Features சமூகம்

வில்பத்து: மீள உயிர்ப்பிக்கப்படும் இனவாதம்

Written by Administrator
  • ஹெட்டி ரம்ஸி

சில காலங்களுக்கு முன்னர் வில்பத்து காடழிப்புக்கு எதிராகவென துவங்கப் பட்ட போராட்டத்திற்கு பெரும்பான்மைச் சமூகத்தில் பலத்த வரவேற்பு கிடைத்திருந்தது. ஆரம்பத்தில் வில்பத்து தேசிய சரணாலயம் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட முஸ்லிம்களால் அழிக்கப்பட்டிருப்பதாகக் கூறி போராட்டத்தை ஆரம்பித்தார்கள். அன்றைய வில்பத்து போராட்டத்தில் உட்பொதிந்திருந்த இஸ்லாமியப் பீதிக்கு (Islamophobia) எதிரான ஏராளமான விடயங்களை சில முற்போக்கு சிங்கள, முஸ்லிம் ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.

வில்பத்து தேசிய சரணாலய எல்லைக்குள் தமிழ், சிங்கள மக்கள் கலந்து வாழும் பூக்குளம் போன்ற கிராமங்கள் காணப்படும் விடயம் சுட்டிக்காட்டப்பட்டவுடன், அவர்களது போராட்டம் வில்பத்துவை அண்டிய வனப்பகுதிகளைப் பாதுகாக்கும் போராட்டமாக மாறியது. மக்களைக் குடியமர்த்தும் நடவடிக்கை புதிய குடியேற்றங்களல்ல, மீள்குடியேற்றம் என்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. போரின் காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் பூர்வீக நிலங்களுக்கான ஆதாரங்களும் அம்மக்கள் 24 மணிநேரத்தில் புலிகளால் ஆயுத முனையில் வெளியேற்றப்பட்ட விடயமும், அம் மக்களது நிலங்கள் 30 வருட காலத்தில் காடுகளால் மூடப்பட்டிருக்கும் விதமும் அதன் பின்னர் அரசு அம்மக்களின் நிலங்களை வனப் பாதுகாப்புப் பகுதியென பிரகடனப்படுத்திய நிகழ்வுகளும் சுட்டிக்காட்டப்பட்டன. சில காலம் பேசுபொருளாகாமல் காணப்பட்ட இவ்விடயம் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வில்பத்து வனப்பகுதியிலிருந்து 75 ஏக்கர் நிலத்தை வேண்டியிருப்பதாக முகநூல் பக்கங்களில் உலாவந்த செய்தியை அடுத்து மீண்டும்  பூதாகரமாகியுள்ளது.

இச்செய்தியில் பெரும்பாலானவை பிழையானவை. பொய்யான தகவல்கள் புனையப்பட்டே இக்கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. அமைச்சரினால் 75 ஏக்கர் வேண்டப்பட்டுள்ளதாகக் கூறும் எவரும் எவ்வித ஆதாரங்களையும் முன்வைக்கவில்லை. வனப்பாதுகாப்புத் திணைக்களத்தின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது வர்த்தக வாணிப அமைச்சு தொழிற்பேட்டையொன்றை உருவாக்குவதற்கு கொண்டச்சி பிரதேசத்திலிருந்து 25 ஏக்கர் நிலத்தை மாத்திரமே விடுவிக்குமாறு கோரியுள்ளது.

தற்போது காடுகள் இல்லாத 2013 இல் சுத்தப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து 25 ஏக்கர் காணியை வழங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வனப்பாதுகாப்பு திணைக்களம் உடன்பட்டுள்ளது. ஆனால் 75 ஏக்கர் காணி அழிக்கப்படுகிறது என்கின்ற கதை பொய்யானது. இத்தகைய பிரதேசத்தில் தொழிற்பேட்டை உருவாக்கப்பட வேண்டுமா? இல்லையா? என்கின்ற விடயம் தனியாகக் கலந்துரையாடப்பட வேண்டிய விடயமாகும்.

இப்பிரதேசங்களுக்கு தொழிற்பேட்டை அவசியப்படுவதில்லை என்றால் கொழும்பிலுள்ள சூழலியலாளர்கள் மன்னார், சிலாவத்துறை, முசலி போன்ற பிரதேசங்களில் தொழிலின்றிக் கிடக்கும் மக்களுக்கு தொழில்வாய்ப்புக்களை தேடிக்கொடுக்கும் திட்டமொன்றை ஆரம்பித்திருக்க வேண்டும்.

இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்துகையிலேயே இப்பிரச்சினைகள் மேலெந்துகொண்டிருக்கிறது. உண்மையில் இம்மக்கள் வில்பத்து தேசிய சரணாலயத்திற்குள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனரா? என்றால் இல்லை. வில்பத்து தேசிய சரணாலயம் புத்தளம் மாவட்டத்திலேயே அமைந்துள்ளது. மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியிலேயே இம்மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். வில்பத்து சரணாலயத்திற்கு நடுவால் சென்று இக்கிராமங்களை பார்த்தால் சுமார் 2 கிலோமீற்றர் தூரத்திலேயே இந்தக் கிராமங்கள் அமைந்துள்ளன.

வரலாற்றில் இந்தக் கிராமங்கள் வில்பத்து சரணாலயத்திற்கு உரித்தானவை என குறிப்பிடப்படவில்லை. பல்வேறு வரலாற்று ஆவணங்களிலும் கூட இந்தக் கிராமங்கள் அவற்றுக்கே உரிய பெயர்களாலேயே அழைக்கப்பட்டுள்ளன. உண்மையான வில்பத்து சரணாலயத்திற்கு நடுவில் புத்தளம் மாவட்டத்திற்கு உட்பட்ட சில   சிறிய கிராமங்கள் காணப்படுகின்றன. அவையொன்றும் முஸ்லிம் கிராமங்களல்ல. பூக்குளம் என்னும் தமிழ், சிங்கள கிராமம் இதற்கு நல்ல உதாரணமாகும். இந்தக் கிராமம் வில்பத்து சரணாலயத்திற்கு நடுவிலேயே அமையப்பெற்றுள்ளது. தற்பொழுதும் இங்கும் வீடமைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

தற்பொழுது சர்ச்சையை கிளப்பியிருக்கும் மீள்குயேற்ற நடவடிக்கை வில்பத்து தேசிய சரணாலயத்திற்குள் முன்னெடுக்கப்படவில்லை என்பது உறுதி. இங்குள்ள கிராமங்களின் எல்லையில் ஒரு வனப்பகுதி அமைந்துள்ளது. அதன் பெயர் விலத்திக்குளம் வனப்பகுதியாகும். யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்தக் கிராமங்கள் அமையப்பெற்றிருந்த காணிகளையும் விலத்திக்குளம் வனப்பகுதிக்குள் உள்ளடக்கி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

1990ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பின் தாக்குதல்கள் காரணமாக இங்குள்ள கிராமங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமது வாழ்விடங்களையும் கைவிட்டு விட்டு இடம்பெயர்ந்தார்கள். புத்தளம், குருநாகல், கொழும்பு போன்ற பகுதிகளில் பல்வேறு இன்னல்களையும் வலிகளையும் சுமந்து கொண்டு வாழ்க்கையை ஓட்டிவந்தார்கள். 30 வருடங் களின் பின்னர் அரசின் மீள்குடியேற்ற திட்டத்தின் அடிப்படையில் அம்மக்கள் தமது சொந்த நிலங்களுக்குச் சென்றபோது காடுகளால் நிரம்பப் பெற்ற வனப்பகுதியையே கண்டுகொள்ள முடிந்தது.

வனப்பகுதிக்குரிய பிரதேசம் எது? மக்கள் வாழ்ந்த பிரதேசம் எது? என்பதை அடையாளம் கண்டுகொள்ள வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் கூட முடியாமல் போனது. எனவே மக்கள் காடுகளை அழித்து மீள்குடியேறிக்கொண்டிருந்த வேளையில் மக்கள் வனப்பாதுகாப்பு பிரதேசத்திற்குரிய இடங்களையும் கைப்பற்றிவிடுவார்களோ என்ற அச்சத்தில் கிராமங்களுக்குரிய காணியையும் வனப் பகுதிக்குரிய காணியையும் உள்ளடக்கியதாக அரசு வர்த்தமானி அறிவித்தலை விடுத்திருந்தது.

