Features சமூகம் சாதனையாளர்கள்

சமாதானத் தூது விட்டு பெரும்பான்மையினர் மனம் கவர்ந்த கண் கட்டு வித்தகர் ரியாத்

Written by Administrator
  • அனஸ் அப்பாஸ்

அப்துல் ஜலீல் மகர்வான் – உதுமான்லெப்பை ஜுனைதீன் தம்பதிகளின் அன்புப் புதல்வர் J.M. ரியாத் அவர்கள் கிண்ணியா, குட்டிகராச்சை சேர்ந்தவர். இரண்டு மூத்த சகோதரிகள், இரண்டு மூத்த சகோதரர்கள், ஒரு தம்பி ஆகிய உடன்பிறப்புக்களை கொண்ட இவர், கிண்ணியா மத்திய கல்லூரியினதும், அலெக்ஸா கல்லூரியினதும் பழைய மாணவர். Tourism Management கற்கையை தற்போது தொடர்ந்துவரும் இவர், இலங்கை சுயாதீன தொலைக்காட்சி சேவையின் (ITN) தேசிய மட்ட “Youth With Talent” பிரபல்யமான திறன்வெளிப்படுத்தல் Season-3 (3rd Generation) போட்டியில் பங்குபற்றி மத்தியஸ்தர்களையும், பார்வையாளர்களையும் பிரம்மிக்க வைக்கும் கண்கட்டு வித்தைகளை வித்தியாசமான அணுகுமுறைகளில் வெளிப்படுத்தி, அனைவரது ஆதரவுடனும் அரை இறுதி (Semi-Final) வரை வெற்றிகரமாக முன்னேறி தற்போது இறுதிச் சுற்றுக்கு (Top 6 இல் ஒருவராக) தெரிவாகி இருக்கின்றார்.

தனது அதீத முயற்சியால் பார்வையாளர்களையும், மத்தியஸ்தர்களையும் கவர்ந்து Golden Buzzer பெற்ற சந்தோஷத்தில் இருக்கும் இவர், இந்நிகழ்ச்சியில் Emerging Talent of the Day – Winner அங்கீகார சான்றும் வென்றுள்ளார்.

கண் கட்டு வித்தை என்றால்..??

நாம் சிறு வயதில் சர்க்கஸ், பொருட்காட்சி, விழாக்கள் போன்றவற்றில் மாயா ஜாலக் காட்சிகளைப் பார்த்திருக்கிறோம். தொலைக்காட்சி வந்த பிறகு அதிலும் பல ‘மெஜிக்’ தந்திரக் காட்சிகள் வந்தன. வடமொழியில் இந்திர ஜாலம் என இது அழைக்கப்படுகின்றது. தமிழில் இதற்குக் கண்கட்டு வித்தை என்று பெயர். ஆனால் அதிலும் வித்தை என்பது சம்ஸ்கிருதம்! மாயாஜால தந்திரக் காட்சிகள் என்றால் எல்லோருக்கும் இலகுவில் புரிந்துவிடும், எல்லோருக்கும் அதிகம் பிடிக்கும்.

திறன் வெளிப்பாடு

இந்தத் திறனுடன்தான் ரியாத் “Youth with Talent” நிகழ்ச்சியில் ஒவ்வொரு முறையும் பல்வேறு விலங்குகளை தனது மாய வித்தைகளில் பயன்படுத்தி பலரையும் பிரம்மிக்க வைத்திருந்தார். மத்தியஸ்தர்களில் ஒருவராக வருகை தந்திருந்த இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கருத்து தெரிவிக்கையில், இவர் ஒரு மிருகக் காட்சிசாலை என்றார் சிரித்தவாரே. “விலங்குகளை அடைத்து வைக்க வேண்டாம், அவற்றை சுதந்திரமாக விடுங்கள்” #CageFreeLife #SaveThem ஆகிய கோஷங்களை இவரது வித்தையின்போது காட்சிப்படுத்தினார். தேசியக்கொடியைக் காட்டி, பின்னர் அதற்குள்ளிருந்து சமாதானத்தின் சின்னமான புறாவை எடுத்து அதை அன்புடன் பறக்க விட்ட இவரது வித்தை அங்கு குழுமியிருந்த பெரும்பான்மை மக்களை பெரிதும் கவர்ந்தது. மத்தியஸ்தர் ஒருவர், தமிழ் பேசும் ஒரு முஸ்லிமான ரியாத் இந்த வித்தை மூலம் வெளிக்காட்டிய செய்தி தற்போதைய சூழலில் மிகவும் பெறுமதிமிக்கது, பாராட்டுக்குரியது என வாழ்த்தினார். இவர் கட்டாயம் இறுதிச் சுற்றுக்கு தகுதியானவர் என்றும் கூறினர்.

ஆரம்பத்தில் இலங்கையில் உள்ள கண் கட்டு வித்தகர்கள் தொடர்பில் ரியாத் அதிகம் தேடி இருக்கின்றார். அவர்கள் அனைவருமே பாரம்பரிய வித்தைகளை மாத்திரம் மேற்கொள்வதையே இவர் அவதானித்ததால், வெளிநாடுகளில் உள்ள புதிய வித்தைகளை கற்று அவற்றை தனக்கே உரிய பாணியில் நண்பர்களின் ஆலோசனைகளையும் உள்வாங்கி முயற்சித்ததன் விளைவே “Youth with Talent” Season-3 இல் மத்தியஸ்தர்களையும், பார்வையாளர்களையும் அதிகம் கவர்ந்ததற்காக Golden Buzzer ஐ வென்றிருக்கின்றார். இவர் Golden Buzzer வென்ற காணொளி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டிருந்தது. குறிப்பாக, சிங்கள மொழி மூலமான இந்த நிகழ்ச்சியில் இவர் சரளமாக தாய்மொழி தமிழிலேயே பேசியமை, அதனை மொழிபெயர்ப்பாளர் அழகாக மொழிபெயர்த்தமையும் வரவேற்கத்தக்கது.

