Features அரசியல் சிறப்புக்கட்டுரைகள்

21/4 க்குப் பிந்திய நிலைமைகள் – சமூகத்தின் முன்னுள்ள பணி என்ன ?

Written by Administrator

இயான் மிஷல்

மழை விட்டும் தூறல் விடாத பாடாக ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிந்திய நிலைமைகள் முஸ்லிம் சமூகத்தின் மீது வக்கிரத்தைத் தீர்த்துக் கொள்ளும் விதமாகத் தொடருகின்றன. முஸ்லிம் சமூகத்தினர் மீது அத்துமீறும் செயற்பாடுகள் நாள் தவறாமல் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. விகாரமகாதேவி பூங்காவில் இருந்த இரண்டு இளைஞர்களை இராணுவத்தினர் முஸ்லிம் என்பதைத் தவிர வேறு காரணம் இன்றி விசாரணைக்கென அழைத்துச் சென்றுள்ளனர். சவூதி அரேபியாவில் இருந்து சுற்றுலாப் பயணிகளாக வந்த முகமூடிப் பெண்களுக்கு விமான நிலைய அதிகாரிகளால் தொந்தரவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு நாலந்தாக் கல்லூரியில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிக்காகச் சென்றிருந்த ஆசிரியர் ஒருவர், பௌத்த பாடசாலையான நாலந்தா வளவில் இருந்து தனது தொலைபேசியில் புகைப்படம் எடுத்ததற்காக பல மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டிருக்கிறார்.

கொழும்புக்கு வந்த சமயம் தனது கடவுச் சீட்டை தொலைத்த கிண்ணியா பெண்மணி தெமட்டகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய வந்தபோது அவரது ஊரைக் கேட்டறிந்து கொண்ட பொலிஸ் உயரதிகாரி, சிங்களம் தெரியாதவர்கள் எல்லாம் இந்த நாட்டில் இருக்க முடியாது. நீ கிண்ணியாவாக இருந்தால் ஸஹ்ரானின் தங்கையாகக் கூட இருக்கலாம், போய் உங்களது பிரதேசத்தில் முறைப்பாடு செய் என விரட்டி அடிக்கப்பட்டிருக்கிறார்.

இப்படி நாளொரு நிகழ்வும் பொழுதொரு சம்பவமுமாக முஸ்லிம் சமூகத்தின் மீது பெரும்பான்மைச் சமூகத்தின் சிறுபான்மையினர் எகிறிப் பாய்வது தொடர்கிறது. இதனை இப்படியே வளர விட்டால் இதுவே இவர்களின் பண்பாக மாறிப் போவதும், ஒடுக்கு முறைக்குக் கீழால் வாழ்வதற்கு முஸ்லிம் சமூகம் தாழ்ந்து போவதும் இயல்பாக மாறி விடும். இதனால் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னரான முஸ்லிம் சமூகத்தின் வாழ்வொழுங்கு எப்படி அமைய வேண்டும் என்பது பற்றி முஸ்லிம் சமூகத்தின் தலைமைகள் ஆராய்ந்து வழி காட்ட வேண்டும்.

ஐஎஸ் ஆதரவாளர் என சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி ஒருவர், சிறைக்குப் பார்வையிட வருபவர்களிடம் தயவு செய்து எங்களுக்கு ஐஎஸ் என்றால் என்னவென்று சொல்லித் தாருங்கள். எங்களுக்குத் தெரியாத விடயங்களில் எங்களைப் போட்டுக் குடைகிறார்கள் என முறைப்பட்டிருக்கிறார். இங்கு முஸ்லிம் சமூகத்துக்கு தீவிரவாதம் என்றால் என்ன, தீவிரவாத அமைப்புக்கள் என்னென்ன, அவற்றுக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் உரிய உறவு என்ன என்பன போன்ற விடயங்கள் சொல்லி்த் தரப்பட வேண்டும்.

முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் உள்ள பிளவுகளை சிலர் தீவிரவாத அமைப்புக்களாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தேசிய தௌஹீத் ஜமாஅத் தடை செய்யப்பட்டமைக்காக தௌஹீத் என்றாலே தடை செய்யப்பட்ட ஒன்று என சிலர் நினைக்கிறார்கள். தொப்பி போடாத அனைவரையும் வஹாபிகளாகப் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். எனவே தௌஹீத், வஹாபிஸம் என்பவை பற்றி முஸ்லிம் சமூகத்துக்கும் ஏனைய சமூகங்களுக்கும் விளங்கப்படுத்த வேண்டியது அவசரமான விடயமாகும்.

அதே போல தடை செய்யப்பட்டுள்ள ஜமாஅதே மில்லது இப்ராஹீம், விலாயதுஸ் ஸைலானி தொடர்பிலும் மக்களிடம் போதிய அறிவு இல்லை. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைச் சட்டத்தின் கீழ் தேசிய தௌஹீத் ஜமாஅத், ஜமாஅதே மில்லது இப்ராஹீம், விலாயதுஸ் ஸைலானி ஆகிய மூன்று முஸ்லிம் அமைப்புக்கள் பெயர்குறிப்பிடப்பட்ட அமைப்புக்களாக (Designated Entities) வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புக்களுக்கு நிதி வழங்குவது, சொத்துக்கள் மற்றும் பொருளாதார மூலங்கள் வழங்குவது, பயங்கரவாதத்துக்கு உதவி செய்த குற்றத்துக்கு உள்ளாக்கப்பட முடியுமானவை. எனவே இவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டுமென்றிருந்தால் இந்த அமைப்புக்களைப் பற்றிய தெளிவு அனைவருக்கும் வழங்கப்பட வேண்டியிருக்கிறது. இது அநியாயமாக யாரும் கைது செய்யப்பட்டு அடைக்கப்படாமல் பாதுகாக்கப்படுவதற்கு உதவியாக அமையும்.

சமூகத்தில் நிலவும் தீவிரவாத சி்ந்தனைகள் பற்றிய தெளிவொன்று சமூகத்துக்கு வழங்கப்பட வேண்டும். இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் அடிப்படைவாதக் கருத்தில் உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பதை சமூகம் மெல்ல மெல்ல ஏற்றுக் கொள்ளத் துவங்கியிருக்கிறது. சகவாழ்வை மறுப்பவர்கள், அந்நிய நாட்டில் வாழ்வதை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள், நாட்டுச் சட்டத்துக்கு மதிப்பளிக்க வேண்டியதில்லை என்று சொல்பவர்கள், சகிப்புத்தன்மையுடனும் விட்டுக் கொடுத்தும் வாழ முடியாது என்று சொல்பவர்கள் இப்படியெல்லாம் சிந்தனையுள்ளவர்கள் நம்மில் இருக்கிறார்கள் என்பது சமூகத்தில் ஊடுருவிப் பார்க்கும் போது புலப்படுகிறது. எனவே முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் இருப்பவற்றில் எது தீவிரவாதச் சிந்தனை, எது அடிப்படைவாதம் என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அடிப்படைவாதம் தீவிரவாத்துக்கு இட்டுச் செல்கிறது. தீவிரவாதம் தான் பயங்கரவாதமாக மாறுகிறது. எனவே அடிப்படைவாதச் சிந்தனைகளை ஆரம்பத்திலேயே இனங்கண்டு கொள்ளும் வகையில் சமூகம் வழிகாட்டப்பட வேண்டும்.

நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதில் அரசாங்கமும் அரச படைகளும் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. இவற்றுக்கு முஸ்லிம் சமூகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஸஹ்ரானுடைய விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இராணுவத் தரப்புக்கு ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தமை தான் ஸஹ்ரானுடைய அறிவீனம் முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்படாமல் பாதுகாத்தது. (இதே விதமாக முஸ்லிம் சமூகத்திடமும் இந்த இயக்கம் தொடர்பான ஆபத்தை வெளிப்படுத்தி இருந்தால் பலரும் இதனுடன் தொடர்புபடுவதில் இருந்தும் தவிர்ந்திருக்கலாம்) இதுபோல இராணுவம் தங்களிடம் வேண்டும் போதெல்லாம் தங்களைப் பற்றி முன்வைக்க முடியுமான அளவுக்கு ஒவ்வொரு தனிநபரும் அமைப்புக்களும் தம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். 