2012 இல் அச்சிடப்பட்ட முறையான ஆவணங்களைத் தொடர்ந்து வனப்பாதுகாப்பு திணைக்களம் கிராமங்களுக்குரிய காணிகளை ஒன்றொன்றாக விடுவித்து வந்தது. வனப்பாதுகாப்பு திணைக்களத் திடம் விசாரித்தாலும் இந்தத் தகவல்களை முறையாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

30 வருடங்களாக இம்மக்களின் கிராமங்களில் அடர்ந்து வளர்ந்த மிகவும் பெறுமதியான மரங்களை அரச மரக் கூட்டுத்தாபனமே வெட்டியுள்ளது. சிங்களவர்களாலோ முஸ்லிம்களாலோ இங்கு காணப்பட்ட மரங்கள் வெட்டப்படவில்லை.

அரசுக்குச் சொந்தமான மரக்கூட்டுத்தாபனமே இந்த மரங்களை வெட்டியிருக்கிறது. இவ்விடயமும் கூட மஹிந்த ராஜபக்ஷவினது ஆட்சியின் போதே இடம்பெற்றிருக்கிறது. மக்கள் தத்தமது சொந்த இடங்களுக்கு வந்து சிறிய காடுகளை வெட்டித் துப்புரவு செய்து வீடுகளை நிர்மாணிக்கத் துவங்கினார்கள்.

சில வீடுகள் வெளிநாட்டு உதவியிலும் நிர்மாணிக்கப்பட்டன. வெளிநாட்டு உதவியில் கொண்டச்சி கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் சில சிங்கள மக்களும் குடியேறியுள்ளனர். இடம்பெயர்ந்த மக்களுள் பெரும்பாலானவர்களுக்கு தமது வீடுகளை கூட நிர்மாணித்துக் கொள்ள கஷ்டப்பட வேண்டியேற்பட்டது. ஏனெனில் இம்மக்கள் வேலைவாய்ப்புக்களற்ற வறிய மக்களாவர்.

முசலி பிரதேச செயலகம் வனப்பகுதிக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இப் பிரதேசத்திலுள்ள சிலாவத்துறை என்னுமிடம் இலங்கையிலேயே வறிய மக்களை அதிகம் கொண்ட பிரதேசமாகவும் அதிக வரட்சி கூடிய பகுதியாகவும் காணப்படுகின்றது. இக்கிராமத்தில் காணப்படும் பாரம்பரிய குளம் வரட்சியின் காரணமாக  நீரற்று வரண்டுபோயுள்ளது.

2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் 12 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவின் கீழ் பிரசுரிக்கப்பட்ட அனுமதிப் பத்திரங்களின் கீழ் இடம்பெயர்ந்த 944 பேர் மீள்குடியேற்றப்பட்டனர். இந்த அடிப்படையிலேயே மீள்குடியேற்ற நடவடிக்கை இங்கு ஆரம்பிக்கப்பட்டது. போரின் காரணமாக இடம்பெயர்ந்து புத்தளம் உள்ளிட்ட இதர பிரதேசங்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் ஏன் இப்பேர்பட்ட வரட்சியான காலநிலையுடன் கூடிய வாழ்வாதாரத்திற்கு கஷ்டப்பட வேண்டிய பகுதிக்கு வரவேண்டும்? புத்தளம் என்பது முசலியையும் விட அதிக செழிப்புள்ள பிரதேசமாகும். முசலியில் கஷ்டப்படுவதை விட போரின் காரணமாக இடம்பெயர்ந்து வாழ்விடங்களை அமைத் துக் கொண்ட புத்தளத்திலேயே தொழிலைச் செய்துகொண்டு இருந்திருக்கலாம்.

உண்மையில் இவ்வாறு புத்தளத்திலேயே தங்கிய அதிக மக்களும் உள்ளார்கள். சிலர் புத்தளத்திலும் முசலியிலும் வீடுகளை வைத்துக்கொண்டு மாறி மாறி வாழ்கிறார்கள். உண்மையில் பெரும்பாலான மக்கள் ஏன் தமது சொந்த நிலங்களுக்கு வர வேண்டும்?

