Features அரசியல் மீள்பார்வை

ஆட்சியாளர்கள் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்தல்

Written by Administrator

விக்டர் ஐவன்

நவீன தேசமொன்றைக் கட்டியெழுப்ப முடியாமல் போனமை எந்தளவுக்கு இலங்கையின் பின்னடைவுக்குக் காரணமாக இருக்கிறதோ, அந்தளவுக்கு ஆளும் தரப்புகள் பொதுச் சொத்துக்களைச் சூறையாடுவதும் அமைந்திருக்கிறது. ஜனநாயக நாடொன்றில் அரசாங்கத்தின் சொத்துக்கள் அனைத்தும் பொதுமக்களின் சொத்துக்களாகவே கருதப்பட வேண்டும். மக்கள் தேர்ந்தெடுக்கும் ஆளும் தரப்பினர் அந்தச் சொத்துக்களுக்கான தற்காலிக பொறுப்பாளர்களாகச் செயற்படுவார்கள். தமது பொறுப்பிலுள்ள சொத்துக்களைப் பாதுகாத்து அதனூடாக அரசுக்கு வரும் வருமானத்தை சிறந்த முறையில் பேணி வருவது தான் இந்தத் தற்காலிகப் பொறுப்பாளர்களின் பணி. இந்தச் சொத்துக்களினூடாக தவறான வழியில் இலாபம் ஈட்டுவதனைத் (தமக்கு, தமது குடும்பத்துக்கு, நண்பர்களுக்கு) தடுப்பதற்கான கடுமையான சட்டங்கள் ஜனநாயக நாடுகள் அனைத்திலும் இருக்கின்றன. பொதுச் சொத்துக்களை தமக்கு நெருங்கியவர்களுக்குத் தாரை வார்ப்பதை இந்த நாடுகள் எல்லாம் தண்டனைக்குரிய பாரிய குற்றமாகக் கருதுகின்றன.

பொதுச் சொத்துக் கொள்ளை

பொதுச் சொத்துக்கள் தொடர்பான தர்மங்கள் இலங்கையில் 1977 வரையே அமுலாகின.இதன் பின்னர் அரசாங்க சொத்துக்களைக் கொள்ளையடித்தல் என்பது ஆளும் தரப்பின் நிலையானதும் முக்கியமானதுமான பண்பாக மாறியது. இதனால் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதற்கான உரிமையைப் பெறும் வகையில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக பணத்தைத் தண்ணீராய்ச் செலவழித்துப் போட்டி போடும் நிலைக்கு நாடு மாறிப் போயுள்ளது. இலங்கையில் வேரூன்றிப் போயுள்ள இந்த முறையின் கீழ், ஆளும் தரப்புக்கு தமது ஆட்சிக் காலத்தில் தமக்கு விரும்பிய சொத்துக்களைக் கொள்ளையடிப்பதற்கான அங்கீகாரம் கிடைக்கின்றது. பொதுச் சொத்துக்களைத் துஷ்பிரயோகம் செய்யாமல் பாதுகாப்பதற்கான சட்டங்கள் எல்லாம் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன. இதனால் சட்டம் பற்றிய எந்த அச்சமுமின்றி இவர்கள் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிக்கின்றனர்.

