Features அரசியல்

பௌத்தமும் அரசியலும் இலங்கையில் உடைந்த கண்ணாடிகள்

Written by Administrator

மாஸ் எல் யூசுப்

இந்த நாட்டின் உயிரை அரசியல் வாதிகள் உறிஞ்சிக் குடித்து விட்டார்கள் என்றே பெரும்பாலான பொதுமக்கள் கருதுகிறார்கள். இவர்களில் சிலர் தமது சுயநல இலக்கை அடைந்து கொள்வதற்காக கண்ணியமான புத்த சாசனத்தையே கூட்டிக் கொண்டு களமிறங்கியிருப்பது உண்மையிலேயே மன்னிக்க முடியாதது.

தவறான புரிதல்களாலும், தவறான தகவல்களாலும், புனையப்பட்ட தரவுகளாலும், எதனையும் பற்றிய மோசமான விபரிப்புகளாலும் இந்நாட்களில் நாடு தள்ளாடிக் கொண்டிருக்கிறது. தங்களது கருத்துக்களை வெளியிடுவதில் உண்மையாக நடந்து கொள்ளும் அரசியல்வாதிகளை அரிதாகவே காண முடிகின்றது. பொய்யைக் கக்குவதிலும், பசப்பான வார்த்தைகளை உதிர்ப்பதிலும் அசாதாரண விடயங்களை சகஜமாக்கி விடும் ஏமாற்று வித்தைகளைக் காட்டுவதிலும் உலகின் பெரிய மதங்களில் ஒன்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடு களை கட்டிக் கொண்டிருக்கிறது.

எப்படி இருந்த போதிலும் தமது பௌத்த பிக்குகளின் கோபத்துக்குள்ளாகாமல் தமது வாக்கு வங்கியையும் பாதுகாத்துக் கொள்வதில் பலரும் கவனமாகத் தான் இருக்கிறார்கள். தம்மை வெள்ளாடை அணிந்த தூயவர்களாகக் காட்டுவதன் முக்கியத்துவத்தை சிங்கள அரசியல்வாதிகள் உணர்ந்திருக்கிறார்கள். இதனால் பிக்குமாரிடத்தில் மிகுந்த பணிவுடன் நடப்பதாகக் காட்டிக் கொள்வதற்கு அவர்கள் முயற்சிப்பது ஆச்சரியமான ஒன்றல்ல. மதிப்புக்குரிய சில பிக்குமார் இதனால் சங்கடப்பட்டிருக்கவும் கூடும்.

ஊடகமும் ஏலமும்

ஏலமென்று வந்தால் அங்கே அதிக விலை கூவுபவர்கள் வெற்றியடைவார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். பிக்குமாரும் கூட இப்படி அரசியல்வாதிகளால் ஏலத்தில் விடப்படுகிறார்களோ என்றும் சிலவேளை எண்ணத் தோன்றுகின்றது. ஓர் அரசியல்வாதிக்கு அடுத்தவரை ஓரங்கட்ட வேண்டிய தேவை ஏற்பட்டால் அவர் சங்க சபாவுக்கு அதிகம் அர்ப்பணிப்பவராகத் தன்னைக் காட்டிக் கொள்ளத் துணிகிறார்.  பிக்குகளை பூஜிப்பதில் போட்டி போடுவதாக நினைத்துக் கொண்டு இவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள். வெளிப்படையில் இவர்கள் இரட்டை வேடமே பூணுகிறார்கள். முதலில் பிக்குகளின் ஆதரவைத் திரட்டுகின்றார்கள். அடுத்ததாக சங்க சபாவுக்கும் புத்த சாசனத்துக்கும் அர்ப்பணமாக இருப்பதாக பொதுமக்களுக்கு காண்பிக்கிறார்கள்.

இவை உண்மையிலேயே தூய்மையான எண்ணத்துடனும் உண்மையாகவும் செய்யப்படுமாக இருந்தால் அவை மகத்தான செயல்களாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இருந்த போதிலும் ஜேவிபி தலைவர் அனுர குமார திசாநாயக்கவுக்கு இதில் மாற்றுக் கருத்து இருக்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அவர் கேட்ட கேள்வியொன்றில், அரசியல்வாதிகள் பிக்குமாரைத் தரிசிக்கச் செல்லும் போதெல்லாம் ஏன் ஊடகங்களை தங்களுடன் எடுத்துச் செல்கின்றார்கள் ? பிக்குமாருக்கு வணக்கம் செலுத்தும் போது அது கட்டாயமாக (தொலைக்காட்சியூடாக) மக்களுக்குக் காண்பி்க்கப்பட வேண்டும் என புத்த பெருமான் போதித்திருக்கிறாரா ? எனக் கேட்ட அவர், இவர்கள் தொலைக்காட்சி பௌத்தர்கள். இவர்கள் மக்களின் மத உணர்வுகளை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் என்று கூறினார். நெறிமுறைக்கு மாற்றமான இந்த நடவடிக்கைகளினால் பிக்குகளுக்குரிய அந்தஸ்து இழிவடைகிறது. இது பயங்கரமானதொரு விளைவைத் தரக் கூடிய வளர்ச்சியாகும்.