1990ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்து சென்ற இம்மக்கள் பலராலும் 2ஆம் தர மக்களாகவே கவனிக்கப்பட்டுள்ளனர். உதாரணத்திற்கு மரக்கறி அல்லது மீன் வாங்க கடையொன்றிற்குச் சென்றாலும் அங்குள்ள மக்கள் குறிப்பிட்ட பொருட்களை வாங்கி முடிக்கும் வரையில் ஒரு புறத்தில் காத்திருக்க வேண்டும். கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு மாத்திரமே தொழில்வாய்ப்புக்களும் வழங்கப்பட்டது. எவ்வளவு தான் கஷ்டத்தை எதிர்நோக்கினாலும் சொந்த இடங்களில் அதாவது மன்னாரில் வசிப்பது போன்ற நிலை அவர்களுக்கில்லை. இதன் காரணமாகவே புத்தளத்தில் இரண்டாம் தர மக்களாக வாழ்வதை விட முசலிக்கு சென்று தமது சொந்த இடங்களில் கஷ்டப்பட்டேனும் வாழ்வது மேல் என நினைத்துள்ளனர்.

2012 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையில் வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் விடுவிக்கப்பட்ட காணிகளின் அளவு தொடர்பில் வனப் பாதுகாப்பு திணைக்களம் வழங்கிய தகவலின் படி நோக்குகையில் மிகப்பாரிய காடழிப்பு அல்லது அழிவு எது என்பதை புரிந்து கொள்ள முடியும். மேற்படி காலப் பகுதியில் 30,627 ஹெக்டயர் காணிகள் வெவ்வேறு செயற்திட்டங்களுக்காக வேண்டி வனப்பாதுகாப்பு  திணைக்களத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டத்திற்கு 2,092 ஹெக்டயார் நிலமும் களுகங்கை திட்டத்திற்கு 1,779 ஹெக்டயர் நிலமும் உமா ஓயா திட்டத்திற்கு 1,228 ஹெக்டயர் நிலமும் மாதுரு ஓயா தெற்கு அபிவிருத்தி திட்டத்திற்கு 17,400 ஹெக்டயர் நிலமும் வனப் பாதுகாப்பு திணைக்களத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் மொரகஹகந்த போன்ற பாரியளவில் காடுகள் அழிக்கப்பட்ட திட்டங்களின் போது, அழிக்கப்படுகின்ற காடுகளுக்கு பதிலாக வேறு காடுகளை வளர்க்குமாறு திட்டங்கள் வழங்கப்பட்ட நிறுவனங்களுக்கு சூழல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரங்களினூடாக மரங்களையும் செடி கொடிகளையும் வளர்ப்பதற்காக வேண்டி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந் நிறுவனங்கள் இதுவரையில் எந்தவொரு மரத்தையும் நட்டவில்லை. எனவே இத்தகைய திட்டங்களால் நினைத்துப் பார்க்கவும் முடியாத அளவுக்கு மிகப்பெருமளவிலான காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

இது இவ்வாறிக்கையில் மீள்குடியேற்றுவதற்காக அழிக்கப்பட்ட நிலங்களை ஆராய்ந்து பார்க்கும் போது இரண்டு மாவட்டங்களில் மக்களை மீள்குடியேற்றுவதற்காக காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மன்னார், வவுனியா மாவட்டங்களே அவையாகும். மக்களை மீள்குடியேற்றுவதற்காக வேண்டி மன்னார் மாவட்டத்தில் 2500 ஏக்கர் நிலங்களே விடுவிக்கப்பட்டன. இவற்றுள் முசலியில் ஏற்கனவே கிராமங்களாக இருந்து பின்னர் வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் காடுகளாக வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட நிலங்களும் உள்ளடங்கும். ஆனால் வவுனியாவில் 8000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன.

