Features சமூகம் நாடுவது நலம்

சகவாழ்வைக் கட்டியெழுப்புவதில் சகல தரப்பினதும் ஒத்துழைப்பு அவசியம்

Written by Administrator

சகவாழ்வை கட்டியெழுப்புவதில் அரசியல் தலைமைகள், சமயத் தலைமைகள், ஊடகங்கள், புத்திஜீவிகள் உள்ளிட்ட சகலரதும் ஒத்துழைப்பு அவசியம்.

ஆப்கானிஸ்தான் சோவியத் யூனியன் ஆளுகைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த போது அமெரிக்கா ஆப்கானிஸ் தானுக்கு உதவ முன்வந்தது. ‘அல்காயிதா’ அமைப்பை உருவாக்கத் தேவையான ஒத்துழைப்பையும் அமெரிக்கா வழங்கியது. டொனால்ட் ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை உருவாக்கியது பராக் ஒபாமா என்று தெரிவித்திருந்தார்.

இவ்விடயங்களிலிருந்து விளங்குவது யாதெனில் தமது முதலீடுகளை சுதந்திரமான முறையில் மேற்கொள்வதற்கான சுதந்திரம் ஒரு நாட்டில் இல்லாமல் போகின்ற போது உலக வல்லரச நாடுகள் ஒரு நாட்டின் ஆட்சியையே மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கும் என்பதாகும். எகிப்து, லிபியா, ஈராக், சிரியா போன்ற நாடுகளும் இத்தகைய நிலைக்கு முகம்கொடுத்தன. பலஸ்தீனில் ஆட்சிக்கு வந்த ஹமாஸ் தமக்கு அடிபணியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அவ்வமைப்பு பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தப்பட்டது.

அத்துடன் உலகின் பலம் பொருந்திய ஊடகங்கள் மக்களுக்கு சிந்தித்து முடிவெடுப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்காமல் ‘ஹமாஸ் பயங்கரவாதிகள்’ என அவைகளே தீர்ப்பு வழங்கின. ஊடக நிறுவனங்களினால் ஒலி, ஒளி பரப்பப்படுகின்ற தகவல்களை அவ்வாறே ஏற்றுக்கொள்ளாமல் விடயத்தை ஆராய்ந்து பார்த்ததன் பிறகே முடிவுகளுக்கு வரவேண்டும். இவ்வாறான நிலையில் குறிப்பாக எமது நாட்டிலும் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் இதையும் விட பொறுப்புடன் நடந்துகொள்வது மிக முக்கிய விடயமாக காணப்படுகின்றது. இதற்கு அரசியல் ரீதியில் மிகப்பெரும் அர்ப்பணிப்பும் சீரிய அரசியல் நோக்கமும் அவசியப்படுகிறது.

தற்போது எமக்கு மத்தியில் உருவாகியுள்ள அவநம்பிக்கை, சந்தேகம், அச்சம், பீதி என்பன இயல்பாக உருவானதல்ல. செயற்கைத்தனமாக உருவாக்கப்பட்டவையாகும். இந்நிலையை இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுப்பது அரசியலினதும் சட்டத்தினதும் பொறுப்பாகும். பிரிவினைவாதக் கருத்துக்களை முன்வைப்போரை தராதரம் பாராது, எவ்வினத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.

எனினும் அது இற்றை வரை சரியான முறையில் முன்னெடுக்கப்படவில்லை. இதன் மூலம் எம்மாலேயே இந்தக் கருத்துக்கள் பரவுவதற்கான களம் அமைக்கப்படுகிறது என்பது புலப்படுகிறது. எனினும் உலகின் ஏனைய நாடுகளில் இத்தகைய நிலைமைகள் இல்லை என்பதுடன் அவர்களுக்கு தேவையான தீர்வையும் சட்டத்திற்குள் கண்டுகொள்ள முடிகின்றது.

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதலை தொடர்ந்து காதினல் மல்கம் ரஞ்சித் செயற்பட்ட விதம் எல்லோரதும் பாராட்டுக்களுக்கு உள்ளானது. இதனால் தீவிரவாதிகள் எதிர்பார்த்த மோதல் உருவாகாமல் தடுக்கப்பட்டது. ஏப்ரல் 21 தாக்குதல் காரணமாக ஏற்பட்ட வேதனைகள், கவலைகளுடன் எமக்கு மத்தியிலும் அம்முஸ்லிம் இளைஞர்கள் தொடர்பில் கோபமான எண்ணங்கள் உருவானது.

எனினும் காதினல் அவர்கள் இப்பிரச்சினையின் யதார்த்தத்தை புரிந்துகொண்டது மாத்திரமல்லாமல் அவர் ஆவேசமான முறையில் தீர்மானங்கள் எடுக்கவில்லை. பிரச்சினையின் ஆழத்தை புரிந்து தீர்மானம் எடுத்தார். மக்களையும் தெளிவூட்டினார். இதுவே சரியான மார்க்கத் தலைமைத்துவம். இதுவே நாம் பெற்றுக் கொள்ள வேண்டிய முன்மாதிரியாகும்.

எமக்கு மத்தியில் சகவாழ்வைக் கட்டியெழுப்புவதில் அரசியல் தலைமைகள், சமயத் தலைமைகள், ஊடகங்கள், கல்வியலாளர்கள், அறிவுஜீவிகள் போன்ற சகலரதும் அர்ப்பணிப்பும் தியாகமும் ஒத்துழைப்பும் அவசியம். ‘அநீதிக்கு எதிராக கிளர்ந்தெழுங்கள், (அது) உமது பெற்றோருக்கு எதிரானதாக இருந்தாலும், உமது உறவினருக்கு எதிரானதான இருந்தாலும், உமது நண்பர்களுக்கு எதிரானதாக இருந்தாலும் சரியே, நீதி நியாயத்திற்காக கிளர்ந்தெழுங்கள்’என்பதாக அல்குர்ஆன் குறிப்பிடுகிறது.

 அத்துடன் ‘ஏதேனும் ஒரு செயலை செய்ததன் பிறகு கவலைப்பட நேரிடுமாயின் அத்தகைய செயல்களிலிருந்து விலகியிருப்பது நல்லது’ என்பதாக தம்ம பதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து புலப்படுவது யாதெனில் எமது சமயங்கள் இதற்கு வழங்கியிருக்கும் பெறுமானங்கள் ஒன்றாகும் என்பது. இவ்வொற்றுமையை புரிந்து தீவிரவாத எண்ணங்களை விட்டும் விலகியிருக்கும் போது ஒரே குடும்பமாக நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான சந்தர்ப்பம் எமக்குக் கிடைக்கின்றது.

About the author

Administrator

Leave a Comment