உள்நாட்டு செய்திகள்

மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் அமைக்க ஒப்பந்தம் கைச்சாத்து

Written by Administrator

மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் 100 மெகாவோட்ஸ் வலுவுடைய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கு மின்வலு, சக்திவலு மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சும் கெனடியன் கொமர்ஷியல் கோப்பரேஷன் (Canadian Commercial Corporation) நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

மின்சக்தி பிரச்சினைக்கு தீர்வளிக்கும் முகமாக குறைந்த செலவிலான புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி முறைகளை கையாளுவதற்கென மகாவலி பொருளாதார வலயங்களுக்குட்பட்ட நீர்த்தேக்கங்களில் மிதக்கும் சூரியசக்தி மின் நிலையங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் இதனூடாக செயற்படுதப்படவுள்ளது. இதற்கென ஜனாதிபதியின் பொறுப்பிலுள்ள மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சுடன், விஞ்ஞான தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு, மின்வலு, சக்திவலு மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சு ஆகியன முன்வைத்த பிரேரணைக்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

அதற்கமைய பல பிரதேசங்களில் நிர்மாணிக்கப்படும் இவ்வகையான மிதக்கும் சூரிய சக்தி மின் நிலையங்களினால் 2030 ஆம் ஆண்டளவில் இந்நாட்டு மின்சார தேவையின் 50 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க மின்சக்தியினால் பூர்த்திசெய்து கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன் முதலாவது வேலைத்திட்டம் மகாவலி வலயத்திற்குட்பட்ட மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த  சூரிய படல்கள் மற்றும் மின்சாரத்தை சேமிக்கக்கூடிய மின்கலங்களைக் கொண்டு சூரிய சக்தியை சேமிக்கும் செயற்திட்டம் Canadian Commercial Corporation நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த வேலைத்திட்டத்திற்கு நீர்த்தேக்கத்தில் 500 ஏக்கர் அளவிலான இடம்  பயன்படுத்தப்படவுள்ளது. இது அந்த நீர்த்தேக்கத்தின் நூற்றுக்கு 4 சதவீதத்தைவிட குறைந்ததாகும்.

இந்த செயற்திட்டத்தை துரிதமாக நிறைவுசெய்ய திட்டமிட்டுள்ளதுடன், முதலாவதாக 10 மெகாவோட்ஸ் மின்சாரத்தை இந்த ஆண்டு நம்பர் மாத இறுதியில் பூர்த்தி செய்வதற்கும் 2020 செப்டெம்பர் இறுதியில் 100 மெகாவோட்ஸ் மின் உற்பத்தியை அடைவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளன.

இதுவேளை மின்சாரத்தை சீராக வழங்குவதற்காக, 3 நாடுகளிலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

பிரித்தானியா, டுபாய், ஹொங்கொங் ஆகிய நாடுகளிலிருந்து மேலதிக மின்சாரத்தை 6 மாதத்துக்கு ​கொள்வனவு செய்வதற்கே அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

About the author

Administrator

Leave a Comment