எனவே மன்னாரை விட வவுனியாவிலேயே அதிக காடுகள் அழிக்கப்பட் டுள்ளன. இதில் கூடுதலான நிலம் நாமல் ராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்பட்ட போகஸ்வெவ மீள்குடியேற்றத் திட்டத்திற்கே விடுவிக்கப்பட்டது. கருவலங்காளிக் குளம் என்னும் வனப்பகுதியை நடுவால் அழித்து மேற்கொள்ளப்பட்ட இம்மீள்குடியேற்றத் திட்டத்தில் முன்னர் இங்கு பழைய கிராமங்களில் வாழ்ந்த மக்களை மீள்குடியேற்ற உள்ளடக்கப்படவில்லை. தென் மாகாணத்தில் வெவ்வேறு பிரதேசங்களில் வாழ்ந்த சிங்கள மக்களே போகஸ்வெவ, நாமல்கம கிராமங்களில் குடியேற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பல்வேறு திட்டங்களுக்காக வேண்டி காடுகள் அழிக்கப்பட்டிருக்கும் தகவல்களை அடுக்கிச் செல்ல முடியும். இவைகுறித்து யாரும் கேள்வியெழுப்புவதில்லை. போரினால் நொந்து நொடிந்து நூலாகிப் போய் மீண்டும் தம் சொந்த நிலங்களுக்கு வந்துகொண்டிருக்கும் மக்கள் துப்புரவு செய்யும் காடுகளே தற்பொழுது எல்லோருக்கும பிரச்சினையாய் போயுள்ளது. அரசியல்வாதிகளின் சொகுசு அறைகளுக்குள் உருவாக்கப்படுகின்ற ரெடிமேட் சூழல் கோஷங்களுக்கு அகப்பட்டு இனமோதல்களுக்குச் செல்லாமல் உண்மையான சூழல் பிரச்சினைகளை பற்றிப் பேசுவது மிக முக்கிய விடயமாக மாறியுள்ளது.

அவ்வாறின்றி இலங்கையில் இடம்பெறுகின்ற ஒரேயொரு சூழல் அழிவு வில்பத்து என நினைத்துக் கொண்டு மற்றுமொரு இனத்துக்கு எதிராக பகைமையைப் பரப்பும் போராட்டத்தின் பங்காளர்களாக மாற நீங்கள் விரும்பினால் அப்போராட்டத்தின் காரணமாக முழு நாடும் எரிந்ததன் பிறகு காலநிலை மாற்றங்களும் எம்மை முழுமையாக அழித்ததன் பிறகு நாம் சிந்திப்பதில் அர்த்தமில்லை. நாம் பிரிந்துநின்று சண்டையிட்டுக்கொண்டால் பொதுப்பிரச்சினைகளை நாம் மறந்துவிடுவோம் என்பதை நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும்.

‘வில்பத்து அழிக்கப்படுவதற்கான எவ்வித கற்புலன் ஆதாரங்களும் இல்லை’–  எரங்க குணசேகர, தலைவர், சோசலிஸ இளைஞர் சங்கம்

நாம் வில்பத்து தேசிய சரணாலயத்திற்கு சென்றோம். அங்குள்ள சகல பகுதிகளையும் சென்று பார்வையிட்டோம். அதிகாரிகளுடனும் கலந்துரையாடினோம். அண்மைக் காலத்தில் ஏதேனும் சுத்தப்படுத்தல் நடவடிக்கைகள், வீடமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்தோம்.

வில்பத்து சரணாலய அதிகாரிகளுடனும் கலந்துரையாடிய விடயங்களுக்கமைய அங்கு எந்தவிதமான காடழிப்பு நடவடிக்கைளையும், குடியேற்றத் திட்டங்களையும் கண்டுகொள்ள முடியவில்லை. வில்பத்து அபய பூமிக்குள் அவ்வாறான விடயங்கள் எதனையும் கண்டுகொள்ள முடியவில்லை. சுற்றாடல் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் முன்னெடுத்த போராட்டத் தின் விளைவாக ஜனாதிபதி சிறிசேன 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி 32,505 ஹெக்டயார் நிலப்பகுதியை மாவில்லு வனப்பாதுகாப்பு பிரதேசத்திற்கு ஒதுக்கியிருந்தார். மாவில்லாறு வனப்பாதுகாப்பு பிரதேசத்தின் எல்லைகளும் தற்போது வகுக்கப்பட்டுள்ளது.

மாவில்லாறு வனப்பாதுகாப்பு பிரதேசத்திலும் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு அங்குள்ள வன அதிகாரிகளுடனும் கலந்துரையாடினோம். அங்கும் எவ்வித கட்டிட நிர்மாணங்களோ, வீடமைப்பு திட்டங்களோ, குடியேற்றங்களோ, காடழிப்பு நடவடிக்கைகளோ நடைபெறவில்லை. அவ்வாறு நடைபெற்றமைக்குரிய எவ்வித ஆதாரங்களும் இல்லை. இதனை நாம் பொறுப்புடன் கூறுகின்றோம்.

