Features சிந்தனையாளர்கள் சிறப்புக்கட்டுரைகள் ஷரீஆ

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வகிபாகம் காலம் வேண்டி நிற்கும் ஒரு வணக்கம்

Written by Administrator

முஹம்மத் பகீஹுத்தீன்

இலங்கை வாழ் முஸ்லிம்கள் தாய் நாட்டின் நலன்களுக்காக உழைப்பதும் பாடுபடுவதும் ஒரு தவிர்க்க முடியாத வணக்கமாகும். தாய் நாட்டைக் கட்டியெழுப்புவதில் பங்காளிகளாக இருப்பது ஒவ்வொரு குடிமகன் மீதுமுள்ள தார்மீகக் கடமையாகும்.

ஒரு முஸ்லிம் சிறந்த தனிமனித ஆளுமைகளை உருவாக்கும் பிரசாரகனாகவே வாழ்ந்து மடிவான். பிரசாரத்தை அவனது வாழ்வியல் கடமையாகவே அவன் கருதுவான். அந்த வகையில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் குடிமகன் தனது நாட்டின் அரசியல் வாழ்விலும் தேர்தல் வழிமுறைகளிலும் முன்மாதிரியாக நடந்து கொண்டால் அதுவே ஒரு சிறந்த, உயர்ந்த தஃவாவாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

தேர்தல் என்பது அரசியல் போராட்டத்திற்கான சக்திமிக்க ஒரு சாதனமாகும். சிறுபான்மையாக வாழும் இலங்கை முஸ்லிம்கள் அதில் பங்கு பெற்று போராடுவதற்கு இஸ்லாம் தாராளமாக அங்கீகாரம் வழங்குகிறது.

பின்வரும் சட்டவிதிகள் அரசியற் போராட்டத்தையும் வாக்குரிமையை பயன்படுத்துவதையும் அங்கீகரிக்கின்றன. அவற்றை சுருக்கமாக நோக்குவோம்.

1) ‘ஒரு கடமையை நிறைவேற்றல் இன் னொன்றை நிறைவேற்றுவதில் தங்கியிருக்குமாயின் அந்த விடயத்தை நிறைவேற்றுவதும் கடமையாகும்’ இது ஒரு சட்ட விதி. இந்த விதியின் படி முஸ்லிம்கள் தமது மார்க்க, கலாசார, சமூக உரிமைகளைப் பெறும் அரசியற் போராட்டம், தேர்தலில் கலந்து கொள்வதில் தங்கியிருக்குமாயின் தேர்தலில் பங்குகொள்வதும் வாக்களிப்பதும் அவர்கள் மீது கடமையாகும். வாக்குரிமை என்ற கடமையை புறக்கணித்து விட்டு மாற்றம் வேண்டும் என கனவு காண முடியாது.

எனவே சிவில் சமூகத்தின் அரசியல் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபாடுள்ள இஸ்லாமியவாதிகளை தீண்டத் தகாதவர்களைப் போல் புறக்கணிப்பது அறிவுடமையாகாது. அவர்களது அரசியல் பங்களிப்பு சமூக மேம்பாட்டிற்கான படிக் கல்லாகும்.

2) ‘செயல்கள் யாவும் நோக்கங்களை வைத்தே தீர்மானிக்கப்படும்’ இது சட்ட அறிஞர்களுக்கு மத்தியில் ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட இன்னொரு சட்ட விதியாகும். எனவே அரசியல் போராட்டத்தில் கலந்து கொள்வது முஸ்லிம்களின் உரிமையைப் பெறல், மார்க்க சுதந்திரத்தைப் பெறல், கலாசார தனித்துவத்தையும் முஸ்லிம் அடையாளத்தையும் காத்தல் என்ற எண்ணத்தோடும் நோக்கத்தோடும் இருப்பின் அது கூலியைத் தரும் ஒரு வணக்கமாகும். காலத்தின் தேவையைப் பொறுத்து மார்க்க ரீதியான கடமை யும் கூட.

எனவே விழுமிய அரசியலுக்காக களத்தில் இறங்குவதும் உயர் இலக்குகளை அடைந்து கொள்வதற்கான ஒரு பிரதிநிதியை சட்டமன்றம் அனுப்புவதும் நல்ல நோக்கங்களாகும். நல்ல நோக்கம் நிச்சயமாக நாளை மறுமையில் தராசை கனமாக்கும் நற்கூலியைப் பெற்றுத் தரும். எனவே நல்லாட்சிக்காக அரசியல் மேடை மிதித்த போராளியின் மிம்பர் மேடைக்கு தூக்குப் போடக் கூடாது. 

