Features சமூகம்

கல்முனை-சாய்ந்தமருது பிரிவு பிரச்சினையா? தீர்வா?

Written by Administrator

தொகுப்பு: பி.எம். முஜீபுர் ரஹ்மான்

கிழக்கு மாகாண அரசியலில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியல் எப்போதும் எரிந்து கொண்டே இருக்கிறது. ஆரம்ப காலங்களில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதிக்கம் தலைவிரித்தாடியது. தனிக்காட்டு ராஜாவாக வீரநடை போட்டுக் கொண்டிருந்தது. அது பல கிளைகளாக பிரிந்து சென்றது. அதில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அங்கு கால் பதித்துச் செல்கிறது. இந்நிலையில் இவை இரண்டுக்கும் அப்பால், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தனது நிலையை உறுதிப் படுத்திக் கொண்டு செல்கிறது.

இந்நிலையில் கல்­முனை மாநகர சபை எல்லையில் மீண்டும் அரசியல் புயல் உக்­கி­ர­மாக வீசத் தொடங்­கி­யுள்ளது. இதனால், செல்வாக்கோடு இருந்த முஸ்லிம் காங்­கி­ரஸ் சில சவால்களை எதிர்கொள்கிறது. அதாவது, கல்­முனை மாந­கர சபை­யி­லி­ருந்து பிரித்து சாய்ந்த மருதுக்கு தனியான பிரதேச சபை வழங்கப்பட வேண்டும் என்று சாய்ந்­த ­ம­ருது மக்கள் போராட்டம் நடாத்துகிறார்கள்.

மறு­பு­றத்தில் கல்­முனை பிர­தேச செய­ல­கத்­தி­லி­ருந்து பிரித்து தனியான அதி­கா­ர­மு­டைய பிர­தேச செய­ல­க­ மொன்று தரப்­பட வேண்­டு­மென்று தமி­ழர்­களும் கிளர்ந்­தெ­ழுந்து கொண்­டிருக்­கின்றார்கள். இவைகளுக்கு அப்பால் இவ்வாறு பிரிக்கப்படும்போது கல்முனை முஸ்­லிம்­களின் செல்வாக்கில் பாரிய பின்­ன­டை­வு­கள் ஏற்படும் என்று இன்னுமொரு சாராரும் கருத்துத் தெரிவிக்கின்றனர். இவைகள் யாவும் ஒன்­றுடன் ஒன்று பிணைந்­துள்­ளமை குறிப்­பிடத்தக்­கது.

சாய்ந்தமருது தனிப் பிரதேச சபை

சாய்ந்தமருது, அம்பாறை மாவட்டத்தில் கல்முனை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள பிரதேசமாகும். 6.5 சதுர கிலோ மீற்றர் பரப்பைக் கொண்ட இப்பிரதேசம், பதினேழு கிராம சேவையாளர் பிரிவைக் கொண்டுள்ளது. இங்கு சுமார் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொகை வாழ்ந்து வருகிறார்கள். மேலும், 20  ஆயிரத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

இப்பிரதேசத்தில் ஒரு மாவட்ட வைத்தியசாலை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், 3 வங்கிகள், 9 பாடசாலைகள், ஒரு கோட்டக் கல்வி அலுவலகம், தனியான பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், ஒரு தபால் நிலையம், 3 உபதபால் நிலையங்கள், சந்தைத் தொகுதி, வர்த்தக நிலையங்கள், பொது நூலகம், தொழில் பயிற்சி நிலையங்கள், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் மீன்பிடித் துறைமுகங்கள் என்பன காணப்படுகின்றன.

சாய்ந்தமருது மக்கள் நீண்டகாலமாக தங்களுக்கு தனியான பிரதேச சபை கோரிக்கை முன்வைத்துக் கொண்டிருக்கி றார்கள். அதாவது, ஆங்கிலேயர் காலத்தில் ‘கரவாகுப்பற்றுக்கு கிராமசேவகர் பிரிவுகளுக்கு இலக்கமிடப்பட்டபோது  சாய்ந்தமருதுக்கு கே.பி. 47 தொடக்கம் கே.பி – 53 வரையான ஏழு குறிச்சிகளையும், 1928 இல் உள்ளடக்கி ‘கரைவாகு தெற்கு கிராம சபை’ உருவாக்கப்பட்டு 10 வட்டாரங்களாகவும் பிரிக்கப்பட்டு இருந்தன.

