Features

ஜனாதிபதியாக வருபவர் எப்படி இருக்க வேண்டும்? இளைய தலைமுறையினரின் எதிர்பார்ப்பு

Written by Administrator

“லீ குவான் யூ போன்ற தலைவரே நமக்குத் தேவை”

முஷ்பிக் சாஜஹான், ஜாமியா நளீமிய்யா கலாபீடம்

அடுத்த ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிக்கும் புள்ளியில் இலங்கை அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. சரியான தலைவரை தெரிவுசெய்து ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு நமக்குள்ளது. பன்மைத்துவமே எமது வரம். லீ குவான் யூ போன்ற பன்மைத்துவத்தை சரியாகப் புரிந்த ஒரு தலைவரே நமக்குத் தேவை.

தேசத்தின் பாதுகாப்பு, அபிவிருத்தி மற்றும் மக்களின் நலன் குறித்து சிந்திக்கின்ற,  இனவாதத்தை அரசியலில் முதலீடு செய்யாத தலைவரே நமக்குத் தேவை. சர்வதேச சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு சோரம் போகாதா நாட்டை சுயமாக முன்னேற்ற முடியுமான, இக்கட்டான பிரச்சினைகளின் போது தீர்க்கமான முடிவுகளை எடுக்கக் கூடிய சாணக்கியம் படைத்த ஒரு தலைவரை நாம் தெரிவுசெய்யக் கடமைப்பட்டுள்ளோம்.

இனங்களுக்கிடையில் பாரபட்சமின்றி சட்டவாட்சியை நிலைநாட்டக் கூடிய, இனங்களுக்கிடையில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஒரு தலைவரே நமக்கு வேண்டும். இன நல்லிணக்கமே தேசத்தை கட்டியெழுப்பும் என்ற உயரிய சிந்தனையை மக்கள் மயப்படுத்தும் பொறுப்பை செய்யக்கூடிய தலைவரையே நாம் தெரிவு செய்ய வேண்டும். குறைந்தபட்சம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் தலைவரையாவது தெரிவு செய்வோம்.

நான் இலங்கையன், என் நாட்டின் எதிர்காலம் என் கையில் இருக்கிறது என்ற உணர்வுடன் வாக்களிக்க முன் வாருங்கள். நாமே நமக்கான தலைவரை தெரிவுசெய்ய இருக்கிறோம். வாக்குகள் துப்பாக்கி ரவைகள், யாருக்கும் வேட்டு வைக்கும்.

“மக்களையும் அவர்களது உரிமைகளையும் பாதுகாப்பவராக இருக்க வேண்டும்”

எம்.எஸ்.எம். மும்தாஸ் – கலைப்பீடம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம்

பல்லின மக்களை கொண்ட இவ் இலங்கை நாட்டில் ஒரு ஜனநாயக ஆட்சி முறைமை என்பது தற்கால சூழ்நிலைகளைப் பொறுத்து அமைய வேண்டியது கட்டாய நிலைமையாகவே இருக்கின்றது. இதுவரை காலமும் இருந்த அரசாங்கங்களைப் பார்க்கும் போது சிறுபான்மை மக்களுக்கு ஆதரவானதொரு அரசாங்கமென நூற்றுக்கு ஐம்பது வீதம் கூட ஆணித்தரமாக குறிப்பிட முடியாமலேயே உள்ளது. நாட்டில் ஜனாதிபதியாக வரும் முக்கிய பிரமுகர் தன்னிலை தவறாத ஒரு தலைவராகவும், நடுநிலைமை மிக்க ஆட்சியாளராகவும் இருக்க வேண்டும். நாட்டின் ஜனாதிபதியின் தலையான கடமை நாட்டு மக்களை பாதுகாத்தல் மற்றும் அவர்களது உரிமைகளையும் மீறலாகாது என்பதாகும். “அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழியே” என வாழும் மக்களை ஒரு நேரான பாதையின் கீழ் கொண்டு செல்வது என்பது நாட்டினுடைய தலைவரது பாரிய பொறுப்பாகும்.

சிறுபான்மை மக்கள் மற்றும் கீழ் தட்டு மக்களின் பிரச்சினையை முழுமையாக பேசக்கூடிய ஒரு அரசாங்கம் இந்நாட்டில் அமையுமாக இருந்தால் நிச்சயம் நாட்டு மக்களின் அமைதியையும், ஒற்றுமையையும் எம்மால் கண்டுகொள்ளலாம்.

