Features அரசியல்

உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரை கைது செய்து நாட்டில் நல்லிணக்கத்தை எப்படி ஏற்படுத்துவது ?

Written by Administrator

லத்தீப் பாரூக்

அடிக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட இலங் கையின் முஸ்லிம் சமூகம், கடந்த ஆகஸ்ட் 25 ஆம் திகதி தனது கண்ணியத்துக்குரிய இஸ்லாமிய அறிஞர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைத்திருப்பதையிட்டு ஆழ்ந்த கவலையடைந்திருக்கிறது. நாடு முழுவதும் 85 கிளைகளைக் கொண்டியங்கும் அறிவுபூர்வமான இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவராக  1994 முதல் 2018 வரை 24 ஆண்டுகளாக தலைமை வகித்த சன்மார்க்க அறிஞர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவரது எளிமையினாலேயே மிகவும் அறியப்பட்டவர்.

நாட்டுக்கும் சமூகத்துக்குமான அவரது சேவைகள் அப்பழுக்கற்றவை. தீவிரச் சிந்தனை கொண்டவர்கள் என்பதற்காக தனது சகோதரரையும் அவரது இரு புதல்வர்களையும் நீக்கிவிடுவதற்கும் தயங்காதவர். முஸ்லிம் சமூகத்துடன் எந்தத் தொடர்புமில்லாத ஈஸ்டர் படுகொலைகளுக்குப் பின்னரும், அவரது சகோதரர்களின் புதல்வர்கள் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள புத்தர் சிலை உடைப்புகளுக்குப் பின்னரும் அவர் பல தடவைகள் விசாரணைக்குட்படுத்தப் பட்டார்.

அவரது மகனின் கூற்றுப்படி அவர் பல்வேறு தரப்புக்களுக்கும் இதுவரை ஏழு வாக்குமூலங்கள் வழங்கியுள்ளார். எல்லாக் கேள்விகளுக்கும் அவர் தெளிவான பதிலை வழங்கியுமுள்ளார். கொழும்பு மருதானை, தெமட்டகொட வீதியில் அமைந்துள்ள ஜமாஅதே இஸ்லாமி தலைமையகமும் பல தரப்புக்களினாலும் 21 தடவைகள் சோதனையிடப்பட்டுள்ளன. ஜமாஅதே இஸ்லாமியையோ உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரையோ வன்முறையுடன் சம்பந்தப்படுத்த முடியுமான எதனையும் அவர்களால் அங்கு கண்டுபிடிக்க முடியவில்லை. உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் கைதுசெய்யப்பட்ட ஆகஸ்ட் 25 ஆம் திகதியில் இருந்து அவரது இரு புதல்வர்களுக்கும் மாத்திரம் 15 நிமிடங்கள் வரை அதிகாரிகளின் முன்னிலையில் அவரைச் சந்திப்பதற்கு இடமளிக்கப்பட்டிருக்கிறது.

அவரது தடுத்து வைப்பு சமூகத்தை மானசீகமாகப் பலவீனப்படுத்தும் என்ற வகையில், ஏழு முஸ்லிம் சிவில் நிறுவனங்கள் அவரை அவசரமாக விடுவிக்கக் கோரியும், எந்த விசாரணைக்கும் கேள்விகளுக்கும் அவரை எந்த இடத்திலும் ஆஜராக்குவதாக உறுதியளித்தும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளன. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, தேசிய சூறா சபை, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், ஆகிய அமைப்புக்கள் இதில் உள்ளடங்குகின்றன.

