Features அரசியல்

மக்களின் பங்களிப்புடனான மக்கள் மைய யாப்பே நிலையானது

Written by Administrator
  • விக்டர் ஐவன்

மக்களுக்குள்ள அரசியல் அதிகாரத்தைப் பிரயோகிப்பதற்கு தற்போதைய அரசியலமைப்பும் அதற்கு முந்திய அரசியலமைப்புக்களும் வழங்கியுள்ள ஒரே வழிமுறைதான் தேர்தலில் வாக்களிப்பதற்குள்ள உரிமை. இந்தக் குறுகிய காலாவதியான முறையில் தேர்தலில் வாக்களிப்பதற்கான உரிமை மட்டுமே வழங்கப்பட்டிருப்பதற்குப் பதிலாக, மக்கள் மயப்பட்ட செயற்பாடுகளின் போது அரசியலமைப்பில் மக்களினதும் ஆக்கபூர்வமான பங்களிப்பைப் பெறும் வகையில் மக்கள் மைய யாப்பு உருவாக்கப்பட வேண்டும்.

இன்னொருவகையில், அரசியலமைப்பு என்பது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் அதிகமான பங்களிப்பை மக்களுக்கு வழங்கக் கூடிய அரசியலமைப்புச் சபை ஒன்றின் மூலமாக புதிய அரசியலமைப்பு வரையப்பட வேண்டும்.

யாப்பு உருவாக்கமும் நடைமுறைப்படுத்தலும்

யாப்பு உருவாக்கத்திலும் அதனை நடைமுறைப்படுத்துவதிலும் இலங்கைக்கு ஆரோக்கியமான வரலாறு இல்லை. இதுவரை மூன்று யாப்புக்கள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் நான்காவது யாப்பொன்றை வரையாமல் முன்செல்ல முடியாது என்ற நிலைக்கு இலங்கை வந்திருக்கின்றது. முன்னைய யாப்பு உருவாக்கங்களின் போது யாப்பு உருவாகத்துக்குத் தேவையான கொள்கைகளும் பாரம்பரியங்களும் கருத்தில் கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த யாப்புகளில் பொது உடன்பாடுகளை விட அப்போது ஆட்சியிலிருந்த கட்சியின் தேவைக்கேற்பவே யாப்புகள் வரையப்பட்டன. இவை எதுவுமே மக்கள் மயப்படுத்தப்பட்டு மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றவைகள் அல்ல.

யாப்பினை கேலிக்குட்படுத்துவது தொடர்பில் இலங்கைக்கு தனித்துவமான இடம் இருக்கின்றது. யாப்புத் திருத்தத்துக்கான வாய்ப்புக்கள் எல்லாம் யாப்பிலுள்ள குறைகளைத் திருத்துவதற்கன்றி குறுகிய இலாபங்களை அடைவதற்கோ யாப்பினை மீறுவதற்கோ தான் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. நாட்டின் தலைமைகள் யாப்பினை மீறிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. அத்தோடு யாப்பினை மீறு வது பாரிய குற்றம் என்ற உணர்வு கூட இந்த நாட்டிலே இல்லை. சில மேட்டுக் குடிகளினால் அல்லது அரசியலமைப்புப் பேரவையின் அங்கத்த வர்களினால் வரையப்படும் யாப்பு தான் இலங்கையில் இன்றுவரையான யாப்பு உருவாக்க முறையாக இருக்கின்றது. பிரதமர் ரணில் முன்னெடுக்கவுள்ள யாப்புருவாக்க முறையும் இதை விட வித்தியாசமானதொரு முறையாக இருக்கப் போவதில்லை.