ஆகவே, சிறுபான்மை மக்களது மிகப் பாரிய எதிர்பார்ப்பும் இதுவாகவே உள்ளது. எதிர்வரும் காலத்தில் (டிசம்பர் மாதம்) நடக்கவிருக்கும் தேர்தலானது சிறுபான்மையான மக்களிற்கு சார்பானதொரு அம்சமாக திகழ வேண்டும். மக்களது எதிர்காலத்தை சிறப்பானதாக அமைக்கக் கூடிய ஒரு அரசாங்கம் அமைய வேண்டும். மாட மாளிகைகளில் இருந்து கொண்டு வேடிக்கை பார்க்கும் வேடிக்கையாளர்கள் தகுதிவாய்ந்த அதிகாரிகளல்ல. உண்மையிலேயே மக்களது பிரச்சினையும் தனது பிரச்சினை என உணர்ந்து நடுவீதிக்கு வந்து தீர்த்து வைக்கக் கூடியவரே மக்களின் சேவகன். ஆட்சி மாற்றம் என்றால் இவ்வாறான ஒரு மாற்றத்தையே ஏற்படுத்த வேண்டி இருக்கிறது.

எனவே தேர்தல்கள் என்பது ஒரு சமூகத்தின் தலைவர் மற்றும் மக்களின் தலையெழுத்தையே மாற்றி வைக்கக்கூடிய தொன்று. அவ்வாறான தேர்தல்கள் பக்கச் சார்பின்றி நடுநிலையாக நடைபெற வேண்டும். ஆட்சி மாற்றத்தில் வரக்கூடிய தலைவர்கள் நாட்டு மக்களின் நலன் கருதியே செயற்பட வேண்டும்.

“சகல இன மக்களையும் ஒன்றிணைத்து நிலையான தேசத்தை கட்டியெழுப்பக் கூடியவராகத் திகழ வேண்டும்”

ஏ.பி. அஹமட் சரொத் சுஜா – பொறியியல் பீடம், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்

அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலானது மும்முனை அரசியல் போட்டியாக சூடுபிடித்துள்ளது. எனவே நாட்டிற்கு சிறந்த சேவையை ஆற்றக்கூடிய ஜனாதிபதியை தேர்வுசெய்வது இலங்கைப் பிரஜை ஒவ்வொருவரினதும் எதிர்பார்ப்பாகும். ஒரு நாட்டினுடைய அபிவிருத்தி என்பது பொருளாதாரம், கல்வி, சமூகம், அரசியல் போன்ற விடயங்களில் தங்கிக் காணப்படுகின்றது. நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்ள புதிய கைத்தொழில் பேட்டைகளை உருவாக்கி உள்நாட்டு விவசாய, கைத்தொழில் உற்பத்திகளை அதிகரிக்க முயற்சி செய்யக்கூடியவராக காணப்பட வேண்டும். அத்துடன் அந்நிய செலாவணியை கட்டுப்படுத்தக் கூடியவராய் காணப்பட வேண்டும். மேலும் கைத்தொழில் பேட்டை மூலம் வறிய, நடுத்தர குடும்பப் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடியவராக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் நாட்டில் நிகழ்ந்த கசப்பான சம்பவங்களால் ஏட்டிக்கு போட்டியாக நடக்கும் எல்லா இனமக்களையும் ஒன்றிணைத்து நிலையான தேசத்தை கட்டியெழுப்பக் கூடியவராக திகழ வேண்டும். அதேவேளை திட்டமிட்ட இனரீதியான குடியேற்றங்களை மேற்கொள்ளக் கூடாது.

மேலும் உள்நாட்டு வளங்களை வெளிநாடுகளுக்கு தாரைவார்க்காமல், உள்நாட்டு ஆளுமைகளை பயன்படுத்தி வெளிநாட்டு உதவியுடன் நிலையான அபிவிருத்தி மேற்கொள்ளக்கூடியவராகக் காணப்பட வேண்டும். இவற்றுக்கு மேலதிகமாக சட்டம், அரசியலமைப்பை மீறாது செயற்படக்கூடியவராக காணப்படுவதுடன், சட்டம், நீதித்துறையில் அரசியல் தலையீட்டினை தடுக்க முயற்சி மற்றும் நடவடிக்கை மேற்கொள்ளக்கூடியவராக இருக்க வேண்டும். அடுத்த ஜனாதிபதியாக தேர்வுசெய்யப்படுகின்றவர் பாரம்பரியம் என்ற மக்களின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தி நவீனத்துவ சிந்தனையுடன் இளைஞர்கள், கல்விமான்களை கொண்ட அரசாங்கத்தை அமைக்கக் கூடியவராக காணப்பட வேண்டும்.

