உள்நாட்டு செய்திகள்

திகன முஸ்லிம்கள் மீதான வன்முறை: மனித உரிமை அறிக்கை இதுவரை வெளிவரவில்லை

Written by Administrator

கண்டி, திகன பிரதேசங்களில் முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீது இதுவரை நீதி நிலைநாட்டப்படாமை குறித்து பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

குறித்த தாக்குதல்கள் STF மற்றும் பொலிசாரின் உதவியுடனேயே நடத்தப்பட்டதாக தாக்குதலுக்குள்ளான பலரும் நேரடிச் சாட்சியமளித்துள்ளனர். அரசாங்கத் தரப்பில் முறைப்பாடு செய்தும் பலன் கிடைக்காதததால் அவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் முறையிட்ட போதும் இதுவரை அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

2018 மே மாதத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 03 நாள் கள விஜயமொன்றை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களிடம் தகவல் திரட்டியது. இந்தத் தகவலை வைத்து கடந்த ஜூலை மாதம் அறிக்கை வெளியிடப்படும் என மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்திருந்தது. ஆனாலும் 10 மாதங்கள் கடந்த பின்னும் இந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருப்பது குறித்து பிரதேசவாசிகள் அச்சத்தையும் அவநம்பிக்கையையும் வெளியிட்டு வருகின்றனர். இது தொடர்பில் மீள்பார்வை மனித உரிமைகள் ஆணைக்குழுவைத் தொடர்பு கொண்டு கேட்ட போது மாவனல்லை அறிக்கையையும் சேர்த்து விரைவில் வெளியிடுவதாகத் தெரிவித்தனர்.

மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட அனைத்துத் தரப்பினராலும் முஸ்லிம்களுக்கான நீதி மறுக்கப்பட்டு வருவதையிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி (TNPF) யின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜெனீவாவில் நடைபெற்ற 40 ஆவது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் குறிப்பிட்டிருந்தார். இவருக்கு முன்னதாக இலங்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்பித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் மிஷல் பாச்லே, சிங்கள பௌத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் முஸ்லிம்களின் உடைமைகள் மீதும் வணக்கஸ்தலங்கள் மீதும் தாக்குதல் நடத்தினர் என்று குறிப்பிட்டிருந்தார்.

தாக்குதல் நடந்து சில தினங்களில் கண்டிப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த வன்முறைகளுக்குப் பின்னால் உள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார்.

About the author

Administrator

Leave a Comment