இது 1987 இல் கொண்டு வரப்பட்ட பிரதேச சபைகள் சட்டத்தின் பின்பே கல்முனையோடு இணைக்கப்பட்டு கல்முனை பிரதேச சபையின் எல்லைக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால், 1999 ஆம் ஆண்டு ‘பிரதேச சபைகள் திருத்த சட்டமூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் ‘சாய்ந்தமருதுக்குத் தனியான பிரதேச சபையை ஏற்படுத்தித் தர வேண்டும்’ என்று கோரினார்.

அதேநேரம், சாய்ந்தமருதை விட குறைந்த சனத்தொகை, வாக்குகளைக் கொண்ட லகுகலைக்கு பிரதேச சபை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், காரைதீவு, நாவிதன்வெளி போன்ற பிரதேசங்களுக்குக் கூட பிரதேச சபை வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால், சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை வழங்குவதில் என்ன பிரச்சினை இருக்கிறது?

யாருக்கும் அநீதி இழைப்பதற்காகவோ எவருடையதும் உரிமைகளையும் தட்டிப்பறிக்கும் நோக்கிலோ சாய்ந்தமருது மக்கள் உள்ளூராட்சி சபையைக் கோரவில்லை என்று சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் தெரிவித்தார்.

அதேபோன்று இலங்கையில் உள்ள பிரதேச செயலகங்களில் உள்ளூராட்சி சபை இல்லாத பிரதேச செயலகத்தைக் கொண்ட பிரதேச செயலகம் என்றால், அது சாய்ந்தமருது பிரதேச செயலகம் தான் என்றும் சிறிய சிறிய ஊர்களுக்கும் பிரதேச சபைகள் இருக்கின்றபோதிலும் இந்த பெரிய ஊருக்கு உள்ளூராட்சி           சபை இல்லாதது கவலையானதும் அநீதியானதுமான விடயமாகும் என்றும் தெரிவித்தார்.

சாய்ந்தமருது மக்களின் உள்ளக் குமுறல்களை அரசாங்கமும் அரசியல்வாதிகளும் உதாசீனம் செய்துள்ளதாகவும், அவர்களது கோரிக்கைக்கு விரைந்து நிவாரணமளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பிரிவு சமூகத்திற்கு பாதிப்பே

சாய்ந்தமருதை தனியாகப் பிரித்துக் கொடுப்பதில் கல்முனை பிரதேசத்திற்கு பாரிய பிரச்சினைகள் இருக்கின்றது. அதாவது, முன்னைய உள்ளூராட்சி சபையில் கரைவாகு வடக்கு, கரைவாகு மேற்கு என்றிருந்த போது தாழவெட்டுவான் சந்தியிலிருந்து தான் அந்தப் பிரிப்பு இருந்ததென்பது மருதமுனை, கல்முனை மக்களுக்கு நன்கு தெரியும்.

ஆனால், இவ்வாறான பிரிப்பு சம்பந்தமான பகிரங்கமான பிரேரணைகள் கோரப்படுகின்ற போது, கடற்கரை பள்ளிவாசல் வீதியை அடிப்படையாக வைத்து பிரிக்கப்பட வேண்டும் என கல்முனை பிரதேச தமிழ் மக்கள் சில காலமாக சொல்லி வருகின்றனர். இதன் மூலம் கல்முனை நகரம் துண்டாடப்பட்டு விடும். முஸ்லிம்களுடைய ஆதிக்கம் பாதிக்கப்படும் என்ற ஒரு பிரச்சினை உருவானால், பிரிப்பு என்பது சாத்தியமாகாது.

கல்முனை நகரத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். இங்கு 70 ஆயிரம் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். ஆனால், சாய்ந்தமருதை தனியாகப் பிரித்துச் சென்றால், முஸ்லிம்களின் சனத்தொகை சுமார் 40 ஆயிரமாக குறைந்துவிடும். ஆகவே, சாய்ந்தமருதை தனியாகப் பிரித்துக் கொள்வதினால் கல்முனை மாநகர சபையின் அரசியல் அதிகாரம் முஸ்லிம்களிடம் இருந்து பறிபோய்விடும்.

மேலும், 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபை அமைத்தல் தொடர்பான சட்டத்தில், பிரிப்பதில் பல சட்டப் பிரச்சினைகள் இருக்கின்றன. அதாவது, மாநகர சபையில் இருந்து பிரியும்போது அதன் ஒழுங்கில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. அதனால் இப்பிரதேசம் மற்றும் அயல் பிரதேசங்கள் மேலும் பிரிந்து காணிகள், நிலங்கள் துண்டாடப்படும் நிலை ஏற்படும்.

