அரசியல்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமின்றி சர்வதேச பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த முடியாது – முஜிபுர் ரஹ்மான்

Written by Administrator

இன்றிருப்பது முன்னரைப் போல சிறிய வகை ஆயுதங்கள் மூலம் போராடுகின்ற பயங்கரவாதமல்ல. நவீன ரக ஆயுதங்கள் பயங்கரவாதிகளிடம் இருக்கின்றன. உலகளாவிய இணையத் தளங்கள் மூலமாக தற்பொழுது குண்டு தயாரிக்கும் முறையையும் கற்றுக் கொள்ள முடியுமான சூழலே இன்றுள்ளது. பயங்கரவாதம் இன்று சர்வதேச அளவில் செயற்படுகிறது. இதனை எதிர்கொள்ள வேண்டுமானால் சர்வதேசப் பயங்கரவாதத்தையும் எதிர்கொள்கின்ற சட்டம் நாட்டுக்குத் தேவைப்படுகிறது. எனவே தற்போது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத முறியடிப்புச் சட்ட மூலத்துக்கு எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

அலரி மாளிகையில் (மே 01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 9/11 தாக்குதலுக்குப் பின்னர் உலகுக்கு பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான சட்டங்கள் தேவைப்பட்டன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் என உலகின் பல நாடுகள் இந்த சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான சட்டங்களை தமது நாடுகளிலே இயற்றியுள்ளன. இலங்கையில் 70 ஆம் ஆண்டில் முதன் முதலாக அவசர காலச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1979 ஆம் ஆண்டில் பயங்கரவாத தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அயர்லாந்துப் பிரச்சினையை எதிர்கொள்ள 1974 இல் இங்கிலாந்து இயற்றிய சட்டத்துக்கு இணக்கமானதாக இந்தச் சட்டம் அமைந்திருந்தது. இந்தச் சட்டங்கள் சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்குப் போதுமானதாக இல்லாமையால் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் 2018 ஒக்டோபரில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இராணுவம் , பொலிஸ், புலனாய்வுப் பிரிவினரின் அனுபவங்களையும் கருத்தில் கொண்டே இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டத்தை நிறைவேற்றாமல் நாட்டில் தலைதூக்கியிருக்கும் சர்வதேசப் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது. அந்த வகையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களை பயங்கரவாதத்துக்குத் துணைபோகின்றவர்களாகவே கருத வேண்டும் எனவும் தெரிவித்தார்.

About the author

Administrator

Leave a Comment