பங்களிப்பு யாப்புருவாக்கம்

முன்னைய யாப்புருவாக்க நடைமுறைகளை யாப்புருவாக்க நிபுணர்கள் காலாவதியான முறையாகவே நோக்குகிறார்கள். முன்னைய யாப்புருவாக்கத்தில் மக்கள் பங்களிக்க முடியுமான நேரடிச் செயற்பாடுகள் எதுவும் இருக்கவில்லை. யாப்பு உள்ளடக்கியுள்ள விடயங்களிலேயே கவனம் செலுத்தப்பட்டதேயன்றி யாப்பு உருவாக்கப்பட்ட முறையில் கவனம் செலுத்தப்படவில்லை. இது மிகவுமே இத்துப் போன ஒரு முறை என்றே நிபுணர்கள் கருதுகிறார்கள்.

தற்கால யாப்புருவாக்கச் செயற்பாடுகளில் மக்களின் பங்களிப்பு முக்கியமான நிபந்தனையாகக் கருதப்படுகிறது. அதேபோல யாப்பு உள்ளடக்கி யுள்ள விடயங்களைப் போலவே யாப்பு உருவாக்கப்பட்ட விதமும் முக்கியத்துவம் பெறுகிறது. ஜனநாயக அரசியல் யாப்பு என்பது இனிமேலும் ஜனநாயக ஆட்சிமுறையைக் கட்டியெழுப்புதலாக மட்டும் கருதப்படுவதில்லை. ஜனநாயக செயன்முறைக்குள் ஒழுங்கமைக்கப்பட்ட ஒன்றாகவே அரசியல் யாப்பு கணிக்கப்படுகிறது.

மக்களின் பங்களிப்புடனான அரசியல் யாப்பு உருவாக்கத்தில், அந்த மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற இனம், குலம், மதம், பால், தொழில் வர்க்கம் என அனைத்துத் தரப்பினரும் உள்வாங்கப்படுவது முக்கியமான நிபந்தனையாக அமைய வேண்டும். எந்தக் காரணத்தினாலும் ஏதேனுமொரு தரப்பு விடுபடுமாக இருந்தால் அதனால் வருகின்ற பாதிப்பை ஈடுசெய்வது சிரமமானதாகும்.

பங்களிப்புடனான யாப்புருவாக்கக் கோட்பாடுகள் தொடர்பான முன்னணி நிபுணரான பேராசிரியர் விவியன் ஹார்ட், 1789 இன் அமெரிக்க யாப்புருவாக்கம் தொடர்பில் முக்கியமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அமெரிக்க யாப்புருவாக்கத்தின் போது ஆபிரிக்க அமெரிக்கர்கள், ஆதிவாசிகள் மட்டுமன்றி அமெரிக்கப் பெண்களுடைய கருத்துக்கள் கூட கவனத்தில் கொள்ளப்படவில்லை. பிற்காலங்களில் இவர்கள் தமக்கான அங்கீகாரத்தைக் கோரியபோது அமெரிக்க யாப்பில் அதற்கான உடனடித் தீர்வுகள் எதுவும் இருக்கவில்லை.

அமெரிக்காவின் யாப்புருவாக்கச் செயற்பாடுகள் கடினமானதும் நீண்ட காலத்தை எடுப்பதாகவும் இருந்ததனால், இந்தப் பிரச்சினைகள் இன்று வரை முழுமையாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகளாகத் தொடர்கின்றன.

பங்களிப்பு யாப்புருவாக்கமே இன்றைய உலகில் நடைமுறைப்படுத்தப்படும் அதிக அங்கீகாரம் கொண்ட யாப்புருவாக்க முறையாக இருக்கின்றது. இது யாப்புருவாக்கச் செயற்பாடுகளின் முடிவுறாத பரீட்சார்த்த முயற்சிகளின் தொடராகவும் அமைகின்றது. நிகரகுவா, உகண்டா, பிரேஸில், தென் ஆபிரிக்கா, வட அயர்லாந்து, கென்யா, ருவாண்டா ஆகிய நாடுகளை மக்களின் பங்களிப்புடனான யாப்புருவாக்கத்துக்கான உதாரணங்களாகக் குறிப்பிடலாம். இந்த யாப்புருவாக்க முறை சர்வதேசத்தினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இன்னொருவகையில், நாட்டில் நடைபெறுகின்ற அரசியலமைப்பு உருவாக்கத்தில் ஆக்கபூர்வமான பங்களிப்புச் செய்வதற்கு மக்களுக்குள்ள உரிமை சர்வதேச சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இது மக்களுக்குக் கிடைத்துள்ள பறிக்க முடியாத உரிமையாகும்.