இந்தக் கொள்ளை பல வடிவங்களில் நடக்கிறது. அரசாங்கத்தின் சொத்துக்களை தமக்கு, தமது உறவினர்களுக்கு, தமது நண்பர்களுக்கு உரிமையாக்கி விடுவது முதல் வகை. காணி மறுசீரமைத்தல் ஆணைக்குழுவிடம் உள்ள காணியை பெயரளவிலான விலைமதிப்பில் நீண்ட காலக் குத்தகைக்கு விடுவது மற்றுமொரு வகை. முக்கியமான நீர் நிலைகள், கடற்கரை போன்ற வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களில் உள்ள காணிகளை சுவீகரித்துக் கொள்ளல் இன்னொரு வகை. அரச ஒப்பந்தக்காரர்களாக தமக்கு நெருங்கியவர்களை நியமித்துக் கொள்வது இன்னுமொரு வகை. அதிக இலாபம் உழைக்கக் கூடிய வானொலி, தொலைக்காட்சி அலைவரிசைகள், மதுபானம், எதனோல், மீளஏற்றுமதி, பயணிகள் போக்குவரத்து, மரங்கள், மணல், மண் எனவரும் அரச அனுமதிப்பத்திரங்களை தமக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்குவதை பொதுச் சொத்துக் கொள்ளை நடைபெறும் இன்னொரு வழிமுறையாக வகைப்படுத்த முடியும். அரச வர்த்தகங்களை தனியாருக்கு விற்றல், வெளிநாட்டு முதலீடுகளுடனான அபிவிருத்தி நடவடிக்கைகளில் அதற்குரிய ஒப்பந்தக்காரர்களை தேர்ந்தெடுத்தல் போன்றவற்றின் போதெல்லாம் தமக்கு நெருக்கமானவர்களைப் பொறுக்கியெடுத்தல் என்பனவும் பொதுச் சொத்துக் கொள்ளையின் வழிமுறைகளாகக் கருதப்பட முடியும்.

முறைமையொன்றை வகுத்தல்

இலங்கையில் கடந்த 42 வருட கால நீண்ட வரலாறு நெடுகிலும் தங்குதடையின்றி நடந்தேறி வருகின்ற இந்த சொத்துக் கொள்ளையினால் நாடு பில்லியன் கணக்கில் இழந்திருக்கிறது. நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார வங்குரோத்து நிலையில் இது பிரதான தாக்கம் செலுத்தியிருக்கிறது. இந்த நிலைமை மக்களது வாக்கினால் நிறைவேற்றதிகாரம் பெற்று அரசியலமைப்புக்குத் தெரிவான மக்கள் பிரதிநிதிகளின்(ஜனாதிபதி, பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர்கள்) சுயரூபத்தில் மோசமான தாக்கங்களை ஏற்படுத்தி, அவர்கள் அனைவரையும் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரர்களாக மாற்றியிருக்கிறது. இதனால் நாட்டில் நிலவவேண்டிய சட்டத்தின் ஆட்சி பலவீனமடைந்து, மோசடியைத் தவிர்ப்பதற்காக மக்களின் நிதியினால் நடத்தப்பட்டு வருகின்ற அனைத்து நிர்வாக முறைகளும் பலமிழந்து போய்விடுகிறது. இறுதியில் மொத்த அரசாங்கமும் அரச நிர்வாகமும் மோசடி நிறைந்ததாக மாறி விடுகிறது.

நாட்டுக்கு நேர்ந்துள்ள இந்த மோசமான நிலை, இயல்பானதொன்றல்ல. ஜனாதிபதி ஜேஆர் ஜயவர்தனவினால் நிர்மாணிக்கப்பட்டு அவரது ஆட்சிக் காலத்தில் வேர்விட்டு வளர்த்த முறையே இது. ஜேஆருடைய முன்னோடி ஆட்சியில் பல தவறுகளும் குறைபாடுகளும் இருந்த போதும், இது போல மோசமான பேரழிவு தரும் முறையொன்றை அவர் வேரூன்றச் செய்யவில்லை. ஆனால் ஜயவர்தனவின் பின்னர் வந்த ஆட்சியாளர்கள் அனைவரும் ஜயவர்தன நிர்மாணித்துவிட்டுச் சென்ற முறைமைக்கு பல அம்சங்களைச் சேர்த்து அதனைப் பலப்படுத்திக் கொண்டு செல்வதில் பெரும் பங்கு வகித்தனர்.

