Features அரசியல்

நாட்டின் சிக்கல்களைத் தீர்ப்பதில் முஸ்லிம் சமூகத்தினதும் பங்கு முக்கியமானது

Written by Administrator

(தேர்தலில் சிவில் சமூகத்தின் செயற்பாடு என்ற தலைப்பில் ஸலாமா சொசைட்டி ஏற்பாடு செய்திருந்த உரை நிகழ்ச்சியில் சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் ஆற்றிய உரையின் தொகுப்பு)

இலங்கைச் சமூகத்தில் பெரும் சிக்கல்கள் இருக்கின்றன. அதில் ஒரு முனையில் இனம் இருக்கிறது. இன்னொரு முனையில் மதம் இருக்கிறது. முஸ்லிம் சமூகத்துடன் சம்பந்தப்படாவிட்டாலும் மற்றுமொரு முனையில் குலம் இருக்கிறது. இந்தச் சிக்கல்கள் எல்லாம் இப்பொழுது அழுகி, விகாரமடைந்து, வெடித்துச் சிதறக் கூடிய நிலையில் இருக்கின்றன. இது சிங்கள, முஸ்லிம், தமிழ் சமூகங்களுக்கோ அல்லது பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ சமயத்தினருக்கோ எவருக்குமே நல்லதல்ல. மொத்தத்தில் இது நாட்டுக்கே நல்லதல்ல.

இந்தச் சிக்கல்களின் ஒரு தரப்பாக முஸ்லிம்கள் இருக்கிறார்கள். முஸ்லிம்கள் ஒரே மதத்தைப் பின்பற்றுகிறார்கள் என்பது முஸ்லிம் சமூகத்திடம் காணப்படக்கூடிய விஷேடமான அம்சம். சிங்கள சமூகம்  பௌத்தர்களையும் கிறிஸ்தவர்களையும் கொண்டமைந்திருக்கிறது. தமிழ் சமூகமும் இந்துக்களையும் கிறிஸ்தவர்களையும் உள்ளடக்கியிருக்கிறது. ஆனால் முஸ்லிம் சமூகத்தில் இஸ்லாமியர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இந்த வகையில் முஸ்லிம் சமூகம் ஜனாதிபதித் தேர்தலில் யாரைத் தெரிவு செய்வது என்பதை விட முக்கியமானதொரு விடயத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

இந்தச் சிக்கல்களை வைத்துக் கொண்டு முன்னோக்கிப் பயணிப்பது அபாயகரமானது மட்டுமல்ல அது உறுதியுமற்றது. ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் நடந்தவைகளை வைத்து முஸ்லிம் சமூகம் இதனைப் புரிந்து கொள்ள முடியும். முஸ்லிம்களுடைய பிரச்சினைகள் வெளித்தெரிய முன்னர் தமிழ் – சிங்கள பிரச்சினையே நமது கண்முன்னால் விரிந்திருந்தது. தீவிரவாத மோதல்கள் இந்த இரு சமூகங்களுக்கிடையிலேயே நடைபெற்றது. ஆனால் உள்நாட்டு யுத்தம் முடிந்ததன் பின்னர், அது சிங்கள – முஸ்லிம் பிரச்சினையாக வடிவெடுத்தது. சமூகங்களுக்கிடையிலான இந்த மோதல்கள் எந்த நேரத்திலும் எந்தப் பக்கத்துக்கும் திரும்பலாம் என்பதை ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னர் நடக்கின்ற சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. முல்லைத்தீவு விகாராதிபதியின் இறுதிக் கிரியைகளின் போது அது சிங்கள – தமிழ் அல்லது பௌத்த – இந்து மோதல்களாக தலையெடுத்தன. சிக்கல்களைத் தீர்க்காமல் நாம் முன்னோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.     

காலனித்துவத்தின் கீழிருந்து சுதந்திரம் பெறும் நாடுகள் அந்த நாட்டின் சமூகங்களுக்கிடையே நிலவுகின்ற இன, மத, குல பேதங்களை மட்டுப்படுத்தி நவீன சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துகின்றன. இவற்றுக்கான அங்கீகாரம் காலனித்துவத்துடன் அழிந்து போகிறது. பேதங்களின்றி அனைத்து மக்களும் சமமான அங்கீகாரத்தையும் உரிமைகளையும் பெற்றுக் கொள்கின்ற வார்ப்பொன்றை வடிவமைப்பது தான் நவீன சமூகத்தைக் கட்டியெழுப்புவது என்பதன் அர்த்தமாகும்.

