Features ஆசிரியர் கருத்து

அமைதியான புத்தாண்டை வரவேற்போம்

Written by Administrator

Editorial: 417

புத்தாண்டு என்றதுமே புத்துணர்ச்சி பிறக்கின்ற நாளாகத் தான் கொண்டாடப்படுகிறது. இலங்கையின் தேசிய நிகழ்வு என்ற வகையில் நாட்டு மக்கள் அனைவரும் இந்த நாளை திருநாளாகக் கொண்டாடுவது இதனுடைய சிறப்பம்சம்.

சித்திரைப் புத்தாண்டு காலத்தின் கடந்த கால கசப்பான சம்பவங்கள் மீட்டிப் பார்ப்பதற்குத் தக்கவையல்ல. ஓரினம் களிப்புற வேண்டுமென்றால் இன்னொரு இனத்தைக் குப்புற வீழ்த்தித் தான் அது நடக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்தவர்கள் சிலர் கடந்த கால புதுவருடக் கொண்டாட்டங்களை அர்த்தமற்றதாக மாற்றி விட்டனர். அடுத்த சமூகம் சந்தோஷமாகப் புத்தாண்டை அனுஷ்டிப்பதை இன்னொரு சமூகம் பார்த்துப் பரவசப்பட முடியாத அளவுக்கு சில புல்லுருவிகள் சமூகங்களுக்கு மத்தியிலே பிரிவினைகளை விதைத்தன.

சில வர்த்தகர்கள் புத்தாண்டுக் காலத்தில் தமது விற்பனையைப் பெருக்கிக் கொள்வதற்காக அடுத்தவனுடைய கடையை எரிப்பதற்கு இனவாதத்தை ஆயுதமாகப் பயன்படுத்தினர். இன்னும் சிலர் வாடிக்கையாளர்கள் தம்மை நோக்கி வர வேண்டும் என்பதற்கான வியாபார உத்தியாக அடுத்த சமூகங்களின் கடைகள் மீது காழ்ப்புணர்ச்சியை விதைத்து விட்டனர். வழமையான வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் சிலரும் சித்திரைப் புத்தாண்டாகும் போது தமது வியாபார நடவடிக்கைகளைச் சுருக்கிக் கொண்டு அச்சத்துடன் நாட்களைக் கடத்தினர்.

இம்முறைய சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் அமைதியானதொரு சூழலில் நகர்ந்து கொண்டிருக்கிறது. பெரிய ஆரவாரங்கள், எதிர்ப்புக் கோஷங்கள் இன்றி புத்தாண்டு எதிரே வந்து கொண்டிருக்கிறது. இந்தச் சூழலை சந்தோஷமானதாக மாற்றுவதற்கு சகல இனங்களையும் சேர்ந்த இலங்கையர்களும் பங்களிக்க வேண்டும்.

சந்தர்ப்பங்கள் வரும் போது அதனைத் தனது அரசியலுக்கும் வியாபார நோக்கத்துக்கும் இனவாத உணர்வுகளுக்கும் பயன்படுத்தும் மோசமான சக்திகளின் பிடிகளில் இருந்து மீண்டதாக இவ்வருட புத்தாண்டு அமைய வேண்டும். இதனை சாத்தியமாக்கும் பணி சாத்வீகமான மக்களின் கைகளில் தான் தங்கியிருக்கிறது.

அரசியல்வாதிகளின் கோஷத்துக்குச் சோரம் போகாமல், வியாபாரிகளின் விளம்பரங்களுக்கு அடிமைப்படாமல், இனவாதிகளின் நெருப்புக்கு தீனி போடாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் மகத்தான பொறுப்பை மக்கள் தான் நிறைவேற்ற வேண்டும். யாருடையதும் தூண்டு தலுக்கு அடிபணியாமல் சுயமாய்ச் சிந்தித்துச் செயல்படும் எந்தப் பிரஜையும் நாட்டுக்குத் தீங்கிழைக்கும் வகையில் நடந்து கொள்ள மாட்டான். அந்த வகையில் மோசமான சக்திகளின் தூண்டுதலுக்கு இரையாகாமல் மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொண்ட புதுவருடக் கொண்டாட்டமாக இம்முறைய கொண்டாட்டம் அமைய வேண்டும்.

அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் நல்லவர்களே. விஷம சக்திகளின் தூண்டுதல்கள் தான் மக்களை தவறான போக்குக்கு இட்டுச் செல்கின்றன. இம்முறைய புதுவருடக் கொண்டாட்டத்தில் அந்த விஷமச் சக்திகளுக்கு மக்கள் இடம் கொடுக்கவில்லை. ஆங்காங்கே சில சந்தர்ப்பங்களில் தூண்டல்கள் நடைபெற்றாலும் மக்கள் இம்முறை அவற்றைப் பொருட்படுத்தவில்லை. இது மக்கள் அடைந்த வெற்றி. அதனால் இந்த முறைய புத்தாண்டு அர்த்தமுள்ளதாகிறது. இதே விதமாக மக்கள் தொடர்ந்தும் ஒன்றுபட்டால் நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கும் சக்திகளிடம் இருந்து எல்லோருமாகச் சேர்ந்து நாட்டைக் காப்பாற்ற முடியும்.

அமைதியானதொரு புத்தாண்டினை அர்த்தமுள்ளதாக வரவேற்போமாக. 

About the author

Administrator

Leave a Comment