முஸ்லிம் சமூகத்துக்குள்ளால் நிலவிய நிலவுகின்ற பிளவுகளின் விபரீதங்கள் இந்த ஈஸ்டர் தாக்குதலின் பின்னரான சூழலில் நன்றாகவே வெளிப்பட்டன. தமக்குப் பிடிக்காதவர்களையெல்லாம் பயங்கரவாதிகளாகப் போட்டுக் கொடுக்கும் நிலை முஸ்லிம் சமூகம் பற்றி அடுத்த சமூகங்கள் கொண்டிருந்த நற்பெயரையெல்லாம் இடித்துத் தள்ளும் வகையில் அமைந்திருந்தன. ஆண்டாண்டு காலமாக உள்ளத்தில் வளர்க்கப்பட்டு வந்த பகையை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக சிலர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர். தம்முடன் கொள்கை ரீதியாக முரண்பட்டவர்கள், தீர்வு காணப்பட முடியாத சட்டப் பிரச்சினைகளில் மோதி விரக்தி அடைந்திருந்தவர்கள், அடுத்த கொள்கையைச் சேர்ந்தவர்களுடைய மோசமான விமர்சனங்களை எல்லாம் மனதில் போட்டுப் புதைத்து வைத்திருந்தவர்கள் இவைகள் எல்லாமே ஸஹ்ரானுடைய குண்டுடன் வெடித்து வெளிப்படத் தொடங்கின. இப்படியான வெறுப்புக்கள் மனங்களில் உறைந்து போக முன்னர் தவிர்த்திருக்கப்பட வேண்டியவை என்றாலும் இதற்கான தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு  அவை சாத்தியமாகாமல் போன நிலைகள் வரவில்லை. சில சில முயற்சிகள் இரு தரப்புக்களுக்கிடையே மட்டும் நிகழ்ந்தவைகளாக உள்ளனவேயன்றி முரண்பட்டிருப்பவர்களை சமூகமாக ஒன்று சேர்ந்து இணக்கப்பாட்டுக்குக் கொண்டு வரும் நிகழ்வுகள் சமூகத்துக்குள்ளால் நடந்தேறவில்லை. ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் வாய்த்திருக்கின்ற சூழலில் இதற்கான முயற்சிகள் நடக்க வேண்டும்.  

முஸ்லிம் சமூகத்துக்குள்ளால் நிலவுகின்ற தனிப்பட்டவர்களுக்கி்டையிலான பிரச்சினைகளை மத்தியஸ்தம் வகித்துத் தீர்ப்பதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்குவதில் முஸ்லிம் சமூகம் விட்ட தவறு, ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னரான சூழலை அவர்களுடைய தனிப்பட்ட விவகாரங்களைத் தீர்த்துக் கொள்வதற்கான களமாக மாற்றியது. தனிநபர்களுடைய விவகாரங்களைக் கையாள்வதில் முன்னர் போல பள்ளிவாசல்கள் தலையிடுவதில்லை. அதற்காகப் பொலிசுக்குப் போய் முறையிட்டால் சமூகத்தைக் காட்டிக் கொடுத்தவன் போல ஊர்களில் கணிக்கப்படுவதனைப் பயந்து பாதிக்கப்பட்டவர்களால் பொலிசை நாடவும் முடியவி்ல்லை. இதனால் தனது பாதிப்பைப் பொறுத்துக் கொண்டிருந்தவர்கள் அதனை போட்டுக் கொடுப்பாக வெளியிட்டிருக்கிறார்கள். தனக்குக் கடன் தர வேண்டியவர்கள், தன்னுடன் காணிப் பிரச்சினையில் மோதியவர்கள், தனக்கு வர்த்தகப் போட்டியாக மாறுபவர்கள், தான் குளிப்பதை படம் எடுத்தவர்கள் என தன்னை முன்னிலைப்படுத்தி தனக்கு எதிரானவர்களை பயங்கரவாதிகளாக போட்டுக் கொடுப்பதற்கு சமூகத்தில் சிலர் தலைப்பட்டது இதனால் தான்..இந்த நிலை இனியும் தொடராமல் பள்ளிவாசல்கள் பள்ளிவாசல்களைக் கட்டுவதையன்றி சமூகத்தைக் கட்டியெழுப்புகின்ற பணிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.  இணக்க சபைகள், நியாய சபைகளை உருவாக்கி மக்களின் மனங்களில் தேங்கிப் போயிருக்கின்ற பிரச்சினைகளை வளரவிடாமல் ஒரே சமூகமாக வாழ்வதனை வலியுறுத்தும் வகையில் ஊர்த் தலைமைகள் செயற்பட வேண்டும். ஊர்த் தலைமைகளை அரசியல்வாதிகளின் கைகளில் கொடுக்காமல் பள்ளிவாசல்கள் அந்த இடத்தை மீளப் பெற வேண்டும்.