3) ‘தீமைகளுக்கு இட்டுச் செல்லும் வழிகளை அடைத்தல்’ என்பதும் ஒரு ஷரீஆ சட்ட விதியாகும். அரசியல் போராட்டத்தின் முக்கிய ஆயுதமான தேர்தலைப் புறக்கணிப்பது என்பது மார்க்க மற்றும் சமூகக் கூட்டிருப்புக்கு அபாய அறிகுறியாகும். நாட்டில் முஸ்லிம் சிறுபான்மை சமூகம் ஒதுக்கப்பட்ட நிலைக்குத் தள்ளப்படும். நிறைய நன்மைகளை இழப்பதோடு பல சீர்கேடுகளும் தீமைகளும் உருவாகவும் இடமுண்டு. சிலபோது தேர்தல் புறக்கணிப்பானது முஸ்லிம்களின் இருப்புக்கே பேராபத்தாக அமைந்து விடும். இத்தகைய பாரிய தீமைகளில் இருந்து தடுக்கும் அரணாகவே தேர்தல் அரசியலும் காணப்படுகிறது.

எனவே பாதுகாப்பிற்கும் சீர்கேடுகளைக் குறைப்பதற்கும் வாக்குரிமை சிறந்த அரசியல் போராட்ட சாதனம். அதனைப் பயன்படுத்துவதில் அலட்சியமாக இருப்பது நிச்சயமாக பெரும் குற்றமே. எனவே சீரான சிவில் அரசியல் செயற்பாட்டிற்கு வழிகாட்டல்களை வழங்கி சமூகத்தை வழிநடாத்துவது சட்டத்துறை படித்தவர்களின் பொறுப்பாகும்.

4) ‘அத்தியவசிய நிலைகள் தடுக்கப்பட்டவற்றையும் ஆகுமாக்கும்’ மேலும் ‘தேவை அத்தியாவசிய நிலையின் தரத்தைப் பெறலாம்’ என்ற அடிப்படைகள் அரசியல் போராட்டத்தை நியாயப்படுத்தும் சட்ட விதிகளாகும். அரசியல் போராட்டம் சிறுபான்மை முஸ்லிம்களின் ஒரு தேவை. அது சமூகத்தின் உரிமைகளைக் காக்க வேண்டிய அத்தியாவசிய நிலைக்கு இன்று மாறியுள்ளது. எனவே இந்நிலையில் சில தீமைகளையும் இழைக்க வேண்டிய நிர்ப்பந்த நிலை இருப்பினும் அதில் பங்குபற்றுவது ஆகும் என்பதயே இந்த விதி கூறுகிறது. அதாவது பாராளுமன்றம் செல்பவர் அல்லது அது போன்ற ஒரு சட்ட சபைக்கு பிரதி நிதியாக செல்லும் ஒருவர் இஸ்லாமிய சட்ட ஒழுங்கிற்கு மாற்றமான விடயங்களைக் கொண்டுள்ள யாப்பை ஏற்று சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டியுள்ளது. அல்லது ஷரீஆவிற்கு முரண்படும் யாப்புக்களையுடைய கட்சிகளுடன் கூட்டிணைய வேண்டி யுள்ளது. சிறுபான்மை முஸ்லிம்களின் வாழ்வொழுங்கில் இவை நிர்ப்பந்த நிலைகளாகும். எனவே அவர்களது சாத்வீகமான அரசியல் போராட்டத்தின் தேவை இத்தீமையை செய்வதை ஆகுமாக்கிறது.

நபிகளார் (ஸல்) அவர்கள் தாயிப் நகரத்திலிருந்து மக்காவிற்கு திரும்பியபோது முஷ்ரிகான முத்இம் பின் அதியின் பாதுகாப்புடனேயே தாயகம் திரும்பினார்கள். அப்போது அபூபக்கர் (ரழி) அவர்கள் போன்ற பல தோழர்கள் மக்காவில் இருந்தும் கூட அவர்களை இறை தூதர் (ஸல்) அவர்கள் பாதுகாவலராக எடுப்பதற்கு நாடவில்லை. அன்று நபிகளார் சுதந்திரமாக மக்கா திரும்ப முடியாத அளவிற்கு எதிர்ப்பும் கொலை அச்சுறுத்தலும் இருந்தது. எனவே உயிர் பாதுகாப்பு பெறாமல் மக்காவினுள் நுழைவது அழிவை தன் கையால் தேடிக்கொண்டதாகவே அமையும் என்று கருதியே அன்றிருந்த பாதுகாப்பு மரபை நபிகளார் தனக்கு சார்பாக பயன்படுத்த முனைந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டு முஷ்ரிகான முத்இம் பின் அதியிடம் தூதனுப்பினார்கள். அதற்கு முத்இம் சம்மதம் தெரிவித்தார்.

