உள்நாட்டு செய்திகள்

பதவிகளை மீள ஏற்குமாறு முஸ்லிம் அமைச்சர்களுக்கு அழுத்தம்

Written by Administrator

நாட்டின் நலனுக்காக பதவி துறந்த முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மீண்டும் தமது பதவிப் பொறுப்புக்களை ஏற்க வேண்டும் என மகா நாயக்க தேரர்கள் விடுத்த வேண்டுகோளை அடுத்து முஸ்லிம் அமைச்சர்கள் மீதான அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.

முன்னாள் அமைச்சர் கபீர் ஹாஷிம் தமது அமைச்சுப் பதவியை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கோரி ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மாவனல்லை கட்சி அலுவலகத்தின் முன்னர் போராட்டமொன்றை நடத்தினர்.

அதேவேளை, கபீர் ஹாஷிம் தமது பதவியை மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டும் என நான் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுக்கிறேன் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முஸ்லிம் பிரதிநிதிகள் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்க வேண்டும் என எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். கூட்டாகப் பதவி விலகிய முஸ்லிம் அரசியல்வாதிகள் மீண்டும் தமது அமைச்சுப் பொறுப்புக்களை பெற்றுக்கொள்வதே சிறப்பானதாகும். கூட்டாகப் பதவி விலகியமை சர்வதேச மட்டத்தில் தவறான நிலைப்பாட்டை உருவாக்கியுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக எதிர்தரப்பினால் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டது. இந்தப் பிரேரணையில் உள்ளடக்கியுள்ள குற்றச்சாட்டுக்களின் உண்மைத் தன்மையை தெளிவுபடுத்தி அவர் நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்கொண்டிருக்க வேண்டும். இவ்விடயத்தில் அவர் முறையாகச் செயற்படவில்லை.

முன்னாள் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் மற்றும் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோரை பதவி விலக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் அதுரலி ரதன தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து எவரும் எதிர்பாராத விதத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகித்த முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாகப் பதவி விலகினர். இவர்கள் பதவி விலகியதால் தேசிய நல்லிணக்கமே பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

About the author

Administrator

Leave a Comment