உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீசண்முகாவின் மனித உரிமை மீறல்

Written by Administrator

கல்வி அமைச்சிடமிருந்து நடவடிக்கை எதுவும் இல்லை

முஸ்லிம்களின் கலாசார ஆடையான அபாயாவை தடை செய்ததன் ஊடாக, திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மனித உரிமையை மீறியுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

அபாயா ஆடையை அணிந்து பாடசாலைக்கு வருகை தந்த நான்கு ஆசிரியர்களை வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததற்கு எதிராக 2018ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி பாதிக்கப்பட்ட கல்லூரி ஆசிரியர்களால் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் திரிகோணமலை கிளையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த முறைப்பாடு குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தற்போது அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பாடசாலையின் அதிபரிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை நடத்தியபோது, திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி 1923ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதாகவும், அன்று முதல் இன்று வரை இந்து கலாசாரத்தை பேணிய வகையிலேயே பாடசாலை நடத்திச் செல்லப்படுவதாகவும், பெண் ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருகை தரும் சந்தர்ப்பத்தில் புடவை அணிந்து வருகை தர வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டதாகவும்  அதிபர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் குறிப்பிட்டுள்ளார்.

தமது பாடசாலை இந்து கலாசாரத்தை பின்பற்றுகின்ற பாடசாலை என்பதனால், அபாயா ஆடை, பாடசாலையின் கலாசாரத்திற்கு ஏற்புடையது அல்லவென பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசியலமைப்பின் 10ஆவது சரத்திற்கு அமைய, சமய சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு இலங்கையிலுள்ள தேசிய பாடசாலைகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்பதுடன், உரிமைகளை மீற முடியாது எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசியலமைப்பின் 12(1) மற்றும் 12(2) ஆகிய சரத்துக்களுக்கு அமைய, முறைப்பாட்டாளர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. ஒருவரின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக மற்றுமொரு நபரின் சமய சுதந்திரத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, அபாயா ஆடையை தடை செய்வது முறையற்ற ஒன்று எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த செயற்பாட்டினால், முறைப்பாட்டாளர்கள் மற்றும் பிரதிவாதிகள் அச்சுறுத்தப்படுவதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தேசிய பாடசாலை என்பதனால் கல்வி அமைச்சே இதில் தலையிட்டு தீர்வு வழங்க வேண்டி இருந்தாலும் கல்வி அமைச்சு இதுவரை எந்த நடவடிக்கையும் இது தொடர்பில் எடுத்ததாகத் தெரியவில்லை.

About the author

Administrator

Leave a Comment