தெல்கஹகொட பிரதேசத்தில் புத்தர் சிலை உடைக்கும் அளவுக்கு தீவிரவாதிகள் உருவாகி வருகிறார்கள் என்பதை தெல்கஹகொட மக்களில் பலரும் அறியாமல் இருந்தார்கள். காத்தான்குடியில் ஸஹ்ரானுடைய தேசிய தௌஹீத் ஜமாஅத் இந்தளவு தீவிர மனப்பான்மையுடன் இருந்திருக்கிறது என்பதை காத்தான்குடி மக்களில் பலரும் தெரியாமல் இருந்தார்கள். தெரிந்திருந்தால் அவர்கள் அதனைத் தடுத்திருப்பார்கள். இந்த நிலை உருவாவதற்கு ஊர்களில் நிலவுகின்ற கட்டுக்கோப்பிலான குறைபாடும் காரணமாகும். ஊர்களில் பள்ளிவாசல்கள் பெருகியதால் ஒவ்வொரு பள்ளிவாசலும் தமது பாட்டில் தனித்தியங்கும் நிலை தான் பெரும்பாலான ஊர்களில் இருக்கிறது. இதனால் அடுத்த தரப்பில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளாமல் ஊரில் ஒவ்வொரு தரப்பும் அந்நியமாகிப் போகிறார்கள். இதனால் ஊரில் புதிதாக உருவாகி வளருகின்ற அமைப்புக்கள் கண்ணிலிருந்து மறைந்து போகின்றன. இவை தனது இஷ்டத்தில் இயங்கி தங்களுக்குச் சரியானது எனப்பட்டதை நடைமுறைப்படுத்தத் துவங்கினால் அதனால் வருகின்ற பாதிப்பு ஒட்டு மொத்த சமூகத்திலும் தாக்கம் செலுத்துகிறது. எனவே பள்ளிவாசல்களை மையப்படுத்தி ஊரின் தலைமையை அமைத்துக் கொள்ளும் போது அதிலே ஊரிலுள்ள அனைத்துத் தரப்பும், இயக்கங்களும், நிறுவனங்களும் என ஒன்று விடாது இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். இந்த தலைமைத்துவ சபையினூடாக ஒவ்வொரு அங்கத்தினதும் செயற்பாடுகள் அவதானிக்கப்பட வேண்டும். முரண்பட்டுச் செல்லும் யாரையும் ஒதுக்கி விடாமல் அவர்களுடன் உடன்பாட்டுக்கு வருவதற்கான வழிவகைகளைக் கையாள வேண்டும்.