ஊழல் மோசடியற்ற அரசை உருவாக்கி நம்பகமான செய்திகளை சுதந்திரமான முறையில் வெளியிடக்கூடிய கொள்கைகளை வகுக்கக் கூடியவராக காணப்பட வேண்டும். இவ்வாறான இயலுமைகளை கொண்ட ஒரு நபரை தெரிவுசெய்வது ஆரோக்கியமான, சுபீட்சமான ஒரு இலங்கை தேசத்தை உருவாக்கும்.

“தரமான முடிவுகளை எடுக்கக்கூடிய சிறந்த ஆளுமையாக இருக்க வேண்டும்”

ஹஸன் ஹனி, – ஜாமியா நளீமிய்யா கலாபீடம்

ஒழுங்கான தலைமைத்துவம் இல்லாத நாட்டில் அரசியல் நிலைமைகள் மற்றும் நடைமுறை பிரச்சினைகள் எவ்வாறு இருக்கும் என்பதை அண்மைக்கால அரசியல் நிலவரங்களை வைத்து கண்டிருப்போம். எமது அரசியல் என்பது சாக்கடையாவதும் ஒரு பூந்தோட்டமாவதும் நாம் தெரிவு செய்யும் தலைவர்களின் கைகளில்தான் இருக்கின்றது.ஒழுங்கான தலைவர்களை தெரிவு செய்ய வேண்டியது நமது கடமையாகும். இன்று இனவாதமே அரசியலின் மறைகரமாக மாறி இருக்கின்றது.

பன்மைத்துவ சமூக அமைப்பொன்றில் இனவாதத்தை வைத்துக்கொண்டு தாராள மாக அரசியல் செய்யலாம் என்ற நம்பிக்கை இன்று இழையோடிருக்கின்றது. இந்த அபத்தமான நம்பிக்கையை கட்டுடைப்புச் செய்ய வேண்டியது இளைய தலைமுறையாகிய எமது கடமையாகும். இதற்காக வேண்டி எமது வாக்குப் பலத்தை நாங்கள் கட்டாயமாக சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். நாம் முற்போக்கான முறையில் சிந்தித்து எமது சமூகம், எமது நாடு எத்தகைய முற்போக்கான பாய்ச்சல்களை  எதிர்பார்க்கின்றதோ, பிராந்தியத்தில் எவ்வாறான செல்வாக்கை எதிர்பார்க் கின்றதோ அதை நோக்கி இந்த நாட்டை வழிநடாத்திச் செல்லக்கூடிய தலைமையை உருவாக்க வேண்டியது நமது கடமையாகும். அதனை நாம் அடிப்படையிலிருந்து எமது சமூகத்திலிருந்து உருவாக்குவதற்கு முயற்சிக்க வேண்டும். அதனை நோக்கி சிந்தனையை மக்கள் மத்தியில் விதைக்க வேண்டும்.

அதற்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும். எமது சமூக வலைதளங்கள் மற்றும் அச்சு ஊடகங்களை நாங்கள் அதற்கான காரணமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எம்மால் இயன்றளவு முயற்சிகளை மேற்கொண்டு சிறந்த தலைவரை உருவாக்க முயற்சிக்க வேண்டும். நாட்டின் சுய  பொருளாதார வளர்ச்சியில் நாடு முன்னேற வேண்டும். இந்த நாட்டின் விவசாயத்தை முன்னேற்ற வேண்டும். நாட்டின் வர்த்தகத்தை முன்னேற்ற வேண்டும். சர்வதேச அரங்கில் நாடு தலைகுனிய வேண்டிய சந்தர்ப்பங்கள் வருகின்ற பொழுது சூட்சுமமான மற்றும் இராஜதந்திர ரீதியிலான முடிவுகளை எடுத்து நாட்டின் தன்மானத்தை பாதுகாக்க வேண்டும். இது போன்ற தரமான முடிவுகளை எடுக்கக்கூடிய தரமானதொரு ஆளுமைமிக்க  ஒரு அரசியல் ஆளுமையே நாட்டின் தலைவராக தெரிவு செய்யப்படல் வேண்டும். இதற்காக நாம் அனைவரும் ஒன் றிணைய வேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். நமது சிந்தனைகள்தான் இன்று மாற்றக்கூடியது. மாற்றத்தின் சக்தி, மாற்றத்தின் சாவி நமது கைகளில் தான் இருக்கின்றது. எனவே எமது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய ஒரு தலைவரை உருவாக்க வேண்டிய கடமையில் இருக்கி றோம். அதற்காக வேண்டி இந்த தேர்தலை பயன்படுத்திக் கொள்வோம். வாக்கு நமது கரங்களில்…