இவ்வாறிருக்கும் போது தற்பொழுது நாட்டில் காடழிக்கப்படுவதாக கலந்துரையாடப்படும் பிரதேசம் எது? வில்பத்து தேசிய சரணாலயத்திலும் அதனை அண்டிய மாவில்லாறு வனப்பாதுகாப்பு பிரதேசத்திலும் எவ்வித காடழிப்புகளும் பதிவாகாத போது சமூக வலைத்தளங்களினூடாக காடழிக்கப்படுவதாக கூறப்படும் பகுதி எது? இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிலங்களை அடிப்படையாகக் கொண்டே இப்பிரச்சினை முன்னெடுக்கப்படுகிறது.

2009இல் யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஆட்சியில் இருந்த அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் இதுவரையில் 1000 ஹெக்டயர்களுக்கும் அதிக பகுதியை மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக ஒதுக்கியுள்ளது. இந் நிலப்பகுதி வில்பத்து சரணாலயத்திற்கோ, மாவில்லு வனப்பாதுகாப்பு பிரதேசத்திற்கோ உரித்தான பகுதிகளல்ல. மாவட்ட செயலாளரினதும், பிரதேச செயலாளரினதும் பொறுப்பிலுள்ள அரச காணிகளே இவை. எனவே மீள்குடியேற்றம் தொடர்பாகவும் எமக்குச் சிக்கலுள்ளது. இந்த ஆட்சியாளர்கள் மக்களுடைய எல்லா விடயங்களிலும் விளையாடுவது போல இந்த விடயத்திலும் விளையாடியுள்ளனர்.

2017ஆம் ஆண்டு கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் மக்களை மீள் குடியமர்த்துவதற்காக ஒதுக்கப்பட்ட காணிகள் தொடர்பாக சரியானதொரு சூழல் தாக்க மதிப்பீடு மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது தனியானதொரு பிரச்சினை. 2009ஆம் ஆண்டிலிருந்து தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மீள்குடியேற்றத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களில் குடியேறி வருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பெசில், கோட்டாபய போன்றோரே முன்னின்று இம்மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளனர். இந்த அரசாங்கத்தின் கீழாலும் வீடமைப்பிற்கு நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான சுத்திகரிப்பு பணிகளே இடம்பெற்று வருகின்றது. இதுவல்லாமல் வில்பத்து, மாவில்லாறு வனப்பாதுகாப்பு பிரதேசங்கள் அழிக்கப்படுகின்றமைக்கான எவ்வித கற்புலன் ஆதாரங்களும் இல்லை.

‘அரசியல் நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கமே வில்பத்து’– திலக் காரியவசம் (சூழலியலாளர்)

சர் எமர்சன் டெனர் இலங்கையின் இயற்கை விஞ்ஞானம் எனும் நூலில் கலா ஓயா முதல் வில்பத்து வலயத்திற்கு உட்பட்ட மோதரகம் ஆறு வரையான இரண்டு ஆறுகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஆரம்ப காலத்திலிருந்தே மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்களை முன்வைத்துள்ளார். வில்பத்துவின் வடக்கு மூலையுடன் தொடர்புபடும் இடத்திலிருந்து அருவியாறு வரையான பகுதியை ஒல்லாந்தர் சிப்பியிலிருந்து முத்து எடுக்கும் தொழிலுக்குப் பயன்படுத்தியுள்ளனர்.

மறிச்சிக்கட்டியிலேயே இதன் பிரதான இடம் அமைந்து காணப்பட்டது. இங்கிருந்து அருவியாறு வரையான பகுதியில் சிப்பியோடுகள் குவிக்கப்பட்டிருந்ததாகவும் சுழியோடுவதில் திறமையானவர்களாகக் காணப்பட்ட தென்னிந்திய தமிழர்களும் அரேபிய முஸ்லிம்களும் இதற்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்றும் சேர். எமர்சன் டெனர் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

இது தவிர ஜே.சி. ஊரகொட என்கின்ற விஷேட வைத்தியரும் தனது நூலில் முஸ்லிம்கள் இப்பகுதியில் வாழ்ந்தமைக்கான சான்றுகளை முன்வைத்திருக்கிறார். மார்டின் விக்ரமசிங்கவின் மைத்துனரும் வன ஜீவராசிகள் ஆணையாளருமாக செயற்பட்ட எஸ்.டி. சபரமாது 1973 ஆம் ஆண்டு வில்பத்துவின் சகல வலயங்களையும் ஒன்றிணைத்து முழுமையான தேசிய சரணாலயமாகப் பிரகடப்படுத்தினார். இப்பிரதேசத்தில் அருவியாறு வரையில் முத்தகழும் தொழிலை செய்யும் மக்கள் குடியேற்றங்கள் காணப்பட்டதாக இவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் சூழல் குறித்து பல்வேறு குறிப்புக்களை எழுதிய திலோ ஹொக்மான் கூட வில்பத்துவை அண்டிய இந்தப் பிரதேசங்களை வில்பத்து சரணால யத்திற்கு உரித்தான பகுதியென குறிப்பிடவில்லை.