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் வகைதொகையின்றி கைது செய்யப்பட்டு பல மாதங்களாக சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். பெரும்பாலும் வீட்டுத் தலைவனாக இருந்து வீட்டுக்கு வருமானம் உழைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தவர்களும் சிறைகளில் இருக்கிறார்கள். இவர்களில் அநியாயமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் பலர் இருக்க முடியும். இவர்களுடைய குடும்பங்கள் வேறு வாழ்வாதாரங்கள் இன்றி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவர்களுக்கு உதவுவதற்கு சமூகமும் கூட முன்வருவதில்லை. பயங்கரவாதத்துக்குத் துணை போனதாக தாங்களும் கைது செய்யப்பட்டு விடுவோமா என்று அவர்கள் அஞ்சுகின்றனர். இதற்கு மேலதிகமாக சிறையிலிருப்பவர்களை வெளியில் கொண்டு வருவதற்காக இவர்கள் இலட்சக் கணக்கில் செலவழிக்க வேண்டியுமிருக்கிறது. அன்றாடத் தீனிக்கே வழியில்லாத நிலையில், சிறையிலிருக்கும் சீவனோபாயத்தையும் வெளியில் எடுக்க முடியாத நிலையில் அவர்கள் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்து வருகிறார்கள். ஊர்களில் இருந்து மானசீகமாக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தங்களது துயரங்களை யாரிடமும் வெளியிட முடியாமல் ஒடுங்கிப் போயிருக்கிறார்கள். முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதனாலேயே இவர்கள் இந்தத் துன்பங்களை அனுபவிக்கிறார்கள் என்ற வகையில் இவர்களின் துயரங்களைக் களைவதற்கு முஸ்லிம் சமூகம் போதுமான பொறிமுறை ஒன்றை வகுக்க வேண்டும். அண்மையில் ஸம்ஸம் நிறுவனம் இப்படியான சில குடும்பங்களைத் தெரிவு அவர்களுக்குத் தேவையான பண்டங்களின் பொதியொன்றை வழங்கி வைத்தமையை ஒரு முன்னுதாரணமாகக் கொள்ள முடியும். தலைமைத்துவப் பயிற்சி முகாமுக்குச் சென்றதையும் குற்றமாகக் கருதி பதின்பருவ மாணவர்கள் கூட சிறைச் சாலைகளில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களை வெளியில் கொண்டு வருவது சம்பந்தமாகவும் இவர்களது எதிர்காலம் சம்பந்தமாகவும் சமூகம் செயற்பட வேண்டும்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் சமூகத்தின் வளிமண்டலம் பயான்களாலும் உரைகளாலும் நிரம்பி வழிந்தது. தாக்குதலுக்குப் பின்னர் ரமழான் காலம் கூட நிம்மதியாகத் தான் கழிந்தது. அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் இவை மீண்டும் பழைய நிலையை எட்டிப் பார்க்க முடியும். இவ்வாறான உரைகள் எதை நோக்கி அமைகின்றன, என்ன கருத்தைச் சொல்ல வருகின்றன, தீவிரவாதக் கருத்துக்களை அவை உள்ளடக்கியிருக்கின்றனவா போன்ற விடயங்கள் எல்லாம் இனி அவதானிக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் இப்படி இல்லாமல் அம்போ என்று விட்டதனால் தான் பௌத்தர்களின் மும்மணிகள் தொடர்பிலும், புத்தர் நரமாமிசம் உண்டது தொடர்பிலும் முஸ்லிம் சமூகத்தில் இருந்து பயான்கள் வெளிவரத் துவங்கின. பயான்கள் மட்டுமன்றி எழுதப்படும் ஆக்கங்களும் வடிவமைக்கப்படும் ஒலிஅலை வடிவங்களும் அவதானத்துக்கு உட்படுத்தப்பட முடியுமான பொறிமுறை ஒன்று வகுக்கப்பட வேண்டும்.

