Features சமூகம்

அருவைக்காடு குப்பை விவகாரம்: சீர்கேடுகளைத் தோற்றுவிக்கும் அரசின் குப்பைத் திட்டம்

Written by Administrator

கலாநிதி பரீனா ருஸைக் – (சிரேஷ்ட விரிவுரையாளர் புவியியல் துறை- கொழும்பு பல்கலைக்கழகம்)

குப்பை கொட்டப்படும் அருவைக்காடு என்னும் இடத்திற்கு 200 மீற்றர் தூரத்தில் மீன் பிடிக்கும் இடம் காணப்படுகின்றது. மனிதர்கள் வாழும் இடத்திற்கும் குப்பை கொட்டப்படும் இடத்திற்கும் இடையில் 18 மீற்றர் தூரம் காணப்படுகின்றது. வில்பத்து வனப்பகுதிக்கும் குப்பை கொட்டப்படும் இடத்திற்கும் இடையில் சுமார் 4 – 5 கிலோமீற்றர் தூரமும் கால ஓயா என்னும் நதிக்கும் இவ்விடத்திற்கும் இடையில் 5 கிலோ மீற்றர் தூரமும் புத்தளம் ஏரிக்கும் குப்பை கொட்டப்படும் இடத்திற்கும் இடையில் சுமார் 250 மீற்றர் தூரமும் உள்ளது.

இவ்வாறு தூர அடிப்படையில் குப்பை கொட்டப்படும் இடத்தைச் சூழ பல்வேறு முக்கிய விடயங்கள் காணப்படுகின்றன. குப்பை கொட்டப்படும் இடத்தைச் சூழவுள்ள பகுதி நீர் ஏந்து பிரதேசமாக உள்ளது. குறிப்பாகச் சொல்லப்போனால் இப்பிரதேசம் இலங்கையில் தூய நீரேந்து பிரதேசத்தின் பொக்கிஷமாகத் திகழ்கின்றது.

சேரக்குளிய (அருவைக்காடு எல்லை) பிரதேசத்தில் பாரிய குழியொன்றை நிரப்புவதற்காக குப்பை கொட்டப்படுகிறது என்று கூறப்பட் டாலும், இதிலிருந்து மிகவும் சுலபமாக கழிவு நீ ர்சுண்ணக்கற் பிரதேசத்தை ஊடறுத்துக் கொண்டு நீர்ப் படுக்கைகளையும், நீரேந்து பிரதேசங்களையும் மாசுபடுத்தக்கூடிய ஆபத்து காணப்படுகின்றது.

இப்படி பல முக்கியமான சீரழிவுகள் கொண்ட, குப்பை கொட்டத் தீர்மானித்திருக் கும் அருவைக்காடு என்னும் இடம் சமூக, பொருளாதார, சூழலியல் ரீதியாக பாரிய அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்கவுள்ளது. இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட EIA என்னும் சூழல் தாக்க மதிப்பீட்டில் இப்பகுதி சூழல் உணர்ச்சிமிகு பிரதேசம் எனத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது அங்கு மிகவும் பெறுமதிவாய்ந்த உயிர்ப்பல்வகை இனங்கள் காணப்படுகின்றன. நீர் வளமான சுற்றுப்புறச் சூழலில் “Mangrove Species” என்கின்ற கடற்கரையோர சதுப்புநில வளரிகளும், மயோசீன் காலத்து சுண்ணாம்புக் கல் படிவுகளும் மருந்து மூலிகைகளும் மற்றும் குறிப்பிட்ட பிரதேசத்துக்கே உரித்தான தாவர (Endemic Species) இனங்களும் உள்ளன. இத் திட்டத்திற்காக சேரக்குளிய பிரதேசத்தில் சுமார் 64 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

மேலும், கொழும்பிலிருந்து குப்பைகள் கொண்டு செல்லும் போது பறவைகள் சரணாலயம் (Anawilundawa Birds Sanctuary) ஊடாகவே செல்ல வேண்டியுள்ளது. எனவே மிக உணர்ச்சிபூர்வமான சுற்றுச் சூழல் அம்சங்களை பின்னணியாகக் கொண்ட பகுதியாக அருவைக் காடும், அண்டிய பிரதேசங்களும் காணப்படு கின்றது. 

