உள்நாட்டு செய்திகள்

பிறை ஆலோசனைக் குழுவின் பணிகள் மந்த கதியில்

Written by Administrator

கடந்த வருடம் நோன்புப் பெருநாள் தினத்தை தீர்மானிப்பதில் ஏற்பட்ட குளறுபடிகளைத் தொடர்ந்து முஸ்லிம் சமய விவகார அமைச்சரினால் நியமிக்கப்பட்ட பிறை ஆலோசனைக் குழு தனது பணியைத் தொடர்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிகிறது.

கடந்த வருடம் நோன்புப் பெருநாளைத் தொடர்ந்து பிறை விவகாரத்தில் ஆலோசனை வழங்குவதற்காக 07 பேர் கொண்ட உயர்பீடமொன்று முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.எம்.ஹலீமினால் நியமிக்கப்பட்டது. இதில் அமைச்சின் சார்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அஷ். மலிக், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி, பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத், பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.முபாரக், கொழும்பு பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் சட்டத்தரணி நத்வி பஹாஉதீன், பிறைக் குழுத் தலைவர் அஷ்ஷெய்க் அப்துல் ஹமீத் பஹ்ஜி, வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். யாஸீன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவினர் தீர்மானமெடுப்பதையும் நடைமுறைப்படுத்துவதையும் இலகுபடுத்துவதற்குமாக முன்னர் பிரேரிக்கப்பட்ட 15 பேர் கொண்ட குழுவுக்கான அங்கத்தவர்களும் தற்பொழுது நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவில் இருந்து 05 பேரும், கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இருந்து ஐந்து பேரும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திலிருந்து 05 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர இந்த ஆலோசனைக் குழு தனது இரண்டாவது கூட்டத்தை நடத்துவதற்கு திகதி குறிக்கப்பட்ட போதும் அங்கத்தவர்கள் நேரம் ஒதுக்குவதில் ஏற்பட்ட தடங்கலினால் கூட்டம் நடத்தப்படவில்லை எனத் தெரிகிறது. முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரமழான் மாதத்தின் தலைப்பிறையை தீர்மானிப்பதற்கான காலம் நெருங்கி வரும் நிலையில் பிறை ஆலோசனைக் குழுவின் செயற்பாடுகள் இன்னும் மந்த கதியிலேயே நடைபெற்றுவருவதாகத் தெரிகிறது.

About the author

Administrator

Leave a Comment