பொதுவாக முஸ்லிம்கள் நாட்டுச் சட்டத்தை மதிப்பதில்லை என்றொரு கருத்துப் போக்கை பரவலாக்குவதற்கு பல பிரயத்தனங்கள் செய்யப்பட்டன. வெளிப்படையாகத் தெரிகின்ற ஹெல்மட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்வது தான் இதற்கென எடுத்துக் காட்ட முடியுமாக இருந்தது. போகப் போக இதன் பரப்பு அதிகமாகிச் செல்வதான ஒரு கருத்தே சிங்கள சமூகத்தின் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது. இந்தக் கருத்தை மாற்றியமைக்கின்ற பணி முஸ்லிம் சமூகத்துக்குள்ளால் நடைபெற வேண்டும். சுங்கத் தீர்வையில் தப்புதல் முதல் வாகனங்களை ஓட்டுவது முதல், அரசாங்க சேவையில் கடமை புரிவது முதல் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் வரை அனைத்தும் நாட்டுச் சட்டத்துக்குள்ளால் இயங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் சமூக ஊடகங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறார்கள். இது சுதந்திரமாகக் கையாளப்பட முடியுமான ஊடகமாகும். அந்த வகையில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக யாரும் இந்த ஊடகங்களைப் பயன்படுத்த முடியும். இவற்றினால் தமக்கு வருகின்ற ஊடகச் செய்திகளினால் உணர்ச்சிவசப்படாத அளவுக்கு இளைஞர்களை அறிவூட்ட வேண்டும். அதேபோல அவர்களது இடுகைகளினால் என்னென்ன பாதிப்புக்கள் வரப்போகின்றன, அதனுடைய அபாயங்கள், விபரீதங்கள் என்ன என்பது பற்றி இளைஞர்களுக்கு தொடர்ச்சியாக ஞாபகப்படுத்த வேண்டும். சமூக ஊடகங்கள் இளைஞர்களிடமிருந்து பிரிக்க முடியாத அங்கமாக இருப்பதனால் அதனை எப்படி ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது என்பது தொடர்பில் அவர்களை விழிப்பூட்ட வேண்டும். சமூக ஊடகங்களில் மூழ்கிப் போனவர்கள் பொய்யான உலகிலேயே வாழ்கிறார்கள். அவர்களை சமூகத்துடன் பழக விட்டு சமூகப் பிரக்ஞை உள்ளவர்களாக மாற்றுவது இதற்கான நிரந்தரத் தீர்வாக அமைய முடியும்.

பொதுவாக முஸ்லிம் சமூகத்திலுள்ள இளைஞர்களிடம் தங்களது எதிர்காலம் பற்றிய சிநதனை அதிகமாகவே தலையெடுக்கத் தொடங்கியுள்ளது. கல்வி பெறுதல், பின்னர் கல்விக்கேற்ற தொழிலொன்றைப் பெறுதல் என்பன போட்டித் தன்மையாக மாறிப் போனதால் சிலருக்கு இவை எட்டாக்கனியாகவும் மாறியிருக்கிறது. இது இளைஞர்களை விரக்தி நிலைக்குக் கொண்டு செல்ல முடியும். விளிம்பு நிலையில் உள்ள இளைஞர்கள் வித்தியாசமான செயல்களில் ஈடுபடுவதற்குத் தூண்டப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. அதனால் இளைஞர்களை வழிப்படுத்துவதிலும், அவர்களிடம் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதிலும் அவர்களைச் சமூக விவகாரங்களில் பங்கெடுக்கச் செய்வதிலும் அதிக அக்கறை காட்ட வேண்டும். இளைஞர்களுக்கு சார்பு நிலையில் சிந்திக்கச் செய்யக் கூடியவாறான நிகழ்ச்சிகளையும் வழிகாட்டல்களையும் வழங்குதலும் பொருத்தமானதாக அமையும்.

ஊர்களிலே சிலரிடம் பணப்புழக்கம் திடீரென அதிகரிக்கும் பொழுது அது தொடர்பில் தேடிப்பார்ப்பது முக்கியமானது. அதே போல வெளி இடங்களில் இருந்து ஊர்களுக்கு குடியிருப்புக்காக வருபவர்கள் மீது ஒரு கண் இருப்பதும் முக்கியமானது.