அதேநேரம் அருவைக்காட்டுக்குப் பக்கத்திலுள்ள சேரக்குளிய, குப்பை கொட்டுதலுக்கு மிகக் கிட்டிய தூரத்திலுள்ள கிராமமாகும். இது சுமார் 600 மீனவக் குடும்பங்களைக் கொண்டுள்ளது. இக்கிராமம் முழுமையான கத்தோலிக்க மீன்பிடிக் கிராமமாகும். இம்மக்களின் வாழ்வாதாரம் முழுமையாகப் பாதிப்படையக் கூடிய ஆபத்து நிலை காணப்படுகின்றது.

புத்தளம் ஏரியின் வடபகுதியில் சுமார் 2500 இற்கும் மேற்பட்ட மீனவர்களும் பாதகமான தாக்கத்திற்கு உட்பட வேண்டியுள்ளனர். மொத்தமாக பார்த்தால் சுமார் 3000 இற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் நிகழ்வாக குப்பை விவகாரம் காணப்படுகின்றது.

இதுதவிர எழில் மிகு சுற்றுச் புறச் சூழலை கொண்டுள்ள கடற்கரை காணப்படுவதால் உல்லாசப் பயணிகளை ஈர்க்கும் இடமாக அப் பகுதி காணப்படுகின்றது. அருவைக்காட்டில் குப்பை கொட்டப்படும் பட்சத்தில் உல்லாசப் பயணிகளின் வருகையிலும் பாதகமான தாக் கத்தை  ஏற்படுத்தும். இதனால் பெறக்கூடிய வருமானத்தில் வீழ்ச்சியைத் தோற்றுவிக்கும்.

மறுபுறத்தில் இப்பிரதேசத்தை அண்டியதாக உப்பளங்கள் காணப்படுகின்றன. உப்புக் கைத்தொழிலிலும் இவ்விவகாரம் பாரிய தாக்கத்தை உண்டுபண்ணும். இத்திட்டத்தினால் பொருளாதாரத்திற்கும் சுற்றுப்புறச் சூழலுக்கும் ஏற்படுகின்ற தாக்கங்கள் போன்று சமூகச் சீர்கேடான மானிட ஆரோக்கியத்தைக் கூடுதலாகப் பாதிக்கவும் வாய்ப்புள்ளது. குப்பை கொட்டப்படும் வேளையில் உருப்பெறும் துர்நாற்றம் தூசுகள், ஒலி மாசுபடல், குப்பை எச்சங்கள், நுண்ணங்கிகளின் பெருக்கம் என்பன மனிதன் உள்ளிட்ட உயிரினங்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். சுவாசம் தொடர்பான நோய்கள், தோல் நோய்கள் அதிகம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

நுரைச்சோலை அனல் மின்நிலையம் உருவாக்கப்பட்ட போது மக்கள் அதனை எதிர்த்தார்கள். அது தொடர்பில் முன்வைக்கப்பட்ட சூழல் தாக்க மதிப்பீடுகளை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இப்படியான நிலையிலேயே வலுக்கட்டாயமான முறையில் அனல் மின் நிலையம் உருவாக்கப்பட்டது. தற்போது அனல் மின்சார நிலையத்தினால் ஏற்படுகின்ற பாதிப் புக்களுள் மிக முக்கியமாக அப்பகுதியை சூழ வாழும் மக்களின் உடலில் மெர்கரி எனப்படும் பாதரசத்தின் நச்சுத்தன்மை அதிகம் காணப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

2 ஆம் உலக மகா யுத்தத்தைத் தொடர்ந்து யப்பானில் ஏற்பட்ட மிக வேகமான கைத்தொழில் புரட்சியின் விளைவாக பெரும்பாலான மக்களுக்கு மின்னமாட்டா என்னும் நோய் ஏற்பட்டது. கடல் மற்றும் ஏரிகளில் உள்ள மீன்களில் பாதரசம் (Mercury Pollution) கலப்பு ஏற்பட்டமையினால் அம்மீன்களை சாப்பிட்ட மக்களுக்கு அந்நோய் ஏற்பட்டது. இன்றும் கூட ஜப்பானில் அந்நோய் தொடர்புடைய எச்சங்கள் காணப்படுகின்றது.