ஜனாதிபதி ஜயவர்தன இந்த முறையை நெப்போலியனிடமிருந்தே பெற்றிருப்பார். ஜேஆருடைய ஹீரோவே நெப்போலியன். கூலிப்படையொன்றை அமர்த்தி பெரியதொரு சாம்ராஜ்யத்தை வகுத்துக் கொண்டவர் தான் நெப்போலியன். தனது கூலிப்படை தனக்கு விசுவாசமாக இருப்பதற்கும், யுத்த களத்தில் உயிரோட்டமாகச் செயற்படுவதற்குமாக, கைப்பற்றப்படும் பிரதேசங்களைக் கொள்ளையடிப்பதற்கு தனது படைக்கு நெப்போலியன் அனுமதி வழங்கியிருந்தார். தனது ஹீரோ யுத்தத்தின் போது கடைப்பிடித்த கொள்கையை ஜனாதிபதி ஜயவர்தன தனது அரசியலில் பிரயோகித்தார்.

ஜனாதிபதி ஜயவர்தன உருவாக்கிய பாராளுமன்ற முறையில் பாராளுமன்றத்துக்கு இருந்த அதியுயர் கௌரவமும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிருந்த அதிகாரமும் பெருமளவில் பலவீனமடைந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் ரப்பர் முத்திரைகளாக மாறினார்கள். இதனால் அதிருப்தி அடைகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மை விட்டும் நீங்கிச் செல்லாமல், நிபந்தனையின்றித் தனக்கு ஆதரவு வழங்கி தனது ஆட்சியை நீண்ட காலம் நிலைத்திருக்கச் செய்வதற்கு உதவுவதன் அவசியத்தை உணர்ந்தே ஜனாதிபதி ஜயவர்தன இவ்வாறு சொத்துக் கொள்ளைக்கான அனுமதியை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கினார்.

ஜேஆரின் வகிபாகம்

தான் உருவாக்கிய முறைமைக்கு ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கு மிகவும் கீழ்த்தரமான, இழிவடைந்த முன்மாதிரிகளை ஜயவர்தன வழங்க வேண்டியிருந்தது. தமக்கும் தமது குடும்ப அங்கத்தவர்களுக்கும் சொந்தமாக மாதம்பையில் இருந்த விளைச்சல் குறைந்த தென்னந்தோப்பை காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு வழங்கிவிட்டு, ஆணைக்குழுவுக்குச் சொந்தமான நாத்தாண்டியிலிருந்த விளைச்சல் கூடிய தென்னந்தோப்பின் ஒருபகுதியை தனதாக்கிக் கொண்டார். இது எந்தத் தலைவரிடமும் எதிர்பார்க்க முடியாத சட்டவிரோத செயற்பாடாகும்.

ஜனாதிபதியின் இந்த முன்மாதிரியைத் தொடர்ந்து, ஆளும் கட்சியின் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆணைக்குழுவிடமிருந்த காணிகளை பெயரளவுப் பெறுமதியொன்றை விதித்து, பெறுமதியான நிலங்களைக் குத்தகைக்குப் பெற்று நிலச் சுவாந்தர்களாக மாறினார்கள். இதனால் ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் குடும்பத்தவர்கள் கூட காணி,பங்களா, தோட்டம் துரவுகளின் சொந்தக்காரர்களாக மாறினார்கள். இதற்கு மேலதிகமாக, ஆளும்தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தின் ஒப்பந்தக்காரர்களாகச் செயற்படுவதற்கும் இடமளிக்கப்பட்டது. அரச அனுமதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டன. இவை அனைத்துமே சட்டத்துக்கு முரணானவை என்பது ஜனாதிபதி ஜயவர்தனவுக்குத் தெரியும். இருந்த போதும், தனது பாராளுமன்ற உறுப்பினர்களை சொத்துக் குவிப்பதில் ஆர்வமுள்ளோர்களாக மாற்றி, இந்தச் சொத்துக்களுக்காக வேண்டி எப்படியாவது தமது தமது பதவிகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலையிலுள்ள ஒரு கூட்டத்தை உருவாக்கி விட்டால் தனது அரசியல் அதிகாரத்தை இவர்களுக்கூடாக தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று ஜேஆர் கருதினார்.