பக்கத்து நாடான இந்தியா இந்தப் பணியைச் செய்தது. அங்கும் இரத்தம் ஓட்டப்பட்டு பிளவுகள் ஏற்பட்டு பாகிஸ்தான் பிரிந்து செல்லும் அளவுக்கு சிக்கல்கள் விரிந்தன. பிளவின் பின்னர் பாகிஸ்தானுடன் இணைந்து கொண்ட முஸ்லிம்களை விட பெரிய எண்ணிக்கையிலான முஸ்லிம்களை தம்முடன் வைத்துக் கொள்வதற்கு இந்தியாவால் முடிந்தது. சுதந்திரத்தின் பின்னரும் அங்கு சிக்கல்கள் இல்லாமலிருக்கவில்லை. ஜாதி, குல பேதங்களுக்கு எதிராக பெரும் போராட்டமொன்றை மகாத்மா காந்தி நிகழ்த்தினார். இழிந்த குலத்தினரின் மத்தியிலே அவர் தனது ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு உயர் குலத்தினரையும் அங்கு வரச் செய்தார். இந்து முஸ்லிம் பிரச்சினை தலை தூக்கியபோது அவர் தனது ஆசிரமத்தை முஸ்லிம் பகுதியில் அமைத்துக் கொண்டார். தனது உரைகளில் குர்ஆனிய, விவிலிய வசனங்களையும் சேர்த்துக் கொண்டார். கடைசியில் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டு முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த வேளையிலேயே இந்துத்துவ தீவிரவாதியினால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உயிரழப்புடன் இந்த மோதல்களையும் தகனம் செய்யும் வகையில் இந்திய அரசியலமைப்பு தேசியத்தைக் கட்டியெழுப்பும் விதமாக வரையப்பட்டது.

எங்களுக்கு சுதந்திரம் இயல்பாகக் கிடைத்ததனால் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான கலந்துரையாடல்கள் சுதந்திரத்தின் போது நடைபெற வேண்டியிருக்கவில்லை. சுதந்திரம் கிடைத்து 71 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட நாங்கள் அதைப் பற்றிக் கதைக்கவில்லை. இதனால் நாடு சிங்களத் தரப்பிலிருந்து இரண்டு கிளர்ச்சிகளை சந்தித்தது. தமிழ்த் தரப்பிலிருந்து நீண்டதொரு போராட்டம் நிகழ்ந்தது. இறுதியில் சொற்ப எண்ணிக்கையினராயினும் முஸ்லிம் தரப்பிலிருந்தும் வன்முறைகள் வெடித்திருக்கின்றன. நவீன யுகத்துக்கு வந்த பின்னர் 1915 இல் சிங்கள – முஸ்லிம் மோதல் நடந்தது. 1870 இல் கொட்டாஞ்சேனையில் பௌத்த – கிறிஸ்தவ மோதல் பாரிய அளவில் நடந்தது. 1958 இல் சிங்கள – தமிழ் மோதல் நிகழ்ந்தது. 1983 இல் தமிழருக்கெதிரான இனக்கலவரம் நடைபெற்றது. சோம தேரர் இறந்த போதும் கூட பொய்யால் புனையப்பட்ட காரணங்களை வைத்து மோதலொன்று உருவாக்கப்பட முயற்சிக்கப்பட்டது. நாட்டில் நடந்த இவ்வாறான பிரச்சினைகளின் போது கூட இவற்றுக்கான அடிப்படைத் தீர்வு பற்றி பேசப்படவில்லை. உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த வேளை இதற்கான பொன்னான தருணமாக இருந்தாலும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்குப் புத்தியில்லாத தலைவர்கள் அந்த வாய்ப்பையும் தவற விட்டு விட்டார்கள். அவர்களுக்குப் பின் நல்லாட்சி கோஷத்துடன் வந்தவர்களும் இதனைச் செய்யவில்லை.