சர்வதேச சட்டம்

கனடாவின் மிக்மக் கோத்திரத்தினர் தாம் யாப்புருவாக்கச் செயற்பாடுகளில் உள்ளடக்கப்பட வில்லை எனத் தொடுத்த வழக்கில் மிக்மக் கோத்திரத்தினருக்கு யாப்புருவாக்கச் செயற்பாடுகளில் பங்குகொள்ளும் உரிமை இருக்கிறது என வழங் கப்பட்ட தீர்ப்பு (மார்ஷல் எதிர் கனடா CCPR/C43/D/205/1986 – 1991 Dec 03) இது தொடர்பான முதல் சட்டமாகக் கொள்ளப்பட முடியும்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உரை அதிகார சபை (Text Authority) யின் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான பிரகடனத்தின் 25 ஆவது பிரிவு யாப்புருவாக்கத்தில் மக்களுக்குள்ள உரிமையை குறித்துரைக்கிறது. பிரஜைகள் தமது அரசியலமைப்பை மாற்ற வேண்டும் எனத் தீர்மானிக்கும் சந்தர்ப்பங்களில் பொது விவகாரங்களை முன்னெடுக்கும் செயற்பாடுகளில் நேரடியாகப் பங்குகொள்கின்றனர் என அது குறித்துரைக்கிறது.

இது ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் உரிமைகள் தொடர்பான கோட்பாட்டுக்குள்ளால் அற்புதமாக மறைந்திருக்கிறது என பேராசிரியர் விவியன் ஹார்ட் குறிப்பிடுகின்றார்.  இது முறையாகப் பயன்படுத்தப்படாததாகவும் இன்னும் வளர்ச்சியடைய வேண்டியதாகவும் இருக்கின்றது.

கனடாவின் கியூபெக் பிராந்தியத்துக்கு சுய அதிகாரம் வழங்குவது தொடர்பில் 1998 இல் கனேடிய  நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் மக்களின் பங்களிப்பு யாப்புருவாக்கம் தொடர்பில் முக்கியமான சட்டமாகும். ஜனநாயகம் கனேடிய அரசியல் யாப்பின் அடிப்படை எனவும் அது தான் பிரதானமான அடிப்படை எனவும் இந்தத் தீர்ப்பு குறித்துக் காட்டுவதோடு, பங்களிப்பு அரசியலமைப்பு உருவாக்கமானது சட்ட ரீதியான ஜனநாயக யாப்புருவாக்கச் செயற்பாட்டின் முக்கியமான அடிப்படை எனவும் அந்தச் சட்டம் எடுத்துக் காட்டுகிறது.

யாப்புருவாக்கத்தின் போது அந்த நாட்டின் பொதுமக்களுக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்குவதற்குள்ள சட்டரீதியான உரிமையை உறு திப்படுத்தி அதனை நடைமுறைப்படுத்தக் கூடிய தாக இருக்க வேண்டும் என்பதுவே முக்கியமான இந்தத் தீர்ப்புகளுக்கும் வரைவிலக்கணங்களுக்கும் ஊடாக உறுதிப்படுத்தப்படுகிறது.