1977 பாராளுமன்றத் தேர்தலில் காலி தொகுதிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டுத் தெரிவான அல்பேட் சில்வாவின் பெயரில் மண்ணெண்ணெய் அனுமதிப் பத்திரம் இருந்த காரணத்தினால் நீதிமன்றம் அவரது பாராளுமன்ற உறுப்புரிமையைப் பறித்தது. இது ஜயவர்தன தனது பரிவாரங்களுக்கு பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதற்கு வழியமைத்துக் கொடுத்துக் கொண்டிருந்த வேளையிலேயே நடைபெற்றது. ஜனாதிபதி ஜயவர்தனவின் இந்தச் செயற்பாடு சட்டவிரோதமானது என்பதை அந்த வேளையில் இந்தத் தீர்ப்பு எடுத்துக் காட்டியது. ஆனால் ஜனாதிபதி ஜயவர்தன இந்தத் தீர்ப்பை வைத்து தனது செயற்பாடுகளை நிறுத்திக் கொள்வதற்குப் பதிலாக, பதவியிழந்த அல்பேட் சில்வாவுக்கு கம்புறுபிட்டிய தொகுதி அங்கத்தவராக பாராளுமன்ற உறுப்புரிமையை வழங்கினார். 1979 செம்டம்பரில் காலித் தொகுதி அங்கத்துவத்தை இழந்த அல்பேட் சில்வா, 1979 நவம்பரில் கம்புறுபிட்டிய தொகுதி அங்கத்தவராக பாராளுமன்ற உறுப்பினராக அங்கத்துவம் பெற்றார்.

மூடி மறைத்தல்

தனது இந்தச் செயற்பாடுகளையெல்லாம் தனக்குக் கிடைத்திருக்கின்ற நிறைவேற்றதிகார வரத்தினூடாக மூடிமறைக்கலாம் என ஜனாதிபதி ஜயவர்தன நினைத்திருக்கலாம். தன்னை மட்டுமன்றி தனது பரிவாரங்களையும் பாதுகாத்துக் கொள்வதற்கு இந்த வரம் அவருக்கு வாய்ப்பு வழங்கியது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் சட்டவிரோதமாக மக்களின் சொத்துக்களைக் கொள்ளையடிப்பது மக்களின் கவனத்தை ஈர்க்காதிருக்கும் வகையில், 1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுடன் கொடுக்கல் வாங்கல் செய்வதைத் தடை செய்வதான உறுப்புரிமையொன்று சேர்க்கப்பட்டு அரசியல் யாப்பை உன்னதமானதாகக் காட்ட முயற்சி எடுக்கப்பட்டது. 1978 யாப்பின் 91 (1) (இ) இப்படிச் சொல்கிறது. “அரசினாலோ, அரச நிறுவனம் ஒன்றினாலோ அரசு சார்பில் அல்லது அரச நிறுவனம் சார்பில் செய்து கொள்ளப்படும் எந்தவொரு உடன்படிக்கைக்கும் எவரும் எந்த வகையிலேனும் தொடர்புபடுவது, பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாவதற்கு, பாராளுமன்றத்தில் அமர்வதற்கு, பாராளுமன்றத்தில் வாக்களிப்பதற்கு ஒருவரைத் தகுதியற்றதாக்கும் என பாராளுமன்றம் சட்டரீதியாகத் தீர்மானிக்குமிடத்து, அவ்வாறான உடன்படிக்கையில் ஈடுபடும் எவரேனும் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாவதற்கோ, பாராளுமன்றத்தில் அமர்வதற்கோ, பாராளுமன்றத்தில் வாக்களிப்பதற்கோ தகுதியற்றவராவார்.”

இதில் வருகின்ற பாராளுமன்றம் சட்டரீதியாகத் தீர்மானிக்குமிடத்து என்பதை நோக்கினால், இங்கு கூறப்பட்டுள்ள விடயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறுவதை விளங்கிக் கொள்ள முடியும். ஆனாலும் ஜனாதிபதி ஜயவர்தன இவ்வாறானதொரு சட்டத்தை இயற்றவில்லை. ஜனாதிபதி ஜயவர்தனவும் ஆறில் ஐந்து பலத்தைக் கொண்ட அவரது பாராளுமன்றமும் இந்தச் சட்டத்தை நிறைவேற்றாமல் தவிர்த்துக் கொண்டதற்கு, தமக்கு நெருக்கமானவர்கள் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதற்கு இடமளிக்க வேண்டும் என அவர் கருதியமையே காரணம் எனலாம். 1978 ஆம் ஆண்டு யாப்பினை சட்டமாக்கி 20 வருடங்கள் கழிந்த பின்னர் அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் 1998 இல் ராஜித சேனாரத்னவுடைய பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்ட பொழுது தான் இந்த அவலட்சணம் வெளியில் வந்தது.