தமிழர்களின் நிலைப்பாடு

கடந்த 26 ஆம் திகதி கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது விவகாரம் தொடர்பாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன கொழும்பில் கூட்டிய கூட்டத்துக்கு மு.கா. மற்றும் அ.இ.ம.கா. மட்டுமே அழைக்கப்பட்டன. ஆனால் அப்பிரதேசத்தினுள் வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளை அழைக்காதது வேதனைக்குரியது.

கல்முனை மாநகர சபை விவகாரம் தனியே முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. இதில் தமிழர்களுக்கும் சம்பந்தமிருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது. ஒருவேளை கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருது தனியான நகரசபையாக பிரித்து உருவாக் கப்படுமானால் ஏனைய பிரதேசங்கள் அனைத்தும் இணைந்து ஒரு தனியான மாநகர சபையாக இருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. இதனை 03, 04 ஆக கூறுபோட அனுமதிக்க முடியாது.

சாய்ந்தமருதுக்கு நகரசபை பிரித்துக் கொடுப்பதில் தமிழர்களாகிய எமக்கு எவ்வித ஆட்சேபனையுமில்லை. சாய்ந்தமருதில் தனி முஸ்லிம்களே வாழ்கிறார்கள். ஒரு காலத்தில் தமிழர்களும் அப்பிரதேசத்தில் வாழ்ந்தார்கள். அவர்கள் வாழ்ந்த தடயங்கள் யாவும் அழிக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளன. எனினும் கல்முனையில் இன்னமும் தமிழ் மக்கள் அவற்றையெல்லாம் மறந்து சகோதர முஸ்லிம் மக்களுடன் ஐக்கியத்துடன் தான் வாழ்ந்து வருகிறார்கள். கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குஞ்சித்தம்பி ஏகாம்பரம் தெரிவித்தார்.

மைத்திரியை ஜனாதிபதியாகவும் ரணிலை பிரதமராகவும் கொண்டு வந்தவர்கள் தமிழர்களே. தற்போதைய அரசாங்கத்தை தாங்கிப் பிடிப்பவர்களும் தமிழ் தரப்பினரே. எனவே இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலேயே கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்திக் கொள்ள சிறந்த சந்தர்ப்பமாகும். சம்பந்தர் ஐயா இதை நிச்சயம் தரமுயர்த்தித் தருவார் என கல்முனை தமிழ் மக்களுக்கு கடந்த தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை.

ஐ.தே.மு. அரசாங்கத்துக்கு த.தே.கூட்டமைப்பு தொடர்ந்தும் முட்டுக் கொடுத்து வரும் நிலையில் அதிகாரம் மிக்கதாக கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை இப்போதும் வென்று தர முடியும். கல்முனை தமிழ் பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டு 30 வருடங்கள் கடந்துள்ளன.

நிதி, நிர்வாகம், காணி ஆகியன சம்பந்தப்பட்ட அதிகாரங்கள் மட்டுமே இதற்கு இல்லை. இவையும் கிடைத்தால் இது பூரணத்துவம் அடைந்து விடும். கல்முனை தமிழப்பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படாமல் இருப்பது தமிழருக்கு மாத்திரமன்றி முஸ்லிம்களுக்கும் பாதிப்பாகவே உள்ளது. அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார்.

இது ஒரு ஆபத்தான விடயம். எனவே, இதை மிகவும் பொறுப்புணர்ச்சியோடு கையாள வேண்டிய கடப்பாடும், தார்மீகப் பொறுப்பும் அரசியல் தலை மைகளுக்கு இருக்கின்றது. இதை மனதில் நிறுத்தியவர்களாகத்தான் இப்பிரச்சினைகளை அணுக வேண்டும். இது ஊர் சார்ந்த பிரச்சினையாக மாத்திரம் பார்க்கப்படுகின்ற போது, உணர்ச்சிபூர்வமான விடயமாக மாறி விடுகிறது. மாறாக, இப்பிரச்சினையை பிரதேசம், சமூகம், எதிர்கால சந்ததியினர் என்றே சிந்திக்க வேண்டும். இதனை சுமுகமாக தீர்த்து வைப்பதற்கு முஸ்லிம் அரசியல் கட்சிகள் பிரதேச பிரமுகர்களோடு திறந்த கலந்துரையாடல்களை மேற்கொண்டு தீர்வினை நோக்கி நகர்வதே சிறந்த வழிமுறையாகும்.

About the author

Administrator

Leave a Comment