ஆனாலும் இது இலகுவான முறையல்ல. விவியன் ஹார்ட் கூறுவது போல, அரசியலமைப் பொன்று துறைசார் தகுதியுடைய பிரமுகர்கள் சிலரால் வரையப்படுகின்ற சட்ட மற்றும் கலைச் சொற்கள் அடங்கிய ஆவணமாக அமையும் போது அது தயாரிப்பதற்கு இலகுவானதாக அமையும். இதற்கெனச் செலவிட வேண்டிய காலமும் குறைவாக இருக்கும். ஆனால் அரசியல் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருடனும் மேற்கொள்ளப்படுகின்ற கலந்துரையாடல்கள் மூலமாக யாப்புருவாக்குவது இலகுவான பணியல்ல. அது சிக்கலானது. நீண்ட காலம் எடுக்கக் கூடியது.

ஆனாலும் நிலவுகின்ற பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமான அளவுக்கு அனைத்து கருத்து முரண்பாடுகளையும் முடிவுக்குக் கொண்டுவர முடியா விட்டாலும், அனைவரும் அமைதியாக ஒன்றாக வாழ்வதற்கு முடியுமான அரசியல் யாப்பினை உருவாக்கிக் கொள்வதற்கான சிறந்த வழி, பங்களிப்பு யாப்புருவாக்க முறைதான் என்று சொல்ல முடியும்.

இலங்கை தெரிவு செய்ய வேண்டிய வழி 

நாடும் சமூகமும் அரசும் அசாதாரணமான சிக்கலான குழப்பத்திலிருக்கிறது. சுதந்திரம் கிடைக்கும் போது நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டிய முக்கியமான நிபந்தனையை பூரணப்படுத்தாதனாலும், அதனால் விளைந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குத் தவறியதனாலும் சுதந்திரம் கிடைத்ததிலிருந்து வளர்ச்சியடைந்து வந்து தற்பொழுது உச்ச கட்டத்தை அடைந்திருக்கும் நெருக்கடியாகவே இலங்கை முகம் கொடுத்திருக்கும் நெருக்கடியைக் கருத முடியும். 1948 இல் நாம் பெற்றுக் கொண்ட சுதந்திரம், அதனைப் பெற்றுக் கொள்வதற்காக சமூகம் மேற்கொண்ட பலமான, திட்டமிடப்பட்ட சமூகச் செயற்பாட்டின் விளைவாகக் கிடைத்ததொன்றல்ல. நயவஞ்சகமான முறையில் பெறப்பட்ட சுதந்திரம், நாட்டை ஒருமைப்படுத்தும் அளவுக்குப் பலமான சமூக செயற்பாடாக இருக்கவில்லை. பலமான ஜனநாயக அரசியல் சமூகமொன்றை உருவாக்குவதற்கோ முதிர்ச்சியடைந்த அரசியல் தலைமைகளை உருவாக்குவதற்கோ உரிய காரணி யாக சுதந்திரம் அமையவில்லை. சமூகத்தில் நிலவிய இன, குல, மத, மொழி பேதங்களைக் களைந்து பொதுவான தேசிய நோக்குடன் தேசத்தை ஒன்று படுத்தவோ ஒற்றுமைப்படுத்தவோ சுதந்திரம் காரணமாக அமையவில்லை.

சுதந்திரத்துக்குப் பின்னர் வந்த எந்தத் தலை வரும் இன, மத, குல பேதங்களுக்கு உள்ள அங்கீ காரத்தை இல்லாதொழித்து தேசியத்தைக் கட்டி யெழுப்ப முயற்சிக்கவில்லை. சுதந்திரம் கிடைத்த தில் இருந்தே இலங்கை நெருக்கடிக்கு மேல் நெருக்கடியையே சந்தித்தது. இதன் விளைவாக நீண்ட கால யுத்தமும் இரத்தம் சிந்தும் நிலைமைகளும் தொடர்ந்தன. இவை முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னரும் கூட கடந்த காலத் தவறுகளைத் திருத்திக் கொண்டு நாட்டை முன்னேறச் செய்வதற்கான முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. இதன் விளைவாக நாடும் சமூகமும் இப்பொழுது வங்குரோத்து நிலையை அடைந்து தோல்வியுற்ற துயரமான நிலைக்கு ஆளாகியிருக்கிறது.