கடந்த முறை “Youth with Talent” Season-2 வில் பங்குபற்றி அரை இறுதிச் சுற்றில் இவர் வெளியேற்றப்பட்டார். அதில் இவர் தனது காட்சிப்படுத்தும் முறையில் விட்ட குறைபாடுகளை நிவர்த்தித்ததன் பயனையே இப்பொழுது இறுதிச் சுற்றுக்கு தெரிவாகியதன் மூலம் காண்பதாக குறிப்பிடுகின்றார்.

க.பொ.த சாதாரண தரம் கற்கும் காலப்பகுதியிலேயே ஏனையவர்களை கவர்வதற்காக வித்தைகளை இவர் கற்க ஆரம்பித்துள்ளார். உலக அளவில் Famous Street Magician ஆக கலக்கிவரும் டைனமோவை இவர் தன்னை ஊக்கப்படுத்தும் முன்மாதிரி சக்தியாக குறிப்பிடுகின்றார்.  கண்கட்டு வித்தை (Magic) என்பது உண்மையா? பொய்யா? அது  சைத்தானை அல்லது ஜின் வர்க்கத்தினரை வசப்படுத்தி மேற்கொள்ளும் ஒன்றா? என்று பலர் தன்னை பார்த்தவுடனே கேட்பதாகவும், “மெஜிக் என்பது பொய்” என்பதே தனது நிலைப்பாடு என்றும் குறிப்பிடுகின்றார். “பொய் எனும்போது அது ஒரு ஏமாற்று வித்தை. அந்த வித்தை தெரிந்தால் யாரும் அதனை முயற்சிக்கலாம். சாதாரண ஒருவரின் அறிவு எப்படி யோசிக்கும் என்பதைத் தாண்டி ஒருபடி மேலே சென்று சிந்தித்தால் வித்தைகளை மேற்கொள்வது இலகு” என்று தனது வெற்றியின் இரகசியத்தையும் குறிப்பிடுகின்றார்.

அல்ஹம்துலில்லாஹ், தற்போது தனது 26 ஆவது வயதில் பயணிக்கும் ரியாத், இறைவனுக்கு முதற்கண் நன்றி தெரிவிப்பதுடன், அடுத்து பெற்றோருக்கும், நண்பன் பயாஸ், அன்சர் மாமா, சகோதர, சகோதரிகள், நண்பர்கள், கிண்ணியா மக்கள், நலன்விரும்பிகள், சமூக வலைதளங்கள் ஊடாக ஆதரவு தருவோர், வாக்குகளை தொடர்ந்து வழங்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றார்.

கண்கட்டு வித்தையைத் தவிர சித்திரக்கலையில் இவர் சிறந்து விளங்குகின்றார். குறிப்பாக, Micro Art மிகக் சிறிய பொருட்களில் வரைதலில் இவர் கெட்டிக்காரர் என்கின்றார். வீட்டுத்தோட்டம் செய்வதிலும் அதீத ஆர்வம் கொண்டவர்.

LUCK & KICK

“ஒவ்வொரு மனிதனுக்கும் Luck (அதிஷ்டம்) என்பது ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் வந்தமையும். அந்த Luck ஆனது சரியான நேரத்தில் வந்தமையுமானால் அது நமக்கு கிடைத்த ஒரு Kick” என ரியாத் கூறிய உற்சாக வார்த்தை அவருக்கு சரியாகப் பொருந்துகின்றது. சிறந்த உடற்கட்டும், கம்பீரமான குரலும், கண் கவர் காட்சிப்படுத்துகை திறனும் (Presentation Skill) இவர் இறுதிச் சுற்றில் வெற்றிபெறுவார் என்ற நம்பிக்கையை எமக்குத் தருகின்றது. என்றாலும் தன்னிடமுள்ள இறுதிப் போட்டிக்கான உத்தேச வித்தையை மேற்கொள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றார். தனக்கு ஒரு அனுசரணையாளர் கிடைத்தால் அனைவரும் மூக்கின்மேல் விரல் வைக்குமளவு பிரம்மிக்க வைக்கும் மாய வித்தை ஒன்றை மேற்கொள்ள ஆலோசித்து இருப்பதாகவும் கூறுகின்றார். 0753333117 என்ற இலக்கத்தில் அவரை தொடர்புகொள்ளலாம். இறுதிச் சுற்றின் முடிவுகள் பொதுமக்கள் வழங்கும் SMS ஆதரவின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதால், ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி நடைபெறும் நேரடி இறுதிச் சுற்றை தொலைக்காட்சி வழியே பார்க்க இப்பொழுதே ஆயத்தமாக இருங்கள். இவரது கண்கட்டு வித்தைகளை Youtube தளத்தில் இப்பொழுது நீங்கள் பார்க்கலாம். இவர் தன் வித்தைகளால் உங்களையும் கட்டிப் போட்டால் உடனே உங்கள் மொபைலில் “ITN YWT 08” என டைப் செய்து 9922 என்ற இலக்கத்துக்கு SMS செய்து வித்தகர் ரியாதை வெற்றிபெறச் செய்யுங்கள்.

About the author

Administrator

Leave a Comment