உலக செய்திகள்

திரிப்போலி விமான நிலையத்தை தேசிய நல்லிணக்க அரசின் படையினர் கைப்பற்றினர்

Written by Administrator

திரிப்போலியின் சர்வதேச விமான நிலையத்தை ஹப்தர் தலைமையிலான லிபிய தேசிய இராணுவத்திடமிருந்து மீளக் கைப்பற்றியுள்ளதாக திரிப்போலியைத் தளமாகக் கொண்ட தேசிய நல்லிணக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது. தேசிய இராணுவம் கஸ்ர் பின் காஷிர் பகுதிக்கு பின்வாங்கிச் சென்றுள்ளது.

விமான நிலையத்தினுள் அல் ஹுர்ரா தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் கருத்து வெளியிடுகையில், திரிப்போலியின் தெற்குப் பிரதேசங்களின் பல இடங்களில் தாக்குதல்கள் தொடர்கின்றன எனவும், தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ள பிரதேசங்களிலிருந்து பொது மக்கள் தப்பியோடுவதற்கு முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஞாயிறு அன்று இரவு திரிப்போலிக்குச் சமீபமாக அரச ஆதரவுப் படைக்கும் லிபியத் தேசிய இராணுவத்திற்கும் இடையில் கடும் சமர் ஏற்பட்டது. 2014 ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற கடும் மோதல் இதுவென்று அறிவிக்கப்படுகின்றது.

லிபியத் தேசிய இராணுவம் தாக்குதல் நடத்தியது முதல் இதுவரை 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இத்தகவலை லிபிய சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தி யுள்ளது. பல இடங்களில் பொதுமக்கள் குறுக்குச் சமரில் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில் ஹப்தரின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது என உலமாக்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இத்தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று கட்டாரை தளமாகக் கொண்ட சர்வதேச உலமாக்கள் ஒன்றியம் கோரியுள்ளது.

இது ஆக்கிரமிக்கத்தக்க மோசமான வெறியாட்டமாகும். இதை எதிர்த்துப் போராட வேண்டும். சில அறபு நாடுகள் ஆதரவளிக்கின்ற ஹப்தர் லிபியாவில் குழப்பத்தை ஏற்படுத்த விளைகின்றார் என சர்வதேச உலமாக்கள் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய அமீரக மன்னர்கள் மற்றும் சில அறபு நாட்டு ஆட்சியாளர்கள் கலீபா ஹப்தருக்கு நிதியாதரவளித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

லிபியாவின் தேசிய நல்லிணக்க அரசாங்கம் அறபு நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கம் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

About the author

Administrator

Leave a Comment