அரசியல் உள்நாட்டு செய்திகள்

மீண்டும் யாப்பை மீறுகிறார் ஜனாதிபதி

Written by Administrator

ராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்களுக்குப் பதிலாக மூன்று பதில் அமைச்சர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டமை யாப்புக்கு முரணானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடிதம் மூலம் ஜனாதிபதி சிறிசேனவுக்கு அறிவித்துள்ளார்.

யாப்பின் 19A திருத்தத்தின்படி நியமிக்கப்படும் அமைச்சர்கள் பிரதமரினால் சிபாரிசு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனாலும், தற்போது நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் தொடர்பில் பிரதமருக்கு எந்த அறிவித்தலும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

முஸ்லிம் அமைச்சர்களின் ராஜனாவுக்குப் பின்னர் அவர்களது பொறுப்புக்களை அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மலிக் சமரவிக்ரம, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இதனைப் பொருட்படுத்தாமலேயே ஜனாதிபதி இந்த நியமனங்களைச் செய்துள்ளார்.

யாப்பின் 19A திருத்தத்தின்படி குறித்த அமைச்சுக்கான அமைச்சர் ராஜனாமா செய்கின்றபொழுது அந்த அமைச்சுக்கு பதில் அமைச்சர் ஒருவர் (Acting Minisiter) நியமிக்கப்பட முடியாது எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டாமல் தள்ளிப்போடுவது அரசியல் யாப்பினை மீறும் செயல் என மெகா பொலிஸ் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையானது பங்களிப்பு ஜனநாயகத்திற்கும் ஆட்சியின் நெறிமுறைகளுக்கும் மாற்றமானது எனத் தெரிவிக்கும் அமைச்சர், இதனால் மீண்டும் அரசியல் கொந்தளிப்புகள் உருவாகலாம் எனவும் பத்தரமுல்லையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

About the author

Administrator

Leave a Comment