உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம் வெறுப்புணர்வு வன்முறைகளுக்கு உலகத் தமிழர் பேரவை கண்டனம்

Written by Administrator

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள பௌத்த பெரும்பான்மை இனத்தவர்கள் சிலரால் மேற்கொள்ளப்பட்டு வரும் வெறுப்புணர்வு மிக்க செயற்பாடுகள் குறித்து தமது கடுமையான கண்டனத்தை வெளியிடுவதுடன், இத்தகைய ஆபத்தான செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும் என உலகத் தமிழர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

உலகத் தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 2009 இல் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து சிங்கள பௌத்த சமூகத்திலுள்ள பேரினவாதிகளின் அடுத்த பிரதான இலக்காக முஸ்லிம் சமூகம் மாறியிருந்தது. பெரும்பான்மை இன சமூகத்தின் பலம் பொருந்திய பிரிவினரால் இந்நிலை உருவாக்கப்பட்டது.

துள்ளியமாகத் திட்டமிடப்பட்டு 2017 ஜூன் மாதத்தில் களுத்துறையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், கடந்த பெப்ரவரி மார்ச் மாதங்களில் அம்பாறை, திகன நகரங்களில் இடம்பெற்ற நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட கலவரம் மற்றும் கடந்த மே மாதம் வடமேல் மாகாணத்தில் பல்வேறு நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் என்பவற்றைக் குறிப்பிட்டுக் கூற முடியும்.

இந்தத் தாக்குதல்களில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டார்கள். முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டதுடன் எரியூட்டப்பட்டன. பலர் இடம்பெயரும் நிலை ஏற்பட்டது. இவற்றில் பெரும்பாலான தாக்குதல்கள் பௌத்த பிக்குகளின் வழிகாட்டலில் பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபட்டிருக்கும்போது இடம்பெற்ற தாக்குதல்களாகும். அண்மைக் காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான விழிப்புணர்வு திட்டமிட்ட முறையில் கட்டியெழுப்பப்பட்டு வந்திருப்பதுடன், அச்சமூகம் பல்வேறு வழிகளிலும் வன்முறைகளுக்கும் மிரட்டல்களுக்கும் உள்ளாகியிருக்கின்றது.

இவற்றின் உச்சகட்டமாக உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்டு முஸ்லிம அமைச்சரையும் ஆளுநர்களையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி பாராளுமன்ற உறுப்பினரான அதுரலி ரதன தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் விரிவான விசாரணையை மேற்கொண்டு அதனுடன் நேரடியாகவோ மறைமுகமாகவே தொடர்புடையவர்கள் அனைவரையும் சட்டத்தின் நிறுத்துவதற்கு உலகத் தமிழ் பேரவை முழுமையான ஆதரவை வழங்கும்.

இவ்வாறான ஆபத்தான போக்கைக் கட்டுப்படுத்துதல் மற்றும் கைதுசெய்தல் என்பவற்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு இலங்கையின் அரசியல்வாதிகள் தவறியிருக்கிறார்கள். இந்நிலையில், சிறுபான்மை மக்களின் பிரதநிதிகளும் மீண்டும் தமது பாதுகாப்பு, உரிமைகள் என்பவற்றை உறுதிப் படுத்திக் கொள்வதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகின்றது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

About the author

Administrator

Leave a Comment