அனல் மின்சார நிலையத்தின் தூசு துகள்கள் (சாம்பல்) காற்றோடு கலந்து மலைநாட்டின் நாவலப்பிட்டிய போன்ற பிரதேசம் வரை அதன் தாக்கம் காணப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவ்வாறான நிலைப்பாடுகள் சுவாச நோய்களை மக்களுக்கு ஏற்படுத்துகிறது.

எனவே கொழும்பு குப்பைகளை அருவைக் காட்டில் கொட்டும்போது இப்பகுதியிலும் எதிர்காலத்தில் ஆரோக்கியச் சீர்கேடுகள் அதி கரிப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன. கடந்த மார்ச் 22ஆம் திகதி உலக நீர் தினம் கொண்டாடப்பட்டது. உலக நீர் தினத்தில் மக்கள் நீரை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது தொடர்பாக நாட்டு மக்கள் அறிவுறுத்தப்பட வேண்டும். மாறாக அத்தினத்திலேனும் குப்பைக்கு எதிராக சத்தியாக் கிரகத்தில் ஈடுபட்ட மக்களுக்கு எவ்வித தீர்வுகளும் கொடுக்கப்படவில்லை.

இன்று இலங்கை உட்பட உலக நாடுகள் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறன. உலகில் சுமார் 2.2 பில்லியன் மக்கள் குடிநீருக்காக அல்லலுற்றுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் நீர்வளத்தைக் கொண்டிருக்கும் அருவைக்காடு போன்ற பிரதேசங்கள் சேதப் படுத்தப்படுவது கண்டனத்திற்குரிய விடயமாக காணப்படுகின்றது. இருக்கும் நீர்வளங்களை பாதுகாக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் இப்படியான நிகழ்ச்சித் திட்டங்களை அரசாங்கம் நடை முறைப்படுத்தப் போகின்றது என்பது கவலைக் குரிய விடயமாக உள்ளது. இது அருவைக் காட்டைச் சூழவுள்ள மக்களுக்கு மாத்திரம் பாதிப்பைக் கொடுக்கப் போகும் விடயம் அல்ல. மாறாக இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் பாதிப்பைக் கொடுக்கும் விடயமாகவே இது காணப்படுகின்றது.

இதுதவிர இப்பகுதி வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாகக் காணப்படுகின்றது. இப்படியான பிரதேசங்கள் ஏனைய உலக நாடுகளில் காணப்படுமாக இருந்தால் அந்நாடுகளின் அரசாங்கம் அப்பகுதிகளை பாதுகாப்பதற்கு பல்வேறுபட்ட நிகழ்ச்சித் திட்டங்களை உருவாக்கும். ஆனால் இலங்கையில் சூழல் உணர்ச்சிமிகு பிரதேசங்கள் இவ்வாறு கண் முன்னே அழிக்கப்படுவது உண்மையில் கவலையான விடயமாகவே உள்ளது.