ராஜித சேனாரத்ன வழக்கு

பாராளுமன்ற உறுப்பினர்களில் ஏராளமானோர் சட்டத்துக்கு முரணாக அரசுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டிருந்த காலமது. ஆனால் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக மட்டுமே வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வேளை, கடற்படைக்கு, விமானப்படைக்கு, சுகாதாரத் திணைக்களத்துக்கு மற்றும் அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்துக்கு பற்சிகிச்சைக் கருவிகளை விநியோகிக்கும் உடன்படிக்கை ராஜித சேனாரத்னவின் நிறுவனமொன்றினால் செய்து கொள்ளப்பட்டமை உறுதியாகியது. 1978 அரசியல்யாப்புக்கிணங்க இத்தகைய தவறுகளைப் புரிகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களைத் தண்டிக்கின்ற முறையொன்று அதுவரை வகுக்கப்படாமல் இருந்ததனால், சோல்பரி யாப்பின் அடிப்படையிலேயே ராஜிதவுக்கு தண்டனை வழங்கப்பட்டது. மக்கள் பிரதிநியொருவரின் வாழ்க்கையில் இருக்க வேண்டிய தூய்மை, நேர்மை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கென இருந்த பலமான பாரம்பரியத்தை விட்டும் நீங்குதல் என்பது, நம்பமுடியாத அளவு கடுமையானது என அவருக்கான தீர்ப்பில் வரையப்பட்டிருந்தது. அரசியல் யாப்பின் 91 (4) (இ) இன் அடிப்படையில் சட்டமியற்றப்படாதது பற்றி நீதிமன்றம் பாராளுமன்றத்தின் மீது சுமத்திய பாரிய குற்றச்சாட்டாக இதனைக் கருத முடியும். ஆச்சரியத்துக்குரிய விடயம் என்னவென்றால், நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ராஜித சேனாரத்னவை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜேஆரை முன்னுதாரணமாகக் கொண்டு, தேசியப் பட்டியலினூடாக பாராளுமன்ற உறுப்பினராக்கினார்.

இதனால் ஜேஆர் உருவாக்கிய பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதற்கான முறைமையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்பவராக ரணில் விக்கிரமசிங்க மாறினார். இதனூடாக பொதுச் சொத்துக்களைச் சூறையாடும் பழைய பாரம்பரியம் மீண்டும் தொடர்வதற்கான அடையாளங்கள் தெரியத் தொடங்கியிருக்கின்றன.