இதனை நாங்கள் சில பிக்குமாரின் நடத்தைகளிலும் கண்டு கொள்ள முடியும். இறுதியில் இந்த அப்பாவிப் பிக்குகள் தமது சுயாதீனத்தை இழந்து சூழ்நிலைகளின் கைதிகளாகி மறக்கடிக்கப்பட்டு மறைந்து போகிறார்கள். உயர்மட்ட பௌத்த பிக்குகளின் பௌத்தத்துக்குப் பொருத்தமி்ல்லாத உரைகள் சிங்கள சமூகத்தின் சமூக உணர்வுள்ளவர்களை சங்கடப்படுத்தும் அளவுக்கு அமைந்திருந்தன. இந்த நாடகத்தினால் தவறாக வழிநடத்தப்பட்ட இளம் பிக்குகள் பௌத்த மதத்தின் மதிப்பை உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேசத்திலும் இழக்கச் செய்யும் வகையில் செயற்படுகிறார்கள்.

பௌத்தம், தர்மம், சங்கம்

மோட்சம் பெறுவதை இலக்காகக் கொண்ட முதிர்ச்சியடைந்த உண்மையான பி்க்குகளைப் பொறுத்தவரையில் இந்தக் குறுகிய அலங்காரங்கள் எதுவுமே அவர்களுடைய இலக்கிலிருந்து அவர்களைத் திசை திருப்புபவை அல்ல. அவர்கள் பெற்றுள்ள ஞானத்தின் அடிப்படையில் அவர்கள் அரசியல்வாதிகளின் கையாடல்களை விளங்கி அவர்களை தூரமாக்கியே வைத்திருக்கிறார்கள்.

அதேவேளை, பிரபல்யம் இல்லாத, சிறுவயதிலேயே துறவியான, பக்தர்களைத் தவிர பொதுவெளியில் பெரிதும் அறியப்படாத பிக்குகளைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு அரசியல்வாதிகளின் நெருக்கமோ, தொலைக்காட்சியின் பிரபலமோ நிச்சயம் அவர்கள் ஏன் காவி உடை அணிந்தார்கள் என்பதை மறக்கடிக்கவே செய்யும். இவ்வாறானவர்கள் மும்மணிகளிடம் அடைக்கலம் தேடுவதை விட்டு விட்டு இன மதத் தேசியவாதங்களிலும் வெறுப்புப் பேச்சுக்களைப் பரப்பி “அடுத்தவர்களை” பாதிப்படையச் செய்வதிலுமே அடைக்கலம் தேடுவார்கள். இது நிச்சயமாக பௌத்த மத போதனைகளுக்கு முரணானதாகும். எல்லாவற்றுக்கும் பின்னர் தங்களை புத்த புத்திரர்களாக அழைத்துக் கொண்டு பௌத்தத்துக்குள்ளால் புகலிடமும் தேடுவார்கள்.

சங்காவின் உளவியல்

எஸ்.டப்.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் பஞ்ச மகா பலவேகயவிலிருந்து சங்க சபாவின் உளவியலை கட்டமைப்பதில் சடுதியான அதிகரிப்பு அவதானிக்கப்பட்டது. தொடர்ந்து வந்த அரசாங்கங்களும் அரசியல்வாதிகளும் தங்களது நலனை முற்படுத்தி இதனை வளர்த்தெடுப்பதில் ஆர்வம் காட்டினார்கள். தூய்மையான பௌத்தத்தை பின்பற்றுபவர்களுக்கு இதற்கு முன்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இவர்களும் அரசியல், பொருளாதாரம், வெளிநாட்டுக் கொள்கை, பூகோள அரசியல் போன்ற விடயங்களில் கருத்து வெளியிடத் தொடங்கினார்கள்.

பௌத்த தீவிரவாதமும் இலங்கையில் இன-மத நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதில் உள்ள சவால்களும் என்ற தலைப்பில் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிரி செய்த ஆய்வில் ( அரசியல்வாதிகளுக்கும் பிக்குகளுக்கும் இடையிலான ஊடலின் கவலைக்குரிய நிலையை எடுத்துக் காட்டுகிறார்.