நமது வாக்கு நமது எதிர்கால செல் வாக்கு!!!

“அனைத்து இன மக்களினது கோரிக்கைகளுக்கும் செவிதாழ்த்தக் கூடியவராக இருக்க வேண்டும்.”

எம்.டீ.எம். நஜீம், – கலைப்பீடம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம்.

ஒரு நாட்டினை ஆட்சி செய்யக்கூடியவர் நாட்டினையும் நாட்டு மக்களையும் நேசிக்கக்கூடியவராக இருக்க வேண்டும். அதன் பிற்பாடு நாட்டின் பொருளாதாரத்தினை மேம்படுத்தி, நாட்டில் உள்ள இளைஞர்களுக்கும் சிறுதொழில் முயற்சி யாளர்களுக்கும் நல்ல தொழில்வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்கக் கூடியவராக இருக்க வேண்டும். மேலும் நாட்டில் மக்களை இன ரீதியான பாகுபாடின்றி மக்கள் அனைவரும் இலங்கை பிரஜை என்ற அடிப்படையில் சமமாக மதித்து அனைவரது உரிமை, சுதந்திரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

நாட்டில் ஏற்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் சமத்துவமான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். குறித்ததொரு இனத்திற்கு மாத்திரம் முன்னுரிமை வழங்காமல் அனைத்து இனங்களையும் கருத்திற் கொண்டு அவர்களது கோரிக்கைகளுக்கு செவிதாழ்த்த வேண்டும். இந்த நாட்டில் இன ஐக்கியத்தையும் இன ஒற்றுமையையும் நாட்டின் சிறந்த பொருளாதாரத்தினையும் சிறந்த அபிவிருத்தியையும் ஏற்படுத்தக் கூடிய ஒரு சிறந்த வேட்பாளரையே சிறுபான்மை மக்கள் வேண்டி நிற்கின்றனர். எனவே இவ்வாறான கொள்கையை எந்த வேட்பாளர் கொண்டிருக்கின்றாரோ அவரையே மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

“பெரும்பான்மை, சிறுபான்மை வேறுபாடுகள் இன்றி அனைவரதும் உரிமைகளை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும்”

எம்.எப்.எம். மின்ஹாஜ்,  – சட்டபீடம், பேராதனை பல்கலைக்கழகம்.

இலங்கை அரசின் அடுத்த தலைவர் யார் என்று தீர்மானிக்க வேண்டிய மக்கள் அத்தலைவர் எவ்வாறான ஒருவராக இருக்க வேண்டும் எனவும் அறிந்திருக்க வேண்டும். நாட்டின் முதற் பிரஜை என்ற அந்தஸ்தை ஏற்கும் ஜனாதிபதி இலங்கை மக்களை இன, மத, மொழி, பிரதேச, பால்நிலை, கட்சி போன்ற எந்தப் பாகுபாடுகளும் இன்றி நாட்டில் வாழும் மக்கள் அனைவரையும் அதன் பிரஜைகள் என்ற கண்கொண்டு பார்க்கும் ஒருவராக இருக்க வேண்டும். ‘சட்டத்தின் முன் சகலரும் சமம்’ ஆள்வோரும் ஆளப்படுவோரும் நாட்டு சட்டங்களை மதித்துப் பின்பற்ற வேண்டும்.