முன்னர் இங்கு தற்காலிக கூடாரங்களை அமைத்து முத்தகழும் தொழிலை செய்த மக்கள் ஏன் அகற்றப்படவில்லை? இது தவிர பாலக்குளி பகுதியில் பிரேமதாச அமைத்த வீடமைப்பு திட்டமொன்றும் காணப்படுகின்றது. எனவே இம்மக்கள் வாழ்ந்தமைக்கான வரலாற்று ஆதாரங்கள் ஏராளம் காணப்படுகின்றன. இத் தகைய வரலாறுகளை அறியாத இனவாத ஊடகங்களே அரசியலின் துணையோடு இந்த விடயங்களை நுனிப்புல் மேய்ந்து கொண்டிருக்கின்றன.

1968 இல் சுமித் சோனியன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சேர். ஐசன்பேர்க் வில்பத்து மற்றும் அதனை அண்டிய பகுதி தொடர்பில் நடத்திய ஆய்வில் ஆரம்ப காலத்தில் மக்கள் இப்பகுதியில் குடியேறி பின்னர் அதனை கைவிட்டமைக்கான பிரதான காரணம் வரட்சியாகும் என்று குறிப்பிட்டுள்ளார். வரலாற்றில் நாம் ஆரம்பக் குடியேற்றங்கள் ஐந்து தொடர்பாக படித்திருக்கிறோம். உருவெலகம, உபதிஸ்ஸகம, அநுராதகம என்பவையே அவை. இவை வில்பத்துவை அண்டியதாக அமைந்து காணப்பட்டன. இப்படி பல வரலாற்று ஆதாரணங்களை அடுக்கிச் செல்ல முடியும்.

வில்பத்துவில் காடழிப்பு இடம்பெறுவதாகக் குறிப்பிடும் ஊடகங்களும், சூழலியலாளர்களும், கடும்போக்குவாத அமைப்புக்களும் ஏன் நாட்டின் இதர பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாரியளவிலான காடழிப்புகள் தொடர்பில் பேசுவதில்லை? சுமார் 5000 ஏக்கர் காணிகள் அழிக்கப்பட்டு போகஸ்வெவ கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் இங்கு போரினால் இடம்பெயர்ந்தவர்கள் குடியமர்த்தப்படவில்லை. ஹம்பாந்தோட்டை, பதுளை, மொனராகல போன்ற பகுதிகளில் வாழ்ந்த மக்களே இங்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர். முஸ்லிம்களாவது குறைந்தபட்சம் இந்தப் பகுதிகளில் ஏற்கனவே வாழ்ந்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

ஆனால் இவர்களின் கதியென்ன? இது போன்று நாமல்கம என்றொரு கிராமமும் இங்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. முல்லைத்தீவில் விஷ்வமடு வனப்பகுதியிலிருந்து வீதிகளை நிர்மாணிக்க மணல் அகழப்பட்டு வருகிறது. வடக்கில் மணல் காடு பகுதியில் டக்ளஸ் தேவாநந்தா தமக்கு விரும்பிய வகையில் மண்திட்டுக்களை வெட்டியுள்ளார். சிங்கராஜ வனத்தை அண்டிய பகுதிகளிலும் காடுகள் ஏராளமாக அழிக்கப்பட்டுள்ளன. எனவே நாட்டில் இதுபோன்ற எத்தனையோ காடழிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் இனவாதிகள் ஏன் வில்பத்துவை அண்டிய வகையில் மக்கள் குடியமர்த்தப்படுவதை வில்பத்து காடழிப்பு என்பதாக பிரசாரப்படுத்துகின்றனர்? இதற்கு பின்னால் அரசியல் உள்ளதே மிக முக்கிய காரணமாகும்.

About the author

Administrator

Leave a Comment