பொதுவாக அனைவரும் தெரிந்து வைத்துள்ளதனை கருதினால் மல்கம் ரஞ்சித் உறுதிப்படுத்தியதன்படி ஈஸ்டர் தாக்குதல்கள் முஸ்லிம் சமூகத்துடன் எந்த வகையிலும் தொடர்புபட்டவையல்ல. சிலர் குறிப்பிடுவதன்படி, நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் சுமுகமான வாழ்வைக் குலைப்பதற்காக சர்வதேச சக்திகளால் ஒப்பந்தக் கொலைகாரர்களாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு சில முஸ்லிம் பலிக்கடாக்களே இந்தக் காரியத்தைச் செய்துள்ளனர். ஸஹ்ரானும் அவனது சகாக்களும் தாக்குதலொன்றைத் திட்டமிட்டு வருவதாக காத்தான்குடியிலும் இன்னும் பிரதேசங்களிலும் உள்ள முஸ்லிம் அமைப்புக்கள் 2007 மார்ச் மாதம் முதலே புலனாய்வுத் துறை, பொலிஸ் உட்பட்ட சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கும் ஜனாதிபதி சிரிசேன, பிரதமர் ரணில் விக்கிர மசிங்க உள்ளிட்டோருக்கும் தெரியப்படுத்தியுள்ளதாக ஜேவிபி தலைவர் அனுரகுமார திஸ்ஸநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். துரதிர்ஷ்டவசமாக இதனைத் தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் எதுவும் உரிய தரப்பினரால் எடுக்கப்படவில்லை. இதனால் சமூகம் இதற்கு விலை கொடுக்க வேண்டி வந்தது.

தாக்குதல் நடத்தப்பட்ட பின்னரும் கூட பாதுகாப்புத் தரப்பினரின் சோதனை நடவடிக்கைகளில் முஸ்லிம்கள் தமது பூரண ஒத்துழைப்பினை வழங்கினார்கள். சந்தேகத்துக்கிடமான நபர்கள் தமது உறவினர்களாக இருந்த போதிலும் அவர்களை பாதுகாப்புத் தரப்பிடம் ஒப்படைக்கும் அளவுக்கு தேசிய பாதுகாப்பில் முஸ்லிம்கள் ஒத்துழைத்தார்கள். முஸ்லிம் சமூகத்தின் தலைமைகள் இந்தத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்து முஸ்லிம் சமூகத்தின் எதிர்ப்பை வெளிப்படுத்திக் காட்டினர். இன்று ஐந்து மாதங்கள் கடந்த பின்னர், முதலில் தமிழர்கள், பின்னர் முஸ்லிம்கள் என்ற சிங்கள இனவாதிகளின் கோஷத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட சதியின் வெளிப்பாடே ஈஸ்டர் தாக்குதல் என்பதனை புரிந்து கொள்ள முடியுமாக இருக்கிறது.

முஸ்லிம்களை நசுக்குவதற்குத் தருணம் பார்த்திருந்த அரசாங்கம், எதிர்க்கட்சி, இனவாத பிக்குகள், இனவாத ஊடகங்கள், இனவாத அதிகார பீடங்கள், இனவாத வர்த்தகர்கள் என அனைத்தும் இந்தச் சதிகளில் கைகோர்த்திருப்பதாக பலரும் சந்தேகிக்கின்றனர். கிறிஸ்தவர்களை முஸ்லிம்களுக்கு எதிராகக் கிளப்பி விடும் நோக்கில் சர்வதேச முஸ்லிம் விரோத சக்திகளுடன் இணைந்து இந்த சதித் திட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

இருந்த போதிலும் தக்க தருணத்தில் கருதினால் மல்கம் ரஞ்சித் தலையிட்டு  இது முஸ்லிம் சமூகத்துடன் சம்பந்தப்பட்டதல்ல என்று தெரிவித்ததனால், சதிகாரர்கள் தமது சூழ்ச்சிகளை வெல்ல வைப்பதில் இருந்து தடுக்கப்பட்டனர். இந்தக் கொலைகளுக்குப் பின்னாலுள்ள சர்வதேச சதிகளைக் கண்டு பிடிக்குமாறு அவர் ஆரம்பம் முதலே அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்து வந்தார். லக்ஷ்மன் ஹுலுகல்ல உட்பட பல அமைச்சர்கள் இது உள்ளூர் முஸ்லிம்களைப் (ஸஹ்ரானும் சகாக்களும்) பலிக்கடாவாக்கி சர்வதேச சக்திகள் செய்த வேலை எனக் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனாலும் அரசாங்கம் இதற்குத் தேவையான வழிவகைகளை முன்னெடுக்கவில்லை. உள்ளூர் ஊடகங்களும் பொய்களைப் புனைந்து கட்டி சிங்களவர் மனதில் நஞ்சை விதைத்ததேயல்லாமல் இதன் பின்னாலுள்ள சர்வதேச சக்திகளை வெளிப்படுத்த முயற்சிக்கவில்லை.