ஜனாதிபதிப் பதவிக்குத் தெரிவு செய்யப்படுபவரும் நாட்டுச் சட்டங்களை முறையாகப் பின்பற்றும் ஒருவராக இருத்தல் வேண்டும். (சட்ட, நிர்வாக மற்றும் நீதி) முத்துறைகள் மீதும் அதிகாரங்கள் பெற்ற பதவியாக ஜனாதிபதிப் பதவி இருப்பதனால் தெரிவு செய்யப்படுபவர் நாட்டின் அடிப்படையும் மேலானதுமான சட்டமாகிய அரசியல் யாப்பினை மதித்து பின் பற்றுவதோடு அச்சட்டங்கள் மீறப்படுவதற்கு முன் அவற்றுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யக்கூடியவராகவும் அமைதல் வேண்டும். ஜனாதிபதி தனது முத்துறை அதிகாரங்கள், பணிகள் அல்லது சம்பிரதாய பூர்வப் பணிகளை நிறைவேற்றும்போது எச்சந்தர்ப்பத்திலும் பெரும்பான்மை, சிறுபான்மை வேறுபாடுகள் இன்றி அனைவரதும் உரிமைகள், சுதந்திரம் மற்றும் சமத்துவம் தொடர்பாக கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும். பதவி மற்றும் அதிகார மோகத்திற்காக செயற்படும் ஒருவராக அன்றி நாட்டுப் பிரஜைகளின் நலன்கருதி சேவை புரியக்கூடிய ஆற்றல் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

இலங்கை தாய்நாடு தற்போது அனுபவிக்கும் தேசிய வளங்கள் மற்றும் நலன்களை பாதிப்படையாது பாதுகாப்பதோடு அது தொடர்பான முன்னேற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டின் பாதுகாப்பு, அபிவிருத்தி தொடர்பாக அதிகம் அக்கறையுள்ளவராகவும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுபவர் இருத்தல் வேண்டும். மேலும் தேசிய நலன் அல்லது அபிவிருத்திக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலாக செயற்படும் பிரமுகர்களினதும் சமூக, சமய, அரசியல் நிறுவனங்களினதும் அழுத்தங்களுக்கு கட்டுப்படாத மக்கள் நலன் பேணும் நேர்மையுள்ள ஒருவர் ஜனாதிபதி பதவிக்கு தெரிவாக வேண்டும். நாட்டின் பொது வளங்களை அல்லது தன்பதவி நிலையை தனது சொந்த நலன் கருதி பிரயோகிக்கக் கூடியவர்கள் ஜனாதிபதி பதவிக்காக தெரிவாகக் கூடாது.

ஜனாதிபதித் தேர்தல் மக்கள் அபிப்பிராயங்களின் முடிவுக்கான ஒரு சந்தர்ப்பமாகும். வேட்பாளர்களாக போட்டியிடும் அனைவரும் அப்பத விக்கு தகுதியுடையவர்களா? என்பது நிச்சயமற் றது. ஆனால் அவர்களுள் தகுதி வாய்ந்த சிறந்த ஆளுமையுள்ள ஒருவரை மக்கள் தேர்ந்தெடுப்பது  சாத்தியமானதே. வேட்பாளர்களின் கடந்த கால அரசியல் சமூக வாழ்வின் தெளிவாக உண்மையாக உறுதிசெய்யப்பட்ட வரலாற்றுத் தரவுகள் அவர்களை தெரிவுசெய்வதற்கான சிறந்த வழிகாட்டியாகும். ஜனநாயகத்தின் விதிப்படி முடிவு மக்களிடமே மக்களின் அபிப்பிராயங்கள் மாற்றத்தை விரும்புவதாக இருப்பினும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு சரியான ஒருவரிடம் வழங்கப்பட வேண்டும்.

வரும் ஜனாதிபதித் தேர்தலில் அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் நாட்டின் எதிர்கால அரசியலில் மட்டுமன்றி சமூக மற்றும் பொருளாதார ரீதியாகவும் தாக்கம் செலுத்தும். எனவே, வாக்களிப்பதிலிருந்து தவிர்ந்திருப்பதை விட தகுதியான ஒருவரை ஜனாதிபதியாக தெரிவுசெய்ய வாக்களிப்பதும், அவ்வாக்குகளை உரியமுறையில் பிரயோகிப்பதும் காலத்தின் தேவையாகவுள்ள மக்களின் கடமையாகும்.

தொகுப்பு: ஹெட்டி ரம்ஸி

About the author

Administrator

Leave a Comment