பின்னர் நபி (ஸல்) அவர்கள் முத்இமின் இல்லத்தில் அன்றைய இரவை கழித்து விட்டு அடுத்த நாள் காலையில் அவரும் இன்னும் அவரது ஏழு பிள்ளைகளுமாக உருவப்பட்ட வாள்களுடன் மக்காவில் நுழைந்தார்கள். அப்போது குறைஷித் தலைவன் அபூ ஸுப்யான் (அந்த சமயம் இஸ்லாத்தின் பரம எதிரியாக இருந்தவர்) எதிரிலே வந்து நீர் முஹம்மதின் பின்னால் அவரைத் தொடர்ந்து வருவது ஏன்? அவருக்கு நீர் பாதுகாப்பு வழங்கியுள்ளீரா எனக் கேட்டார். ஆம், நான் சும்மா வரவில்லை. முஹம்மதுக்கு பாதுகாப்பு கொடுத்துள்ளேன் என முத்இம் பதில் கொடுத்தார். அப்படியாயின் உனது பொறுப்பில் உள்ள உடன்படிக்கையை நீர் முறிக்கத் தேவையில்லை எனக் கூறி அந்த பாதுகாப்பை தலைவர் அபூ ஸுப்யானும் அங்கீகரித்தார். இதுபோன்ற ஏராளமான நம்பகமான நிகழ்வுகளை ஸீராவில் அதிகமாகவே காண முடியும்.

இவை சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களின் அரசியல் பிரச்சினைகளை கையாள்வதற்கான வழிகாட்டல்களாகும். அநீதி நிலவும் அரசாங்கத்தில் தேர்தல் என்பது தீமையை குறைப்பதற்கான அல்லது நாட்டு நலனில் பங்களிப்பதற்கான அல்லது சத்தியத்தை பரப்புரைப்பதற்கான சிறந்த வழிமுறையாகும். அதனை பயன்படுத்துவது தவறல்ல என்பதையே நபிகளாரின் வழிகாட்டல் நமக்கு கற்றுத் தரும் பாடமாகும். சர்வதிகாரிகளின் கொடுமைகளை எதிர்ப்பதற்கான சாத்வீகமான அரசியல் போராட்ட சாதனமே தேர்தல் அரசியலாகும். மேற்குறித்த சம்பவம் இறைதூதர் (ஸல்) அவர்கள் உலக அரசியல் நலன்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு காபிரின் பாதுகாப்பை வேண்டுவது தவறல்ல என்பதையே சுட்டுகிறது.

இதனைத்தான் அறிஞர் அப்துல் கரீம் ஸைதான் அவர்கள் ‘காபிரான அரசிடமிருந்து நலன்தரும் பகுதிவாரியான பயனை பெறுவது ஆகும்’ என்ற                  சட்டவிதியின் அடிப்படையில் தெளிவுபடுத்தியுள்ளார். அந்நிய அரசாங்கத்தில் சில நலன்களை பெறுவதற்காக அதனை ஆதரித்து வாக்களிப்பது ஷரீஆ அங்கீகாரம் கொண்ட ஒரு செயலே என்பது இதனால் தெளிவாகின்றது. அதனை பகிஷ்கரிப்பது சீர்கேடும், தீமைகளும் பரவுவதற்கு உடைந்தையாக இருந்ததாகவே அர்த்தம். இந்தப் பின்புலத்தில் தான் வாக்குரிமையை பயன்படுத்துவது கடமை என்ற கருத்தை நவீனகால இஸ்லாமிய அறிஞர்கள் விளக்கியுள்ளனர்.