“பொது இடங்களில் அவர்கள் செய்த வன்முறைச் செயற்பாடுகளில் அவர்கள் காட்டிய விசுவாசம் அவதானிக்கத்தக்கதாகும். எந்த எதிர் நடவடிக்கையும் எடுக்காத பொலிசாரின் முன்னிலையிலேயே அவர்கள் சட்டத்தை மொத்தமாகவே மீறினார்கள். முன்னைய அரசாங்கத்திடமிருந்து அவர்கள் பெற்ற அரசியல் பாதுகாப்பைத் தாண்டி,  காவியுடைக்கு இருந்த மதிப்பையும் அதை அணிந்திருந்தவர்களுக்கு இருந்த அதிகாரத்தையும் அவர்கள் சிதைத்து விட்டார்கள். இதற்குச் சிறந்த உதாரணமாக, அதிவேக நெடுஞ்சாலையில் வாகனத்தை நுழைவிக்கும் போது பொலிசாருக்கும் ஞர்னசார தேரருக்கும் இடையில் நடந்த வாக்குவாதத்தை எடுத்துக் காட்டலாம்.

எல்லாவற்றையும் செய்து விட்டு சங்க சபாவின் மதக் கிரியைகளில் கலந்து கொள்வதையும் சகிப்புத்தன்மையைப் போதிப்பதையும் இந்த முரட்டுத்தனமான பிக்குகள் முரண்நகையாகக் கருதுவதுமில்லை என தேவசிரி மேலும் குறிப்பிடுகிறார்.

மங்கள சமரவீர

இந்தப் பின்னணியில் தனது வாக்கு வங்கியையும் பொருட்படுத்தாது, பிக்குகளை சந்தோஷப்படுத்துவதையும் எதிர்பார்க்காது நிதியமைச்சர் மங்கள சமரவீர பேசி வருவது அவரை விஷேடமானவராக இனங்காட்டி வருகிறது. இலங்கை ஒரு பௌத்த நாடல்ல, அது இலங்கையர் அனைவருக்கும் உரித்தான நாடு. அதில் பெரும்பான்மையாக சிங்கள பௌத்தர்கள் வசிக்கிறார்கள் என அவர் கூறியிருக்கிறார்.

இந்த நாட்டில் கிறிஸ்தவர்கள், கத்தோலிக்கர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள் உட்பட பல இனத்தவர்களும் வாழ்கிறார்கள். சிங்கள பௌத்தர்களுக்குரிய அனைத்து உரிமைகளும் இவர்களுக்கும் இருக்கின்றன. சிங்கள பௌத்தர்கள் பெரும்பான்மையாக இருப்பதன் காரணமாக அவர்களுடைய கருத்தை அடுத்தவர்கள் மீது திணிக்க முடியாது எனவும் அவர் கூறியிருக்கிறார்.

சில ஒப்பீடுகளையும் அவர் எடுத்துக் காட்டுகிறார். எங்களில் பலரும் வெளிநாடுகளுக்கு பயணம் சென்றிருப்போம். அல்லது எங்களது உறவினர்கள் அங்கு இருப்பார்கள். இத்தாலிக்கோ பிரித்தானியாவுக்கோ நீங்கள் சென்றால் அந்த நாட்டின் குடிகளாவே நீங்கள் உணர்வீர்கள். இரண்டாம் தரப் பிரஜைகள் என்ற ஒன்று அங்கில்லை எனவும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

இன்று நாட்டின் பிரஜையாக மாறியவருக்கும், ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் பிரஜையாகியவருக்கும் ஒரே அளவான உரிமை இருக்கிறது.

காலம் பதில் சொல்லும்

இது சிறுபான்மை மக்களின் காதுகளில் தேனாகப் பாய்ந்தாலும் சிங்கள சமூகத்தில் உள்ள பலரினதும் குறி்ப்பாக மேலாதிக்க உணர்வுள்ளவர்களிடம் நிச்சயமாக இது எரிச்சலைக் கிளப்பியிருக்கலாம். ஆனாலும் துதிபாடிக் கொண்டு முகஸ்துதியாய் நடந்து கொள்கின்ற ஏலத்தில் விடப்படுகின்றவர்களுக்கு மத்தியில் இந்தக் கூற்று கவனிக்கப்பட வேண்டியதாகும்.

மங்கள சமரவீரவும் அநுர குமார திசாநாயக்கவும் எடுத்திருக்கின்ற இந்த முன்னெடுப்புக்கள், பிக்குகளையும் பௌத்தத்தையும் உள்ளடக்கிச் செய்யப்படும் அரசியலுக்கு முன்னால் சிறந்ததொரு அத்திவாரமாக அமையும் என எதிர்பார்க்க முடியும். புத்தரின் போதனைகளுக்கேற்ப தமது கொள்கைகளையும் செயற்பாடுகளையும் கருத்துக்களையும் மீள வடிவமைத்துக் கொள்வதற்கு பௌத்த பிக்குகளுக்கு இது சிறந்த சந்தர்ப்பமாகும்.

About the author

Administrator

Leave a Comment