உலக செய்திகள்

இஸ்ரேல் காஸா மீது வான் தாக்குதல்

Written by Administrator

இஸ்ரேல் காஸா மீது வான் வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதோடு, காஸா – இஸ்ரேல் எல்லையில் மேலதிகப் படையினரைக் குவித்துள்ளது. தலைநகர் டெல்அவிவுக்கு காஸாவிலிருந்து அனுப்பப்பட்ட ஏவுகணைகளுக்கு பலமாக பதிலளிக்கப்படும் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.

டெல் அவிவில் வீழ்ந்த ஏவுகணையினால் 7 இஸ்ரேலியர்கள் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் மேற்கொண்ட பதில் தாக்குதல்களில் இரு பலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த திங்கள் (25.03.2019) இஸ்ரேல் 10 இற்கும் மேற்பட்ட ரொக்கெட் தாக்குதலை காஸா மீது நடத்தியது. இதில் ஹமாஸின் அரசியல் பிரிவுத் தலைவரான இஸ்மாஈல் ஹனிய்யாவும் குறி வைக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், ஹனிய்யா தாக்குதலிலிருந்து தப்பியுள்ளார்.

கடந்த 4 மாதங்களில் இஸ்ரேல் மேற்கொண்ட மிகப் பெரிய தாக்குதல் இது என்று கருதப்படுகின்றது. இதேவேளை, ஐந்தாண்டுகளுக்கு முன்பாக ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை இது ஒத்திருக்கின்றது எனவும் இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஐந்தாண்டு கால இடைவெளியில் மிக நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை ஹமாஸ் இம்முறை பயன்படுத்தியுள்ளது. எதிர்வரும் சில நாட்களில் இஸ்ரேல் பொதுத் தேர்தலுக்குச் செல்லவுள்ள நிலையிலேயே காஸா மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

பத்தாண்டுகள் பிரதமர் பதவியிலிருந்த நெடன்யாஹு தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில் அமெரிக்காவுக்கான தனது விஜயத்தையும் ரத்துச் செய்துள்ளார். ஏற்கனவே அவர் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள நிலையில், காஸா மீதான அவரது யுத்தம் தேர்தல் பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்தப்படக் கூடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இம்முறை ஹமாஸ் 120 கி.மீ. தூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணையைப் பயன்படுத்தியுள்ளமை இஸ்ரேலின் போருக்கான நியாயமாக முன்வைக்கப்படுகின்றது. 2007 ஆம் ஆண்டு காஸாவை முழுமையாக ஹமாஸ் கட்டுப்படுத்திய பின்னர், இஸ்ரேல் காஸா மீது தாக்குதல்களை ஆரம்பித்தது. கடந்த நவம்பரில் எகிப்தின் மத்தியஸ்தத்தோடு இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியமை குறிப்பிடத்தக்கது.

About the author

Administrator

Leave a Comment