Features அரசியல்

உலகையே உலுக்கும் இலங்கை தாக்குதல்கள்; இதுவரை நாம் அறிந்தவை

Written by Administrator

9 PM | 21-04-2019

இன்று (21) காலை முதல் நாட்டில் 8 இற்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் (கிறிஸ்தவ தேவாலயங்கள், உயர் ரக ஹோட்டல்கள்) இதுவரை மூன்று காவல் அதிகாரிகள் உட்பட 207 பேர் பலியாகியுள்ளதோடு, சுமார் 450 பேர் காயமடைந்துள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் 7 பேர் கைதாகியுள்ளதோடு, இதில் பெரும்பாலானவை தற்கொலை தாக்குதல்கள் என பாதுகாப்பு அமைச்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதுவரை 35 வெளிநாட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

ஒரு வாரத்திற்கு முன்பு எங்கள் அமைச்சகத்தின் பாதுகாப்பு பிரிவிற்கு கொழும்பு நகரத்தை தாக்கிட தற்கொலைதாரிகள் திட்டமிடுவதாக தகவல்கள் கிடைத்தன என்று தேசிய ஒருமைப்பாடு, மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சர் மனோ கணேஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

A week before, my Ministerial Security Division (MSD) officers had been warned by their Division on two suspected suicide bombers in Colombo targeting politicians #lka— Mano Ganesan (@ManoGanesan) April 21, 2019

இன்று காலை 8.45 – 9.00 மணியளவில், கொச்சிக்கடை தேவாலயம், கட்டான, கட்டுவாபிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு, சென்றல் வீதியிலுள்ள சீயோன் தேவாலயங்கள் மற்றும் கொழும்பின் காலி முகத்திடல் அருகிலுள்ள ஷங்ரி லா, கிங்ஸ்பெரி ஹோட்டல்கள் மற்றும் கொம்பனித்தெருவிலுள்ள சின்னமன் கிராண்ட் ஆகிய 3 உயர் ரக ஹோட்டல்களிலும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.

இதேவேளை, இன்று (21) பிற்பகல் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு முன்னாலுள்ள ‘ட்ரொபிகல் இன்’ எனும் ஹோட்டலிலும் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.

கொழும்பிலுள்ள ஹோட்டல்களில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவினால் (CCD) மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, அவர்கள் தெமட்டகொடையிலுள்ள மஹவில கார்டன் தொடர்மாடி கட்டடத்திற்கு அருகிலுள்ள வீடொன்றிற்கு விசாரணைக்காக சென்ற வேளையில் அங்கு இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில், உப பரிசோதகர் ஒருவர் மற்றும் இரு கொன்ஸ்டபிள்கள் பலியானதோடு, மற்றுமொரு கான்ஸ்டபிள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

தெமட்டகொடையிலுள்ள வீட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு 3 ஆலயங்கள் மற்றம் கொழும்பிலுள்ள ஹோட்டல்கள், தெஹிவளையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு உள்ளிட்ட 8 குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் இது வரை 207 பேர் மரணமடைந்துள்ளதோடு, சுமார் 450 பேருக்கு காயமடைந்துள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.

அதற்கமைய, நீர்கொழும்பு வைத்தியசாலையில் ஆகக் கூடுதலாக 104 பேர் மரணமடைந்துள்ளதாக, ருவன் குணசேகர தெரிவித்ததோடு, சுமார் 100 பேர் காயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தேசிய வைத்தியசாலையில் 66 பேர் பலியாகியுள்ளதோடு 260 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், மட்டக்களப்பு வைத்தியசாலையில் 28 பேர் பலியாகியுள்ளதோடு, சுமார் 50 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ராகமை வைத்தியசாலையில் 07 பேரின் சடலங்களும், 32 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், களுபோவில போதனா வைத்தியசாலையில் 02 பேர் மரணமடைந்துள்ளதோடு, சுமார் 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் ருவன் குணசேகர தெரிவித்தார்.

களுபோவில போதனா வைத்தியசாலையில் பலியான 02 பேர் தெஹிவளையில் இடம்பெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் அவர்கள் தவிர்ந்த ஏனைய வைத்தியசாலைகளில் பலியானோர் மற்றும் காயமடைந்தோர், எந்தெந்த இடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் என சரியாக குறிப்பிட முடியாது உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியதோடு, பாதிக்கப்பட்டவர்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து வெவ்வேறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையே இதற்கான காரணம் என சுட்டிக்காட்டினார்.

இறுதியாக கிடைத்த தகவல்களின்படி, புத்தளம்-முந்தல் பகுதியில் முஸ்லிம் பள்ளிவாயல் ஒன்றுக்கு பெற்றோல் குண்டுத் தாக்குதல் இன்றிரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாருக்கும் பாதிப்புகள் இல்லை. பண்டாரகமையில் உள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான இரு கடைகள் தீக்கிரை.

அனைத்துப் பாடசாலைகளுக்கும் – நாளையும் – நாளை மறுதினம் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீள அறிவிக்கும் வரை, நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் தற்காலிகமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளன. இவை மூலமாக பொய்யான தகவல்கள் பரிமாறப்படலாம் என்பதால், சமூக வலைத்தளங்களை முடக்கம் செய்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

தேவையான இரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. எனவே, இரத்தம் வழங்கும் நோக்கில் எவரும் இரத்த வங்கிக்கு முன்பாக ஒன்றுகூடத் தேவையில்லை எனவும் இரத்த வங்கி  அறிவித்துள்ளது.

உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரையில் ஊடரங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அரசாங்கம் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இன்றைய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு சில சமூக இணையத்தளங்களிலும் ஏனைய சிலவற்றிலும் வேண்டத்தகாத உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஏமாந்துவிட வேண்டாமென்றும் அமைதியான முறையில் செயற்படுமாறு அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

About the author

Administrator

Leave a Comment