இதனை சிலர் குப்ருக்கான விசுவாசம் என மறுதலிப்பதற்கு இடமுண்டு. ஆனால் வாக்குரிமை அல்லது அரசியல் கட்சிகளுடன் கூட்டிணைவது என்பது நிராகரிப்புக்கு விசுவாசம் தெரிவிப்பதன்று. முஸ்லிம்களின் நலனுக்கான விருப்ப வாக்கை கொடுப்பதாகும். இதற்கு பல இஸ்லாமிய வரலாற்று நிகழ்வுகள் சான்றாக உள்ளன. உதாரணமாக மக்கா காலப் பிரிவில் பாரசீகத்துக்கு எதிராக ரோம் வெற்றி பெற்றபோது முஸ்லிம்கள் மகிழ்ந்தார்கள். காரணம் ரோமர்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்கள். பாரசீகத்தில் வாழும் நெருப்பு வணங்கியை விட அல்லாஹ்வின் வேதம் அருளப்பட்டவர்கள் மேல் என்பதே அந்த மகிழ்ச்சிக்கு காரணம். மாறாக அது கிறிஸ்தவர்கள் மீதான விசுவாசமாக நோக்கப்படவில்லை. இது குறித்து ஸுரா ரூமின் ஆரம்ப வசனங்கள் பேசுகின்றன.

அவ்வாறே ஹபஷாவில் நஜ்ஜாசியின் வெற்றிக்காக நபித் தோழர்கள் சந்தோசமடைந்தார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள் ஜாஹிலிய்யா காலத் தில் அப்துல்லா பின் ஜுத்ஆனின் வீட்டில் தீமைக் கெதிரான கூட்டணியில் ஒன்று கூடியதை நினைவு கூர்ந்து, அது போன்ற ஒரு சமூக செயற்பாட்டிற்காக இன்று அழைக்கப்பட்டாலும் நான் நிச்சயமாக பதில் அளிப்பேன் எனக் கூறினார்கள். இவை உலக விவகாரங்களில் நபிகளார் (ஸல்) அவர்கள் தேச மற்றும் மக்கள் நலன் கருதி பற்றோடும் விசுவாசத்தோடும் அடுத்த தரப்பினரோடு சேர்ந்து செயற் பட்டுள்ளார்கள், ஒத்துழைத்துள்ளார்கள் என்பதையே காட்டுகின்றன. எனவே இத்தகைய செயற்பாட்டை குப்ருக்கான விசுவாசமாக ஆதாரம் காட்டி மக்களை திசை திருப்புவது ஒரு அரசியல் துரோகமாகவே நோக்கவேண்டும் என ஸீரா கற்றுத் தருகின்றது.

5) ‘இரண்டு தீமைகளில் தாக்கம் குறைந்ததை தெரிவு செய்தல்’ என்பதும் ஒரு சட்டவிதியாகும். இதே கருத்தை கொடுக்கும் இன்னும் பல சட்ட விதிகள் நிறையவே காணப்படுகின்றன. நன்மை மாத்திரம் உள்ள ஒரு விடயத்தை தெரிவு செய்வது இலகுவானதே. தீமை மாத்திரம் உள்ள ஒன்றை தவிர்ந்து கொள்வதும் இலகுவானதே. நன்மை  தீமை இரண்டும் கலந்த அல்லது இரண்டு தீமை கைளில் எந்த தீமையை தெரிவு செய்வது என்ற நிலை வரும்போது சொந்த நலன் பாராது ஷரீஆவின் நிலைக்களனில் நின்று குறைந்த பாதிப்பை தரும் தீமையை தெரிவு செய்வது அனுமதிக்கப் பட்டதாகும். எனவே பாராளுமன்றம் செல்வது அல்லது நாட்டினதும் மக்களினதும் நலன்கருதி ஒரு கட்சியுடன் கூட்டிணைவதும் அல்லது இரு வேட்பாளர்களில் இருவருமே பொருத்தமற்றவர் என்று கருதப்படும் போது ஒருவரை ஒப்பீட்டு ரீதியில் முற்படுத்தி தெரிவு செய்வதுவும் ஆகு மானதே என்ற கருத்தை இந்த விதி கூறுகிறது.

6) ‘நலன்களை நிலை நிறுத்துவதை விடக் கேடுகளை தடுப்பது முதன்மையானது’ என்பது இன்னொரு முக்கியமான சட்டவிதியாகும். சிறு பான்மையாக இருந்து அரசியல் போராட்டத்தில் கலந்துகொள்வதன் மூலம் தேச நலன்களையோ, சமூக மேம்பாட்டையோ அடைவது எப்படிப் போனாலும் கூர்மையடைந்துள்ள தீமைகளை குறைப்பது முதல் கட்ட தேவையாகும். எனவே கூர்மையடைந்துள்ள அதிகார வெறியை, அரசியல் சீர்கேடுகளை குறைப்பதற்காக தேர்தல் என்ற ஆயுதத்தை பயன்படுத்துவது கண்டிப்பான தேவையாகும். இங்கே தீமைகளை தடுப்பது முதன்மைப்படுத்தப்படுகிறது.