இலங்கை முஸ்லிம் சமூகம் பொதுவாக மூடுண்ட சமூகமாகவே வாழப் பழகியிருக்கிறது. இது தான் தனது நம்பிக்கையைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழி என அது நினைக்கிறது. இஸ்லாம் போற்றி வளர்க்கப்பட்ட பூமியி்ல் அது தனித்து வளர்க்கப்படவில்லை என்பதை அது மறந்து விடுகிறது. இதனால் கலந்து வாழ்ந்தால் கரைந்து போய் விடுவோம் என்ற பயத்தில் அது ஒதுங்கியே வாழ நினைக்கிறது. தமது மதத்தை மிஷனரிகளிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில் ஆங்கிலம் படிப்பதைத் தவிர்ப்பதற்கு முன்னைய தலைவர்கள் எடுத்த முடிவையே அது இன்றும் நடைமுறைப்படுத்தப் பார்க்கிறது. இதனால் அடுத்த சமூகத்தில் வாழ்பவர்களைப் பற்றி அது அறியாமல் வாழ்கிறது. தமது வாழ்வொழுங்கைப் பற்றி அடுத்தவர்களுக்குப் புரிய வைக்காமல் மறைந்து வாழ்கிறது. இதற்கு முக்கிய காரணம் கலந்து வாழ்வதன் ஊடாக தாம் தமது மத நம்பிக்கைகளில் இருந்து தூரமாகி விடுவோம் என்பது தான். தம்மில், தாம் ஏற்றுக் கொண்டிருக்கின்ற நம்பிக்கையில் தமக்கு விசுவாசம் இல்லை என்பதையே இது உணர்த்துகிறது. இந்தத் தடையை முஸ்லிம் சமூகம் தாண்ட வேண்டும். ஏனைய சமூகங்களுடனும் கலந்து வாழும் ஒழுங்கை அவர்கள் அமைத்துக் கொள்ள வேண்டும். தங்களது விவகாரங்களில் அடுத்த சமூகத்தாரையும் பங்கு கொள்ள வைக்க வேண்டும். அடுத்த சமூகங்களினது நிகழ்வுகளிலும் முஸ்லிம் சமூகம் பங்கெடுக்க வேண்டும். மதரீதியான பாடசாலைகளை இல்லாதொழிப்பதற்கு முன்னர் எமது பாடசாலைகளை நாங்கள் எவ்வளவு தூரம் நாட்டின் இன நல்லுறவுக்குப் பயன்படுத்தி இருக்கிறோம் என்று சிந்திக்க வேண்டும். பாடசாலை விளையாட்டுப் போட்டி என்று வரும் போது கூட பக்கத்தில் உள்ள சிங்களப் பாடசாலைகளைத் தவிர்த்து தூர இடங்களில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் இருந்து மத்தியஸ்தர்களைக் கொண்டு வரும் நிலையிலேயே முஸ்லிம் சமூகம் இருக்கிறது. பக்கத்தில் உள்ள பாடசாலைகளுடன் உறவைப் பேணுவதற்கான வழிமுறைகளை முஸ்லிம் பாடசாலைகள் வகுக்க வேண்டும்.

பெரும்பான்மை பௌத்தர்கள் இது பௌத்த நாடு என்று சொல்லும் போது மனதுக்குள் நெருடுவது போல இந்த நாட்டை முஸ்லிம் நாடு போல முஸ்லிம் சமூகம் கருதிச் செயற்பட்டால் அது அடுத்தவர்களை நெருடத் தான் செய்யும். இது பல்லினங்கள் வாழுகின்ற நாடு என்பதை மனதளவில் முஸ்லிம் சமூகம் ஏற்று அதற்கேற்ப தனது வாழ்வொழுங்கை அமைத்துக் கொள்வதன் ஊடாக முஸ்லிம் சமூகம் ஒரு போதும் நாட்டுக்கு எதிராக பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடாது என்பதையும், அதற்குத் துணை போகவும் மாட்டாது என்பதையும் எடுத்துக் காட்ட வேண்டும். இந்தச் சந்தேகத்தைப் போக்க முடியுமென்றால் முஸ்லிம் சமூகம் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில் பெரும் பங்கு வகிக்க முடியும்.  

About the author

Administrator

Leave a Comment