இன்று பிரபாகரனோ விஜேவீரயோ இல்லாவிட்டாலும் கூட அவர்களது காலத்தை விட பெரியதொரு நெருக்கடியில் நாடு இருக்கிறது. உள்நாட்டு யுத்தத்துக்குப் பின்னர் வந்த எந்த ஜனாதிபதிகளும் இந்த விடயத்தில் கவனமெடுக்கவில்லை. அந்தவகையில் அடுத்த ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானிப்பதை விட, இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பது தொடர்பாகவே தேர்தல் காலங்களில் சிந்திக்க வேண்டும். அறிவையும் உழைப்பையும் பிரயோகித்து முஸ்லிம் சமூகத்துக்கும் சமூகத் தலைவர்களுக்கும் இது தொடர்பில் தெளிவுபடுத்துவதற்கான வழிகளைத் தேட வேண்டும். இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான சிறந்த வழி மக்கள் மைய யாப்பு உருவாக்க செயற்பாட்டுக்குச் செல்லுவதாகும். இதனூடாக எம்மைப் பற்றி விரிவாக மீள்பார்வை செய்யப்பட வேண்டும். சிக்கல்களுடன் தொடர்புபட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும். இதனடியாக வருகின்ற இணக்கப்பாடுகளை வைத்து யாப்பு தயாரிக்கப்பட வேண்டும். இதனை வைத்து கத்தியின்றி யுத்தமின்றி மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இதற்கான அவகாசத்தைப் பெற்றுத் தருமாறு முஸ்லிம் சமூகமும் தமது தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அவர்கள் ஆதரவு வழங்குகின்ற வேட்பாளரிடம் இதனை ஒரு நிபந்தனையாக முன்வைக்குமாறு வேண்டிக் கொள்ள வேண்டும்.

முல்லைத்தீவு பிரச்சினையின் போது நீதி மன்ற உத்தரவை சில மதத் தலைவர்கள்  மதிக்கவில்லை. பொலிசாரும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. பொலிசார் ஞானசார தேரரின் உத்தரவை விட நீதிமன்ற உத்தரவுக்கே மதிப்பளித்திருக்க வேண்டும். நாட்டில் சட்டத்தின் ஆதிக்கம் இல்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது. தீவிரவாதச் சிந்தனையும் தீவிரவாதச் செயற்பாடுகளும் எமது பின்னடைவையே காட்டுகின்றன. திறந்த கலந்துரையாடல்கள் மூலமே இதனைக் களைய முடியும். ஈஸ்டர் தாக்குதல் போல அட்டகாசமாக எல்ரிரிஈயோ ஜேவிபியோ கூட தாக்குதல்களை ஆரம்பிக்கவில்லை. இந்தத் தாக்குதல்களினால் முஸ்லிம் சமூகம் பலவிதமான நெருக்குவாரங்களுக்கு உட்பட்டது. ஆனாலும் இது நாடுதழுவிய ரீதியில் பரவலான ஒன்றாக வியாபிக்கவி்ல்லை. கிறிஸ்தவ சமூகத்திலிருந்து மட்டுமன்றி சிங்கள சமூகத்திலிருந்தும் முஸ்லிம்கள் மீதான எதிர்ப்பலைகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. சிங்கள சமூகம் இற்றைக்கு இருபது வருடங்களுக்கு முன்பிருந்த சமூகத்தை விட மாற்றத்துக்கு உட்பட்டு வருகின்றது என்பதை முஸ்லிம் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு நாங்கள் அனைவரும் மாற்றத்துக்கு உட்பட வேண்டும். தற்போதைய பிரச்சினைகளை முற்றுவதற்கு முன்னர் அவற்றுக்குத் தீர்வு காண வேண்டும்.    

பாராளுமன்ற அங்கத்தவராகி ஆட்சியைக் கைப்பற்றி இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என சிலர் கருதுகிறார்கள். இப்படி எத்தனை பேர் ஆட்சி பீடம் ஏறியிருப்பார்கள் ? ஆட்சி அதிகாரம் கிடைத்த பின்னரும் கூட அவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முற்படவில்லை. முல்லைத்தீவு பிரச்சினையைப் பற்றி எத்தனை ஜனாதிபதி வேட்பாளர்கள் பேசியிருப்பார்கள் ? அவர்கள் பேசமாட்டார்கள். அதனால் தான் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ள பல நாடுகள் வெற்றிகரமாகப் பின்பற்றுகின்ற மக்கள் மைய யாப்பு உருவாக்கத்தின் தேவை பற்றி நாங்கள் பேசுகிறோம். இது பற்றி முஸ்லிம் சமூகமும் பேச வேண்டும். தமது மக்களிடம் இதனுடைய முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். இந்தச் சிக்கல்களில் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டுமாக இருந்தால் இதைத் தவிர வேறு வழியில்லை.

About the author

Administrator

Leave a Comment