நாட்டின் அரசியல் யாப்பு தொடர்ந்தும் கையாடப்பட்டு வருவதனால் அது இனியும் பயன்படுத்தப்பட முடியாமல் நலிவுற்றிருக்கிறது. உயர்ந்த அந்தஸ்தில் வைத்து மதிக்கப்பட வேண்டிய அரசியல் யாப்புக்கு தாம் செய்த அநியாயங்களைப் பற்றி நாட்டின் எந்தத் தலைவரும் பச்சாதாபப்படுவதாக இல்லை. ஆனாலும் புதிய அரசியல் யாப்பொன்றுக்கான தேவையை அவர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்.

இருந்த போதிலும் இவர்கள் எவருமே தமது நிகழ்ச்சி நிரலின் முக்கிய அம்சமாக இதனை எடுத்துக் கொள்ளவில்லை. எதிர்நோக்கவுள்ள தேர்தலிலேயே அவர்கள் குறியாக இருக்கிறார்கள்.

கப்பல் தொலை கடலில் இருக்கிறது. கடலும் கொந்தளிப்பாக இருக்கிறது. கப்பலின் திசைகாட்டி மீண்டும் சீர்செய்ய முடியாத அளவுக்கு செயலிழந்திருக்கிறது என்பது மாலுமிக்குத் தெரிந்திருக்கிறது. இருந்த போதிலும் திசைகாட்டி இல்லா விட்டாலும் பயணத்தைத் தொடர்ந்து சென்று பயணம் முடிந்தபின் திசைகாட்டியைப் பற்றி யோசிப்போம் என்ற கருத்தி லேயே அனைவரும் இருக்கின்றனர்.

திசைகாட்டியின் வழிகாட்டலின்றிச் செல்லும் பயணத்தின் இடர்களைக் கருத் திற் கொண்டு திசைகாட்டியொன்றைப் பெற்றுக் கொள்ளும் வரை கப்பலின் பயணத்தை நிறுத்தி வைப்பது தான் சாலப் பொருத்தமானது என்பது இந்த மாலுமிகளுக்குப் புரிவதில்லை.

மக்களின் பொறுப்பு

புதிய யாப்பொன்றை உருவாக்கிக் கொள்வதற்கான வாய்ப்பை, மக்களுக்குத் தேவையென்றால் நாடு வீழ்ந்து கிடக்கும் அவல நிலையிலிருந்து மீட்டெடுப்பதற்கான பொன்னான சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். யாப்புருவாக்கச் செயற்பாடுகள் முன்னர் போல அரசியலமைப்புச் சபைக்கே மட்டுப்படுத்தப்படும் நிலைக்கு இடம் கொடாமல், மக்கள் மைய யாப்புருவாக்கச் செயற்பாடாக மாற் றியமைக்கப்பட வேண்டும். இது நாட்டையும் சமூகத்தையும் அரசாங்கத்தையும் முழுமையான மாற்றத்துக்குள்ளாக்குவதற்கு மக்களால் செய்யப்படுகின்ற அமைதியான, ஜனநாயக ரீதியான, ஆக்கபூர்வமான புரட்சியாக அமைய முடியும்.

நாட்டின் பொது அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து அரசியல் கட்சிகளுக்கு இருக்கும் சக்தியைத் தாண்டிய மக்கள் சக்தியைக் கொண்ட பொது அமைப்புக்களின் கூட்டமைப்பை உருவாக்கிக் கொள்ள முடியுமாக இருந்தால், அரசியலமைப்புச் சபையையும் இதனுடைய பங்குதாரராக மாற்றி அதனை மக்கள் யாப்புருவாக்கச் சபையில் மக்கள் தரப்புக்கு வழிகாட்டும் முக்கிய பொறிமுறையாகவும் மாற்ற முடியுமாக இருந்தால் அது இலங்கையின் மொத்த வடிவத்திலும் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வரும் யாப்புருவாக்கமாக அமைய முடியும்.