இந்தத் தீர்ப்பினூடாக சட்டமியற்றும் நிறுவனமான பாராளுமன்றத்தின் மோசமான பகுதிகளையும் கண்டு கொள்ள முடியும். பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்கள் பிரதிநிதிகள் தமது பொதுவாழ்வில் நேர்மையாக நடந்து கொள்வதை உறுதிப்படுத்துவதற்கான சட்டதிட்டங்களை இயற்றுவதில் இருந்தும் பாராளுமன்றம் தவிர்ந்து கொண்டு வந்துள்ளதை இந்தத் தீர்ப்பு வந்த பின்னரே அனைவரும் அறிந்து கொள்ள முடியுமாகவிருந்தது. நீதிமன்றம் இந்தத் தவறைச் சுட்டிக் காட்டி 21 வருடங்கள் கடந்த பின்பும் இன்றுவரை இந்தத் தவறைத் திருத்திக் கொள்வதற்கு பாராளுமன்றத்தினால் முடியாமல் போயுள்ளது. நாட்டின் சட்டமியற்றும் நிறுவனமும் கூட அந்த நிறுவனத்தின் சட்டமியற்றுபவர்களது மோசடியான, திருட்டுத்தனமான பண்புகளை மாற்றுவதற்கு விரும்பவில்லை என்பதனைத் தானே இது காட்டுகிறது ? ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பாலானவர்கள் அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்யும் நிலைக்கு தற்போது மாறியிருப்பது இதன் விளைவாகத் தான் என்பது தெளிவாகிறது. சிலர் அரச காணிகளைப் பெற்று பெருந்தோட்டங்களுக்குச் சொந்தக்காரராகியிருக்கிறார்கள். முக்கிய நீர் நிலைகளையண்டி பங்களாக்களையும் ஹோட்டல்களையும் நிர்மாணித்திருப்பவர்கள் எத்தனை பேர் ? இவையெல்லாம் அரசாங்கத்தின் நிலங்கள் தானே ! அரசின் ஒப்பந்தக்காரர்களாக வேலை செய்வோர், மதுபானசாலைகளின் அனுமதி பெற்றோர், கல், மணல், மண், மரம் போன்றவற்றுக்கான அனுமதிப்பத்திரம் பெற்றோர் என பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எம்மாத்திரம் ?  இப்படியான பாராளுமன்ற உறுப்பினர்களை சட்டரீதியான பாராளுமன்ற உறுப்பினர்களாகக் கருத முடியுமா ? பாராளுமன்றத்தின் அதிகமான உறுப்பினர்களின் நிலை இதுதான் என்றால், பாராளுமன்றத்தை சட்டரீதியாகவும் பண்பாட்டுரீதியாகவும் அந்தஸ்துள்ள இடமாகக் கருதுவது எப்படி ? இது தொடர்பில் ஆராய வேண்டியது சபாநாயகரின் பொறுப்பில்லையா ? கணக்காய்வாளர் நாயகத்தின் பொறுப்பில்லையா ? இலங்கையின் அரச நிர்வாகத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளில் பிரதான குறைபாடாக இதனை நாங்கள் கருத முடியும். மக்களது வாக்கினால் நிறைவேற்றதிகாரம் செலுத்தத் தகுதி பெற்ற அரச நிர்வாகத்தின் மூக்கணாங்கயிறு, மக்களது சொத்துக்களைக் கொள்ளையடிப்பதை நோக்கி இட்டுச் செல்லுமானால் அந்த நாடு குட்டிச் சுவராகிப் போவதை யாராலும் தடுக்க முடியாது. இலங்கைக்கும் இந்த நிலை தானே ஏற்பட்டிருக்கிறது ? தமக்குக் கிடைத்துள்ள அரச அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்து தமக்கு சொத்துச் சேர்ப்பதற்கான வழிமுறையாகப் பயன்படுத்துவதாக இருந்தால், அது சட்டத்தின் ஆட்சி சிதைவடைவதற்குக் காரணமாகும். மொத்த அரச நிர்வாகமும் மோசடி நிறைந்து பயனற்றதாய்ப் போய்விடக் காரணமாகும். அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருமானம் குறைந்து நாடு வறுமையில் வீழ்வதற்குக் காரணமாகும். அரசாங்கத்துக்கு இருக்க வேண்டிய தீர்க்கதரிசனம், முன்னெச்சரிக்கை எல்லாம் சரிந்து வீழும்.

நாட்டின் பொதுச் சொத்துக்களை கொள்ளையடிப்பதை பிரதான பணியாகக் கொண்ட குழுவொன்றுக்கு நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு இட்டுச் செல்ல முடியுமே அன்றி அவர்களால் நாட்டை முன்னேற்ற முடியாது. இந்தப் புற்றுநோயை இல்லாதொழிப்பதற்கு முன்னுரிமை வழங்குவது அத்தியாவசியமானது. 

About the author

Administrator

1 Comment

  • பொது மக்கள் சொத்தை சூறையாடும் ஆட்சியாளனை ஓட்டு போட்டு தெரிவு செய்வது , முஸ்லிமுக்கு பாவத்தில் பங்கு போடுவது போலாகுமா ?

Leave a Comment