்ம் தெரிவாகியிருந்தார். பின்னர் அதிலிருந்து தெரிவாகி அபுதாபி சுற்றிலும் பங்கேற்றார்.

குவைத் Carmel Convent இல் தரம்-08 இல் கல்வி கற்றுவரும் இவர், இதுவரை புனித அல்-குர்ஆனில் 8 ஜுஸ்உக்கள் வரை மனனம் செய்துள்ளார். தனது தாய் மனனம் செய்து வருவதைப் போல் தனது மூன்றரை வயதுமுதல் குர்ஆன் மனனத்தை சிறிது சிறிதாக இவர் ஆரம்பித்துள்ளார். சிறு வயதிலேயே குர்ஆனை கற்க ஆரம்பித்த இவர் சிறந்த குரல் வளத்துடன் அதனை ஓதுவதுடன், அழகாக அதான் சொல்லக்கூடியவர் என இவரது தந்தை குறிப்பிடுகின்றார். அல்-குர்ஆன் மீதான அதீத அன்பினாலும், திறமையாலும் பாடசாலை மட்டம் முதல் தேசிய மட்டம் வரை குர்ஆன் போட்டிகள் பலவற்றில் இவர் முதலிடம் வென்றுள்ளார். மேலும், இவர் தனது வகுப்பில் ஒவ்வொரு வருடமும் 90 இற்கும் மேற்பட்ட சராசரியைப் பெற்று தொடர்ந்து (Over Greater என) கௌரவிக்கப்பட்டு வருகின்றார். காற்பந்து விளையாட்டில் இவர் சிறந்து விளங்குவதுடன், நீச்சல் போட்டிகளிலும் சான்றிதழ்களை வென்றுள்ளார்.

கல்வியிலும், விளையாட்டிலும், இதர துறைகளிலும் மிகவும் திறமை காட்டி பல சான்றிதழ்களையும் பாராட்டுக்களையும்   பெற்றிருக்கும் அப்துல் அஸீஸ், வானூர்தி பொறியியலாளராக (Aeronautical Engineer ஆக) வருவதே தனது இலக்கு என்கின்றார்.

வரலாற்றில் முதன் முறையாக Cube வகுப்பொன்றை குவைத் நாட்டில் அப்துல் அஸீஸ் ஆரம்பிக்க இருக்கின்றார். இதற்கு இவருக்கு குவைத் வாழ் இந்திய சகோதரர்கள் உதவுவதாக கூறியிருக்கின்றனர்.

“குவைத் நாட்டின் தேசிய கராfபி குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை மாணவன் ஒருவன் முதல் தடவையாக தெரிவாகி முதலிடம் வென்ற சாதனையை நிகழ்த்தியது அப்துல் அஸீஸினது மூத்த சகோதரர் அப்துல்லாஹ். அதுவே அப்துல் அஸீஸ் இத்துறையில் ஊக்கம்பெற்று தொடரான சாதனைகளை மேற்கொள்ள வித்திட்டது. அதுபோன்று CUBE போட்டி, விளையாட்டுத்துறை என சகல விடயங்களிலும் அப்துல் அஸீஸ் இற்கு வழிகாட்டியவர் மூத்த மகன் அப்துல்லாஹ். அவர்தான் இவை அனைத்தையும் முதலில் முயற்சித்தவர். இரண்டாவது மகனின் அங்கீகாரங்களுக்கான நன்மைகள் மூத்த மகனுக்கு கட்டாயம் சென்றடையும் இன்ஷா அல்லாஹ்” என தனது மகன்மாருக்கு இறைவன் வழங்கிய அருள்களை எண்ணி மகிழ்வடைகின்றார் தந்தை ஹரீஸ் ஸாலிஹ்.

தற்போது தகவல் தொழிநுட்ப முகாமையாளராக குவைத் நாட்டில் பணிபுரியும் அப்துல்லாஹ், அப்துல் அஸீஸ், அப்துல் அலீம் ஆகியோரின் தந்தை ஹரீஸ் ஸாலிஹ் அவர்கள் இலங்கையின் மாத்தறை-மீயெல்லை பகுதியைச் சேர்ந்த முன்னாள் விஞ்ஞான பாட ஆசிரியர் ஆவார். 1994 முதல் இவர் குவைத் நாட்டில் I.T. துறையில் பணிபுரிகின்றார். குவைத் வாழ் இலங்கை உறவுகளின் அமைப்பான இக்ரா இஸ்லாமிய சங்கம் (IIC) உறுப்பினராகவும் இருக்கின்றார். இவர்களது தாய் ஸிமாயா ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் வீரகெட்டிய யக்கஸ்முள்ளயைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரதும் அர்ப்பணிப்பும், சீரிய வழிகாட்டலுமே நாடு கடந்தும் இலங்கையின் பெருமையை இவர்களது பிள்ளைகளால் உலக அரங்கில் பறைசாட்ட முடிந்திருக்கின்றது.

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே அல்ஹம்துலில்லாஹ்! அன்பின் பெற்றோருக்கும், உடன்பிறப்புக்களுக்கும், குவைத் வாழ் சிநேகிதங்களுக்கும், இலங்கையில் இருக்கும் குடும்ப உறவுகளுக்கும், ஊர் மக்களுக்கும், தனது வெற்றியில் மகிழ்ச்சியுறும் நலன்விரும்பிகளுக்கும், இலங்கை மக்களுக்கும் நன்றி தெரிவிக்கினார் அப்துல் அஸீஸ்.

WCA நடாத்தும் CUBE போட்டியில் 3 செக்கன்களில் உலகளாவிய சாதனையை நிகழ்த்த தற்போது தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டுவரும் அப்துல் அஸீஸ், மற்றும் அவரை உற்சாகமூட்டும் அவரது குடும்பத்தையும் உங்களது பிரார்த்தனைகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

About the author

Administrator

Leave a Comment