தற்பொழுது நாட்டின் அனைத்து அரசியல் தலைவர்களும் மக்களின் நம்பிக்கையை முழுவதுமாக இழந்து, புத்தி பேதலித்துப் போயிருக்கிறார்கள். வெளியில் சொல்லாவிட்டாலும் நாடு இன்று அடைந் துள்ள இழிநிலைக்கு தாங்களும் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்கள் என்பதனை அவர்களும் அறிந்தே இருக்கிறார்கள். கறை படிந்த அரசாங்கத்துக்கு தாங்களே காரணமானவர்கள் என்பதையும் அவர்கள் அறிவார்கள். நாட்டு நிலைமைகள் கட்டுமீறிச் சென்றிருப்பதையும் அவர்கள் அறிந்து  தான் வைத்திருக்கிறார்கள்.     

அரசியலமைப்புப் பேரவையையும் ஒதுக்கி விடாமல், அதிகமான அதிகாரத்தை மக்களுக்கு வழங்கும் யாப்புருவாக்கத்துக்கு விருப்பமின்றியேனும் இணங்கிச்  செல்வதைத் தவிர அரசியலமைப்புப் பேரவைக்கோ அரசியல் கட்சிகளுக்கோ வேறு வழிகள் இல்லை. உண்மையான அரச அதிகாரம் தமக்கன்றி மக்களுக்கே இருக்கிறது என்பதனை அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். யாப்பு என்பது ஆளும் தரப்பும் ஆளப்படும் தரப்பும் செய்து கொள்கின்ற ஓர் உடன்படிக்கை. இலங்கையின் அரசியல் சூழலில் நிறைவேற்றதிகாரத்தின் தலைவரும் அரசியலமைப்புப் பேரவையின் அங்கத்தவர்களும் ஆளும் தரப்பினராகக் கருதப்படுகின்றனர். அதனால் மக்களை ஆக்கபூர்வமாகச் சம்பந் தப்படுத்தும் யாப்புருவாக்கச் செயற்பாட்டினை எதிர்க்கும் வல்லமை அவர்களுக்கு இருக்க முடியாது.

பொது அமைப்புக்கள் மாவட்ட மட்டத்திலும் மாகாண மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் ஒன்றிணைந்து பொது அமைப்புக்களின் கூட்டமைப்பொன்றை உருவாக்கி, மக்களுக்குக் கிடைத்திருக்கின்ற இந்த வரலாற்றுத் தருணத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தால், இதனால் யாப்புருவாக்கச் செயற்பாட்டில் பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இதனால் தேசியத்தைக் கட்டியெழுப்ப முடியும். அனைவரும் மதிக்கக் கூடிய நவீன அரசொன்றைக் கட்டியெழுப்ப முடியும்.

மோசடிக்கும் பாரபட்சத்துக்கும் திறமையின்மைக்கும் இடமில்லாமல், மக்களின் அதிகாரத்தினைப் பிரயோகிப்பதற்குள்ள உரிமையை, தேர்தலின் போது வாக்களிக்கின்ற குறுகிய சட்டகத்துக்குள் மட்டுப்படுத்தாமல் அரச நிர்வாகத்தில் மக்களும் பங்கு கொள்வதற்கு இடமளிக்கின்ற அரசியலமைப்பொன்றை உருவாக்குகின்ற  நவீனமுறை யாப்பொன்று தயாரிக்கப்பட வேண்டும்.

நாட்டின் புத்திஜீவிகளும் பொது அமைப்புக்களும் இது தொடர்பில் ஆழமாகச் சிந்திக்கின்ற நிலைக்கு வர வேண்டும்.

About the author

Administrator

Leave a Comment