ஜனாதிபதி சிரிசேன அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தி, ஒவ்வொரு முஸ்லிமையும் குற்றவாளிகளாகச் சித்திரிப்பதற்கான பிரச்சாரத்துக்கு உடந்தையாக இருந்தார். இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக முஸ்லிம்களுக்குச் சொந்தமான வீடுகள், வர்த்தக நிலையங்கள், பள்ளி  வாசல்கள் அனைத்தும் பாதுகாப்புத் தரப்பின் சோதனைக்குள்ளாகின. ஆண்களும் பெண்களுமாக முஸ்லிம் சமூகத்திலிருந்து பலர் வேடிக்கையான பல காரணங்களுக்காகவும் கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். சோதனை நடவடிக்கைகள் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனில் இஸ்ரேலியர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஞாபகமூட்டின. முஸ்லிம்களின் சொத்துக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் இனவாத இந்து அமைப்புக்களான ஆர்எஸ்எஸ், பிஜேபி, விஎச்பி, சிவசேனா, பஜ்ராங்க் தல் போன்றவை வட இந்தியாவில் முஸ்லிம்கள் மீது நடத்திய தாக்குதல்களை நினைவுறுத்தின.

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வாழ்க்கை முறை மாறிப்போயிருக்கிறது. அன்றாட வாழ்க்கையை வாழ்வது அவர்களுக்கு கெட்ட கனவாக ஆகியிருக்கிறது என ஒரு பத்தி எழுத்தாளர் குறிப்பிட்டிருந்தார். துன்புறுத்தல்கள், பாரபட்சம், பொது இடங்களில் நன்கு திட்டமிடப்பட்ட வகையில் முன்னெடுக்கப்படும் வெறுப்புச் செயற்பாடுகள், பூதாகரப்படுத் தல்கள் மூலமாக முஸ்லிம்கள் முற்றுகை மனப்பான்மைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள் எனத் தெரிவிக்கும் அவர், இனவாதம் இலங்கையில் புதிய அர்த் தத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. முஸ்லிம்கள் எல்லா வகையிலும் குறிவைக்கப்பட்டிருக்கிறார்கள். பொது இடங்கள், பஸ்கள், ரயில், வேலைத் தளங்களில் எல்லாம் அவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் எனவும் குறிப்பிடுகிறார்.

இவ்வாறான இனத்துவச் செயற்பாடுகளுக்கு அப்பால், அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞான ரத்ன தேரோ முஸ்லிம்களைக் கல்லெறிந்து கொல்லும்படியும் அவர்களது கடைகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுரை பகர்ந்திருக்கிறார்.      

ஆயிரம் வருடங்களுக்கு மேலான இலங்கை முஸ்லிம்களின் வரலாறு வெறும் 20 நிமிடங்களில் சிதைக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 21 காலை 8.45 முதல் 9.05 வரையிலான குண்டு வெடிப்புக்கள் இதனுடன் சம்பந்தமேயில்லாத முஸ்லிம் சமூகத்தின் கழுத்தில் தொண்டு போட்டிருக்கின்றன.

கொழும்புக் குப்பைகளை முஸ்லிம்கள் செறிந்து வாழும் புத்தளம் அருவாக்காடு பகுதியில் கொட்டுவதற்கான முயற்சியில் ஈடுபடுகின்ற அமைச்சர் சம்பிக்க ரணவக்க செப்டம்பர் 05 ஆம் திகதி டெய்லி மிரர் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில், முஸ்லிம்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய வர்த்தகங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன. முஸ்லிம் தொழில்வாண்மையாளர்கள் தமது தொழில்களில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பருடைய கைது தொடர்பிலும் சமூகம் கவலையுடன் நோக்குகிறது. இவ்வாறான அட்டூழியங்கள் நாட்டில் பழங்கதையாகிப் போயுள்ள சமூகங்களை ஒன்றிணைத்தலை எப்படிச் சாத்தியமாக்கப் போகின்றன என்பது தான் கேள்வியாக இருக்கிறது.

About the author

Administrator

Leave a Comment