இந்த விதிக்கு சீராவிலிருந்து ஒரு சான்றாக பின்வரும் சம்பவத்தை குறிப்பிடலாம். நபி (ஸல்) அவர்கள் புனித கஃபாவை இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டிய அதே அடித்தளத்தில் மீண்டும் இடித்துக் கட்டுவதை மிகவும் விரும்பினார்கள். இருப்பினும் புதிதாக இஸ்லாத்தை தழுவியர்கள் மத்தியில் அது குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கஃபாவின் மீது வைத்துள்ள மதிப்பும் கண்ணியமும் மாசுபடும் என்றும் கஃபாவை புனர்நிர்மாணம் செய்வதை கைவிட்டு விட்டார்கள். கஃபதுல்லாவை ஆதியில் இருந்த அத்திவாரத்தில் கட்டுவது சர்வதேச உம்மத்துக்கான ஒரு பொது நலன். அதனால் உருவாகும் பித்னா அந்த நலனை மிகைத்துவிடும் தீங்காகும். எனவே தீங்கை தடுப்பதை இங்கு நபி (ஸல்) முதன்மைப்படுத்தியுள்ளார்கள். இந்த சம்பவம் புகாரியில் பதிவாகியுள்ளது. எனவே எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் அரசியல் தீமைகளை தவிர்ந்து கொள்வதற்காக நமது வாக்குரிமையை பயன்படுத்துவது அல்லது சிவில் அரசியலில் ஈடுபடுவது கடமையாகும். நன்மைகள் கிடைக்காது என்றிருப்பினும் தீமைகள் குறைவதற்கு அது பயன்படுமே என்ற சிந்தனை நாம் கருத்திற் கொள்ள வேண்டிய ஒரு விடயமாகும்.

இஸ்லாமிய சட்டப் பரப்பில் கடுமையான வாதப் பிரதி வாதங்களைக் கொண்ட சிறுபான்மை அரசியல் போராட்ட வழிமுறைக்கான ஆதாரங்களையே மேலே பார்த்தோம். இதனை அறிந்தோ அறியாமலோ இலங்கைக்கான சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பிருந்தே அரசியல் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு தொடர்கிறது.

எனினும் சிறுபான்மை முஸ்லிம்களின் வாழ் வொழுங்கில் அரசியல் போராட்ட வழிமுறைக்கு ஷரீஆ அங்கீகாரம் உண்டு என்பதை அறிந்து செயற்படும் போது அது ஒரு வணக்கம் என்ற உணர்வோடு உழைக்க முடியும். அப்போது தான் வெறும் ஆசனத்தை பெறுவதற்காக மாத்திரம் போட்டி போடுவதை தவிர்த்து விழுமிய அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக உழைக்க முடியும். நிலைமை இவ்வாறிருக்க இந்தப் பாதையில் உழைக்கும் இஸ்லாமிய வாதிகளை அசூசையாக பார்ப்பது முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

நலன்களை முற்படுத்தி தீமைகளை தவிர்ப்பதற்கோ அல்லது அழிவுகளை, சேதங்களை குறைப்பதற்கோ சிவில் அரசியல் செயற்பாடு ஒரு சிறந்த ஆயுதமாகும். சிறுபான்மைக்கான அரசியல் போராட்டத்தில் வாக்குரிமை என்பதும் மாற்றத்திற்கான மிக முக்கிய சாதனமாகும்.

தாய் நாட்டின் குற்றச் செயல்களை ஒழித்து நீதி, நேர்மை, இனங்களுக்கு இடையிலான சௌஜன்யம், சமாதானம், பொருளாதார சுபீட்சம் போன்றவற்றை உருவாக்குவதற்கான அரசியல் போராட்டம் ஒரு மார்க்கக் கடமையாகும். இத்தகைய சிவில் அரசியல் செயற்பாட்டிக்காக ஒத்துழைப்பது நாட்டின் பெருந் தீமையொன்றை ஒழிப்பதற்காக நீங்கள் செய்யும் உதவியாகும். தூய எண்ணத்துடன் அது நடந்தால் கூலி நிச்சயம். அல்லாஹ் விளைவுகளை பார்த்து கூலி வழங்குவதில்லை. எண்ணத்திற்கே வெகுமதி தருகின்றான்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்

About the author

Administrator

Leave a Comment