இத்திட்டத்திற்கு பல மில்லியன் ரூபாய்கள் செலவு செய்யப்படவுள்ளன. இதுவொரு நிலையான குப்பை முகாமைத்துவத்திற்கு இட்டுச் செல்லும் திட்டம் என்று சொல்லப்படுகின்றது. உண்மையில் ஓரிடத்தில் குவிக்கப்பட்டிருக்கும் குப்பைகளை இன்னோரு சூழல் உணர்ச்சிமிகு பிரதேசத்தில் நிரப்புவது நிலையான குப்பை முகாமைத்துவம் அல்ல. மாறாக நிலையான குப்பை முகாமைத்துவம் என்பது முகாமைத்துவத்தில் தொடர்புடைய பங்குதாரர்களையும் இணைத்துக் கொண்டு ஒரு சிறந்த முறையில் பிரிவுகளாக வேறுபட்ட விதத்தில் பிரிக்கப்பட்ட குப்பைகள் சேகரிக்கப்பட்டு அவை மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு, உக்கிப்போகக் கூடியவைகளை பசளைகளாக மாற்றக் கூடிய விதத்தில் உற்பத்திகளாக மேற்கொள்ளப்படுகின்ற போதே நிலையான குப்பை முகாமைத்துவத்தைக் காண முடியும்.

ஆனால் இத்திட்டத்தில் வேறு ஏதோ விடயம் உட்பொதிந்திருப்பது விளங்குகிறது. இந்தக் குப்பைகளைப் போட வேண்டாம் என்று மக்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள். ஆனால் அரசாங்கம் கண்டும் காணாமல் இருப்பது மிகுந்த மனவேதனையைத் தருகின்றது.

இலங்கை ஒரு சிறிய நாடு. இங்கு அதிகமான நீர் நிலைகள் காணப்படுகின்றன. இப் படியான நீர்வளத்திற்குப் பாதிப்பாக அமையாமல், எப்படி அந்தந்த பிரதேசங்களில் குப்பைகளை வேறு வேறாக்கப்பட்ட அமைப்பில் சேகரிக்கப்பட்டு ஏனைய மக்களுக்கு தொழில் வாய்ப்பை கொடுக்கக் கூடிய விதத்தில் எப்படி ஒருங்கிணைந்த திண்மக் கழிவு முகாமைத் துவத்தை மேற்கொள்ளலாம் என்ற விதத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பட்சத்திலேயே குப்பை தொடர்பில் ஒரு சிறந்த முகாமைத்துவத்தை அடையலாம்.

ஏற்கனவே மீதொட்டமுள்ளை பகுதியில் குப்பை கொட்டுவதை மக்கள் எதிர்த்தார்கள். அதை அவர்கள் கவனத்திற் கொள்ளவில்லை. விளைவாக 40 இற்கும் மேற்பட்ட உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. தற்போது குப்பை கொட்டத் தீர்மானித்திருக்கும் அருவைக்காட்டு பிரதேசமும் மக்கள் நடமாட்டம் கூடிய பிர தேசமாகும். சமூக, பொருளாதார, சூழலியல், வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசத்தில் குப்பைகளை கொண்டு போய் கொட்டுவதன் மூலம் மீண்டுமொரு மீதொட்டமுள்ளையை உருவாக்குவதன்றி வேறொன்றும் நடைபெறப் போவதில்லை.

இலங்கை போன்ற நாடுகளுக்கு அடிக்கடி இயற்கை அனர்த்தங்களின் தாக்கங்கள் காணப்படுகின்றன. சில நேரம் இலங்கை போன்ற நாடுகளுக்கு புவி நடுக்கத்தினுடைய அச்சுறுத்தல் எதிர்காலத்தில் காணப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. கரையோரப் பிரதேசங்களில் குப்பைகளைக் கொண்டுபோய் கொட்டுவதன் மூலம் இது பாரதூரமான விளைவுகளையே கொண்டு வரும்.

எனவே இது தொடர்பாக திட்டமிடப்பட்ட முறையில், மிகவும் சிறந்த கண்ணோட்டத்தைச் செலுத்தும் போது இப்படியான நடவடிக்கைகளிலிருந்து மீளக்கூடியதாக இருக்கும். அத்துடன்  நிலைபேறான சூழல் முகாமைத்துவ நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்துவதனூடாகவே நாட்டில் ‘நீலப்-பசுமை’ யுகத்தைக் கட்டியெழுப்ப முடியும். இல்லாவிடின் அது வார்த்தையளவில் காணப்படும் ஒரு வாசகமாகவே இருக்கும்.

About the author

Administrator

Leave a Comment