உள்நாட்டு செய்திகள்

பலஸ்தீன் கைதிகளுக்கு ஆதரவாக இலங்கையில் கையெழுத்து

Written by Administrator

இம்மாதம் 17 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவிருக்கின்ற பலஸ்தீன் சிறைக் கைதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, இஸ்ரேலியச் சிறைகளில் வாடும் பலஸ்தீனக் கைதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கான கையெழுத்துக்களைத் திரட்டுவதற்கு இலங்கையிலுள்ள பலஸ்தீன தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.

பலஸ்தீன் தேசிய கவுன்சில் (PNC)  1974 இல் ஏப்ரல் 17 ஆம் திகதியை பலஸ்தீன கைதிகள் தினமாக அறிவித்தது. அவர்களது தியாகத்தை மதிக்கவும், அவர்களுக்கு ஆதரவளிக்கவும், அவர்களது நீதியான உரிமைகளை மதிக்கவும், அவர்களது குடும்பங்களுக்குத் துணையாக நிற்கவும் இந்தத் தினத்தை தேசிய தினமாக பலஸ்தீன தேசிய கவுன்சில் கருதுகிறது. அன்று முதல் இன்று வரை ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனிலும் அதற்கு வெளியிலும் பல்வேறு வழிகளில் இந்தத் தினத்துக்கு புத்துயிரூட்டப்படுகிறது.

சகல சர்வதேசச் சட்டங்களையும் மீறி சிறுவர்கள், வயோதிபர்கள், பெண்கள் எனப்பல தரப்பட்ட பலஸ்தீனர்களும் இஸ்ரேலியச் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தற்போது இவர்கள் புதிய மருந்துகளைப் பரிசோதித்துப் பார்ப்பதற்கான கருவிகளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

பலஸ்தீன் கைதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கான கையெழுத்துக்கள் திரட்டும் நிகழ்வு இம்மாதம் 16 ஆம் திகதி காலை 11. 00 மணிக்கு கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் 110ஃ10 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள இலங்கைக்கான பலஸ்தீன தூதரகத்தில் ஆரம்பமாகும். அன்று முதல் 18 ஆம் திகதி வரை காலை 10.00 மணிமுதல் பிற்பகல் 03.00 மணிவரை தூதரகம் இதற்கெனத் திறந்திருக்கும் என தூதரக அதிகாரி அஷ்.இர்ஷாத் தெரிவித்தார்.

About the author

Administrator

Leave a Comment